பொங்கும் கடலாய்ப் புலமை பொலிந்திட
எங்கும் நிறைந்த இறையவனே - தங்கிடச்செய்
மங்கல வாழ்வினை! வாவா முதல்வனே!
பொங்கல் சுவையைப் பொழிந்து!
எண்ணும் பொழுதினில் ஏற்றம் மிகுந்திட
கண்ணாய் வருவாய் கணபதியே! - விண்ணும்
அசைந்திட மண்ணும் அசைந்திட நன்றே
இசைவுடன் காப்பாய் இனித்து!
அறுகம்புல் மாலை அணிந்திட என்னுள்
நறுந்தமிழ் ஈன்றவனே ! நாளும் - பெறுகின்றேன்
உன்னால் உயா்வாழ்வும்! ஓங்கு தமிழ்வாழ்வும்!
என்னால் எதுவும் இலை!
கந்தன் மனங்குளிரக் காட்சியைத் தந்தவனே!
சிந்தை மணக்கின்ற சிற்பரனே! - விந்தையாய்
ஆனை முகத்தவனே! ஐந்து கரத்தவனே!
ஞானம் புகட்டுவாய் நன்கு!

