7/31/2012

பூமித் தாயே கலங்காதே

பூமித் தாயே கலங்காதே
பெரும் பூகம்பத்தை விரும்பாதே!
பல உயிர்கள்  உண்டு உன் மீது
பாவம் அவை நீ பண் பாடு!

கோரத் தாண்டவம் ஆடிடும்
கொடிய மனிதர் செயல் கண்டு
தீப்பிழம்பைக் கக்காதே
தீர்ந்து போகும் இவ்வுலகே!


ஆத்திரத்தில் அம்மா நீ
அசையும்போது இடர் வந்து
சேர்த்து வைத்த செல்வம் எல்லாம்
சிதைந்து போகுதே  கண் முன்னாலே!

நேற்றா இன்றா நீ பொறுத்தாய்!...
நித்தம் இடியைத் தாங்குபவள்
நீ வாட்டம் கொண்டால் வளம் ஏது!
வறண்ட நிலத்தில் உயிர் நிலைக்காது!

காற்றும் மனிதன் செயலாலே
கலைந்தே போகுது தழுவாமல்!
வேத்துக் கொட்டும் உடலுக்கு இனி
வெப்பம் தணிக்க மரம் ஏது !

பூத்துக் குலுங்கிய பூமியம்மா உன் மீது
பொலியும் கட்டிடம் இது கொடுமையம்மா!
உனைத் தேற்ற மனிதன் நினைக்கவில்லை
அவன் தவறை உணர்த்த வழியும் இல்லை!
அடைக்கலம் ஆனோம் உன் மடி மீது
அம்மா உன்போல் ஒரு தெய்வம் ஏது!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

காற்றாக நான் மாறவா!...

காற்றாக நான் மாறவா!...
கடல் அலையாக நான் மாறவா!... 
தண்ணீர் ஊற்றாக நான் மாறவா!.... 
தாமரைப் பூவாக நான் மாறவா !... 

தணியாத தாகம் என்னுள்ளே 
ஏனிந்த மோகம்!!!!.......... 
உனைப் பாடும் பாடல் அதைத்  
தினம் கேட்க்கும்போது!............

எரிகின்ற தீ மேல் 
மெல்ல விழுகின்ற நீர் போல் 
சுகம் பொங்குதே!!!........என் 
மனம் ஏங்குதே!!!.......

உன்னை நினைந்தாடவே 
தவிக்கின்றதே  உடல் துடிக்கின்றதே  
முன்னொரு போதும் இல்லாத பரவசம் 
என்னுள் உருவானதே அது எனை மீறுதே!!!....

உன்னிரு கரம் கொண்டு அணைக்க 
எனக்கொரு வரம் வேண்டுதே!!!...... 
உள்ளம் நதி போல் துள்ளிடத் துள்ளிட 
எண்ணம் முழுதும் கவிதை வெள்ளம்
பொங்குது பொங்குது பாரம்மா!!!..... 

இன்னல் தீர்க்கும் தாயே 
என்னுள் இருப்பவள் நீயே!!..... 
உன்னைத் தாங்கும் என் இதயம் 
இந்த உலகை மறக்க வேண்டும்!... 

எண்ணம் முழுதும் உனக்காக
உயிர் ஒளி தீபம் ஏற்ற வேண்டும்!..... 
அன்னை உந்தன் பாதம் அடியவள் 
தொழும் வரம் ஒன்றே போதும்!...

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/30/2012

தெய்வம் இருப்பது எங்கே.....

பணம் படைத்தவன் தேடுகின்றான்
நல்ல குணம் படைத்தவனை அது
தேடி ஓடுகின்றது !!!!.................
தன்நலன் மறந்து தாயானாள் உயர்
தாகம் தீர்க்கும் நீர் போலானாள்
அன்னை இவள்போல் வாழ்வதற்கு
எண்ணம் கொண்டால் போதும். இனி நீ யார்?.....
                                                                                                 
இளமை தனிலே முதுமை கேட்டாள்
இறைவனிடத்தில் மனத்தைக் கொடுத்தாள்
உலக நன்மை கருதியே என்றும்
ஓயாது நன்னெறி பாடல் இசைத்தாள்!.....


