Showing posts with label விருத்தப் பாமாலைகள். Show all posts
Showing posts with label விருத்தப் பாமாலைகள். Show all posts
6/01/2021
4/17/2017
நிலாக்கால இரவுகள்
மரபுக் கவிதை எண்சீர் விருத்தம்
---------------------------------------------------
அகராதி முதற்கொண்டு தேடிப் பார்த்தேன்
......அடியாத்தி சொல்லத்தான் வார்த்தை இல்லை!
பகவானின் கற்பனைக்கோர் எல்லை உண்டோ!
......பார்போற்றும் பேரழகை மண்ணில் கண்டேன்!
ஜெகன்மாதா பெற்றெடுத்த பிள்ளைச் செல்வம்
......ஜெகத்தினையே சுற்றிவரும் காட்சி போலும்
சுகமான சிந்தனைகள் இங்கே தோன்றும்!
......சுழல்கின்ற நிலாக்காலம் நெஞ்சுள் வாழும்!
இனிதான காலமென எண்ணும் காலம்
......இரவெல்லாம் நிலவோடு வாழும் காலம்!
தனிமைக்குள் நுழைந்தின்பம் காணச் சொல்லும்
.......தள்ளாடும் வயதினிலும் ஆசை கொல்லும்!
கனியொத்த சுவைநல்கும் எண்ணம் தோன்றும்
.......கண்ணதாசன் நினைவலைகள் நெஞ்சுள் நீளும்!
பனிபோல துயரெல்லாம் மாய மாகும்!
.......படர்ந்திருக்கும் பேரழகில் பார்வை சொக்கும்!
வெண்ணிலவு சுற்றிவரும் வீதி எங்கும்
......விளையாடித் திரிந்தோமே அந்தக் காலம்!
எண்ணற்ற நினைவுகளைச் சொல்லச் சொல்ல
......ஏக்கம்தான் விழைகிறது ஏழை நெஞ்சில்!
கண்காணாத் தேசத்தில் இன்றெம் மக்கள்
......காணுகின்ற காட்சியெல்லாம் வேறொன் றாகும்!
மண்மீது இத்துயரை மாய்ப தாரோ!
......மறுபடியும் நிலவினைநாம் ரசிக்க வேண்டும்!
(கவிக்களம் -11 கவிதைப்பூங்கா போட்டிக்கான கவிதை)
4/08/2017
வெற்றி!
வெற்றிபெற்ற களிப்பொன்றே வாழ்வில் போதும்
.....வேறுவேலை இங்கிருந்தால் பார்த்துச் செல்வீர்!
பெற்றவெற்றி ஒன்றினையே எண்ணி எண்ணிப்
.....பெருமைகொள்ளல் வளர்ச்சிக்குத் தடையாய் நிற்கும்!
கற்றவர்கள் எப்போதும் களிப்பில் மூழ்கிக்
.....கண்டபடி கதைபேசித் திரிய மாட்டார்!
அற்புதங்கள் நிகழ்த்துவதே அவர்தம் நோக்கம்
....அதனால்தான் இன்றுலகால் அறியப் பட்டார்!
மற்றவரை மதிக்கின்ற பண்பு ஒன்றே
....மானுடர்க்கு மகத்தான பண்பே ஆகும்!
பெற்றாலும் அப்பேறு நிலைக்க வேண்டிப்
....பெருமுயற்சி எடுத்தென்றும் உழைக்க வேண்டும்!
தற்பெருமை தலைசிறந்த கலைஞர்க் கிங்கே
....தகாதென்ற உண்மையினை உணர்தல் வேண்டும்!
அற்பமாயை உலகினிலே சிக்கிக் கொண்டே
.....அடுத்தவரைப் பகையாளி என்றெண் ணாதீர்!
ஏட்டிக்குப் போட்டியாக வளரும் ஆற்றல்
....எவர்த்தடுத்தும் நிற்காதென் றெண்ணிக் கொள்வீர்!
நாட்டிற்குள் திறமையினால் உச்சம் பெற்ற
.....நல்லவரை வாழ்த்துவதே நற்பண் பாகும்!
வீட்டிற்குள் எப்படியும் வாழ்தல் உண்டு
.....வியாபாரத் தளத்தினிலே உண்மை வேண்டும்!
போட்டியிலே சிலசமயம் தோல்வி வந்தால்
.....போராடி வெற்றிகொள்வீர் அதுவே தர்மம்!
அண்டங்கள் கடந்திங்கு நிற்கும் மாந்தன்
....ஆற்றலினை எவருமிங்கு அறிதல் நன்று!
மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவே நின்று
.....மகத்தான சாதனையைப் படைப்பார் வென்று!
எண்ணியிதை நாம்பார்க்கத் தவறும் போதே
......எண்ணத்தில் விரிசல்கள் வந்து சேரும்!
புண்பட்டுப் புரையோடி நிற்கச் செய்யும்
.......புரிந்துணர்வே அற்றசெயல் இதனால் ஓங்கும்!
நான்பெரிதே என்றெண்ணும் எண்ணம் கொண்டால்
.....நல்லதெது கெட்டதெது தெரியா திங்கே!
கூன்விழுந்த மனதினிலே தோன்றும் கோபம்
.....குற்றமற்ற எவரையுமே கொல்லத் தூண்டும்!
நோன்பிருந்து பெற்றபிள்ளை இவ்வா றென்றால்
....நொந்துபோகும் தாயுள்ளம் என்ன ஆகும்!
ஏன்பிறந்தோம் என்றெண்ணி வருந்த வைக்கும்
....இழிச்செயலை எவருமிங்குத் துறத்தல் நன்று!
12/10/2016
வண்டி உருண்டோட
வண்டி உருண்டே ஓடும்
.....வாய்த்தால் இரண்டு மாடும்!
கண்டு கொள்வீர் இதுபோல்
.....கணவன் மனைவி வேண்டும்!
சண்டை இட்டுப் பிரிந்தால்
......சாகும் வரைக்கும் துன்பம்!
தொண்டில் சிறந்து விளங்கித்
......தோகை மயிலே வாழ்க!
உழவுத் தொழிலுக் குதவும்
....உண்மை யானதோ ழர்கள்!
பழகும் விதத்தில் என்றும்
....பசுவும் எருதும் எம்மின்
குழந்தை என்றால் வாழ்வில்
.....குலத்துக் கதுவே பெருமை!
இழப்பைத் தாங்க இனியோர்
.....இதயம் எங்கே கேட்போம்!
மண்ணின் வளத்தைக் காக்கும்
.....மழையைப் போல்தான் என்றும்
எண்ணக் கருத்தில் நிற்கும்
......எருதும் பசுவும் வாழ்வில்!
உண்ண உணவும் தந்தே
.....உயிரைக் காக்கும் தெய்வம்
கண்கள் முன்னே தோன்றும்
.....காளை மாட்டின் வம்சம்!
வணக்கம் அன்பு உள்ளங்களே!
11/01/2016
உயிரே! உயிரின் உயிரே!
ஈன்றவளுக் கொப்பான இன்றமிழை நான்மறைவேன்
தேன்சிந்தும் பாக்களைநீ தேடிவந்து! -வான்மழைபோல்
இன்றென்றன் எண்ணத்தில் இட்டுச்செல் என்னுயிரே !
என்றுமிது போதும் எனக்கு!
