பாயும் புலியும் தாயானால்
பண்பில் சிறந்து விளங்கிடுமே!
நாயும் அது போல் விலங்கெல்லாம்
நம்மைப் போன்றே செயற்படுமே!
சேயும் மகிழ உணவளித்து
செம்மையாக வளர்த்திடுமே மனம்
தேயும் நிலவா சொல்லிங்கே
தென்பாய்ப் பேசும் ஆண்மகனே!
பெண்ணைப் போற்று இந்நாளில்
பெருமை சேர்க்கும் நன்னாளில்
கண்ணைப் போல காத்தவள்தான்
கடவுள் தந்த உன்தாயும்!
விண்ணைத் தாண்டிச் சென்றாலும்
விருப்பம் எல்லாம் உன் மீதும்
எண்ணைத் தாண்டும் கடல் போல
எல்லாம் அறிந்த ஆண்மகனே..
தாழ்த்திப் பேசுதல் மடமையடா!
தர்மம் அவளின் உடமையடா!
வீழ்த்திச் செல்ல முடியாதே
வீரம் கொண்ட பெண்ணினத்தை
வாழ்த்தி வணங்கு எந்நாளும்
வன்மம் வேண்டாம் மனத்தளவும்
ஆழ்த்தி விடுவாள் மங்கையவள்
அழகாய்த் திகழும் கங்கை மகள்!
எழுச்சி மிக்க பாடல்களை
எழுதித் தள்ளும் கவிஞரெல்லாம்
புகழ்ச்சிக்காக எழுதவில்லை
புதுமை படைத்த பெண்ணினத்தின்
நெகிழ்ச்சி மிக்க செயல்திறன்தான்
நெஞ்சே இதனை அறிவாயோ!
மகிழ்ச்சிப் படுத்து உறவறிந்து
மறந்தும் பெண்களைத் தூற்றாதீர்!
பெண்ணின் பெருமை உலகறிந்து
போற்றிப் பாடும் இந்நாளில்
கண்ணின் மணியைக் கற்கண்டை
கல்லுக் குள்ளே மறைக்காதே
விண்ணின் அளவைத் தாண்டுமடா
விரும்பிக் கற்கும் அவளறிவை
மண்ணின் பெருமை தனைச் சொல்லி
மகிழ்வாய் நாமும் ஏற்றிடுவோம் !
விலைகள் பேசி விலக்காதே
விலை மாதென்று நினைக்காதே
உலையும் எரிய வீட்டினிலே
உண்மையாக உழைப்பவளை ஏன்
அலைகள் போல அரிக்கின்றாய்
அடிமை என்றே நினைக்கின்றாய் ?
கலையும் அவளால் வளருதடா
கருணை எதிலும் பொழியுதடா !
உருவம் மென்மை என்றாலும்
உள்ளம் கவர்ந்த பெண்களுக்கு
பருவம் மாறத் துணிவுமிங்கே
பனி போல் விலகிச் சென்றிடுமா ?.
கருவம் வேண்டாம் எமக்குள்ளே
கருவைச் சுமக்கும் தாய் முன்னே
அருவம் உருவம் அவள் தானே
அருவுருவம் போல் வந்த ஆண்மகனே ?..!