குறுகத் தந்த குறளதனால்
கோடி நன்மை இவ்வுலகம் பெறும்
அறிவுச் சுடராய் விளங்கிய மனிதர்
ஆற்றிய தொண்டுக்கோர் எல்லை இல்லை!....


காந்தித் தாத்தா என்றாலே
கண்கள் வியந்து  நின்றாரே !..........
மாண்டும் இவர் புகழ் உலகமெல்லாம்
மங்க்காதிருப்பது எதனாலே ?......!!
                                   

நீண்டுகொண்டே போகும் இந்தத்
தேடல் என்பது தொடர் கதைபோல்
இனியும் வேண்டும் என்றே கேட்க்கும் கேள்வி
வீணே என்று நாம் உணர்வோம்!!!....... 
                                       

களவும் பொய்யும் நிறைந்த உலகில்
கடவுளைக் காண்பதும் பொய்தானே 
அதை உணரும் வகையில் உணர்ந்துகொண்டால் 
உள்ளது என்பதும் மெய்தானே ?.........!!


அறிவுச் சுடரை ஏற்றி வைத்து 
அன்பைத் தினமும் ஊட்டிவிட்டு 
மனிதநேயம் காத்து நிற்கும்  
மறைந்தும் மறையா  மா மனிதர்கள் எவரோ 


இவர்கள்தான் தெய்வம் என்று 
உணர்ந்தால் வாழ்வில் நன்மை உண்டு 
சினம் கொள்ளும் விவாதம் ஏனோ!...
உலகம் சீர்கெட்டுப் போன பின்னும்!!...

மனம் என்னும் கோவில் தன்னில்
மறைவாக உயர்ந்து நிற்கும் நற்
குணம் என்னும் பண்பே தெய்வம்
இது குறைந்தால் வாழ்வில் ஏது  இன்பம்!...


                                                    கடவுள் இருக்கிறாரா இல்லையா 
                                                    சொல்லு ?..சொல்லு?...சொல்லு???...
                                                     அட ச்சீ......இவங்க தொல்ல  
                                                     தாங்க முடியியல சாமி.....:):)                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/28/2012

தித்திக்கும் பாடல் நூறு .....





தித்திக்கும் பாடல் நூறு 
தீட்டாதோ என் கைகள் என்றும் 
எத்திக்கும் நிறைந்திருக்கும் 
என் தெய்வம் அருளால் இங்கு 

பக்திக்கோர் எல்லை இல்லை 
என் பாமாலை உன்னைச் சேர 
வித்தைக்கு அதிபதியே நீ 
வா வா வா ....எந்தன் முன்னே!....

முத்துக்கள் போல வார்த்தை 
முரண் அற்று முழுமை சேர 
என் சித்தத்துள் தெளிவு தந்து 
தேவியே நின் அருளைக் காட்டு!...

மொத்தத்தில் என்னில் உன்னை 
நான் முழுதாக உணரும் தன்மை 
சித்திக்க நல் வழிதான் என்ன!.....
உன் சீரான திருவடிக்கீழ் என்றும் 

சக்கரம்போல் சுத்துகின்றேன் 
என் சங்கடங்கள் தீர்த்தருள்வாய் 
செந்தமிழால் கவி பாடி இறைவன் 
அவன் சிந்தனையில் நிதம் வாழ 

எந்தன் உயிர் ஏங்குதடி !...........
இனி ஏழ் பிறப்பும் இது போதும் 
போதும் போதும் என்றே மனம் 
துதி பாடும் வகை அருள் தருவாய் தாயே!......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/27/2012

அவளின்றி அணுவும் அசையாது!..

