5/30/2012

திசை எட்டும் கை கூப்ப.....

திசை எட்டும் கை கூப்பத் 
தென்றலே நீ வாராயோ!....
அசையட்டும் பூமியிலே 
ஆனந்தமாய் உயிர்களெல்லாம்!...

தொகை பத்தும் தினம் ஓதத் 
தோகை மயிலாள் நடம் ஆட 
இறைவா உன் கருணையதால் 
நல் இதயங்களும் மகிழாதோ!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/11/2012

நீங்காத நினைவுகளோடு நானும்!...

கடல் கடந்து ஒரு பயணம் என் 
வலைத்தளம் என்னும் இந்தக்
கனவுலகை விட்டும் என்றும் 
கவி பாடும் இந்தக் குயிலுக்கும் 


உடன் பிறவாத உறவுகள்போல்
தினம்தோறும் உறவாடி என் 
வளர்ச்சிக்கு வித்திட்ட உங்களையும் 
அன்பு வாசகர்களையும் விட்டு 

சில மாதங்கள் பிரிய மனம் இன்றி 
ஓர் பிரியாவிடை உங்களில் 
ஒருத்தியான நான் இதோ அந்த
பிரியும் வேளை வந்துவிட்டது!.....


எங்கு சென்றாலும் மறவாது 
இதயத்தில் ஒரு புது ஊற்றாக 
ஓடோடி வந்தழைத்து என்னைக் 
கவி பாட வைத்த உங்கள் அன்பு  


நான் இல்லாது போனாலும் 
மீண்டும் திரும்பி இங்கு வந்தாலும் 
இந்நாளில் தொடர்வதுபோல் 
எந்நாளும் தொடர வேண்டியபடி 


சென்று வருகின்றேன் உறவுகளே 
நான் சென்று வருகின்றேன் தமிழ் 
இன்பக் காற்றாக உயிர் மூச்சாக 
என்றும் எங்கும் செழிப்புற வாழ்த்தியபடி!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/09/2012

இதுதான் வாழ்க்கை!........

காலப் பெரு வெளியில் 
கலைந்து போன தன் கனவைத் 
தேடி அலைந்த சிறு பறவை 
தீட்டிய புதிய கவிதை !...........


நாளை எது நடக்கும் ......
நாளும் கோளும் என்ன செய்யும் 
வாழும் போதே அறியாத இந்த 
வாழ்க்கை என்பது போர்க்களமே!....


ஏழை மனதில் மிகு ஆசைகளை 
ஏற்றுக் கொண்டால் துயர் பெருகும் 
பின் பாழாய்ப் போன உடல் தவிக்கும் 
பந்த பாசம் இழக்கும் நிலை வந்தால்...


காலம் சுருங்க வரம் கேட்கும் 
கண்ணில் கங்கை பொங்கி வழியும் 
தினம் காணும் உலகம் வெறிச்சோடி 
கானகம்போல காட்சி  தரும் .................


மானம் பெரிதென நினைக்கும் மனம் 
மனதில் அகப்போர் நிகழ்த்தி வரும் 
உடல் வீழும் போதே உண்மை வெளிக்கும் 
இந்த விதியை வென்றால் வாழ்க்கை இனிக்கும்!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/04/2012

எதுக்கு இந்தக் கொலைவெறி!.....

ஆடு போட்ட புழுக்கைகூட
அரு மருந்தெனக் கொள்ளும்போது 
ஆடு வெட்டிப் பொங்கல் வைக்கும் 
அவலம் இன்னும் தீரவில்லையே !....


இது ஆடு செய்த பாவமா !...........
அடுத்தவர் இட்ட சாபமா !........
நீதி கேட்டு உயிர்கள் எல்லாம் 
நெஞ்சை நிமிர்த்தி நின்றால் இங்கே 


பாவம் மனிதன் என்ன செய்வான் 
பழகிய தோஷம் விட்டுச் செல்ல 
ஊனைத் திண்டும் உடம்பை வளர்த்தான் 
உடனே புரியுமா பிற உயிர்படும் துன்பம்!...


நாடு தீக்கு இரையானாலும் 
நல்ல மக்கள் உயிர் போனாலும் சில 
கொள்ளையடிக்கும் கூட்டத்தினருக்கும் 
குறிக்கோள் என்பது ஒன்றுதான் இருக்கும்


இங்கு நேசக் கரத்தை நீட்டினாலும் 
நேர் வழியைக் காட்டினாலும் அவை 
தூசுக்கு இணை என்றேதானாகும் 
துரோகம் படிந்த இப் புவிதனிலே!....


காதல் செய்வீர் பிற உயிகளையும் 
கள்ளம் இல்லா நல் மனங்களையும் 
ஆதரித்துப் பார் இன்பம் பொங்கும் 
அதுதானே என்றும் வாழ்வில் தங்கும்...
  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/02/2012

சிந்தனைத் துளிகள்.


(1 ) பிறரைத் தூற்றி மகிழ்வுகாணாது உன்
      பிறவியைப் போற்றும் வகையறிந்து நடப்பாயானால் அதுவே  
      பிறருக்கும் உன் பிறவிக்கும் செய்யும் பெரும்பயனாகும்.

(2 ) உள்ளத்தின் உணர்வு ஒழுக்கம் குன்றியோர்
     ஓதும் அறிவுரை என்றும் கொடும் விஷத்திற்கு  சமனானது.

(3 ) குணங்கெட்ட மனிதன் கோடிரூபாய்  கொடுத்தாலும் அவை
      பிணத்துக்கு இட்டெடுத்த மாலைபோலானது.

(4 ) இறைவன் கொடுத்த வரமேயாயினும் மனிதன் தன்
       தகுதியை மறந்து நடப்பானாயின் வரும் துன்பமானது
       என்றும் மரணத்துக்குச் சமமானது.

(5 ) இடமறியாது பகிரும் துயரானது நிறைநீரில்
       கையிலிருந்த கயிற்றை நழுவவிட்டு 
       கருநாகத்தின் வாலைப் பிடித்த கதையாய் மாறும்.

