Showing posts with label வலைப் பதிவர் திருவிழா போட்டிக் கவிதை 2015. Show all posts
Showing posts with label வலைப் பதிவர் திருவிழா போட்டிக் கவிதை 2015. Show all posts

9/24/2015

பொங்கி எழு தமிழா !




பொங்கி எழு தமிழா !
                               
வருகின்ற துயரனைத்தும் விலகி ஓட
    வறுமையிலும் ஒற்றுமையைப் பேணல்  வேண்டும் !
தருமநெறி  காக்கின்ற செயலைச் செய்து
     தமிழர்நாம்  தமிழராக வாழ்தல்  வேண்டும்!
பெருமையுடன் தாய்மொழியைப் பேணல்  வேண்டும்
     பெரும்புகழைத் தமதாக்கிக் கொள்ள வேண்டும்
இருள்சூழ்ந்த நிலைபோக்கி என்றும் வாழ்வில்
     எம்மவர்கள் ஆட்சிமன்றில் அமர வேண்டும் !

கருமமதைக்   கண்ணாகக்  கொள்ள   வேண்டும்!
     களவின்றிப் பொய்யின்றி வாழ்தல்   வேண்டும் !
உருகாதோர்  மனமுருகச் செய்ய வேண்டும்
     உரிமையினை வென்றெடுதுச் செல்ல வேண்டும் !
அரும்பாடு பட்டேனும் சான்றோர் நாளும்
     அறிவுக்கண் திறக்கவழி செய்ய வேண்டும் !
விரும்பாத செயலுக்கு முற்றுப் புள்ளி
      வீறுகொண்டே  எவருமிங்கு  வைக்க வேண்டும் !

நடையாலும் உடையாலும் தமிழர் பண்பை
      நாட்டமுடன்  காத்துநிதம் செல்ல வேண்டும் !
மடைதிறந்த வெள்ளமென மாட்சி ஒங்க
     மனமொத்துப்   பணியாற்றிச் செல்ல வேண்டும் !
அடையாத இலட்சியத்தை அடைய வேண்டும்
      அடிமையென்ற சொல்மறையச் செய்ய வேண்டும்
தடையெல்லாம் உடைத்தெறியத் தமிழா நீதான்
       தரணியிலே பொங்கியெழ வேண்டும் இங்கே !

                                                                   
                                                      
இப்படைப்பு,‘வலைப்பதிவர் திருவிழா – 2015’   மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015’க்காக எழுதப்பட்டது.


வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை. 


இது என்னுடைய சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் 

வெளியானதல்ல என்றும் முடிவு வெளிவரும் முன்பு வேறு எங்கும் வெளி

வராது என்றும் உறுதி அளிக்கின்றேன் !

இப்படிக்கு 

உண்மையுள்ள 

அம்பாளடியாள் 

நன்றி .

                                                        



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.