2/28/2013

கற்றார்க்கே சென்ற இடமெல்லாம் சிறப்பு !..


அடக்கு முறைக்குள்
சிக்குண்டு தவிக்கும் எம்
நாவுக்கு விடுதலை கொடுத்துப் பார்
உன் படை பலம் தோற்கும் !

கத்தியின்றி இரத்தமின்றி
யுத்தம் எதனையும் வென்று காட்ட
புத்தியுள்ள மனிதர்களுக்கு
சக்தி கிடைத்தால் போதுமிங்கே!

குத்திக் குத்தி உடல்களைக் கிழித்து
அச்சம் ஊட்டி வென்ற வெற்றி
எச் சமயத்திலும் தோற்க்கும்
தோற்றால் உன்றன்  நிலைமை என்ன!

காட்டு மிராண்டித் தனத்திற்கும்
இந்தக்  கையாலாகத் தனத்திற்கும்
வேட்டு வைக்க  ஒரு நாள் வரும்
வரும் வரைத்தான் இத்துன்பம்!

மாட்டைப் போல சொன்னது கேட்டு
மடியில் இருப்பதை உன்னிடம் தந்தும்
ஏன் நாம் ஏட்டுக் கல்வியைத் தொடர வேண்டும்
இதுதான் இறுதியில் வெல்லும் பார்!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/26/2013

நீதி செத்துப் போனதா இங்கே!....



வாரங்கள் நான்கிலும்
வருந்தித்தான் பிழைக்கின்றோம்
ஏனம்மா எமைப் படைத்தாய்
ஏக்கம் கொண்டு வாழ்வதற்க்கா!

சாவுக்கே சாவு மணி
சர்ச்சை இன்றி நாம் அடிப்போம்
நீ வந்து துணை நின்றால்
நீங்காதோ எத் துயரும் !

கோரப் பல் முகம் காட்டி
கொடியவர்கள் ஆட்சி செய்ய
நீதிக்குத்  தண்டணையை
நெஞ்சமிங்கே ஏற்றிடுமா!

போருக்கு அழைத்தவர்களும்
போகுகின்றனரே  பாராளுமன்றம்
போர்க் குற்றவாளி என்று எம்மைப்
போகும் இடம் எல்லாம் சொல்லிவிட்டு!

யாருக்குத்தான் தெரியாது
யாதும் இங்கே போலியென்று பிறர் அறிய
சேதத்தை எடுத்துரைத்தும்
சேதாரம் செய்கின்றனரே அது எதற்கு!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/20/2013

செய் அல்லது செத்து மடி.....



குப்பைக்குள் கிடக்குதென்றும் குண்டுமணி
குப்பையோ ஏறுது பார்  கோபுரத்திலே!
அப்பப்பா உலகம் ரொம்ப மாறிப் போச்சுது
அதனால்தான்  துன்பம் எல்லை மீறிப் போச்சுது!

முகம் பார்த்து முடிவுகளைத் தானே வகுக்குறார்
மீறி முன்னேறிச் செல்வோரைப்  பின்னே இழுக்குறார்!
உறவுக்குக் கை கோர்த்து உயர்த்தி விடுகிறார் சிலர்
உட் பகையை மனதில் வைத்து ஒதுக்கி விடுகிறார் !

வளர்கின்ற சந்ததியின் வாயை அடைப்பதும்
வருமானம் பார்த்து இங்கே தலைமை ஏற்பதும்
இது நாகரீகம் என்று சிலர் ஏனோ நினைக்கின்றார்!
இதில் ஏதும் அறியாதவர்களும் இங்கே கூட்டுச் சேர்கின்றார்!

தங்க முலாம் பூசி விட்டால் அது தங்கமாகுமா!
இது  தப்பென்று தெரிந்து விட்டால் வந்த வெக்கம் போகுமா!
கருக் கலைப்புப் பாவமென்று எண்ணித் துடிக்கையில்
இப்படிக் கருக் கலைத்துச் செல்வோரை உலகம் ஏற்குமா!

உருப்படியாய்த் தகமைகளை ஊக்குவிப்பதும்
உணர்வொன்றிச்  சேவைக்கென தன்னை அர்ப்பணிப்பதும்
மிகப் பெரிய பண்புகளில் ஒன்றாகுமே இதை
உணர்ந்து  மனிதன் செயற்ப்பட்டால் நன்றாகுமே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/19/2013

காவல் தெய்வம் நீ எங்கே!......



ஏழரைக் கோடி மக்களைக் கொன்ற
அரக்கனின் வாழ்வும் சிறப்புறும் போது
ஒரு பாவமும் அறியாப் பாமர மக்கள்
பயந்தென்றும் வாழும் நிலை தகுமோ!

மாவிலைத் தோரணம் ஆடவும் இல்லை
மனதினில் வந்த துயர் போகவும் இல்லை
சாவினைத் தழுவிய சந்ததி இதற்க்கு
இச் சங்கடம் மேலும்  தொடர்வது எதற்கு!

நீதியை அநீதி புறக்கணிப்பதனால்
நித்தமும் வாழ்வில் சித்திரவதைதான்
எம்மை நாடி வந்த இத் துயர் தீர்ப்பவர் யாரோ!
நன்மைகள் தினம் அருளும் எம்பிரானே!

எத்தனை சாட்சிகள் வந்தும் என்ன
மனசாட்சி அற்ற மனிதர்கள் முன்னே !
இத்தனை காலமும் பொறுத்தது போதும்
இக்கரைக்கும் அக்கரைக்குமாய்  என்ன வாழ்க்கை!

ஓடி ஓடி அலுத்த பாதங்கள்
ஓரிடத்தில் நிற்ப்பது எப்போ!
வாடிக் குரல்வளை அடங்கும் முன்னே
வையகத்தில் எமக்கொரு தீர்ப்புச் சொல்லு!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/12/2013

அம்மன் பாடல்கள்!........


நலிந்து கிடக்கும் உள்ளத்தைத்
தட்டி எழுப்பிய துரதிஸ்டம்
அதன் இஸ்டம்போல ஆட்டிவித்தால்
இதயத் துடிப்பு எப்படி இருக்கும்!.....

கணக்கில் இட்டால் தாங்காது பின்
கண்கள் இரண்டும் தூங்காது வரும்
வழக்கில் மட்டும் புலனைச் செலுத்திக் கொண்டால்
வருந்தும் மனம்தான் என்ன செய்யும்.........

மறந்து போக நினைப்பதையே
மறக்க முயன்று தோற்றுப் போகும்
அவரவர் குணத்திற்கேற்ப பாதிப்புகள்
குறைந்த பட்சம் வந்தே தீரும்!......

தவிர்க்க முடியாத் தண்டணை  இதைத்
தவிர்த்துக்கொள்ள ஒரே ஒரு வழி
அம்மன் துதியே அவ்வழியாகும்
அகிலம் போற்றும் நல்வழியாகும்!.....

சொல்லும் பொருளும் மனச் சோர்வைச்
சிதைத்தே வாழ்வில் இன்பம் தரும்
இனிய இசைக்கு மயங்காத ஓர்
இதயம் உண்டோ சொல் இவ்வுலகினிலே!....

அரிய பாடல்கள்  இதைக் கேட்டே
ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம்
உரிய முறையில் பயிற்சிகளை ஊட்டி
எம் சந்ததியையும்  வளர்த்திடுவோம்.....




தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.