(6 ) நல்லவர் ஆயினும்  ஊரார் பேச்சுக்குச் செவிசாய்த்து 
        தன்னைத்தானே  வருத்தும் குணமுடயவராயின்
        இவர்பால் வரும் நல்லன எல்லாம் கெடும்.

( 7 ) வருகின்ற துன்பம் எல்லாம் வரப்போகும் 
        பேரின்பத்துக்கு அறிகுறியென்று கருதும் நற்குணம் இருந்தால் 
        அதுவே வாழ்வின் வெற்றிக்குக் காரணமாக அமையும்.

(8 )  பிழைபொறுத்தருளும் நெஞ்சம் ஒன்றே புவியினில்
        நாம் பெறுதற்கரிய பெரும்பேறு ஆகும்.

(9 ) கொடுக்கும் நற் குணங்களைக் குறுக்கி தன்பால்
       எடுத்து வைக்கும் எப்பொருளும் தரும் சுகமானது
       பொருமிக் கிடக்கும் வயிற்றுக்குப்  பொரிசொறு  சேர்ப்பதுபோலாகும்.

(10 ) மனிதன் தன்நம்பிக்கையைத்  தரவல்ல மதங்கள் மீதும்  
         அதன் தத்துவங்கள் மீதும்  கொள்ளும் சந்தேகமானது 
         உடலைப் பிளந்து உயிரைப் பரிசீலிக்கும் செயலுக்கு இணையானது.



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/30/2011

புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே ....

இன்பம் பொங்கும் நல்லாண்டாய் 
இதயம் மகிழும் பொன்னாண்டாய்
அன்றும் இன்றும் நாம் பட்ட துயர் 
அகற்ற வருவாய் புத்தாண்டே !

பிரிந்த உறவுகள் இணைந்திடவும் 
பரந்த உலகம் நல் ஒளி பெறவும் 
விரைந்து நன்மை தந்திடவே 
வருவாய் இங்கே புத்தாண்டே!

தனமும் தான்னியமும் கல்வியும் 
தழைத்து எங்கும் புவிதனிலே 
வறுமை நிலையைப் போக்கிடவே 
வருவாய் இங்கே புத்தாண்டே!

மனதில் சஞ்சலம் அகன்றிடவும் 
மனிதன் மனிதனாய் வாழ்ந்திடவும் 
உயரிய பண்பைத் தந்திடவே நீ 
வருவாய் இங்கே புத்தாண்டே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/29/2011

என் மூச்சுக் காற்றே உன்னை விடுவேனா!....

நட்பைக் குலைத்து நாசம் செய்து 
நாட்டைச் சுடுகாடாக்கிவிட்டால் இங்கு 
வேற்றுக் கிரகம் குடி வரும் வரைக்கும் 
வீழ்ந்த தமிழன் எழமலா போவான் !

இன்று பட்டுப் போனது இலையும் கிளையும் 
வேர்கள் அல்ல நாம்  உறங்க !
அன்னை கற்றுத் தந்த மொழியின் வலிமை 
மூச்சுக் காற்றாய் மாறும் உயிர் கொடுக்க!

ஒற்றைத் தமிழன் பலத்தை எதிர்க்கப்
பத்து யானைகள் பின்வாங்கும் இதில் 
கட்டிப் போட்ட கைக்குள் அடங்க என்றும் 
கைக்குட்டை அல்லவே நாம் கற்ற தமிழ்!

இனியும் வட்டி குட்டி போட்டுச் சந்தம் 
எட்டுத் திக்கும் பரவி வரும் இந்த 
வண்ண நதியைக் கண்டு மிரளும் நரிகள்  
அதில் குட்டிக்கரணம் போட்டு மடியும்!

தத்தித் தத்தி நடந்த குழந்தை என்றும் 
தன்னம்பிக்கையை இழப்பதில்லை அதுபோல் 
முத்து முத்தாய்க் கவிதை வடித்தவர் 
முடங்கிக் கிடக்க நினைப்பதில்லை!

கொட்டும் மழையின் பயனை நோக்கி 
முகில்கள் என்றும் திரள்வதில்லை !
நாம் விட்டுச் செல்லும் கவிதை வரிகளும் 
வீணாய்ப் போகப் போவதில்லை!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/27/2011

மனிதா ...மனிதா ...மனிதா!.....


வருவதும் போவதும் வாழ்வில் 
என்றும் புதுமை அல்ல............
புரிதலில் வரும் சுகம் அதை 
உணர்தலே புதுமை என்பேன்!....


அன்று கருவறை வந்தவன் பின் 
கல்லறை செல்கிறான் இதில் 
வாழ்வை சிறையறை என்றவன் 
வாழும்போதே சல்லடையாகிறான்!...


ஒருவரை ஒருவர் தாங்கிடும்போது 
வரும் துயர் எல்லாம் பறந்திடுமே 
இருகரம் எழுப்பிடும் ஓசையின் இன்பம் 
இருதயம் வரைக்கும் ஒலித்திடுமே!......


பிரிதலும் நன்றோ பகைமையை வளர்த்து 
பிறவியில் இதுவே பெரும் துன்பம் !.............
நாம் அரிதெனக் கருதும் மானிட வாழ்க்கை 
அகத்தினை நோக்கினால் பேரின்பம்!............


வறுமையில் செல்வம் இளமையில் கல்வி 
முதுமையில் அமைதி தேடித் தினம் இங்கு 
அலைபவன் மனிதன் அலைகடல் போல 
அவன் அலைந்திங்கு வாழ்வில் என்ன கண்டான்!...


பணமெனும் மூட்டை படுத்துறங்குது 
அது பாட்டில் பகைவரை நினைத்தே 
இவன் தினம் விழிக்கின்றான்!.....
அறிவதை வளர்த்தவன் பேராசையால் 
இன்று அகிலமே தலைகீழ் ஆனது பார் !....


இனி முதுமையில் அமைதியும் 
முத்தான தூக்கமும் தத்துப் பிள்ளைதான் இங்கே... 
பொறுமையும் பண்பும் புவிதனில் அன்பும்
எவன் அவன் தேடி அடைந்தானோ 


அவனது வாழ்வே அடுத்திங்கு புதுமை 
அதை என்றும் வாழ்வில் நாம் உணர்வோமே!....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/24/2011

உன்னைமட்டும் தவிக்க விட்டேனா!.....

