6/30/2015

வாழிய வாழிய பல்லாண்டு !

                                               


வண்ணத் தமிழமுதை வார்த்துக் கொடுக்குமுனை  
எண்ணம்போல் பாடவந்தோம்  இன்றிங்கே  !-கண்ணுள்
இறையாக நாம்காணும் எம்குருவே !  உன்னால்                            
நிறைகுடம்  ஆனதெம்  வாழ்வு !

செந்தமிழ் கற்றுநாம்  சீருடன் வாழ்ந்திடவே   
வந்தனை செய்கின்ற  வள்ளலே !-கந்தன் 
அருள்பெற்று வாழிய வாழியபல் லாண்டு 
திருப்பெற்ற பாக்கள் செறிந்து !

பொன்விழா காணுபுகழ்   பாரதி தாசனே !
உன்னுயிரை  ஒண்டமிழைக் கொண்டுவந்தாய் !-இன்பக் 
கவிமழை ஆற்றலைக் கண்டு மகிழ்ந்தோம் !
புவிமேல் பொலியும்  புகழ்!

நல்லறம் கூறிடும் நற்றமிழ் நாயகன்  !
சொல்லறம் காத்திடும் தூயவன் !-  வல்ல 
கவிஞன் !கலைஞன் ! களிப்போடு வாழ்க !
குவியட்டும் இன்பம் கொழித்து !

நாடிக் கொடுத்திடும்  நன்மையை எண்ணியே  
தேடிநாம் வந்தோம்  செளுங்கவிகள்  !-பாடிப் 
பரவசம் ஊட்டிடும் பாட்டரசே !என்றும் 
உரம்நீயே  எங்கள் உயிர்க்கு!

                                                                     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/22/2015

இன்னும் தயக்கம் எதற்கு !

                                                       

பெத்தமனம் பித்தென்பார் பிள்ளைமனம் கல்லென்பார் 
எத்தனைதான் சொன்னாலும் ஏறலியே !நித்தம் 
மலைபோல  யுத்தத்தால் மாமனத்தை வாட்டும்
நிலைபோக வேண்டும் நிலத்து !


ஏற்ற இறக்கம் பாராமல்
   என்றும் தயவாய் வாழ்ந்தன்பைத்
தேற்றும் பழக்கம் இல்லாதார்
    தேடிக் கெடுப்பார் நட்பைத்தான் !
வேற்றுக் கிரகம் சென்றாலும்
    வேத னைமிக  வந்தேகும்
மாற்றம் இதனில் உண்டோசொல்
    மானம் பெரிதாம்  என்போரே ?...

பாசம் மனத்தில் உண்டானால்  
  படரும் கொடிபோல் நம்வாழ்வு !
வேசம் மிகுந்த  நட்போடு 
   வேண்டாம் இனியும் கொண்டாட்டம் !
நாசம் இழைப்பர் வேண்டாதார்
    நாளும்  இதையே  காண்கின்றோம்!
வாசம் மிகுந்த பூப்போல
    வாழும் உறவே கேட்டுக்கொள் !

உள்ளம் மகிழ்வில் திண்டாட
    ஊனும் உணர்வைக்  கொண்டாட
வெள்ளம் எனத்தான் பாயாதோ
    வேசம் இழந்த சந்தோசம் !
அள்ளக் குறையா அன்பைத்தான்
    ஆளும் மனிதன் வாழ்கின்றான்!
வள்ளல் இவனை  எப்போதும்
    வாழ்த்த மறந்து போகாதீர் !

கள்ளத் தனத்தால் வாழ்நாளைக்
   காயப் படுத்தும் தீயோரைத்
தள்ளி எவரும்   வைத்தால்தான்
   தம்முள் அமைதி உண்டாகும் !
எள்ளி நகைப்போர் நட்பாலே
   என்றும் அமைதி கிட்டாதே !
முள்ளில் விழுந்த சேலைபோல்
    முற்றுப் பெறுமே இவ்வாழ்க்கை !

அன்பைப் பொழிந்து எந்நாளும்
    ஆன்மா மகிழச் செய்திட்டால்
துன்பம் எவர்க்கும் வாராதே
    துப்புத் துலக்கிப் பாருங்கள் !
இன்பம் அதுவே தான்மிஞ்சும்
    என்றும் எதிலும்  தப்பாமல்
நன்மை இதையே நாம்நாட  
   நாடும் செழிக்கும் தன்னாலே !

கன்னல் மொழியின் ஆற்றல்நம்
   கண்போல் இருக்க ஏன்.. துன்பம் ?.
இன்னல் துடைக்கும்  நற்செய்தி
    என்றும் அறியத் தந்துய்வோம் !
அன்னை எமக்குக் கற்பித்த
    அன்பே உலகில் பொன்..என்றே 
தன்னை மறந்து வாழ்வோரும்  
     தம்மால்   திருந்தி வாழட்டும் !

