முத்தான சந்தங்கள் முன்னின் றொலிக்கவே
வித்தையைக் கற்று வியப்புறலாம்! - நித்தமும்
பாமாலை சூடுகிறார் பாரதி தாசனார்!
பூமாலை போன்றே புனைந்து!
எண்ணச் சிறகில் எனைத்தாங்கி
எங்கோ அழைத்துப் போகின்றார்!
வண்ண வண்ணக் கனவுடனே
வானில் பறக்கச் செய்கின்றார்!
உண்ண உறங்கப் பொழுதில்லை!
ஊக்கம் மிகவே உழைக்கின்றோம் !
விண்ணைத் தொட்டுக் குதித்தாட
விளைத்தார் புலமை என்குருவே!
அள்ளித் தருவார் அரும்பாக்கள்
ஆழம் மிகுந்த கருத்தோடு!
துள்ளித் துள்ளி மனம்பாடும்
தூய தமிழின் சுவைசூடும்!
பள்ளிச் சிறுவர் எனநாங்கள்
பாக்கள் பயின்று வருகின்றோம் !
தள்ளி இருந்த யாப்பமுதைத்
தந்து மகிழ்ந்தார் என்குருவே!
கண்கள் காணும் காட்சிகளைக்
கவிதை யாக்கும் கவியரசர் !
புண்கள் போக்கும் வகைதனிலே
பூக்கும் பாக்கள் புத்தமுதே!
விண்ணின் வந்து விழுந்திடினும்
வீரம் பொங்கக் கவிபுனைவார் !
மண்ணைப் போற்றும் மறவரென
மானம் காக்கும் என்குருவே!
ஏங்கித் தவிக்கும் மனநிலையை
என்றும் அகற்றும் தமிழ்தருவார்!
வீங்கிப் பெருத்து விழிபிதிங்கி
வெம்பும் நிலையை மாற்றிடுவார்!
மூங்கில் இசைபோல் என்னுடைய
மூளை குள்ளே புகுந்திடுவார்!
தேங்கிக் கிடக்கும் உணர்வுகளைத்
தேனாய் மாற்றும் என்குருவே!
பாடும் பணியே பணியெனநான்
பாடப் பெருகும் புதுச்சுகமே
தேடும் எவையும் அழிந்திடலாம்
தேயா திருக்கும் மொழிப்பற்றே!
வாடும் மனத்தின் வருத்தத்தை
வடித்தே நீக்கும் வண்டமிழே!
கூடும் இழந்த பறவையெனைக்
குளிரச் செய்யும் என்குருவே!
எண்ணக் கருத்தைச் செவிமடுத்தே
ஏற்றம் பெறுவீர்! மின்னுகின்ற
வண்ணக் கவிதை வடித்திடவே
வருவீர் இனிய உறவுகளே!
கண்ணைக் கவரும் வலைத்தளத்தில்
காலம் முழுதும் பயின்றிடலாம்!
நண்ணும் நலங்கள் தந்திடவே
நன்றே உழைக்கும் என்குருவே!