வாக்கொன்று தந்துவிட்டால் அவனி தன்னில்
......வந்தஇடர் பாராமல் காக்க வேண்டும் !
தாக்கத்தைத் தரும்வகையில் பேச்சை மாற்றித்
.......தன்போக்கில் போனால்பின் மதிப்பும் உண்டோ !
ஊக்கத்தைத் தரும்நல்ல உணர்வு வேண்டும்
.......உண்மைக்கே மதிப்பளித்துப் பேச வேண்டும் !
ஆக்கத்தைக் கெடுக்கின்ற நாக்கின் ஆற்றல்
......ஆங்காரம் அத்தனையும் சாபக் கேடே !
கலகத்தைப் போக்குகின்ற நாக்கும் உண்டு
......கண்ணீரை வரவழைக்கும் நாக்கும் உண்டு !
உலகத்தார் மதிக்கின்ற நாக்கே வேண்டும் !
.....உணர்வொன்றிப் பேசுகின்ற தன்மை வேண்டும் !
பலகற்றும் பயனில்லை பகையைத் தேடும்
......பரிதாப நிலையுற்றால் உள்ளம் வாடும் !
சலனத்தைத் தருகின்ற பேச்சால் நெஞ்சைச்
.......சரிபாதி ஆக்காத நாக்கே வேண்டும் !
பொல்லாதார் பேசுகின்ற பேச்சைக் கேட்டுப்
.......போதுமிந்த வையகத்தில் பட்ட பாடு !
எல்லாமும் எமக்கிங்கோர் பாடம் என்றே
.......எண்ணிநிதம் பேசவேண்டும் இனிமை பொங்க !
கல்லார்க்கும் கற்றவர்க்கும் வேறு பாடு
.......கண்டிடலாம் அவர்பேச்சை வைத்து நாளும் !
வில்லேந்தும் வார்த்தைகளால் விளையும் துன்பம்
.....விறகாகிப் போனாலும் மனத்தைக் கொல்லும் !
மண்ணில்நாம் கொண்டவெழில் மறைந்து போகும்
......மறையாத நினைவாகப் பேச்சே வாழும் !
எண்ணத்தைச் சரிசெய்து பேச வேண்டும்
......எதிரிக்கும் நம்பேச்சும் இனிக்க வேண்டும் !
உண்ணத்தான் உணவின்றி வாடும் போதும்
.....உலகத்தின் நன்மைக்காய்ப் பேச வேண்டும்!
பண்போடு பேசுகின்ற வார்த்தை கேட்டுப்
.....பணியாத மனமும்தான் பணிய வேண்டும் !