தூக்கத்தில் கூடத்தான் உன்றன் எண்ணம்
.....தூண்டிவிட்டுச் செல்கிறாய் தாயே உன்னால்
பூக்கின்ற புலமையும் பூலோ கத்தில்
......பூக்களின் நறுமணத்தை ஏந்திச் செல்லும்!
தேக்கிவைத்த உணர்வெல்லாம் சிந்தும் போது
.....தேன்துளியாய்த் தான்சிந்தும் இந்த மண்ணில்!
ஏக்கத்தைத் தந்தென்னை இதுபோல் நாளும்
.....எழுப்பிவிடு தீந்தமிழே அதுவே போதும்!
உன்னோடு வாழ்கின்ற நொடிகள் எல்லாம்
.....உலகத்தில் எனக்கிங்குச் சொர்க்கம் ஆகும்!
பொன்னான வரமளித்த தாயே உன்னால்
.....போகட்டும் பொல்லாத தூக்கம் இங்கே!
கன்னல்பூங் கவிதைகளால் மாலை செய்து
....காலமெல்லாம் உனக்கணிந்தால் அதுவே போதும்
இன்றெனக்கும் இதைவிடவும் மகிழ்ச்சி உண்டோ!
.....இன்றமிழே! என்வாழ்வே! வணங்கு கின்றேன்!
திக்கெட்டும் இனியிந்த அம்பாள் அடியாள்
......தீந்தமிழின் உணர்வேந்திச் செல்ல வேண்டும்!
துக்கத்தை எவர்மனமும் துறக்க வேண்டும்!
.....துணையாக உனையெண்ணச் செய்ய வேண்டும்!
பக்குவமாய் எடுத்துரைக்கும் கருத்தால் நாளும்
.....பலசமய இருள்நீங்கச் செய்ய வேண்டும்!
உக்கிரமாய் நின்றொழிக்கும் பகையும் இங்கே
.....உன்பாதம் சரணடையச் செய்ய வேண்டும்!
அணியணியாய்ப் பலகதைகள் வந்த போதும்
.....அடியவளின் உள்ளத்தில் இன்றும் வாழும்
மணிமேகலை யுடன்சிலப்பதி காரம் என்றும்
......முத்தான காவியமாம் இராமா காதை
பணிவன்பு தரவல்ல பார தத்தைப்
.......பயின்றுவந்தால் நல்வாழ்வும் அளித்துக் காத்துத்
துணிவுடனே வாழவைக்கும் என்றே சொல்லித்
...... தூயதமிழ்மேல் ஆர்வத்தைத் தூண்டிச் செல்வேன்!
வள்ளுவனார் குறள்நெறியும் ஓளவை தந்த
.....வற்றாத மூதுரையும் பைபிள் மற்றும்
தெள்ளுதமிழ்ப் பாட்டிலுள்ள திருக்குர் ரானும்
.....தேடினிதம் கற்றிட்டால் இன்பம் என்றே
கள்வடியும் பாட்டாலே எடுத்து ரைத்துக்
.....கலியுகத்தில் எம்மவரின் போக்கை மாற்றிப்
பள்ளிகொள்ள வைத்திடுவேன் நாளும் இங்கே
.....பைந்தமிழ்ழே உயிரென்று உலகம் மெச்ச!
10/23/2016
இன்னும் உறங்கிடும் ஞாபகமோ!
செந்தமிழ் போற்றிடும் சேவக னே -உன்னைச்
சேர்ந்த வர்க்கேது துன்பமிங் கே
அந்தியில் பூத்திடும் தாமரை யோ -இவள்
அன்பைப் பொழிந்திடும் தேவதை யோ!
கட்டிக் கரும்பென வந்தவ னே -சிறு
கைவிர லாலெனை வென்றவ னே
கொட்டிக் கொடுத்திடு கோமக னே -இன்பா
கோடிச்சு கம்தரும் மோகன மே!
என்னை ஈர்த்தவன் நெஞ்சினி லே - பொங்கும்
இன்தமிழ்க் கற்பனைக் காவிய மே
தன்னில் சரிபாதி என்றவ னே -உள்ளம்
தஞ்சமென் றுன்னடி தேடுதிங் கே!
தென்னை மரக்கிளைக் கீற்றினி லே -நாளும்
தெம்மாங்கு பாடும் பூங்குயி லே
இன்னும் உறங்கிடும் ஞாபக மோ -அதில்
இன்றுமே நான்வரும் ஓர்கன வோ!
மல்லிகை முல்லையும் பூத்திடிச் சே -அந்த
மஞ்சள் நிலவதைப் பார்த்திடிச் சே
அல்லியும் தன்னிதழ் மூடிடிச் சே - இன்னும்
அந்தப்புறத் திலுன்னைக் காணலி யே!
கள்ளூறும் பார்வையைக் கண்டிட வே -உள்ளம்
காத்திருக் குமென்றன் காதல னே
துள்ளி யெழுந்துவா இக்கண மே -மெல்லத்
தூண்டிடும் ஞாபகம் வாட்டிடு தே!
அன்பெனும் இன்பச் சோலையி லே -இரு
அன்றிலும் கூடிடும் வேளையி லே
தன்னிலை மறக்க வைத்திடு தே -அந்தத்
தென்றலும் உன்பெயர் சொல்லிடு தே!
சத்திய வாக்குத் தந்தவ னே - இன்னும்
சங்கடம் மெத்திடச் செய்வா யோ
முத்தமிழ் வித்தகா கூந்தலி லே -வைத்த
முல்லைப்பூ வாடுமுன் வாரா யோ!
செந்தமிழ் போற்றிடும் சேவக னே -உன்னைச்
சேர்ந்த வர்க்கேது துன்பமிங் கே
அந்தியில் பூத்திடும் தாமரை யோ -இவள்
அன்பைப் பொழிந்திடும் தேவதை யோ!
கட்டிக் கரும்பென வந்தவ னே -சிறு
கைவிர லாலெனை வென்றவ னே
கொட்டிக் கொடுத்திடு கோமக னே -இன்பா
கோடிச்சு கம்தரும் மோகன மே!
என்னை ஈர்த்தவன் நெஞ்சினி லே - பொங்கும்
இன்தமிழ்க் கற்பனைக் காவிய மே
தன்னில் சரிபாதி என்றவ னே -உள்ளம்
தஞ்சமென் றுன்னடி தேடுதிங் கே!
தென்னை மரக்கிளைக் கீற்றினி லே -நாளும்
தெம்மாங்கு பாடும் பூங்குயி லே
இன்னும் உறங்கிடும் ஞாபக மோ -அதில்
இன்றுமே நான்வரும் ஓர்கன வோ!
மல்லிகை முல்லையும் பூத்திடிச் சே -அந்த
மஞ்சள் நிலவதைப் பார்த்திடிச் சே
அல்லியும் தன்னிதழ் மூடிடிச் சே - இன்னும்
அந்தப்புறத் திலுன்னைக் காணலி யே!
கள்ளூறும் பார்வையைக் கண்டிட வே -உள்ளம்
காத்திருக் குமென்றன் காதல னே
துள்ளி யெழுந்துவா இக்கண மே -மெல்லத்
தூண்டிடும் ஞாபகம் வாட்டிடு தே!