                                                       
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/18/2015

பாடு மனமே பாடு !

                             


எங்கள் கவியரசர் இயற்றித்  தந்தபொருள்
    ஏந்தும் இசையளிக்கும் இன்பம்!
பொங்கும் மனத்துயரைப்  பொசுக்கி வாழ்வளிக்கும்
   போதும் இனியெதற்குத் துன்பம் !

இன்னல் வரும்பொழுதும்  இனிய கானமழை
     என்றும் மனச்சுமையைப் போக்கும் !
அன்னை மொழியழகும் அரும்பும் அசையழகும் 
     அமுதச் சுவையழகைத் தேக்கும் !

பாடும் குயிலுடனே பருவ மங்கையவள்
   ஆடிக் கழித்திடுவாள் தினமே !
நாடி வரும்துயரும்  நகரும் இன்னிசையால்
    நல்ல மருந்திதுதான் மனமே !

காதல் உணர்வுகளைக் கலந்து வந்தஇசை
    ஆளும் எமதுயிரை  இதமாய் !
பாழும் மனத்திரையில் படியும் இன்னிசைகள்
     பாசம் வளர்த்திடுமே  பதமாய் !

ஓலைக் குடிசையிலே  ஒடுங்கி வாழ்கையிலும்
     ஊக்கம் அளித்த....தமிழ்ப்  பாடல் !
வேலை தரும்சுமையை  விரட்டி அடித்திடுமே 
    விந்தை விழைந்த.. தமிழ்க் கூடல் !

காடு மணப்பதுபோல் கன்னல் கவியனைதும் 
    காந்தம் எனஇழுத்து ஓடும் !
பாடும் பொருள்புதிதாய் படரும் போதினிலே
    பாரில் இல்லையொரு ஈடும் !

சுற்றம் இருந்துமொரு சுகமும் இல்லையெனச் 
     சுற்றி அலைந்தகதை போதும் !
வற்றும் நினைவலையில் வசந்த கானமழை
      வந்து உதிக்கஇன்பம் மோதும் !

பற்று அறுந்துமனம் பதறும் வேளையிலும் 
   பாடி வைத்தகவி கோடி !
அற்றைக் கனவுபல அகத்தில் தோன்றநிதம்
   ஆன்மா மகிழ்ந்திருக்கும்  பாடி ! 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/08/2015

என்றும் இந்தக் குணமிருந்தால் நீயும் மகாத்மாவே !

                                                                   
வலிமையுள்ள மனிதனாக
வாழ்ந்து காட்ட வேண்டும் !
எளிமையான வாழ்வுக்கே
இடமளிக்க வேண்டும்!

தனிமையிலும் இனிமை காண
தன்னடக்கம் வேண்டும் !
தரணியெல்லாம் போற்றும் வகை
தயவு நெஞ்சில் வேண்டும்!

கலியுகத்தின் போக்கை மாற்ற
கருணை தம்முள் வேண்டும் !
கடவுள் என்றும் கொண்டாட
கடமை உணர்தல் வேண்டும் !

பழியுணர்வை போக்க வல்ல
பாசம் இங்கே வேண்டும் !
பகைவரையும் மன்னிக்கும்
பக்குவமும் வேண்டும் !

மனித குலம் உயிரினத்தை
மதித்து வாழ வேண்டும்!
மரணம் வரும் என்ற போதும்
மனதில் உறுதி வேண்டும் !

எவர் கொடுமை செய்தாலும்
எதிர்த்து நிற்க வேண்டும் !
எதிரிக்கும் வாழ்வளிக்கும்
இரக்க குணம் வேண்டும் !

கருவினிலே சுயநலத்தைக்
கலைத்து விட வேண்டும் !
கடவுள் பக்தி நேசமுடன்
கருத்துரைக்க வேண்டும் !

பொதுநலமாய் சிந்திக்கும்
பொறுப்பு மிக வேண்டும் !
பொன்போன்ற மனம் வாழ
பொறுமை காத்தல் வேண்டும் !

                                                                        
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/01/2015

வித்தியாவின் படுகொலைக்கு தகுந்த நீதி கிட்ட வேண்டும் !

                                                             


கண்ணீரில் சிக்குண்டு கல்நெஞ்சும் ஏங்குதடி !
பெண்ணே உனைப்பிரிந்து பேச்சிளந்தோம் !-மண்ணில் 
அடைகாத்து வைத்திருப்போம் உன்நினைவை !அன்பே 
விடைபெற்றுச் சென்றாய்  விரைந்து ! 

பெண்ணேநாம்  ஏன்பிறந்தோம் பேசாமல் மாண்டிடலாம் !
கண்கெட்ட பூமியிலே  காவலேது !-புண்பட்ட 
நெஞ்சத்தின் ஓலத்தைக் கேளம்மா! நீயுமிங்கே 
வஞ்சகரால் வீழ்ந்ததுதான் வாழ்வு ! 

