10/31/2016

உள்ளத்திற் கஃதே உயர்வு!

                                                   

தன்னையே தான்போற்றும்  தற்பெருமை கொண்டவர்க்கே
என்றுமிந்தப்  பூமியிலே இல்லையிடம் ! -நன்கறிவீர்
கள்ள மிலாத கனிவான நெஞ்சமுண்டேல்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

ஆல்போல் தழைத்தே  அறுகுபோல் வேரூண்ட
நால்வர் அருளிய நற்கருத்தைப்! - பாலென்றே
அள்ளிப் பருகி அகத்தூய்மை பெற்றுவிட்டால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

எண்ணம் இனித்திட  இன்னிசையை  யாம்கேட்டால்
விண்ணைத் தொடுமுணர்வு விண்மீன்கள்!-கண்ணுள்ளே
துள்ளுகையில் துன்பங்கள் தூரப்போம்  எந்நாளும்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

குற்றம்  இழைப்போர்  குணங்கண்டு யாமாற்றும்
நற்கருமம் நாட்டிற்கே நன்மைதரும் ! - கற்றவர்கள்
தெள்ளுதமிழ்ப் பாட்டாலே தேடிநல் வாழ்வளித்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

வல்ல துணையென வண்டமிழைக் கொண்டவர்க்கே
இல்லை ஒருபோதும் இன்னலிங்கே! -தொல்லைதரும்
வெள்ளைய ரின்மொழிக்கு வேண்டாதார் என்றிருந்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

மண்ணில் மரங்களைக்  காப்பதே  எம்கடனாய்
எண்ணி இயங்குவோம் இக்கணமே !- விண்வியக்க
வெள்ளை விடையேறி வந்தபிரான் வாழ்த்திவிட்டால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

உள்ளத்திற் கஃதே உயர்வு!

தன்னையே தான்போற்றும்  தற்பெருமை கொண்டவர்க்கே
என்றுமிந்தப்  பூமியிலே இல்லையிடம் ! -நன்கறிவீர்
கள்ள மிலாத கனிவான நெஞ்சமுண்டேல்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

ஆல்போல் தழைத்தே  அறுகுபோல் வேரூண்ட
நால்வர் அருளிய நற்கருத்தைப்! - பாலென்றே
அள்ளிப் பருகி அகத்தூய்மை பெற்றுவிட்டால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

எண்ணம் இனித்திட  இன்னிசையை  யாம்கேட்டால்
விண்ணைத் தொடுமுணர்வு விண்மீன்கள்!-கண்ணுள்ளே
துள்ளுகையில் துன்பங்கள் தூரப்போம்  எந்நாளும்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

குற்றம்  இழைப்போர்  குணங்கண்டு யாமாற்றும்
நற்கருமம் நாட்டிற்கே நன்மைதரும் ! - கற்றவர்கள்
தெள்ளுதமிழ்ப் பாட்டாலே தேடிநல் வாழ்வளித்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

வல்ல துணையென வண்டமிழைக் கொண்டவர்க்கே
இல்லை ஒருபோதும் இன்னலிங்கே! -தொல்லைதரும்
வெள்ளைய ரின்மொழிக்கு வேண்டாதார் என்றிருந்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

மண்ணில் மரங்களைக்  காப்பதே  எம்கடனாய்
எண்ணி இயங்குவோம் இக்கணமே !- விண்வியக்க
வெள்ளை விடையேறி வந்தபிரான் வாழ்த்திவிட்டால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/23/2016

இன்னும் உறங்கிடும் ஞாபகமோ!



செந்தமிழ் போற்றிடும்  சேவக னே -உன்னைச்
சேர்ந்த வர்க்கேது துன்பமிங் கே
அந்தியில் பூத்திடும் தாமரை யோ -இவள்
அன்பைப் பொழிந்திடும் தேவதை யோ!

கட்டிக் கரும்பென வந்தவ னே -சிறு
கைவிர லாலெனை வென்றவ னே
கொட்டிக் கொடுத்திடு கோமக னே -இன்பா
கோடிச்சு கம்தரும்  மோகன மே!