உன்னையே நினைந்து 
உயிர் உருகி தினம் என் 
உள்ளத்தில் எரிந்த அந்தப் 
பெரும் நெருப்பு அதை  நீ அறியாய்!.....


தன்னையே வதைத்த தாயிடத்தில் 
பிள்ளை உன் கோவம் நீதியன்றோ!...
வல் வினை அதைக் கடந்து வந்து உன்னை 
வாரியே அணைத்திடத் தவித்தவளை.......


புன்னுருவி என்று நினைத்தாயோ 
இந்தப் பேதைமை நெஞ்சை வாட்டுதையோ!..
கண்ணினைக் காக்க இமை மறந்ததாய் உன் 
கற்பனை அது மிக மிக அற்புதம் அற்புதம்!... 


விண்ணவரும் போற்றிடும் தாய்மை உன்னை 
நடு வீதியில் விட்டெறிந்ததெனப் புலம்பாதே!...
முன்வினைப் பயனது அறுத்தெறிந்து உயிர் 
மூச்சுள்ளவரை உன்னோடு சேர்ந்திருக்கவே 


இன்னல்கள் நிறைந்த இடு காட்டினிலே 
இதுவரை நான் பட்ட துயர் நீ அறியமாட்டாய்...
சொல்வது இலகு எதையும் வார்த்தைகளால் 
வாழ்க்கை சுகப்பட மாட்டாது தடைகள் இருப்பின்...


இது எல்லாமே விதியின் விளையாட்டு 
நீ இல்லாமல் போயாச்சு என்றோ என் மூச்சு!..........
இனியும் கல்லான உன் மனம் இளகி வரும் வரை 
நான் காத்திருப்பேன் உனக்காகக் கை தொழுதபடி!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/14/2011

பேசடா என் செல்லக் கிளியே!....

அன்னையின் பாடல் கேட்டு 
பிள்ளையின் தோற்றம் பாரு 
இந்த முல்லைப்  பூ சிரிப்பழகு 
முகத்தினை மறப்பார் யாரு !....


இன்னலைப் போக்கும் விழிகள் 
இதழ்களில் தேன் துளிகள்  
மெல்ல நீ அணைத்தால் போதும் 
சில்லென இதயம் குளிரும்!...........


என்னொளி தீபம் உன்னைக்
கண்டதும் இன்பம் பொங்கும் 
உன் நெஞ்சிலே நானும் சாய்ந்தால் 
கொஞ்சிடும் கவிதை வரிகள்!......


முத்தத்தால் மழை பொழிந்து
என் மேனியை நனைப்பவனே 
என் சித்தத்துள் உன்னைத்தவிர 
சிந்திக்க வேறு என்ன உண்டு!....


கத்துத்தா மழலை மொழிகள் 
என் கண் கண்ட தெய்வம் நீயே 
பித்தத்தால் உறைந்து போனேன் உன் 
பேச்சைத்தான் கேக்க ஏங்குகின்றேன்!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/11/2011

நோயிலும் கொடிய நோய் இதுதான் அன்பே!...

தப்புத் தப்பாய் புரிந்துகொண்டான் 
தன் தாயைத் தானே தள்ளி வைத்தான்
நித்தம் துயரில் வாடுகின்றான் இருந்தும் 
அவன் நினைப்பை மட்டும் மாற்ற மாட்டான்!...


எத்தனை நாள் தொடரும் இந்த 
ஒளியைத் தேடா வாழ்வு என்று 
தாயவளும் உருகுகின்றாள் இன்றும் 
தன்னிலை மறந்து கருகுகின்றாள்!....


வீணாகிப் போகும் இந்த 
வெறுப்பான காலம் எல்லாம் பின் 
நாம் விரும்பிக் கேட்டால்க்கூட 
நமக்காகத் திரும்பி வருமா .........!!!


உள்ளன்பை அறியா மனமே 
உன் அறிவை ஊரார்கூடி வாழ்த்தினாலும்
என் அளவில் ஏழைதான் நீ ............
எடுத்தெறிந்துப்பார்  உன் பிடிவாதத்தை


கல்லும் உன்னைத் தொழுது நிற்கும் 
இன்பக் கவிபோல் வாழ்வு இனித்திருக்கும் 
உன் ஒரு சொல் கேட்க்க உயிர்கள் தவிக்கும் 
உலகம் உன்னைக் கண்டு மகிழும் !...........


என்னதான் கற்றார் ஆயினும் 
உண்மை அன்பை உணராதவரை 
வாழ்க்கை என்னும் அழகிய தோட்டத்தில் 
வீணாய் செழித்த அகத்தி என்பேன் ........


சிறு துரும்பும்தான் நற் பயன் தரும் 
அகக் கண்ணைக் கவர்ந்து நின்றால் 
இது அறியா உறவுகள் என்றும் நாம் 
எது சொன்னாலும் கேட்க்க மாட்டார் !...


வாத்தத்தில் தீயதிந்த வாத்தத்தால் 
நாளெல்லாம் துன்பம் சேரும் இங்கே 
இனிய நாத்தத்தை இசைக்கும்போது வரும் 
இடிபோல்த்தான் சினத்தைத் தூண்டும்!....


பார் அன்பே உந்தன் நிலையை 
வெறும் பரிகாசம் ஆகிப்போச்சு 
இந்தக் காலத்தை வெல்ல நீயும் 
எடுத்தெறிவாய் உன் பிடிவாதத்தை
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/07/2011

வானம் கறுக்குது பார் ....


வானம் கறுக்குது பார் !
 வண்ண மயில் ஆடுது பார்! 
காற்று வீசுது பார்! 
கடலலைகள்  மோதுது பார்!


தவளை கத்துது பார்! 
தண்ணீர் சொட்டுது பார் !
மின்னல் மின்னுது பார்! 
மேகத்தில் இடி இடிக்க 
மழை வந்து கொட்டுது பார்!


தண்ணீர் பெருக்கெடுத்து 
தரை எங்கும் ஓடுது பார்! 
குப்பை கூளமெல்லாம் அதில் 
மிதந்து செல்வதைப் பார் !


