பெற்ற பேறும் அனைத்தும் இங்கே
பெருமை சேர்த்தாலும்
கற்ற கல்வி மனத்தில் தோன்ற
களிப்பே என்றாலும்
உற்ற நல்ல துணைகள் இன்றி
உணர்வும் உய்யாதே
வற்றிப் போன குளத்தில் மீன்கள்
வாழ முடியாதே !
குற்ற மற்ற இனத்தைக் கொன்று
குவித்த பாவிக்கும்
சுற்ற முண்டு சுகமும் உண்டு
சுழலும் பூமியிலே !
கற்ற வித்தை பகைவர் முன்னே
கலைந்து போனதால்
பெற்ற பேறும் பெருமை யாவும்
பெயர்ந்து போயினவே !
சட்டி பானை கழுவி நாளும்
சலித்துப் போகின்றோம் !
கெட்டி யான உணவும் இன்றிக்
கிழவர் ஆகின்றோம் !
கட்டிக் கொண்ட மனையாள் வந்து
கணக்குக் காட்டினால்
வட்டிக் கும்தான் பணத்தை வாங்கி
வருத்தம் கொள்கின்றோம் !
நாடு மாறி வருந்தும் மக்கள்
நடப்பைக் கேளுங்கள் !
சூடு பட்ட எமது வாழ்வின்
சுகத்தைப் பாருங்கள்!
ஓடு கின்றோம் உழைப்பை நாடி
ஒழுங்கு சீரற்று !
வாடு கின்றோம் வருந்தி நாளும்
வழுக்கை யும்உற்று !
ஊறு காயும் பழைய சோறும்
உண்ட காலத்தில்
வேறு எந்தத் துயரும் இன்றி
வெளிச்சம் கண்டோமே !
நாறு கின்றோம் அகதி என்ற
நரக வாழ்வெய்தி
வேறு என்ன சுகத்தைக் கண்டோம்
வெறுப்பும் மேலோங்க !
அங்க மெல்லாம் துடிக்கு திங்கே
அகதி என்செய்வோம் !
தங்க வந்த இடத்தில் நாளும்
தவிப்பில் மூள்கின்றோம் !
எங்கள் பூமி எமக்குத் தந்த
எதுவும் சொர்க்கம்தான் !
அங்கே உள்ள கொடுமை மாண்டால்
அழுகை நிற்கும்தான் !