ஆடி வெள்ளி தேடி வந்து
அம்மன் அருளது பொலியட்டும்!......
உலகில் வாடி வதங்கும் உயிர்களுக்கு
செல்வம் அதனை வாரி வாரி வழங்கட்டும்!...

கோடி நன்மை அருளும் சக்தி
நற் குலத்தை நோக்கி நகரட்டும்
அவளைத்  தேடிச் சென்று கேட்ட வரத்தை
ஆசை தீரும் வரைக்கும் வழங்கட்டும்!.......
                                         
பாடித் துதிக்கும் பக்தர் கூட்டம்
இன்று பரவசத்தில் மூழ்கட்டும்
அவர்கள் நாடி நரம்பு அத்தனையிலும்
அட்ட சக்தியும் வந்து அமரட்டும்!........

திருவோடுகூடத் தங்கம் ஆகும்
அன்னை இவளை நம்பி இருந்தால்
அறிவோடு பண்பும் நல் ஆசி தந்து
என்றும் எம்மைக் காத்தருள்வாள்!.....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/23/2012

அத்திப் பூ மணம் மணக்க

அத்திப் பூ மணம் மணக்க
என் அத்த மக உன் நினைப்பு
தித்திக்குது நெஞ்சுக்குள்ளே 
தேன் கொடுக்க நீ வருவாயா?

கத்தரித் தோட்டத்திலே  
கட்டி வைத்த பொம்மை போல 
நித்தம் உந்தன் நினைப்பில் நான் 
நிக்குறேனடி தன்னாலே!

பட்டு உடல் தொட்டணைக்க 
பரிசம் நான் போட்டிடவா?
கெட்டி மேளம் கொட்டிடவே 
தாலி அதைக்  கட்டிடவா?

மொட்டு விட்ட மலரே உன்றன்  
முக அழகைக் காட்டாதே!
எட்டி நிலா பார்த்தால் போதும் 
வெக்கத்தால் வாடுமெடி

தத்தித் தத்தி ஓடும் பெண்ணே 
தரையில் மானைக் கண்டாயா?
வெட்டி வெட்டி விளிக்கும் விழியால் 
வீரக் கதைகள் சொன்னாயா?

கட்டழகுப்  பெட்டகமே உன் 
கன்னம் இரண்டும் தேன் கிண்ணமெடி  
காட்டுக்குள்ளே நீ நடந்தால் 
கனிகள் கூட ங்குமடி 

உன் தோட்டக்காரன் நான்தானே 
ஒரு தூது சொல்லடி செந்தேனே 
காத்திருக்குது என் உசிரு  உன்னைக் 
கவர்ந்து செல்ல நான்  வருவேனே.....  

                                     (  அத்திப் பூ மணம் மணக்க....)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/17/2012

தன்னையே தந்த தலைவா......

 தன்னையே தந்த தலைவா
இன்று என்னை நீ மறந்ததேனோ?
நெஞ்சிலே பொங்கும் துன்பம்
அது கண்களில் கங்கை ஆகும்!
நெஞ்சிலே பொங்கும் துன்பம்
அது கண்களில் கங்கை ஆகும்

                                      (தன்னையே தந்த ....)

உன்னிரு விழியும் தேடி
என்னுடல்  வாடும் போது
தன்னிலை மறக்கலாமோ!
தென்றலே சொல் சொல் சொல்?
மஞ்சள்  குங்குமமும்
மண மாலை தோரணமும்
கண்டாலே போதும் போதும்
ஆனந்தக் கண்ணீரில் நெஞ்சம் மோதும்!

என்னுயிர் தாங்கும் உடல் நீ
உன்னை நான் இழக்கலாமோ!
பொன் பொருள் ஏதும் வேண்டாம்
உன் புன்னகை ஒன்றே போதும்
அன்று நீ சொன்ன வார்த்தை
நெஞ்சினில் நின்றாடுதே
இந்த வன்முறை ஏனோ
சொல் சொல் சொல்?