அன்பெனும் இன்பச் சோலையி லே -இரு
அன்றிலும் கூடிடும் வேளையி லே
தன்னிலை மறக்க வைத்திடு தே -அந்தத்
தென்றலும் உன்பெயர் சொல்லிடு தே!
சத்திய வாக்குத் தந்தவ னே - இன்னும்
சங்கடம் மெத்திடச் செய்வா யோ
முத்தமிழ் வித்தகா கூந்தலி லே -வைத்த
முல்லைப்பூ வாடுமுன் வாரா யோ!
9/30/2016
கிராமிய பூபாளம் உலகெங்கும் ஒலிக்கட்டும்!
கற்றவரும் மற்றவரும் வீற்றி ருக்கும்
....கலைமாலைப் பொழுதினிலே வாழ்த்துப் பாடி
நற்பெயரை நான்சூட்ட வந்தே னம்மா!
.....நறுந்தமிழே! நானிலமும் போற்றும் வண்ணம்
உற்றதுணை யாயிருக்க வேண்டும்! என்றன்
......உயிர்மூச்சுப் பேச்செல்லாம் நீயே ஆனாய்!
நற்றவமே! நறுமணமே! தேனின் ஊற்றே!
......நற்றமிழே! வந்தமர்வாய் என்றன் நாவில்!
குற்றமறக் கற்றகல்வி ஞானம் கொண்டு
......குடிமக்கள் உயர்வுக்காய் ஆற்றும் தொண்டு
நற்பயனை நாளுமிங்கே அளிக்கக் கண்டு
......நம்மவர்கள் கொண்டாடும் விழாவில் இன்றும்
கற்பனைக்கும் எட்டாத மகிழ்வு பொங்கும்
......கலைவாணி நல்லாட்சி எங்கும் தங்கும்!
சொற்பனத்தில் மிதப்போரே இந்தச் சோலை
.....சொக்கவைத்து மகிழ்வூட்டும் இன்று மாலை!
வந்தனங்கள் கோடிமுறை சொல்லிச் சொல்லி
.....வணங்குகின்றேன் அம்பாளின் அடியாள் நானும்!
சந்தனமாய் மணக்கட்டும் சான்றோர் உள்ளம்!
......சங்கீத இராகங்கள் பூபா ளத்தால்
செந்தமிழர் போற்றுகின்ற கிராமப் பண்பைச்
......சுமந்துவரும் நல்லரங்கம் இன்றும் எம்மின்
சிந்தையிலே தேன்தடவிச் செல்லும்! அந்தச்
.......செழிப்பூட்டும் இன்பத்தில் களிப்பீர் நன்றே!
மண்ணிலொரு மலர்விரிந்து மணத்தை வீசும்
....மக்கள்தன் சாயலென உலகம் போற்றும்
தண்ணிலவு மனங்கொள்ளும் தாய்சேய் சொந்தம்!
....தருமவழி செல்வதனைத் தரணி சாற்றும்!
புண்ணியத்தில் வாழ்வுதனைப் புகுத்தி ஈழப்
....புங்குடுதீ வுதித்திட்ட புகழ்சேர் சான்றோர்
கண்ணியத்தைக் கற்றொழுகிக் காலம் யாவும்
....காட்டுமொரு பரிவுதனை உலகம் போற்றும்!
அஞ்சாத படைவீரன் ஆண்ட பூமி!
... அதுதானே எம்மவர்க்கு என்றும் சாமி!
துஞ்சாமல் தலைவனது கொள்கை பேணித்
.... .துணையாக நின்றவர்கள் சீரைப் போற்றி!
நெஞ்சத்தில் நாட்டுணர்வை ஏந்திக் காத்து
......நிறைமனத்தை அடைந்திட்டோம்! இன்றும் அந்தச்
செஞ்சொற்றுக் கடனெண்ணி மகிழ்வார் சோம
......சுந்தரனார் திருநாவுக் கரசர் வாழ்க!
9/18/2016
அன்பே வா!
கொஞ்சும் கிளியே கோல விழியே
கொண்ட துயரைப் போக்கு -எழில்
மிஞ்சும் அழகால் மீண்டும் வந்தே
மின்னல் போலே தாக்கு!
கொண்ட துயரைப் போக்கு -எழில்
மிஞ்சும் அழகால் மீண்டும் வந்தே
மின்னல் போலே தாக்கு!
கட்டிக் கொண்டால் காதல் தேடும்
காமன் பள்ளிக் கூடம் -அதை
விட்டுத் தள்ளி விரைந்து சென்றால்
வீணாய்க் கலையும் வேடம்!
காமன் பள்ளிக் கூடம் -அதை
விட்டுத் தள்ளி விரைந்து சென்றால்
வீணாய்க் கலையும் வேடம்!
உன்னை என்னை உணர்ந்தால் போதும்
உலகம் சொர்க்கம் ஆகும் -இதில்
தன்னைத் தானே வருத்திக் கொண்டால்
தானாய் உள்ளம் வேகும்!
உலகம் சொர்க்கம் ஆகும் -இதில்
தன்னைத் தானே வருத்திக் கொண்டால்
தானாய் உள்ளம் வேகும்!
அன்பே உன்றன் அழகைக் கண்டு
அடிமை ஆனேன் அன்று -அதை
முன்பே உணர முடிந்தால் ஏன்தான்
முட் டா ளானேன் இன்று!
அடிமை ஆனேன் அன்று -அதை
முன்பே உணர முடிந்தால் ஏன்தான்
முட் டா ளானேன் இன்று!
கண்ணே மணியே காலம் தோறும்
காதல் கீதம் பாடு -உன்னை
எண்ண மறந்து இருப்பே னானால்
இதயக் கதவை மூடு!
காதல் கீதம் பாடு -உன்னை
எண்ண மறந்து இருப்பே னானால்
இதயக் கதவை மூடு!
பஞ்சும் நெருப்பும் பக்கம் வந்து
பற்றிக் கொண்டால் போதும் -உயிர்
தஞ்சம் உன்றன் நெஞ்சம் என்று
தானே இங்கு ஓதும்!
பற்றிக் கொண்டால் போதும் -உயிர்
தஞ்சம் உன்றன் நெஞ்சம் என்று
தானே இங்கு ஓதும்!
5/08/2016
பாட்டுக்கோர் புலவன் பாரதி!
பாரதியார் போலிங்குப் பாரினிலே கண்டதில்லை
வீரத்தில் யாமறிந்த விற்பன்னன்!-ஏரெடுத்து
இங்குளுதான் எம்மனத்தைத் தங்கத் தமிழாலே!
பொங்கட்டும் இன்பப் பொழில்!
போர்முனைக்குக் கத்திகொண்டு போனவரும் தோற்றிடுவார்
ஏர்முனைக்(கு) ஈடான என்றுமவன்!- கூர்விழிமுன்
யார்வந்து நின்றாலும் யானை வலிமையென
பாரதிக்கே கிட்டும் பரிசு!
பொல்லாத சாதிவெறி போனதெங்கே என்றறியார்
எல்லாமும் எம்மறவன் பாட்டின்முன் !-நில்லாதே
ஓடியதாம்! என்றுமவர் ஒப்பற்ற பாடலினால்
தேடியிங்குத் தந்திட்டார் தேன்!
அச்சமின்றி நாம்வாழ அம்புவியில் தெம்புதந்து
இச்சைகளைத் தீர்த்துவைக்கும் இன்பாவே!-துச்சமென
எண்ணிநிதம் தூற்றுவோரை எந்நாளும் வெல்லத்தான்
கண்ணாக நின்றொளிரும் காண்!
