2/15/2011

உன்னைப் போல தெய்வம் ஏது....


அக்கினியைச் சுற்றிவந்து
அடுப்படியில் கிடப்பவளே!
குற்றங்  குறைகள் சொன்னாலும் 
குழப்பம் இன்றி உழைப்பவளே!

பத்தினியே உன் வாழ்வு 
பகலிரவு பார்த்ததுண்டா?
பாசத்தைக் கொடுத்தாலும் 
பண்பற்றவர்கள் அதை ஏற்றதுண்டா?

முற்றத்தில்  கோலம் போடும் 
உன் "இதயம் "முள்மீது  சேலை போல 
அன்றாடம் கிழிக்க  தைத்தும் 
அழகாகத் தோன்றும் தாயே!

எம் பண்பாடு உன்னைப்போல் 
பெண்தெய்வத்தை வஞ்சித்தாலும் 
பண்போடு வாழ்ந்து காட்டும் 
இந்தப் பாசத்தை உலகம் போற்றும்! 

கருவுற்றுத்  தாயாய் நின்று 
கடமைக்குக் கட்டுப்பட்டு 
சிசுவுக்குப் பாலைத் தந்து 
சீராக வளர்க்கும் தாயே!

பொறுமைக்கு உன்னைப் போல 
பூமித்தாய்  உள்ளவரை 
உலகத்தின் நலன்கள் எல்லாம் 
உன்னால்தான்   பெருகுதென்பேன்!

மனம் போன போக்கில் என்றும் 
மற்றவர் பேசும் பேச்சில்
இனங்காணாது போன உன்  பண்பை 
இடரின்றிச்  செயலால் காட்டி 

வலுவுற்ற பெண்ணாய் நின்று 
வாழ்க்கையை வெல்லும் தாயே! 
உனக்கொரு கோவில் இல்லை 
இருந்தும் உன்னைப்போல் தெய்வம் இல்லை! 

உயிருக்குள் உயிரைச் சுமந்து 
உயிர்களைப் படைக்கும் தாயே! 
ஓடோடி வந்து எங்கள் 
உயிர்களைக் காக்கும் தாயே!! 

உன்னைப்போல் தெய்வம் ஒன்றை 
உலகில் யாம் கண்டதில்லை! 
கண்கண்ட தெய்வம் நீயோ 
தினம் கண்ணீரில் நீந்தும் பொம்மை!

புண்பட்டது என் நெஞ்சம் அம்மா!
இந்தப் பொல்லாத உலகம் கண்டு
கண் கெட்டபின்   நமஸ்க்காரத்தை
அந்தக் கதிரவனுக்கும் சொன்னாரம்மா!

காலத்தின் தீர்ப்புக்காக் காலமெல்லாம்
காத்திருந்து சருகாய்  போகும் 
தாயே!  உன் அன்புக் கரத்தால்
உண்டால் விசமும்   அமிர்தமாகும்!

              
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4 comments:

  1. அன்னையெனும் தெய்வத்தை
    அலங்கரிக்கும் கவிதை மலர்
    நன்று

    ReplyDelete
  2. அம்மாவுக்கு நிகர் அம்மாவே தான் .
    அழகுக் கவிதை சிறப்பு !

    ReplyDelete
  3. வலுவுற்ற பெண்ணாய் நின்று
    வாழ்க்கையை வெல்லும் தாயே
    உனக்கொரு கோவில் இல்லை
    இருந்தும் உன்னைப்போல் தெய்வம் இல்லை

    கண்கள் கசிகின்றன அம்பாள் அம்மா

    ReplyDelete
  4. அருமையான வரிகள்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........