என்னை ஈர்த்தவன்  நெஞ்சினி லே  - பொங்கும்
இன்தமிழ்க்  கற்பனைக் காவிய மே
தன்னில் சரிபாதி என்றவ னே -உள்ளம்
தஞ்சமென் றுன்னடி தேடுதிங் கே!

தென்னை மரக்கிளைக் கீற்றினி லே -நாளும்
தெம்மாங்கு பாடும் பூங்குயி லே
இன்னும் உறங்கிடும் ஞாபக மோ -அதில்
இன்றுமே நான்வரும் ஓர்கன வோ!

மல்லிகை முல்லையும் பூத்திடிச் சே -அந்த
மஞ்சள் நிலவதைப் பார்த்திடிச் சே
அல்லியும் தன்னிதழ் மூடிடிச் சே - இன்னும்
அந்தப்புறத் திலுன்னைக் காணலி யே!

கள்ளூறும் பார்வையைக் கண்டிட வே -உள்ளம்
காத்திருக் குமென்றன் காதல னே
துள்ளி யெழுந்துவா  இக்கண மே -மெல்லத்
தூண்டிடும் ஞாபகம்  வாட்டிடு தே!

அன்பெனும் இன்பச் சோலையி லே -இரு
அன்றிலும் கூடிடும் வேளையி லே
தன்னிலை மறக்க வைத்திடு  தே -அந்தத்
தென்றலும் உன்பெயர் சொல்லிடு தே!

சத்திய வாக்குத் தந்தவ னே - இன்னும்
சங்கடம் மெத்திடச் செய்வா  யோ
முத்தமிழ் வித்தகா கூந்தலி லே -வைத்த
முல்லைப்பூ வாடுமுன் வாரா யோ!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/04/2016

எழுந்து வா தாயே!



ஏற்றம் இன்றி இழைத்தோம் அம்மா
எல்லாம் எம்தலை  எழுத்து - அதை
மாற்ற முயன்று மடிந்தவர் தாமே
மாவீரர் என்னும் விழுது!

எல்லைக் கோட்டை எவரும் தாண்ட
இயலா திருந்த பொழுது - ஏன்
அல்லக் கைகள் அணைத்துக் கொண்டார்
அழிகுடி யினரைத் தொழுது!

காட்டிக் கொடுத்துக்  கழுத்தை அறுத்தார்
கயவர் எம்மோ டிருந்து - உயிர்
போட்டி போட்டுப் பிரியக் கண்டோம்
போதும் இங்கேது மருந்து!

நாட்டை விட்டு நாடு கடந்தோம்
நம்மின் உயிரைக் காக்க -தீ
சூட்டைப் பரப்பிச்  சுட்டெ ரித்ததே
சூழ்நிலைக் கைதியை நோக்கு!

அன்னை மொழியை அறவே மறந்தார்
அடிமை வாரிசு இங்கே -எம்
இன்னல் தீரவும் இலக்கை எட்டவும்
இனியொரு வழிதான் எங்கே?

கண்ணீர் பெருகக்  கடலும் தானே
கரையைத் தாண்டு தம்மா - நீ
எண்ண மறந்து இருப்பா யோசொல்
இனியும் இங்கே சும்மா!

அம்மா என்று அழைத்தால் போதும்
அடியவர் குறைகள் தீரும் - இதை
இம்மா நிலத்தில் இருக்கும் உயிர்கள்
என்றும் அறியத் தாரும்!

பொன்னே! மணியே! போதும் இந்தப்
புவியில் பட்ட பாடு -இனி
இன்னல் இன்றி எவரும் இங்கே
இன்புற மார்க்கம் தேடு!

அன்பும் அறமும் அன்னை உன்னால்
அவனியில் தழைக்க  வேண்டும்  -உயர்
நன்மை பொங்க  நாளும் இதனால்
நட்பை மதிக்கத் தூண்டும்!

கன்னல்  மொழியால் காலம் தோறும்
கண்ணீர்க் காவியம் தொடுத்தோம் -நீ
இன்னல் துடைக்க எழுந்து வந்தால்
இன்றோ டிதனை  முடிப்போம்!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.