4/30/2015

மே தினமே வா அருகே !

                                             


நாட்டு மக்கள் நலமாய் வாழ
                         நடத்தும் யுத்தத்தில்
கூட்டுச் சேர்ந்து உதவ வேண்டும்
                         குழப்பம் தானின்றி !
காட்டில்  குள்ள நரிக ளோடும் 
                          கடந்த காலத்தில்  
போட்ட யுத்தம் அடைந்த வெற்றி
                        பொலியச்  செய்..நாளே !

கால மெல்லாம் உழைக்கும் மக்கள்
                          கவலை கொள்கின்றார் !
ஆல கால விசத்தைப் போன்றோர்
                           அடக்கி ஆள்கின்றார் !
ஓல மிட்டும்  எமது வம்சம்
                            ஒடுங்கிப் போகாமல்
பாலம் போல இருந்து காப்பாய்
                             படரும்  பொன்நாளே !

பாரில் மக்கள் அடையும் துக்கம்
                          பலதைக் காண்கின்றோம் !
நேரில் நின்று எதிர்த்துக் கேட்டும்
                         நெருப்பைத் தான்தின்றோம்!
தேரில் செல்லும்  பலரும் இங்கே
                          தெளிவாய்க்  கற்றுள்ளார் ! 
ஊரில் உள்ள உழைக்கும் மக்கள்
                           உணர்வைத் தான்கொல்ல !

பஞ்சம் மட்டும் மடிந்தால் போதும்
                                பலத்த சந்தோசம்
நெஞ்சில் வந்து உறையும் மக்கள்
                                நெடுநாள் ஆசைபோல்!
கொஞ்சம் இந்தக் கவலை தீர
                                கொடுத்து வை..நாளே !
அஞ்சும் மக்கள் அவலம் தீர்க்க
                               அருண்ட பொன்நாளே !

குட்டக் குட்ட குனிந்த மக்கள்
                             குலத்தை அந்நாளில்
எட்டுத் திக்கும் நிமிர்ந்து பார்க்க
                              எழுச்சி தந்தாயே !
பொட்டும் பூவும் சுமந்த பெண்போல்
                             பொழுதே நீ..வந்தால்
வெட்டும் கொத்தும் மடிந்து மண்ணில்
                             வெளிச்சம் தோன்றாதோ !

அன்று மக்கள் அவலம் தீர்த்த
                              அழகு நன்நாளே !
இன்று உள்ள நிலைமை கண்டும்
                              இளகு பொன்நாளே !
தொன்று தொட்டு நரக வாழ்வைத்
                              தொடரச்   செய்வோரை
என்றும் போற்றும் இனிய மேய்போல் 
                               எதிர்த்தும் வெல்வோமே !


      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.