முத்தன் வயலுக்கு 
வரப்பு கட்டி நிற்பதைப் பார்! 
அட்டை ஊருது பார்! 
நத்தை ஊருது பார்! 
பட்டுப் பூச்சி கொட்டுது பார் !


தம்பி குளிப்பதற்கும் 
அம்மா சமைப்பதற்கும் 
மண்ணில் உயிர் வாழ 
மரங்கள் செழிப்பதற்க்கும் 


உடுப்பு துவைப்பதற்கும் 
உண்டு களிப்பதற்கும் 
மண்ணில் மழை வேண்டி 
நீயும் மகிழ்ந்து துதி பாடு !                           
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/02/2011

இது தேவன் வரும் நேரம்!.....

அழுது அழுது தொழுத விழிகள் 
இறைவன் முகத்தைப் பார்க்குது இருள் 
அகற்றும் தேவன் முகத்தில் இருந்து 
கருணை ஒளியைக் கேக்குது !...........


விதியும் சதியும் போட்டி போட்டு 
வாழ்க்கை எங்கோ போகுது இதில் 
சதி வலையில் விழுந்த உயிர்கள் 
நீயின்றி சங்கடத்தில் நீந்துது!........


உருகும் மெழுகு போல இங்கே 
உள்ளம் உருகிப் போகுது!...........
எவரும் அறியா மனதில் துன்பம் 
எல்லை மீறிப் போனது!..............

கருணை உள்ளம் கொண்ட தேவன் நீ 
மண்ணில் பிறக்க வேண்டுமே உன் 
அருமை பெருமை அறிந்து  உயிர்கள் 
அன்பில் திளைக்க வேண்டுமே!.....

வறுமை என்ற கொடிய நோயை நீ 
விரட்டி அடிக்க வேண்டுமே இங்கு 
தரும சீலர் பிறந்து வந்து எங்கும் 
தர்மம் நிலைக்க வேண்டுமே!...........

ஒரு கொடியில் பூத்த மலர்கள் 
ஒற்றுமையாய் வாழ்ந்திட 
வளர் பிறைபோல் நன்மைகளை 
நீ வாரி வாரித் தந்திடு!...............


உலக நன்மை வேண்டித் தினம் 
உயிர்கள் உன்னை அழைக்குது 
விரைந்து வந்து நீயும் எங்கள் 
வேண்டுதலை நிறைவேற்றிடு!..
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/28/2011

இதையும் கொஞ்சம் பாருங்க....

ஸ்ரீ ராமர் பாதம் தொட்டு மகிழ 
சீதை தவமாய்த் தவமிருப்பாள்
அந்தப் பேதை மனதை வர்ணிக்கப் 
புவியில் வார்த்தைகள் போதவில்லை!...


வாழும்போது உண்மை அன்பை இவர்கள் 
வாழ்க்கைத் தத்துவம் எடுத்துரைக்கும் 
அந்த ராம காவியம் பார்த்தால்ப் போதும் 
ரகளை செய்யும் மனித மனமும் திருந்தும்....!!!


ஊரும் உலகும் என்ன நினைக்கும் அந்த 
நினைப்பால் விளைந்த துயரும் புரியும் 
பாவம் புண்ணியம் அனைத்தும் விளங்கும் 
இதைப் பார்ப்பவர் மனதில் நீதி நிலைக்கும்!...


காலம் செய்யும் தவறு என்ன அதையும் 
கண்டிப்பாக உணர வைக்கும் ...........
மாலைப் பொழுதின் மயக்கம் தீரும் 
மனதில் ஒருவகை ஞானம் பிறக்கும்!...


ஏழ்மை நிலையது வந்தபோதிலும் 
அவர் தம் இதயக் கோவிலில் வீற்றிருக்கும் 
சீத்தா ராமர் அன்பிற்கிணையாய்
சிருஷ்டியில் எதுவும் இருக்கவில்லை!...


இதுவே கணவன் மனைவி உறவிற்கு 
நற் கருத்தாய் என்றும் விளங்கிட 
மனிதப் பிறவி எடுத்து வந்து இங்கு 
தெய்வம் நடத்திய அரிய நாடகம்!....


அருமை இந்தக் காவியம் அகத்தில் 
அன்பை வளர்க்கும் நல் ஓவியம்!...
மறையாது நெஞ்சில் நிலைத்திருக்கும் 
மறுபடியும் மறுபடியும் பார்க்கத் தோன்றும்!...


எனக்குப் பிடித்தது ராம காவியமும் 
இதற்கு இணையான சிலப்பதிகாரமும் 
எதற்கும் பார்க்காதவர்கள் பார்த்துவிடுங்கள் 
எங்கள் தவறையும் நாமே உணர்வோம்!......


அந்தக் கண்ணகி சீதை இருவரையும் எந்தன் 
கண்கள் தொழ என்றும் மறந்ததில்லை 
இன்னொரு ஜென்மம் நான் எடுத்தாலும் 
இறைவா எனக்கந்த வரத்தைக் கொடு!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/26/2011

தீபங்கள் எரியட்டும் எண் திசையும்!....

கருவறை சுமந்த எங்கள் 
உயிர்களை இங்கே பல 
கல்லறை சுமந்து நிற்கிறதே!...
எரிகிற தீபம் திரும்பிடும் திசைகளில் 
எம் மாவீரர் முகங்கள் தெரிகிறதே!...


உருகிடும் இதயம் வடித்திடும் கண்ணீர் 
அது ஒளியதைத் தாங்கி நிற்கிறதே!..
இந்த இனியவர் பேசிடும் வார்த்தையைக்கேக்க 
ஒவ்வொரு உயிரும்  துடிக்கிறதே..............!!!!!!!


இங்கு மனமதை அடக்கி மௌனமாய் அழுதிடும் 
எங்கள் மக்கள் கூட்டம் கண்டாயோ .......
விடுதலை வேண்டிப் புதைகுழி சென்ற 
இந்தப் புனிதரை உலகம் அறியாதோ!......
சில தறுதலை எங்கள் வாழ்வினை அழித்த
சங்கதி இனியேனும் உலகுக்குத்  தெரியாதோ!...