தாலாட்டிச் சீராட்டித் தாய்பாடும் பாட்டினுள்ளும்
காலமெல்லாம் கண்டுணர நற்கருத்தால் !-கோலமிட்டார்
கோடிமுறை கேட்டாலும் கொண்டசுவை மாறாது!
நாடினார்க் கெய்தும் நலம்!
பெண்ணடிமை இல்லையென்று பேரெழுச்சி கொண்டிங்குக்
கண்ணான பாரதியே கன்னலென !- எண்ணற்ற
பாட்டிசைத்து பாரிலெம்மை வாழவைத்தார் இன்றவரால்
ஏட்டினிலும் எம்முயர்வைக் காண்!
நாட்டிற்கு நன்மைசெய்து நற்புகழின் உச்சிதொட்டார்
ஏட்டினிலே பாரதிக்கும் ஈடுண்டோ !- பாட்டிசைக்க
பாரதத்தாய் ஈன்றெடுத்த பாவலனைக் காவலனை
வேரெனவே காணும் விழி!
பாடுங்கள் பார்போற்றும் பாரதியின் பாடலைத்தான்
தேடிவரும் இன்பமிங்கே தேனாறாய் !-நாடுங்கள்
நற்கருத்தை நாட்டுக்கும் இன்றதுவே நன்மைதரும்!
பெற்றவரம் தந்துவக்கும் பேறு!
5/01/2016
சொல்வேந்தர் சுகிசிவத்தின் பேச்சைக் கேளீர்!
சொல்வேந்தர் சுகிசிவத்தின் பேச்சைக் கேட்டுச்
....சொக்காத மனமும்தான் சொக்கிப் போகும்!
எல்லாமும் எமக்கிங்குத் தெரியும் என்றே
.....எண்ணிநிதம் பேசுகின்றோம் உலகில் இன்றே!
இல்வாழ்வு சிறப்பதற்கும் எல்லை இல்லா
.....இடர்மூழ்கிப் போவதற்கும் எடுத்துக் காட்டாய்
நல்லதையே நாளுமிங்கு உரைக்கும் அன்பர்
.....ஞானத்தைக் கண்டுள்ளம் வியப்பில் மூழ்கும்!
தித்திக்கும் எம்மனத்தில் தேனும் பாயும்
.........தீராத காதலொடு நிலவும் காயும்!
எத்திக்கும் அவர்பெயரைச் சொல்லிப் பார்க்கும்!
.......இருவிழியும் செவியிரெண்டும் இன்பம் கொள்ளும்!
வித்தைக்கு அதிபதியாள் நாவில் நின்று
......விளையாடும் செயலைத்தான் உணர்த்திச் செல்லும்!
இத்தகைய பேச்சைத்தான் கேட்க வேண்டும்
.......இன்பமுடன் இவ்வுலகில் நாமும் வாழ!
கண்ணாரக் காணாத ஒன்றை வைத்துக்
....கதைபேசித் திரிகின்றார் கயவர் நாளும்!
எண்ணத்தில் தோன்றுவதை எல்லாம் கோர்த்து
..... இன்றுலகில் பேசுகின்ற பேச்சைக் கேட்டால்
புண்ணாகித் தான்போகும் மனமும் இங்கே
......புழுவொன்று தீமேலே விழுந்தாற் போல!
பண்பாடு நிறைந்தவரே அந்தப் பேச்சால்
......பாழாகிப் போனவரை எண்ணிப் பாரீர்!
நல்லதையே நாளுமிங்குக் கேட்க்க வேண்டும்!
.....நாம்பேசும் பேச்சும்தான் இனிக்க வேண்டும்!
இல்லாத கதைபேசும் நட்போ டிங்கு
....இருக்கின்ற உறவைதாம் துறக்க வேண்டும்!
பொல்லாங்குச் சொல்வோர்குத் துன்பம் ஏது
.....பொய்பேசி நாள்முழுதும் இன்பம் காண்பார்!
வில்லங்கம் விளைவிப்பார் அவரே நாளை
......வீதியிலும் நிற்கவைப்பார் விழித்துக் கொள்வீர்!
பட்டதுன்பம் அத்தனையும் பறந்து போகும்!
......பாரினிலே வாழவழி தெரிந்து போகும்!
சட்டத்தைப் படித்தாலும் மேடை ஏறிச்
......சத்தியத்தைப் பேசுகின்றார் உலகில் இன்று!
முட்டாளும் சுகிசிவத்தின் பேச்சைக் கேட்டு
......முன்னேறிச் செல்லுகின்ற காலம் தன்னில்
விட்டத்தை நோக்கியிங்கு அழுதல் நன்றோ!
......விழிசிந்தும் கண்ணீரைத் துடைத்துக் கொள்வீர்!
4/10/2016
பாவலர் பயிலரங்கில் நான் தொடுத்த வெண்பா மாலை!
(இரு விகற்ப நேரிசை வெண்பா)
தந்தை தாய்!
தந்தை பொருளீட்டித் தந்தெம்மைக் காத்திடினும்
இந்த உலகத்தில் எப்போதும்! - வந்த
துயரறுத்து வாழ்வளிக்கும் துாயநற் தெய்வம்!
தயவொளிரும் தண்டமிழ்த் தாய்!
இந்த உலகத்தில் எப்போதும்! - வந்த
துயரறுத்து வாழ்வளிக்கும் துாயநற் தெய்வம்!
தயவொளிரும் தண்டமிழ்த் தாய்!
தந்தை துணையின்றித் தள்ளாடும் வாழ்வுற்றும்
சிந்தை இழக்காமல், சீர்தேடி - எந்த
நிலையிலும் எம்மை நிலத்தில்வாழ் வித்துத்
தலைநிமிரச் செய்பவளே தாய்!
நிலையிலும் எம்மை நிலத்தில்வாழ் வித்துத்
தலைநிமிரச் செய்பவளே தாய்!
காய் கனி!
காய்த்த மரமென்றும் கல்லடிக்குத் தப்பாது!
ஆய்ந்திதனை ஆற்றுகவே நற்பணிகள் - ஓய்வின்றித்
தன்னுயிரைத் தந்து தரணிக்கு வாழ்வளிக்கும்
கன்னல் மனமே கனி!
ஆய்ந்திதனை ஆற்றுகவே நற்பணிகள் - ஓய்வின்றித்
தன்னுயிரைத் தந்து தரணிக்கு வாழ்வளிக்கும்
கன்னல் மனமே கனி!
காய்போல் சுவைகொண்டு கன்னிமனம் இங்கிருந்தால்
வாய்ப்புண்டோ காதல் வளர்ந்தோங்க! - சேய்போல்நின்
அன்புக்கு நான்ஏங்க அள்ளித்தா! தேன்சிந்தும்
கன்னம்தான் செம்மாங் கனி!
வாய்ப்புண்டோ காதல் வளர்ந்தோங்க! - சேய்போல்நின்
அன்புக்கு நான்ஏங்க அள்ளித்தா! தேன்சிந்தும்
கன்னம்தான் செம்மாங் கனி!
காதல் கமழும் கவி!
கண்ணெதிரே வந்தநிலா! கள்ளமிலா வெள்ளைநிலா!