கண்ணீரை மையாக்கிக்
கவிதை நான் வரைந்தேனே
உன்னை இது   சேராதோ?
என் உள்ளமதைக் கூறாதா?
வாடுதே என் மனம் 
உன்னைத் தேடுதே அனு தினம்!
தூது சொல் மன்னவா
என்னுயிர் நீ அல்லவா...

                                                (தன்னையே தந்த ....)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/15/2012

நீயின்றி நல் வாழ்வேது!...




ஒற்றை ரூபாய் மடிப்பிலே
ஓராயிரம் ஆசைகள் நினைப்பிலே
பெற்ற தாயின் தவிப்பினை
பிறர்தான் அறிய முடியுமா!!!.....

சற்றும் சோர்வு கொள்ளாமல்
தன் சுகத்தை மட்டும் தேடாமல்
முற்று முழுதாய் எமக்காக
முதுகு கோண உழைத்தாளே!!!....

குப்பை மேட்டில் அவள் கனவு
குலைந்து போகத் தனிமையிலே
செற்ற உடலைத் தாங்கியபடி அவள்
சீவன் உலாவுது எதனாலே!!......

உற்றார் உறவினர் யாவருமே
உயிராய் பழகி வந்தாலும்
பெற்ற தாய்க்கு இணையாக
பூமியில் எமக்கு யாருண்டோ

நித்தம்  வரும் நினைப்பிதனால்
தன் நின்மதியை இழப்பவள்  தாய்
அவள் கற்றுத் தரும்  நன்னெறியைக்
காக்க மறந்தால் நல் வாழ்வுண்டோ!....

பல்கிப் பெருகும் கலாச்சாரம் எமை
பாதை தவற அழைத்தாலும்
கல்லில் பொறித்த எழுத்தாகக்
காலம் முழுதும் வாழ்வோம் நாம்

உன்னைத் தொழுதால் போதும் அம்மா
உலகில் யாவும் இனிதாகும் இங்கு
கண்ணைத் திறந்து பேசும் தெய்வம்
உன் காலடி பட்ட மண்ணும் கவி பாடும்!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/10/2012

மனமே மயங்காதிரு!...

அன்னம் தண்ணி ஏதுமின்றி
அவதியுறும்  யீவன்கள் பல இருக்க 
இன்னும் இன்னும் வேண்டும் என்று
எதை எதையோ தேடி அலைகின்றோமே!..

என்ன புண்ணியம் செய்தோம் இங்கே
இத்தனை சுகங்கள் பெறுவதற்கு என 
எண்ணும் உணர்வு பெற்றால் போதும்
இதயத்தில் சுமைகள் குறைவதற்கு 


மனக் கண்ணில் தோன்றும் வாழ்க்கை என்பது 
எம் மனம் போல் என்றும் அமையாது இதைச்
சொன்னால் கேட்க்க மறுக்கும் குணத்தால்
வாழ்வில் சோதனைகள் குறையாது!...

கல்லில் முள்ளில் நடந்து வரினும்
கௌரவங்கள் குறையாது  பிறர் 
தொல்லைப் படுத்தும் அளவு கடனைப் பெற்றால் 
துன்பம்  என்றுமே தொடராகும்!!...


வெள்ளை மனமும் பிள்ளை குணமும் 
எல்லை இல்லா ஆனந்தம் தரும்!.. 
இது இல்லை என்றால்  போதும் உன்னிடம் 
இருப்பதெல்லாம் பொய்யாகும்


என்னை உன்னை உயர்த்திக் காட்ட 
என்ன வேண்டுமோ "நிஜ" வாழ்வினிலே 
அதை என்றும் தேடிக் கற்றால் போதும்
இந்த உலகம் உன்னைப் போற்றிடுமே!...
  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.