புத்தாண்டே புன்னகை பூத்தாட வந்துதிப்பாய்
சத்தான ஆண்டாய்த் தழைத்திடுவாய் !-வித்தைகள்
கற்றோரும் மற்றோரும் கண்டுள்ளம் பூரிக்க
நற்பயனைத் நாளுமே நல்கு !
வேரோடு மடிந்து வீழ்ந்தோம்
வேதனை தினமும் பட்டோம் !
போராடும் மறவர் எங்கள்
போர்க்காலம் முடிந்து போக
சீரோடு செழிப்பும் சேர்த்து
சீராட்ட மலர்ந்த ஆண்டே
தேரோட வழிகள் செய்வாய்
தேசத்தின் நலனைக் காத்தே !
பொல்லாத விதியை மாற்றிப்
பொன்னான மதியை ஊட்டி
இல்லாத நலனைக் கூட்டி
ஈழத்தில் விடிவைக் காட்டி
நல்லோரும் பதவி ஏற்க
நாடெங்கும் மகிழ்ச்சி பொங்க
அல்லலை அறுக்க வந்த
ஆண்டாக மலர்க நன்றே !
காலத்தை வகுத்த தேவன்
கண்ணீரில் குளிக்க வைத்தான் !
ஓலத்தை நிறுத்தி நீயும்
ஓய்வாக இருக்க வைப்பாய் !
ஞாலத்தில் அமைதி தங்க
ஞாயிறாய் வளர்ந்து நின்று
சீலத்தை மதிக்கும் மக்கள்
சீர்பெற்றும் மகிழச் செய்வாய் !
புத்தாண்டு பிறக்கும் போது
பூமிக்கே மகிழ்வு கிட்ட
சித்தத்தால் மலர்கள் தூவும்
சிங்காரத் தமிழைக் காண்பீர் !
எத்திக்கும் அமைதி கமழ
எல்லோரும் சமமாய் வாழ
வித்தைகள் புரியும் ஆண்டே
வில்லேந்தும் பகையை ஒட்டு !
வாவென்று நெஞ்சம் பாடி
வண்ணமலர் தூவி ஆடும்
போவென்று துன்பம் தன்னை
போக்கியே ஆள வேண்டும்!
நாவார எளிய மக்கள்
நாள்தோறும் நினைத்துப் பாடும்
தேவாரம் எனநீ நின்றால்
தேவர்க்கும் மகிழ்வு தானே !
வணக்கம் !
அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !பிறக்கப் போகும் ஆண்டு எல்லோருக்கும் எல்லா நலனும் வளமும் நல்கிட இறையருள் கிட்டட்டும் .