3/31/2015

சொந்த மண்ணில் வாழ்வதுபோல் ஒரு சுகம் வருமா !

                                                       


பெற்ற பேறும்  அனைத்தும் இங்கே
                        பெருமை சேர்த்தாலும்
கற்ற கல்வி மனத்தில் தோன்ற
                          களிப்பே   என்றாலும்
உற்ற நல்ல துணைகள் இன்றி
                          உணர்வும்  உய்யாதே
வற்றிப் போன குளத்தில்  மீன்கள்
                          வாழ முடியாதே !

குற்ற மற்ற இனத்தைக் கொன்று
                         குவித்த பாவிக்கும்
சுற்ற முண்டு சுகமும் உண்டு
                          சுழலும் பூமியிலே !
கற்ற வித்தை பகைவர் முன்னே 
                         கலைந்து போனதால்
பெற்ற பேறும் பெருமை யாவும்
                          பெயர்ந்து போயினவே !

சட்டி பானை கழுவி நாளும்
                          சலித்துப் போகின்றோம் !
கெட்டி யான உணவும் இன்றிக்
                            கிழவர் ஆகின்றோம் !
கட்டிக் கொண்ட மனையாள் வந்து
                            கணக்குக் காட்டினால்
வட்டிக் கும்தான் பணத்தை வாங்கி
                            வருத்தம் கொள்கின்றோம் !

நாடு மாறி வருந்தும் மக்கள்
                       நடப்பைக் கேளுங்கள் !
சூடு பட்ட எமது வாழ்வின்
                       சுகத்தைப் பாருங்கள்!
ஓடு கின்றோம் உழைப்பை நாடி
                        ஒழுங்கு சீரற்று !
வாடு கின்றோம் வருந்தி நாளும்
                        வழுக்கை யும்உற்று !

ஊறு காயும் பழைய சோறும்
                           உண்ட காலத்தில் 
வேறு எந்தத் துயரும் இன்றி
                          வெளிச்சம் கண்டோமே !
நாறு கின்றோம் அகதி என்ற
                             நரக வாழ்வெய்தி
வேறு என்ன சுகத்தைக் கண்டோம்
                             வெறுப்பும் மேலோங்க !

அங்க மெல்லாம் துடிக்கு திங்கே
                            அகதி என்செய்வோம் !
தங்க வந்த இடத்தில் நாளும்
                             தவிப்பில் மூள்கின்றோம் !
எங்கள் பூமி எமக்குத் தந்த
                              எதுவும் சொர்க்கம்தான் !
அங்கே உள்ள கொடுமை மாண்டால்
                               அழுகை நிற்கும்தான் !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

16 comments:

  1. வணக்கம்
    அம்மா
    உண்மைதான் இருக்கும் போது அதன் அருமை விளங்காது அதை விட்டு பரியும் போதுதான் அதன் வலியை நாம் உணரமுடியும்... அருமையாக சொல்லியுள்ளீர்கள் த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

  2. வணக்கம்!

    தந்தை தாயும் தாங்கித் தரித்த
       தமிழ்மண் போல்வருமா?
    விந்தை மிகுந்த வேற்றார் மண்மேல்
       விருப்பம் தான்வருமா?
    கந்தை கட்டிக் கழனி உழுதே
       கண்ட சுகம்வருமா?
    சிந்தைக் குள்ளே சிற்ப மாகச்
       சிரிக்கும் தாய்நாடே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  3. நிலைமை மாறிவரும் நேரமிது. நல்லதே நடக்கும். நல்லதையே நினைப்போம்.

    ReplyDelete
  4. கவலை வேண்டாம் சகோதரியாரே
    நிலமை மாறும்
    தம +1

    ReplyDelete
  5. மனதின் வலி புரிகிறது அம்மா...

