( பட இணைப்பு -2)
தீயே.. தீயே.. தீர்ந்துவிடாதே!
தீயே ..தீயே.. தீர்ந்துவிடாதே! சில
தியாகம் இன்னும் இருக்கிறதே!
உடல் எரியும் உள்ளம் எரியாது
உணர்வுகளைக் கொல்ல முடியாது!
மனிதனை மனிதன் மறக்கிற பொழுதினில்
மரணமும் இனிக்குமடா! -ஒரு
புனிதனை உயர்வாய் நினைக்கிற பொழுதுதான்
பூக்களும் சிரிக்குமடா!
எரிமலை எங்களைத் தாக்கிடும் பொழுதினில்
எதிரிக்கு மகிழ்ச்சியடா!
நாம் உன் எதிரியு மில்லை
நண்பனு மில்லை ஏனிந்த சூழ்ச்சியடா?
கொடுமைகள் கண்டு கொதிப்பவன் அவனே
கோடியில் ஒருத்தனடா!
எம் கோபமும் தாபமும் நியாயமே இங்கு
ஏன் இந்த வருத்தமடா?
சிலைகளை உடைத்து எறிகிற பொழுதிலும்
சிந்தையில் வலிக்குமடா! நீ எங்கள்
சீவனை வதைத்துப் போகிற பொழுதிலா
சிரிப்பொலி கேட்குமடா!
விடுதலை தாகம் எம துயிர் தேகம்
வீணரே அறிவீரோ! எங்கள்
விரல்களை வெட்டி எறிவதால் மட்டுமே
வெற்றியைக் காண்பீரோ?
( தீயே ..தீயே. தீர்ந்து விடாதே !)
தீபாவளித் திருநாளை முன்னிட்டு சகோதரர் ரூபன் ,யாழ்பாவாணன்
ஐயா இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்
போட்டி 2014 க்குரிய கவிதை இது .பங்குபெறும் அனைவருக்கும் என்
இனிய நல் வாழ்த்துக்கள்
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html