அன்னத்தைக் கண்டதும் ஆசைதான் பொங்காதோ ?..
இன்னலே கூடிடும் என்றாலும் !-உன்னை
அடைவதே இன்றென்றன் ஆசையடி! இன்தேன்
அடையத் தருவாய் அணைத்து !
காதல்தான் வந்திங்கே கண்முன்னே நின்றாட
மோதல்தான் ஏனடி மோகனமே !-ஆதலால்
ஆடவன் எண்ணம்போல் அன்பைநீ கொட்டிப்பார் !
தேடலில் கிட்டுமே தேன் !
வண்டுக்குப் பூவோடு வந்ததிந்தச் சொந்தம்தான்
கண்டுள்ளம் பொங்கட்டும் காவிரிபோல் !-பெண்ணே
விழியாலே உண்டு விரைந்தோடிச் சென்றால்
அழியாதே நான்கொண்ட அன்பு !
திண்டாட வைத்ததனால் தீமூட்டிச் செல்லாதே !
பண்பாடு மிக்கநற் பைங்கிளியே !-மண்ணில்
உனக்கெனவே நான்பிறந்தேன் ஊர்போற்றும் வாழ்வே !
மனக்குழப்பம் விட்டிங்கே வா !
உன்னோடு நானிருக்க உள்ளத்தில் தேன்சுரக்கும் !
என்னை அறியாயோ என்னுயிரே !-முன்பே
அணைபோட்டு வைத்தும் அடங்காது காதல் !
கணையாழிக் கண்களைக் காண் !
அச்சத்தை விட்டுநல் ஆனந்தம் கொள்வோமே !
இச்சை பெருக இணைவோமே !-பச்சை
மலையழகும் கூத்தாடும் மானழகும் காண
சிலையழகே இன்னும் சிரி !