பெண்ணவளை யான்கண்டு பேச்சிழந்தேன்! - மண்மீது
மோதல் புரியாமல் மூச்சிரைக்கச் செய்கின்றாள்
காதல் கமழும் கவி!
பெண்ணவளை யான்கண்டு பேச்சிழந்தேன்! - மண்மீது
மோதல் புரியாமல் மூச்சிரைக்கச் செய்கின்றாள்
காதல் கமழும் கவி!
தேன்குடிக்க வந்தேனே தேடியிங்(கு) உன்னிடத்தில்
நான்விரும்பும் நன்மலரே சொல்லிங்கே! -ஊன்மறந்தேன்
ஆதலினால் ஆதரிப்பாய் நீயேதான் என்னுயிருள்
காதல் கமழும் கவி!
நான்விரும்பும் நன்மலரே சொல்லிங்கே! -ஊன்மறந்தேன்
ஆதலினால் ஆதரிப்பாய் நீயேதான் என்னுயிருள்
காதல் கமழும் கவி!
போதாது போதாது போ!
இன்தமிழே! என்னுயிரே! இன்றுலகம் என்பாவைப்
பொன்னென்று போற்றிடினும் பூச்சூடி!- நின்றாலும்
காதுபடச் சொல்வேன்யான் கற்றதெல்லாம் என்வாழ்வில்
போதாது போதாது போ!
காதுபடச் சொல்வேன்யான் கற்றதெல்லாம் என்வாழ்வில்
போதாது போதாது போ!
பூக்கும் கவிதைப் பொழில்
பொன்னான இவ்வுலகில் பொய்யுரையேன் எப்போதும்!
மின்னலிடைக் காரிகையே! மீன்விழியால்! -அன்புகொண்டு
தாக்கியென்றன் தாரமென வந்தவளே என்னுயிருள்
பூக்கும் கவிதைப் பொழில்!
மின்னலிடைக் காரிகையே! மீன்விழியால்! -அன்புகொண்டு
தாக்கியென்றன் தாரமென வந்தவளே என்னுயிருள்
பூக்கும் கவிதைப் பொழில்!
கண்ணுக்குக் கண்ணான காதலியின் பொன்மேனி
வண்ணத்தை நான்கண்டு வாடுகிறேன் - எண்ணத்தில்
தாக்கத்தைத் தந்து தழைத்த தமிழாலே
பூக்கும் கவிதைப் பொழில்!
வண்ணத்தை நான்கண்டு வாடுகிறேன் - எண்ணத்தில்
தாக்கத்தைத் தந்து தழைத்த தமிழாலே
பூக்கும் கவிதைப் பொழில்!
கொட்டும் மழையிலும் கோடை வெயிலிலும்
எட்டியெங்கும் போகாமல் எப்போதும்!-கட்டுண்டு
காக்கும் கருணைக் கடலேதான் என்வாழ்வில்
பூக்கும் கவிதைப் பொழில்!
எட்டியெங்கும் போகாமல் எப்போதும்!-கட்டுண்டு
காக்கும் கருணைக் கடலேதான் என்வாழ்வில்
பூக்கும் கவிதைப் பொழில்!
முகம்!
இன்னலுறும் வேளையிலும் இன்பத்தேன் சிந்துமுனை
என்னுயிராய்க் கொண்டேனே என்வாழ்வே!-இன்றதனால்
நித்தமுனை நான்வேண்டி நீண்டதவம் பூண்டிருப்பேன்
முத்தமிழே காட்டு முகம்!
என்னுயிராய்க் கொண்டேனே என்வாழ்வே!-இன்றதனால்
நித்தமுனை நான்வேண்டி நீண்டதவம் பூண்டிருப்பேன்
முத்தமிழே காட்டு முகம்!
இன்னலுறும் வேளையிலும் இன்பத்தேன் சிந்துமுனை
என்னுயிராய்க் கொண்டேனே என்வாழ்வே!-இன்றதனால்
நித்தமுனை நான்வேண்டி நீண்டதவம் பூண்டிருப்பேன்
முத்தமிழே காட்டு முகம்!
என்னுயிராய்க் கொண்டேனே என்வாழ்வே!-இன்றதனால்
நித்தமுனை நான்வேண்டி நீண்டதவம் பூண்டிருப்பேன்
முத்தமிழே காட்டு முகம்!
மொழி !
எத்தனை வேடமிட்டும் என்னபயன்! இவ்வுலகில்
சித்தத்தைச் சித்தரிக்கும் ஓவியமாய் - நித்திலமே
என்னருகில் நீயிருக்க இன்பத்தேன் சிந்தும்!உன்
முன்னாலே தோற்கும் மொழி!
சித்தத்தைச் சித்தரிக்கும் ஓவியமாய் - நித்திலமே
என்னருகில் நீயிருக்க இன்பத்தேன் சிந்தும்!உன்
முன்னாலே தோற்கும் மொழி!
ஊர்!
வந்தாரை வாழ்விக்கும் வன்னிமண் பூத்திருக்கும்
செந்தாழைப் பூவழகைச் சேர்த்தணைக்க - இந்திரனும்
தேரேறி வந்திடுவான் தேவருமே கண்டுவக்கும்
ஊரெங்கள் பொன்னான ஊர்!
செந்தாழைப் பூவழகைச் சேர்த்தணைக்க - இந்திரனும்
தேரேறி வந்திடுவான் தேவருமே கண்டுவக்கும்
ஊரெங்கள் பொன்னான ஊர்!
கற்றவரும் மற்றவரும் கண்டுவப்பார்! பாப்புலமை
பெற்றவரும் வந்திங்குப் பேறுறுவார்! - உற்ற
துணையாய்த் துணிவூட்ட பாட்டரசர் தந்த
இணையற்ற பக்கம் இது!
துணையாய்த் துணிவூட்ட பாட்டரசர் தந்த
இணையற்ற பக்கம் இது!
பாவெழுதும் ஆசை பலமடங்கு ஓங்கிடவே
பாவளம் தந்திட்ட பாட்டரசர்! - கூவும்
குயிலினை என்னெஞ்சக் கூட்டுக்குள் வைத்தார்!
உயர்கவி நுட்பம் உரைத்து!
பாவளம் தந்திட்ட பாட்டரசர்! - கூவும்
குயிலினை என்னெஞ்சக் கூட்டுக்குள் வைத்தார்!
உயர்கவி நுட்பம் உரைத்து!
என்னுயிர்க் கூட்டிலே இன்தமிழ் வாழ்வதை
நன்குணர்ந்து ஈந்தனை நற்பயன்! - கன்னல்
கவிபாடும் ஆசானே! கற்றதைக் கொண்டு
புவிதனில் சேர்ப்பேன் புகழ்!
நன்குணர்ந்து ஈந்தனை நற்பயன்! - கன்னல்
கவிபாடும் ஆசானே! கற்றதைக் கொண்டு
புவிதனில் சேர்ப்பேன் புகழ்!
3/20/2016
தெய்வத்தைப் பழித்தல் நன்றோ!
எல்லோர்க்கும் நல்லவராய் இருத்தல் ஒன்றே
.....இப்புவியில் யாம்கண்ட இன்பம் என்று
சொல்லாமல் சொல்கின்ற தாயின் பார்வை
......சொர்க்கத்திற் கீடாகும் இந்த மண்ணில்!