ஓயாமல் இத்துன்பம் ஓடிவந்து கொல்லுதடி 
தாயேநீ போனவழி தாங்காமல்  !சேயை
வெறிநாய்கள் சேர்ந்தெங்கும் வீணாக்கும் காட்சி       
அறிவாய்நீ அன்றாடம் தான்!

பாலகரும் கன்னியரும் பாவிகளின் காமத்தால் 
காலமெல்லாம் சாகத்தான் காண்கின்றோம் !-கோல 
மயிலேநீ கொண்டதுயர் மாளாது !எண்ணி 
உயிரும் உருகும் உடைந்து !
                                                                        


புண்பட்டுப் போகுதடா புத்திகெட்ட மானிடனே !
பெண்பட்ட பாடறிந்தும் பேசாயோ !-கண்ணின் 
மணிகளைத்தாம்  நாமிழந்தோம் மண்மீது இன்னும்  
துணிவிழக்கச் செய்வதேன் சொல் ?...

பொல்லாக் கொடியவனே !பொய்யால் நிறைந்தவனே !  
கொல்லத்தான்  பெண்ணினமா கூறடா !-வல்ல  
துணையின்றி  வாடுகின்றோம் இன்னும் தொடரும் 
இணையில்லாத்  துன்பம் எமக்கு !

பெற்றமனம் வாடத்தான்  பெண்ணினத்தைக் கொன்றிங்கே 
அற்பசுகம் தேடாதீர் ஆணவமாய்  !-பற்றி 
எரியும்நல் உள்ளத்தின் சாபத்தீ  கொல்லும்!
கரியாகும் இவ்வுலகு காண்! 

அன்னைதான் ஈன்றெடுத்தாள் ஆணுன்னை  வாழவைத்தாள் 
இன்னும்ஏன் சந்தேகம் இவ்வுலகில் !-உன்னை  
உயிரென ஓம்பும் உயர்பெண்ணை ஏனோ 
பயமுற வைத்தீர் பதைத்து !

பத்துப்பேர்  சேர்ந்திங்கே பாவத்தில் பங்கேற்றால் 
எத்தனைதுன் பம்அவள்  பட்டிருப்பாள்  !-செத்துப் 
பிழைக்குதடா பாவிகளே! பிஞ்சவளைக் கொன்றும்  
இழைத்தீர் கொடுமை இணைந்து !

தீமூட்டிக் கொல்லத்தான் தீராத வேட்கையடா!
நீர்மல்க  நிற்கின்றோம் நிர்க்கெதியாய்!- வீதி 
வழியோரம் வந்துப்பார் வீணரே! உம்மைப் 
பழிவாங்கும் எம்மின் படை !

பெண்ஒன்றைக் காணவில்லை போய்த்தேடும் முன்பேஅக்    
கண்மணியாள் மாண்டிருப்பாள் காமுகரால்!- மண்ணில் 
இதுபோல எத்தனையோ எம்வாழ்வில் கண்டோம்!
எதுவேண்டும் இன்னும்  இயம்பு ?..

கொல்லாமல் விட்டதே நல்லாட்சி தான்என்றால் 
எல்லாமே இங்குப்பொய் என்றறிவோம் !-வல்ல 
அரசாட்சி  உண்டானால்  அன்றேதம் ஆவி 
பரலோகம் போகும் பறந்து !

                                                                          
                                                     

பெண்ணுக்குக் காவல்யார் பேசுங்கள் மூடரே!
மண்மீது  பெண்கண்டார் மாத்துயரம்   !-எண்ணி 
இருக்கின்றோம் இன்றிந்த ஏக்கம்தான் தீர 
வரும்என்றே  பெண்களுக்கும் வாழ்வு !

                                                             
                                                 
                                                                     ஐயகோ ....
சீர்கெட்ட இவ்வுலகைச் சீர்திருத்த யார்வருவார் !
நீர்மட்டம் ஒங்குதிங்கே  நித்தமும்தான் !-தீர்வின்றி
எம்வாழ்வில் வந்தேகும் இன்னலுக்கோர் நல்வழியைப்  
பெம்மானே தா ..தா ..பிறந்து !
                                                                      
                                                                        


புங்குடுதீவைப் பிறப்பிடமாக் கொண்ட எங்கள்  அருமைச் சகோதரி மாணவி     
வித்தியாவின் படுகொலை குறித்தும் இன்னும் காணாமல் போகும் எத்தனையோ வித்தியாக்கள் குறித்தும்  நீதித்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்¨! அதுவரை பெண்ணினத்தின் விடிவுக்காய் உலகம் முழுவதும் உள்ள எம் மக்கள் ஓயாது குரல்கொடுக்க வேண்டும் !பெண்களை கண்களாக மதிக்காது போனாலும் பெண்களை பெண்களாக வாழ விடுங்கள் நாம் போதைப் பொருட்கள் அல்ல !           
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.