குமுறிடும் உள்ளக் குமுறலை அடக்கக் 
குழந்தைகள்கூட மறுக்கிறதே..........!!!!
தெருவெளி எங்கும் பெரும் திரளென வந்து 
தீபங்கள் ஏந்தியே சென்ற உயிகளை உயிர்கள் 
மறுபடி பிறக்க வரமது கேட்டு மனம் அது உருகி நின்றனரே!..
கொடியவர் குடிகளையும் காத்திடும் இறைவா 
எங்கள் குலமது தழைக்க அருளாயோ.............
எம் மனமது கொண்ட துயரினில் நின்று 
மகிழ்ந்திட ஒரு வழி காட்டாயோ!............


இந்தக் கார்த்திகைப் பூக்களின் கண் மடல் திறந்து 
உந்தன் கருணை மழையைப் பொளியாயோ!....
நேற்றில்லை இன்றில்லை  அன்றுதொட்டு 
நேர்வழி சென்ற இனமிதனைக் 


காத்திட ஒரு வரம் கேட்டு தினம் 
ஊத்திய கண்ணீருக்கும் எல்லை இல்லை 
இதைப் பார்த்தவர் மனங்களும் உருகாதோ 
இந்தப் பார்வை குறைந்த உலகினிலே.......!!!!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/18/2011

இதனால் யாருக்கு என்ன நட்டம்!...

கற்கக் கசடறக் கற்றவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக என அந்த
வள்ளுவர் சொன்ன வாக்குக்கமைய 
வந்தேன் ஒரு கவிதை புனைந்திட.!


நீ சுற்றம் தழுவிடு 
வந்த சொந்தம் பெருக்கிடு 
நித்தம் பழகிடும் உறவோடு 
யுத்தம் துறந்திடு!
விட்டுக் கொடுத்திடு எதிலும் 
விழிப்பாய் இருந்திடு !
ஆசையை மட்டுப் படுத்திடு 
மனத்தைக் கொஞ்சம்  கட்டுப்படுத்திடு! 


எட்டுத் திக்கும் உன் பெயரை 
என்றும் உணர்ந்திட நற் கருமம் 
அதை விட்டுச் செல்லு பூமியிலே 
நீ வீழ்ந்தும் எழுவாய் மரம்போல!
நித்தம் நிகழ்த்தும் செயல்கூட 
பிறர்க்கு நிழல்போல் என்றும் உதவட்டும்! 


கொட்டும் மழைபோல் யாவர்க்கும் 
நாம் கொடுக்கும் பலனை மறப்பார் யார்!
முத்தம் தந்து சிரித்திடும் மழலை 
முகம்போல் மனத்தைக் காப்போமே!


சத்தம் இன்றி வாழ்வினிலே என்றும் 
தத் தம் பணிகளைச் செய்வோமே 
ஒப்புக்கொரு வார்த்தை சொல்லி 
ஓர வஞ்சனை அதைச் செய்யாமல் 
மிகு துக்கம் வந்த போதினிலும் அன்பின் 
தூய்மை காத்து நிற்போமே!


சத்தியத்தை மதித்து என்றும் 
வரும் சங்கடத்தைப்  போக்கிடுவோம்!
மிகு குற்றம் பார்த்து ஒதுங்காமல் 
பிறர் மேன்மை கருதியும் உழைத்திடுவோம்!
கற்றவித்தை அதன் பயன்கொண்டு 
இந்தக் கலியுகத்தை மாற்றிடுவோம்!


பெற்றவரும் மற்றவரும் எமைக்கண்டு 
பெருமைகொள்ளச் செய்திடுவோம் 
நற்றமிழைப் பயின்ற வாயால் 
எங்கும் நல்ல வார்த்தை பேசிடுவோம்!


துச்சமென மதித்து உயிரைத் 
துன்புறுத்தும் பாவிகளை 
எக்கணமும் எதிர்த்து இங்கே 
எதற்கும் குரல் கொடுத்திடுவோம்!
அச்சமின்றி இவ்விடத்தில் 
அனைவருக்கும் தோள் கொடுப்போம் 
இச்சைகளைக் களைந்து தினம் 
இருட்டை விட்டே வெளிவருவோம்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/14/2011

வாழ்த்துச் சொல்லலாம் வாருங்கள்...

அடடா எதை எழுதுவேன் !..எவ்வாறு எழுதுவே !...மிகவும் பொறுப்பு வாய்ந்த ஆக்கத்தின் தொடரை எவ்வளவு தன்னம்பிக்கையுடன் தொடர இந்த அம்பாளடியாளின் வாசல் கதவைத் தட்டி அழைப்பு விடுத்தாரோ அந்த அமைதிச் சாரலின் அன்பு உள்ளத்தின் அழைப்பை ஏற்று என் எண்ண அலைகளில் தோன்றும் கருத்தினை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வந்திருக்கின்றேன் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டி மன்னியுங்கள் .(எனக்குத் தெரியும் என் வலைத்தள உறவுகள் 
எப்போதும் என்மீது தனீப்பாசம் உள்ளவர்கள் அதனை அடுத்த பதிவில் பார்ப்போம் !...........இப்போது 
                                மழலைகள் உலகமே மகத்தானது .(தொடர் பதிவு )
                                                                  