பொல்லாப்பே இங்கெதற்குப் போதும் எம்மின்
.....பொறுமைக்கே தான்வெற்றி கிட்டும் என்றும்
நல்லோரே நம்பிக்கை கொள்வீர் அந்த
.....நம்பிக்கை வாழ்வளிக்கும் நம்மைக் காக்கும்!
தெய்வத்தைக் குறைகூறி எம்மின் நெஞ்சைத்
.....தேற்றுவதால் மாறாதாம் எதுவும் இங்கே !
உய்யவழி தேடினிதம் மக்கள் மட்டும்
.....ஒன்றுபட்டால் வாழ்வுண்டாம் உலகில் என்றும்
மெய்யிதனை யாருணர்வார் உணர்ந்தால் போதும்
.....மேதினியில் பட்டதுயர் எல்லாம் தீரும் !
பொய்யான வாழ்வெதற்கு சாமிக் கும்தான்
.....போடாதீர் இனிப்பிச்சை என்றும் வாழ்வில்!
கல்லொன்றைச் சிலையாக்கிக் கடவுள் என்றோம்
.....கண்காணாச் சக்திக்குப் பின்னே சென்றோம்
எல்லாமும் நீயென்றோம் இன்பம் கண்டோம்
.....இடர்வந்து நீங்குகையில் எல்லாம் தந்தோம்
வல்லதுணை யாய்நின்று எம்மைக் காத்து
.....வாழ்வளித்த தெய்வத்தை வணங்கி வந்தோம்
பொல்லாத போர்ச்சூழல் வாட்டும் போது
.....போதுமிந்த வையகத்தில் தூற்றும் தூற்றல்!
அந்தமிலாச் சக்தியொன்றின் அருளைப் பெற்ற
....அடியார்கள் கட்டிவைத்த தலத்தின் தோற்றம்
சிந்தையிலே வந்துதித்தால் போதும் எம்மின்
......சீற்றமதும் சில்வண்டாய்ச் சிதைந்து போகும்!
தந்தால்தான் தெய்வமென்னும் கொள்கை மட்டும்
......தரணியிலே வேண்டாமே அதனால் இன்றே
அந்தாதி முதற்கொண்டே எம்மைக் காக்கும்
.......அரும்பாக்கள் அத்தனையும் பொய்யென் றாகும்!
என்றோநாம் செய்தபாவம் இன்றெம் வாழ்வில்
.....இன்னலுறக் காரணமாய் இருக்கும் போது
நன்றன்று தெய்வத்தைப் பழித்தல் இங்கே
......நம்புங்கள் இறையருளே காக்கும் என்று!
துன்பத்தைப் போக்கத்தான் என்றும் வாழ்வில்
,,,,,,துணையாக நிற்கின்ற பாடல் போதும்!
அன்பார்ந்த அடியவரே பொறுமை காப்பீர்!
......அவனின்றி ஓர்அணுவும் அசையா திங்கே!
1/27/2016
குறளை நம்பு குறைகள் தீரும் !
.....எவருமிங்கே இல்லையடி இவர்கள் போல !
நித்தமொரு யுத்தத்தை விரும்பு கின்றார்
......நினைத்தபடி அனைத்தையுமே நிகழ்த்து கின்றார் !
சத்தியமாய்த் தண்டனையும் இங்கே உண்டு!
......சத்தமின்றி இரத்தத்தைக் குடிப்ப வர்க்கே !
இத்தரையில் அஞ்சுவதும் மடமை என்றே
......என்தோழி நீஉணர்ந்தே எழுச்சி கொள்வாய் !
பெண்ணாகப் பிறந்தோமே பெண்ணை வாட்டும்
.......பேயோடு நட்பெதற்கு ?உதறித் தள்ளு !
விண்ணாணம் பேசுகின்ற வாய்க்கே அஞ்சி
......விதியென்று நோகாதே விலகிச் செல்லு !
மண்மீது கடமையினை உணர்ந்தால் போதும்
......மலைபோல வரும்துயரும் மறைந்து போகும் !
எண்ணத்தில் எப்போதும் நிலையாய் நின்று
......ஏற்றமுற வைக்கின்ற குறளை நம்பு !
இல்லாத கதைபேசி மனத்தை வாட்டும்
.......இரக்கமற்ற அரகர்முன் துணிவைத் தந்து
வல்லதுணை யாய்நிற்கும் வாழ்வைக் காக்கும்
.......வள்ளுவரின் குறள்நெறிக்கு ஈடும் உண்டோ !
நல்லின்பப் பேறளிக்கும்! நன்மை சேர்க்கும்
.......நாளெல்லாம் மகிழ்வுதரும் நலனைக் கூட்டும் !
கல்லாதார் பேச்செதற்குக் கண்ணே நீயும்
......கற்றுய்வாய் குறள்நெறியைக் காப்பாய் நன்றே !
புத்துக்குள் வாழ்கின்ற பாம்பைப் போல
......புத்திகெட்ட மனிதரும்தான் வாழு கின்றார் !
சத்தியமாய் இவர்களுக்கு அஞ்சி வாழ்தல்
......சாவுக்கே இணையாகும் இந்த மண்ணில் !
நித்தமுனை வாட்டுகின்ற துயரை வென்று
......நீவாழ்ந்தால் ஊர்போற்றும் உலகம் போற்றும் !
இத்தரையில் சோகமென்ன விட்டுத் தள்ளு
......இனியவளே இனிவாழக் கற்றுக் கொள்ளு !
12/16/2015
பேச்சில் இனிமை வேண்டும் !
வாக்கொன்று தந்துவிட்டால் அவனி தன்னில்
......வந்தஇடர் பாராமல் காக்க வேண்டும் !
தாக்கத்தைத் தரும்வகையில் பேச்சை மாற்றித்
.......தன்போக்கில் போனால்பின் மதிப்பும் உண்டோ !
ஊக்கத்தைத் தரும்நல்ல உணர்வு வேண்டும்
.......உண்மைக்கே மதிப்பளித்துப் பேச வேண்டும் !
ஆக்கத்தைக் கெடுக்கின்ற நாக்கின் ஆற்றல்
......ஆங்காரம் அத்தனையும் சாபக் கேடே !
கலகத்தைப் போக்குகின்ற நாக்கும் உண்டு
......கண்ணீரை வரவழைக்கும் நாக்கும் உண்டு !
உலகத்தார் மதிக்கின்ற நாக்கே வேண்டும் !
.....உணர்வொன்றிப் பேசுகின்ற தன்மை வேண்டும் !
பலகற்றும் பயனில்லை பகையைத் தேடும்
......பரிதாப நிலையுற்றால் உள்ளம் வாடும் !
சலனத்தைத் தருகின்ற பேச்சால் நெஞ்சைச்
.......சரிபாதி ஆக்காத நாக்கே வேண்டும் !
பொல்லாதார் பேசுகின்ற பேச்சைக் கேட்டுப்
.......போதுமிந்த வையகத்தில் பட்ட பாடு !
எல்லாமும் எமக்கிங்கோர் பாடம் என்றே
.......எண்ணிநிதம் பேசவேண்டும் இனிமை பொங்க !
கல்லார்க்கும் கற்றவர்க்கும் வேறு பாடு
.......கண்டிடலாம் அவர்பேச்சை வைத்து நாளும் !