    ReplyDelete
  6. சொந்தமண்ணில் வாழ்வது போல் சுகம் எங்கும் கிடைக்காது தான் சகோ. அது ஒரு உணர்வு..அதை உணரும் போது தான் அதன் தன்மை ,மென்மை,அதன் மதிப்பு,மரியாதை,பாசம் எல்லாம் தெரியும். சொந்த மண் சொந்தமண் தான். அது தாய்யல்லவா...

    சிலவருட வெளி நாட்டு வாசமே இப்படி இருக்கிறது...

    தங்கள் அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன். இறைவன் விரைவில் நல் வழி காட்டுவார்.

    தம +1

    ReplyDelete
  7. ஆதங்க வரிகள் கண்டேன். முடித்த விதமும் சிறப்புங்க தோழி.

    ReplyDelete
  8. நத்தை மனிதர் நாமென்றாலோ வீடு நமக்குண்டு!
    சொத்தும் வேண்டாம்! சுகமும் வேண்டாம்! சொந்தம் என்றுண்டு!
    எத்தும் கால்கள்! எறியும் கைகள்! எங்கு வீழ்வோமோ?
    நித்தம் கொடுமை நிறையும் வாழ்வில் நீர்த்துப் போவோமோ?

    யுத்தம் மனிதர் வாழ்விற் கென்றால் உடல்கள் விறகுகளாய்
    நித்தம் எரியும் பகையின் கணப்பில் நெய்யின் ஆறுகளாய்
    குத்தும் கொலையும் கண்டோம் அன்பைக் காணும் வழிமறந்தோர்
    பித்தம் தெளியும் அந்நாள் இனிய(ா) செந்தமி ழரசிருக்கும்!

    பாராட்ட வார்த்தைகள் இல்லை சகோ அருமை மிக அருமை!

    த ம கூடுதல் 1

    ReplyDelete
  9. எங்கள் பூமி எமக்குத் தந்த
    எதுவும் சொர்க்கம்தான் !
    அங்கே உள்ள கொடுமை மாண்டால்
    அழுகை நிற்கும்தான் !//

    நிச்சயமாக ஒரு நாள் விடிவு காலம் வரும் சகோதரி! தங்கள் துயரங்கள் யாவும் அகன்றிட இறைவனைப் பிரார்த்திப்போம். நல்லதே நினைப்போம். தமிழ் விளையாடுகின்றது வார்த்தைகளில் ஆனால் மனம் கனக்கின்றது!

    ReplyDelete
  10. சிறப்பான வரிகள், அருமையான கவிதை சகோ
    தமிழ் மணம் 9
    நலம்தானே சகோ....

    ReplyDelete
  11. தாய் மண்ணில் தவழும் அந்த இனிய நாள் விரைவில் வரட்டும் !

    ReplyDelete
  12. நல்ல கவிதை. விரைவில் விடியல் பிறக்கும் என நம்புவோம்.

    ReplyDelete
  13. சொந்த மண் போல எந்த மண்ணும் வராதுதான்! உங்களின் துயரங்கள் விலகட்டும்! நன்மை நடக்கட்டும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. வாழ்வில் கொண்ட வருத்தம் எல்லாம்
    விருத்தம் ஆகதந்தாய்
    பாழும் எங்கள் நிலையைக் கொன்று
    பிணிகள் போக்க வேண்டும்
    வேழம் போல வாழ்ந்த எங்கள்
    வேர்கள் வாழும் நாட்டில்
    நாளும் பொழுதும் தாங்கும் துன்பம்
    நீங்கவேண்டும் விரைவில்

    வரிகள் அனைத்தும் அருமை தோழி அருமை ஒவொன்றாக ரசித்தேன் வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  15. வணக்கம் !
    கருத்துரை இட்ட அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் !வாழ்க தமிழ் !வளர்க நம் நட்பும் .

    ReplyDelete
  16. என்னசொல்லி வாழ்த்துவது என்றே தெரியாததால் கவிதையில் கருத்தை சொல்லவில்லை சகோ அத்தனை அழகாய் அர்த்தம் பொதிந்ததாய் இருக்கு உங்கள் விருத்தம் .....தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    தம 14

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........