தென்றலைப்போல் திங்களைப்போல் எங்களை வருடும் உங்களைவாழ வைக்கும் வழிகளை அம்மா நானும் சொல்லப் போகின்றேன் அழகிய மலர்ச் செண்டுகள் இவர்கள் அமுத விழி பார்த்தால் மனதில் ஆயிரம் இன்ப அருவிகள் கொட்டும் .இந்தப் பட்டாம் பூச்சிகளின் எண்ணம் ஓர் அழகிய சித்திரக் கூடம் .இதில் கற்க நிறைய நல்ல அற்புதமான விசயங்கள் உண்டு .குற்றமற்ற இந்த உள்ளங்களால் என்றும் யுத்தங்கள் நிகழ்வதில்லை .ஆனாலும் இவர்கள் வளர்ந்து வரும்போது எவ்வாறு வர வேண்டும் என்பதை எமது வாழ்க்கையின் 
நடைமுறைகள்தான் தீர்மானிக்கின்றன .உதாரணத்திற்கு நேற்று உங்கள் உறவுகளுடன் நீங்கள் போட்ட சண்டை அல்லது தவறான வார்த்தைப் பிரயோகம் அல்லது சைகைகள் இவற்றை உங்கள் குழந்தை எவ்வாறு கிரகித்து அழகாய்ப் படம் பிடித்துள்ளான் என்பதை அவன் செய்து காட்டும்போது அந்த இடத்தில் உங்களை உடன் நினைவுக்கு அழையுங்கள் அதில் உங்கள் குட்டி பிம்பம் தோன்றி மறையும் !.....அதுமட்டும் அல்ல நீங்கள் செய்த அழகிய விசயமும் தெரியும் இதில் உங்கள் பிள்ளைக்குத்  தேவை எது என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் ."
           குழலினிது யாழ் இனிது என்பார் தம் மக்கள் மழலைச் சொல் 
கேளாதவர்கள் "!......ஆகா........எத்தனை மகத்தான உண்மை இது !............அற்புதமான இந்த உணர்வை இன்றைய வளர்ந்துவரும் எமது சமூகத்தினரில் எத்தனைபேர்தான் பொறுமையாகக் கேட்டும் ரசித்தும் வந்துள்ளனர் ?..சொல்லப்போனால் இந்தப் பாக்கியத்தை அந்தக் குழந்தயை வளர்க்கும் ஆயாகூடப் பெற்று இருப்பாள் .பாவம் இங்கும் எத்தனை குழந்தைகளுக்கு நல்ல ஆயாக்கள் தம் அம்மா போல் கிடைத்திருப்பார்கள் ?இந்த இடத்தில்தான்  பிள்ளைகள் பெரும்பாலும் பெற்றோர்களின் அன்பை அரவணைப்பை இழக்கின்றனர் !........
            அம்மாவிற்கும் அப்பாவிற்கும் வேலைநாள் போக .கிடைக்கும் ஓய்வு நாளில் வீட்டைச் சுத்தம் செய்யவும் ,வரும் விருந்தினரைக் கவனிக்கவும் ,விழாக்களுக்கு சென்றுவரவும் ,உறவினரை சந்திக்கவும் கொடுக்கல் வாங்கல் பார்க்கவும் ,தொடர் சீரியல் பார்க்கவும் தொலை பேசி அழைப்பு ,அதனால் வரும் யுத்தங்கள் விவாதங்கள்  தீர்க்கவும் நேரம் சரியாக இருக்கும் .இதற்குள் பிள்ளைகளின் படிப்பு விசயத்தையும்கூட பார்ப்பதானால் பாசம் பொழிய வருகின்றதோ இல்லையோ கோவம் அதிகமாக வரும் .வரும் கோவம் அதுவும் கட்டுக்கடங்காமல் போனால் அடிதான் போடச் சொல்லும் .இப்படி 