வில்லேந்தும் வார்த்தைகளால் விளையும் துன்பம்
.....விறகாகிப் போனாலும் மனத்தைக் கொல்லும் !
மண்ணில்நாம் கொண்டவெழில் மறைந்து போகும்
......மறையாத நினைவாகப் பேச்சே வாழும் !
எண்ணத்தைச் சரிசெய்து பேச வேண்டும்
......எதிரிக்கும் நம்பேச்சும் இனிக்க வேண்டும் !
உண்ணத்தான் உணவின்றி வாடும் போதும்
.....உலகத்தின் நன்மைக்காய்ப் பேச வேண்டும்!
பண்போடு பேசுகின்ற வார்த்தை கேட்டுப்
.....பணியாத மனமும்தான் பணிய வேண்டும் !
12/15/2015
உதவும் கரங்களே ஒன்று கூடுவீர்!
எங்கெங்கோ நடிகைக்கும் கோயில் கட்டி
......இருக்கின்ற பொருள்தந்து மகிழ வைத்தார்
தங்கத்தைக் கூடத்தான் தாரை வார்த்தார்
......தரணியிலே இன்றுதவ யார்தான் வந்தார் !
அங்கத்தின் அழகுகெடும் ஆட்டம் நிற்கும்
......அன்பொன்றே தான்வாழும் இந்த மண்ணில்!
இங்கிதனை நாமுணர்ந்தால் போதும் நல்ல
......எதிர்காலம் தேடிவரும் எம்மைக் காக்கும் !
கண்ணீரில் தத்தளிக்கும் மக்கள் இன்று
.......கரைசேர வழியென்ன எண்ணிப் பார்ப்போம் !
உண்ணநல்ல உணவுதந்தே உடையும் தந்தே
.......உயிர்காப்போம் ஒப்பற்ற துணையாய் நிற்போம் !
தண்ணீரும் வற்றாமல் பாயும் போது
........தரையிலுல்ளோர் படும்பாடு அறிவோம் நன்கு!
புண்ணியமாய்ப் போகுமிங்கே ஆற்றும் சேவை
........புறப்படுவீர் எம்மோடு கைகள் கோர்த்து !
உப்புக்கும் வழியின்றி இன்றெம் மக்கள்
.......ஓலமிடும் வேளையிலே தூக்கம் கூட
ஒப்புக்குத் தான்வந்து போகு தப்பா
.......ஓயாமல் இந்நினைவே ஓடு தப்பா !
இப்பொழுதே புறப்படுவோம் இன்னல் தீர்ப்போம்
.......இளையோரே கைகோர்ப்பீர் மண்ணில் மக்கள்
எப்பொழுதும் இதைமறவார் உயிரைக் காத்தல்
.......எம்கடமை என்றுணர்ந்து விரைந்து வாரீர் !
12/13/2015
எல்லோரும் நலம்வாழ ஆதரிப்போம் இயற்கை தன்னை !
தெய்வத்தின் மீதெந்த குற்றம் இல்லை!
......தேடியிங்கு வந்தவெள்ளம் தந்த தொல்லை
மெய்வருந்த வைப்பதுவும் சாபக் கேடே !
.......மேதினியில் இனியிதற்கே இல்லை ஈடே !
பெய்யாதோ மழையென்று ஏங்கி நின்றோம்
.......பெரும்துயரப் பட்டவர்நாம் என்ன செய்தோம்
உய்யவழி சமைத்திடுவோம்! இயற்கை காப்போம்!
......ஒற்றுமையாய்த் தொண்டாற்றித் துன்பம் தீர்ப்போம்!
மண்மீது துயரனைத்தும் நீங்க வேண்டும்
......மறுபடியும் மலர்பூத்துக் குலுங்க வேண்டும்!
எண்ணம்போல் மக்களெல்லாம் வாழ வேண்டும்
......இறையருளால் இவையாவும் நிகழ வேண்டும் !
வண்ணப்பூஞ் சோலையென இன்றெம் நாடு
......வளம்பெறவே ஆதரிப்பீர் இயற்கை தன்னை !
கண்ணாகும் உலகுக்கே கடவுள் ஆகும் !
.......கணக்கிட்டால் எல்லாமும் இயற்கை யாகும் !
பொய்யாக வாழுகின்றோம் கோட்டை கட்டிப்
...... போகின்ற இடமெல்லாம் மரத்தை வெட்டி !
உய்யவழி இங்குண்டோ உமிழ்நீர் கூட
.......உலகத்தில் இல்லாமல் உயிரும் போகும் !
மெய்யிதனை நாமுணர வேண்டும் இங்கே
.......மேதினியில் இன்றுள்ள நிலைமை கண்டு!
சாலையிலே ஓடுகின்ற நீரின் வேகம்
.....சாதிமதம் பார்த்ததுண்டா பூமிப் பந்தில் !
காலையிலே கண்விழித்தால் போதும் இன்று
......காணுகின்ற காட்சியென்ன ஊழல் தானே !
ஓலையிலே எழுதிவைத்தால் போதா திங்கே
.......உயிர்வாழ வழிசெய்யும் நோக்கம் வேண்டும் !
ஆலையிட்ட செங்கரும்பாய் எம்மின் வாழ்வு
......ஆகும்முன்னர்க் காத்திடுவீர் இயற்கை தன்னை !
கடலோடு கழிவுநீர் கலக்கும் திட்டம்
......கைகூட வேண்டுமது இல்லை என்றால்
உடலுக்கும் உயிருக்கும் தீங்கு செய்யும்
.......ஒருநோயும் ஓயாதாம் இந்த மண்ணில் !
திடமான சிந்தனையால் வெற்றி கண்டு
......தீராத துயர்தீர்த்தால் மேன்மை உண்டு !
இடரோடு போராடி இனியும் வெல்ல
......இயலாது இயற்கைதான் எம்மின் வாழ்வு !
வண்ணப்பூஞ் சோலையென இன்றெம் நாடு
......வளம்பெறவே ஆதரிப்பீர் இயற்கை தன்னை !
கண்ணாகும் உலகுக்கே கடவுள் ஆகும் !
.......கணக்கிட்டால் எல்லாமும் இயற்கை யாகும் !
பொய்யாக வாழுகின்றோம் கோட்டை கட்டிப்
...... போகின்ற இடமெல்லாம் மரத்தை வெட்டி !
உய்யவழி இங்குண்டோ உமிழ்நீர் கூட
.......உலகத்தில் இல்லாமல் உயிரும் போகும் !
மெய்யிதனை நாமுணர வேண்டும் இங்கே
.......மேதினியில் இன்றுள்ள நிலைமை கண்டு!
செய்கின்ற பணியாவும் இயற்கை ஓங்கச்
......சிறந்திட்டால் துயர்மேவ வழியும் உண்டோ?
சாலையிலே ஓடுகின்ற நீரின் வேகம்
.....சாதிமதம் பார்த்ததுண்டா பூமிப் பந்தில் !
காலையிலே கண்விழித்தால் போதும் இன்று
......காணுகின்ற காட்சியென்ன ஊழல் தானே !
ஓலையிலே எழுதிவைத்தால் போதா திங்கே
.......உயிர்வாழ வழிசெய்யும் நோக்கம் வேண்டும் !
ஆலையிட்ட செங்கரும்பாய் எம்மின் வாழ்வு
......ஆகும்முன்னர்க் காத்திடுவீர் இயற்கை தன்னை !