அடித்ததும் எங்கள் பிஞ்சுகள் மனதில் இவ்வாறுதான் எண்ணம் 
எழும் .அதை எல்லாப் பிள்ளைகளும் இவன்போல் சட்டென 
வெளிக்காட்ட மாட்டார்கள் .என்றோ ஒரு நாள்  இதன் தாகத்தை 
வைத்து ஒட்டுமொத்தமாக வெளிக்காட்டினால் எம்மால் தாங்க 
முடியாது இல்லையா? அதனால் பெற்றோர்களாகிய நாம்தான் 
கொஞ்சம் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் .அத்துடன் எம் 
பெற்றோர்களிடம் வளர்ந்துவரும் போட்டி மனப்பாண்மை அதன் விளைவாக சில பெற்றோர்கள் பிள்ளைகளைத்  தயார்ப்படுத்தும் விதம் பார்பதற்க்கே மிகக் கொடுமையாக இருக்கும் .உதாரணத்திற்கு யாரோ ஒரு பிள்ளை நடனம் பழகுகின்றான் ,சங்கீதம் ,வயலின் ,கணணி ,கறாத்தே பழகுகின்றான் என்றால் என் பிள்ளையும் அவன்போல் 
நிறையப் பழக வேண்டும் என்று முடிவெடுத்து ஓட ஓட விரட்டி அதை பயிலத் தொடக்கிவிட்டு பின் எல்லாவற்றையும்  அந்தப்பிள்ளையால் தொடரமுடியாமல்போக  எல்லாவற்றையும் இடைநிறுத்தி விடுவார்கள் இந்தமாதிரிப் பெற்றோர்கள் நிட்சயம் ஒன்றைத் தெரிந்துகொள்ள  வேண்டும் .இயற்கையாக  எல்லாப் பிள்ளைகளுக்கும் ஏதோ ஓரு  திறமை கண்டிப்பாக இருக்கும் .பெற்றோர்களாகிய நாம் எம் குழந்தைகளிடம்  
ஒளிந்திருக்கும் திறமைகளைத்தான் முதலில் அதிகம் ஊக்குவிக்க முற்பட வேண்டும் .தவிர பிள்ளைக்கு நாட்டம் இல்லாத எந்த ஒரு கலையையும் எங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்து திணித்து வந்தால் நிட்சயம் அதில் வெற்றிகொள்வது மிகவும் அரிது .அத்துடன் வயது எல்லைகளையும் நாம் கவனத்தில்க்கொள்ளல்கொள்ளல்  
மிக மிக அவசியம் .எல்லாப் பிள்ளைகளாலும் எடுத்த எடுப்பில் சாதனை புரிய முடியாது .அவர்களின் அறிவு வளர்ச்சியை நாம் மெல்ல மெல்லத்தான் வளர்த்தெடுக்க வேண்டும் .அதை விட்டுவிட்டு அடித்துத்  துன்புறுத்தி கற்பித்துவந்தால் பிள்ளைக்கு அதனால் அதிகம் வெறுப்பும் பய உணர்வும் தொத்திக்கொள்ளும் .உங்களுக்கும் விரைவில் பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்பட்டு விடும் .நான் அறிந்து இங்கு 
வெளிநாடுகளில் எமது பெற்றோர்கள் படும் துன்பம் சொல்லில்  
அடங்காது  ஒன்று அவர்களுக்கென போதிய அனுபவம் 
இல்லாமை மற்றொன்று  போட்டி மனப்பாண்மை இவ்விரண்டு விசயமும் மனதைக் குடைந்ததும் பேசாமல் நம் நாட்டுக்கு போய்விடவேண்டும் என்பார்கள் .எங்கு போனாலும் பிள்ளைகளின் விசயத்தில் பொறுமை அதிகம் வேண்டும் என்பதை எல்லாப் பெற்றோரும் 
புரிந்துகொள்ள வேண்டும் .
                        அத்துடன் அதிக பிள்ளைகள் உள்ள இடத்தில் எப்போதும்ஒரு குழப்பம் இருக்கும் அதாவது அண்ணன் வாங்கிய மதிப்பீடு  தம்பி வாங்க மாட்டன் இந்த இடத்தில் பெற்றோர்கள் மூத்தவனைத் தலை மீது தூக்கிவைத்து ஆடினால் இளையவன் மனம் நோகும் இது மாறியும் நிகழும் .பிள்ளைகளுக்கு மத்தியில் நாம் இவ்வாறு பாகுபாடு 
காட்டிவந்தால் எதிர்காலத்தில் பிள்ளைகள் மனம் இதனால் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும் .பின் நாம் எதைச் சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள் என்ற நிலை வந்துவிடும் .அதனால் நாம்தான் மிக அவதானமாக செயல்பட வேண்டும் .என்றும் அடம்பிடிக்கும் பிள்ளைகளை அன்பால் அரவணைத்துச் செல்லுங்கள் .முடிந்தவரை 
அவர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து கொள்ளுங்கள் .
                      பிள்ளைகளை ஏசும்போதும் கண்டிக்கும்போதும் உங்கள் தனிப்பட்டபிரச்சனைகளை மனதில் வைத்துக்கொண்டு செயல்படாதீர்கள் பெற்றோர்கள் உங்களுக்குள் வாக்குவாதம் முற்றும்போது எப்போதும் 
பிள்ளைகளை அருகில் வைத்துக்கொள்ளாதீர்கள் .உறவினர்களுடன் உங்களுக்கு உள்ள புரிந்துணர்வு அற்ற குழப்பத்தை வளர்ந்துவரும் உங்கள் பிள்ளைகளிற்கு தவறான முறையில் ஒப்பிக்காதீர்கள் .முடிந்தவரை பிள்ளைகளை உங்கள் தீய பழக்கங்களில் இருந்து அதாவது கெட்ட வார்த்தை பேசுதல் ,சண்டை இடுதல் ,பிறரைத் தூற்றுதல் ,பொய் உரைத்தல் ,வன்சொல் பேசுதல் போன்றவற்றில் இருந்து அவர்களை  நல்லபடியாக வாழ வழி செய்யுங்கள் .இதுதான் உங்கள் பிள்ளையை நாளை இந்த சமூகம் மதிக்கத் தக்க நல்ல 
இடத்திற்கு இட்டுச் செல்லும் .அத்துடன் அவசர உலகில் நாம் எமது பிள்ளைகளுக்குக்  காட்டும் எல்லாவித அக்கறையோடும் அவர்கள் கேட்கும்  கேள்விகளுக்கு மிக பொறுப்புடன் எங்கள் பதிலைக் கொடுத்துவந்தால் நிட்சயம் அந்தப் பிள்ளையின் அறிவு வளர்ச்சிக்கு அது மிகவும் உறுதுணையாக நிற்கும் .

                     குழந்தைகள் விரும்பும் பட்சத்தில் எம்மோடு இணைந்து 
சின்னச் சின்ன வேலைகள் செய்வதற்கும் நாம் அனுமதி வழங்கல்என்பதும் வரவேற்கத் தக்கது .அத்துடன் சுத்தம் பேணுதல் ,சுயமாக தன் கடமையைத் தானே செய்யப் பயிற்றுவித்தல் ,பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடப் பயிற்றுவித்தல் வயதானவர்களுடன் அன்பைப்பேணக் கற்றுக் கொடுத்தல் என்பதும் எம் தலையாய கடமை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது .
                                                              நீங்கள் அதிகம் வசதி படைத்தவர்கள் 
ஆயின் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் கேட்டதும் உடன் எதையும் வேண்டிக் கொடுக்காதீர்கள் .பிள்ளைகள் அடம் பிடித்தால் நாம் உடன் எதையாவது வேண்டிக் கொடுப்பதன்மூலம் எங்கள் பிரச்சனை தீர்ந்து விடலாம் .ஆனால் அந்தப் பிள்ளைக்கு இதனால் வருங்கால 
வாழ்வில் பொறுப்புணர்வு அற்ற செயல் அதிகமாக கஸ்ரத்தைக் 
கொடுக்கும் .இருக்கும்போது  கொஞ்சம் இறுக்கமாக இருந்தால் பின் இல்லாத காலத்திலும் அந்தப் பிள்ளையால் உங்களுக்கு என்றும் அனுசரணையாக நடந்துகொள்ள முடியும் .முடிவில் ஒன்றை மட்டும் அறுதியும் உறுதியுமாகச் சொல்கின்றேன் .பிள்ளைகளை நாம் எதன்நலன் கருதாமல் அவர்களின் எதிர்கால நலன் கருதி மிக மிக பொறுப்புடனும் வளர்ப்போமானால் அந்தப் பிள்ளைகளே நாளை எம் பெயரையும் காப்பாற்றும் என்பதில் ஐயம் இல்லை .கவிதை 
அடுத்த தொடரில் இடம்பெறும் .மிக்க நன்றி உறவுகளே வாழ்த்துக்கள் உலகில் உள்ள அனைத்து மழலைச் செல்வங்களுக்கும் இன்றைய நன்னாள் உங்கள் வாழ்வின் சிறப்பான பொன்னாளாக மலரட்டும் .அத்துடன் இந்தத் தொடர்பதிவை தொடர அழைத்த அன்பு உள்ளத்துக்கு என் மனமார்ந் நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/01/2011

வீண் வம்ப விலைக்கு வாங்காதீங்க .....




வட்டிக்குக் கடன் எடுத்து 
வந்தவரைக்கும் ஆட்டம்போட்டுக் 
குட்டிச் சுவராய்ப் போனவனும் 
கொண்டாடினான் பூப்புனித நீராட்டு விழா!.....

இதில் மந்தையிலே  ஆட்டைப்போல 
மச மசவென்று திண்டவர்கள் பின் 
சொன்னவார்த்தை கேட்டால் சாமி அதை 
எனக்குத்  திரும்பிச்சொல்லக்கூட  முடியவில்லை!....

என்னதான் நம் கலாச்சாரம் என்றாலும் 
இத்தனை பெரும் எடுப்புத் தேவையா!...........
குத்தவச்ச பொண்ணுக்குக்கூட இதனால் 
மிகுந்த மனக்குழப்பம் வெளிநாடுகளிலே.....

சொல்லச் சொல்லக் கேக்காமல் 
சொடினைகளும் மணவறைகளும்
என்னய்யா நடக்குதிங்கே ஏட்டிக்குப் போட்டியாய்!...
எல்லாமே சினிமாவில் போல்.............!!!!!

போற போக்கில தென்னோலையும் வாளையும் 
செயற்கை முறையிலே செய்து வித்து 
வியாபாரி பிளைத்துக்கொள்வான் வேண்டியவன் 
காட்டுற கூத்துல பொண்ணுங்க 
வீட்டை விட்டே வெளியேறும்!...

ஏற்கனவே நடக்குற தப்புக்கு 
எளிதில் விளக்கம் சொல்ல முடியாமல் 
பள்ளிக்கூடம் எங்கும் நம் பிள்ளைகள் 
படும் அவஸ்த்தை அது ஒன்று  போதாதா !..... 

வெள்ளைக்காறன் பொண்ணுங்க இங்கு 
வயசுக்கு வந்தாலும் தெரியாதுங்க இதேயே 
சொல்லிக்காட்டி விளம்பரம் போட்டால் 
இருக்கும் இடைஞ்சல் இன்னும் பெருகாதா...!!!

பின் முல்லைப் பூவில் வண்டைக் கண்டேன் 
மூடி மறைக்க நான் மறந்தேன் என்ன இது நாடு என்று 
எவர்தான் இங்கு துயர்ப்பட்டாலும் வராது 
போன மானம்  திரும்பி வரவே வராது!......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/10/2011

மீனாட்சி அருளாலே .......

மீனாட்சி அருளாலே 
அந்தக் காமாட்சி அருளாலே 
நான் பாட்டுப் பாடுகின்றேன் 
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....

வாராயோ மகமாயி ...........
வந்து குறை தீராயோ மகமாயி 
நாம் ஏறாத மலையில்லை
இனி எங்களுக்கோர் துணை இல்லை ...

மீனாட்சி அருளாலே 
அந்தக் காமாட்சி அருளாலே 
நான் பாட்டுப் பாடுகின்றேன் 
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....

ஆறோடும் வீதி எங்கும் 
அடி ஆத்தாடி உன் முகத்தை 
நாள்தோறும் தேடுகின்றோம் 
நமக்கொரு நல்ல வழி காட்டாயோ .....

பௌர்ணமி தினத்தின்று உனக்கொரு 
பட்டுடுத்திப் பார்க்கவென்று 
பச்சை இலைபோல் மனமும் இங்கே 
உன் பக்க துணை தேடுதடி .............

நட்ட நடு ராத்திரியில் 
நல்ல சோதி ஆனவளே............
எட்டி அடி வைத்து இங்கே 
எழுந்தருளி வாருமம்மா ...........

மீனாட்சி அருளாலே 
அந்தக் காமாட்சி அருளாலே 
நான் பாட்டுப் பாடுகின்றேன் 
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/06/2011

வடபழனி அம்மன் ஆலயம் ...........

வடபழனி அம்மன் ஆலயம் 
அங்கு வந்தாரை வாழவைப்பாள் 
ஒருமுறைதான் சென்றேன் அங்கே 
என் உணர்வுகளை வென்றாள் அம்மை....
மனம் தொழுதே தினம் தொழுதே....
அவள் மகிமைகளைச் சொல்லிடவா...
இறைவனில்லை இறைவனில்லை 
என்றவரும் தொழுதனரே ...............

வடபழனி அம்மன் ஆலயம் 
அங்கு வந்தாரை வாழவைப்பாள் 
ஒருமுறைதான் சென்றேன் அங்கே 
என் உணர்வுகளை வென்றாள் அம்மை....

சிலையென இருப்பவள் நிஜ அம்மனென்றோ..
எம் சிந்தையை மயக்கிடும் செல்வியன்றோ 
அழுபவர் விழிகளைத் துடைக்கின்றாள்
நல் ஆறுதல் தந்து அணைக்கின்றாள்.....

அடியவர் கூட்டம் மனம் மகிழ்ந்து 
ஆடிடப் பாடிட நான் கண்டேன் 
சிறியவர் பெரியவர் முதற்கொண்டு 
தேவியின் பாதம் தொக்கண்டேன் 

வடபழனி அம்மன் ஆலயம் 
அங்கு வந்தாரை வாழவைப்பாள் 
ஒருமுறைதான் சென்றேன் அங்கே 
என் உணர்வுகளை வென்றாள் அம்மை....

என் கனவினில் நினைவினில் தாயவளின் 
கரம்தொடும் உணர்வினை நான் கண்டேன் 
ஒருமுறை கண்ட விழியிரண்டும் 
பலமுறை காணத் துடிப்பதென்ன ................

சருகெனக் கிடந்த என் வாழ்வில் இன்று 
சாதிக்கப் பல வழி தெரிந்ததென்ன ....
அருள்மொழி கூறிடும் அவள் முகத்தில் 
ஆயிரம் நிலவொளி நான் கண்டேன் ......

வடபழனி அம்மன் ஆலயம் 
அங்கு வந்தாரை வாழவைப்பாள் 
ஒருமுறைதான் சென்றேன் அங்கே 
என் உணர்வுகளை வென்றாள் அம்மை....
ஒருமுறைதான் சென்றேன் அங்கே 
என் உணர்வுகளை வென்றாள் அம்மை....
                                
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.