கடலோடு கழிவுநீர் கலக்கும் திட்டம்
......கைகூட வேண்டுமது இல்லை என்றால்
உடலுக்கும் உயிருக்கும் தீங்கு செய்யும்
.......ஒருநோயும் ஓயாதாம் இந்த மண்ணில் !
திடமான சிந்தனையால் வெற்றி கண்டு
......தீராத துயர்தீர்த்தால் மேன்மை உண்டு !
இடரோடு போராடி இனியும் வெல்ல
......இயலாது இயற்கைதான் எம்மின் வாழ்வு !
9/02/2015
பாவலர் பட்டம் !
நன்றியென்று நானுரைக்க நாள்முழுதும் போதாதே !
என்றுமிதை நான்மறவேன் என்குருவே !-கன்னல்
கவிபுனையும் ஆற்றலினைக் கற்றிடச் செய்து
புவிபோற்றச் சேர்த்தாய் புகழ் !
எண்ணத்தில் தேன்சிந்தும் இன்றுவந்த சேய்தியினால்
இனிக்கும் நெஞ்சம் !
மண்மீது நான்பெற்ற மாதவத்தால் வந்தபட்டம்
மகிழ்து ஏற்றேன் !
கண்ணான என்குருவே காரணம்நீ இன்றிதனைக்
கைகள் ஏந்த!
விண்ணவரும் பூத்தூவ வீழ்கின்றேன் பாதத்தில்
விரைந்தே வாழ்த்து !
அன்பு உள்ளங்களே !
வான்போற்றும் வல்லகவி பாரதி தாசனார்
நான்மகிழத் தந்திட்டார் நற்பட்டம் !-மீன்போல்
எனதுள்ளம் நீந்துதே! இன்றிதனைக் கண்டு
மனதாரச் சொல்லுங்கள் வாழ்த்து !
அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்!
26.09.2015 - 27.09.2015 ஆகிய இரண்டு நாள்கள் கம்பன் விழா நடைபெறவுள்ளது.
27.09.2015 காலை 11.00 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றம் திறக்கப்படவுள்ளது.
கம்பன் கழகத்தின் யாப்பிலக்கணப் பயிற்சிப் பட்டறையில் கற்றுயர்ந்து சிறப்புடைய கவிதைகளை படைத்து,
செந்தமிழுக்குச் சீர்சேர்க்கும் தங்களுக்கு இவ்வாண்டுப் பிரான்சு கம்பன் விழாவில்
பாவலர் பட்டம் அளித்துச் சிறப்பிக்கும் நற்செய்தியைத் தெரிவித்து மகிழ்கின்றோம்
இணைப்பு மடலைக் கண்டு உடன் பதில் அளிக்குமாறு வேண்டுகிறேன்.
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர் கம்பன் கழகம் பிரான்சு
அன்பு உள்ளங்களே! இன்று என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை !இத்தனைக்கும் காரணம் வலைத் தளத்தில் நாம் பெற்ற வரம் எங்கள் பாரதி தாசன் ஐயாவும் என் வலைத்தள சொந்தங்களும் தான் !இந்த நன்றியினை ஒரு போதும் நான் மறவேன் வாழ்த்துங்கள் சொந்தங்களே தங்களின் வாழ்த்தினைப் பெற்று மேலும் நான் வளம் பெற இங்கே ..
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி !
8/31/2015
காத்தருள வா தாயே !
கருமாரி அம்மாநீ கண்திறந்து பார்த்தால்
வரும்துயரும் ஓடாதோ வாழ்வில் !-இருள்போம்!
உலகத்தின் சக்தியே உன்னால்தான் இங்கே
கலகமும் அற்றுப்போம் காண்!
முத்தொளிரும் நம்நாட்டின் முன்வினையத் தீர்த்திடத்தான்
இத்தரையில் யாருள்ளார் இங்குச்சொல்? !-சித்தம்
கலங்குதடி தாயேயெம் கண்ணீரைப் பார்த்தும்
உலகத்தின் துன்பத்தை ஓட்டு !
ஓங்காரி ஒய்யாரி உன்னால்தான் இன்றிங்கே
நீங்காத துன்பமெல்லாம் நீங்குமடி !-பாங்காய்
அடியெடுத்து வா..தாயே ! அன்றாடம் ஏங்கி
மடியுதே எம்மின் மனம் !
நாடிழந்து வீடிழந்து நம்பிக்கை தானிழந்து
ஓடியே இன்றிங்கே ஓடானோம் !-கூடி
வருந்துகின்றோம் வாழ்வெல்லாம் வந்ததுன்பம் போதும்!
அருமருந்தே வந்திங்(கு) அருள் !
பொல்லாதார் ஆட்டிவிக்கும் பொம்மையென்றும் ஆனோமே !
இல்லார்க்கும் இவ்வுலகில் இன்பம்நீ!-வல்ல
துணையின்றி வாழ்வேது ? தூயவளே போதும்
அணைபோட்டுக் காத்தே அருள் !
தாயுன்றன் நல்லருளால் தாயகத்தை வென்றிடலாம்
பேய்களுமே ஓடிவிடும் பேச்சிழந்து !-நாய்போல்
அலைகின்ற இந்நிலைபோம்! அன்னியரின் ஆட்சி
கலைத்தெம்மைக் காத்தே அருள் !
8/30/2015
ஈடு இணையற்ற நட்பேதான் வாடும் மனதிற்கும் வாழ்வு !
உட்பகையும் தன்னாலே ஓடிவிடும் !-எட்டி
உதைத்தாலும் மன்னித்து உதவிடுக ! வாழ்வில்
இதைஏற்று வாழ்வீர் இனி !
எட்டிநின்றால் வாழ்நாளும் எட்டிபோம் !நட்பும்
இருந்தால்தான் இன்பமிங்கே !இல்லையெனில் என்றும்
மருந்தேதான் வாழ்வை மற!
கெட்டகுடி என்றெவரும் கேலிசெய்து போனாலும்
நட்பேதான் வந்துதவும் நாட்டமுடன் !-சட்டம்
பலபேசி வாழ்நாளைப் பாழடிப்போர் முன்னால்
உலகத்தில் நட்பை உணர்த்து !
நட்புக்கு மிஞ்சியதோர் நல்லுறவு ஏதுமில்லை !
திட்டித்தான் தீர்த்தாலும் தேனென்பார் !-குட்டிக்
கதைபேசி வாழ்வெல்லாம் காத்துநிற்கும் நட்பைச்
சிதைத்துப்பார்! உண்டோ சிறப்பு ?
கண்ணாரக் காணாத கட்டுக்க தைக்கஞ்சி
எண்ணாத்தீர் தப்பாக எந்நாளும் !-மண்ணில்
பிணமாக நாம்வாழ்ந்தால் பின்வம்சம் தோற்கும்!
இணைப்பீரே நட்பை இனி !
பூக்கின்ற பூக்களெல்லாம் பூமிக்குத் தாமழகு !
வாக்களிப்போம் நட்பின்றி வாழ்வில்லை !-நோக்கும்
இடமெல்லாம் நட்பிருந்தால் ஈடேது !வாழ்க்கைத்
தடமெல்லாம் ஓங்கும் தழைத்து !
Subscribe to:
Posts (Atom)






















