ஏர் பிடித்த கரங்களெல்லாம் தம்
இதயமதால் நன்றி சொல்லக்
காத்திருந்த தைப் பொங்கல்
கனிந்திங்கே வந்ததென்றால்
சொல்லவா வேண்டும் ?
உழவர்கள் மனம் போல
உள்ளும் புறமும் வெள்ளையடித்து
முற்றத்தில் கோலம் போட்டு
வெடி முழக்கத்தோடு
கதிரவன் எழும் முன் எழுந்து
தலை வாழை இலை போட்டு
நிறை குடமும் வைத்தங்கே
புதிய கரும்போடு பூ பழங்களும்
புத்தொளி வீசும் குத்துவிளக்கேற்றி
திக்கெட்டும் ஒளி பரப்பும் தெய்வத்தை வணங்கி
இல்லத் தலைவனும் தலைவியும்
புதுப் பானையை அடுப்பில் ஏற்றி
புது மஞ்சளைக் காப்பாய்க் கட்டி
புத்தரிசி இட்டு இனிய
பொங்கலது பொங்கி வரும் வேளையிலே
சுற்றம் சூழ நின்று
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல் என்று
உள்ளத்தில் ஆனந்தம் பொங்க
கதிரவனுக்கும் பூமித் தாய்க்கும்
கால் நடைகளுக்கும்
கலப்பைகளுக்கும் கூட
நன்றி சொல்லும் பெருநாளாய்
உழவர்கள் திருநாளாய்
அன்று எங்கள் வாழ்வெல்லாம்
அலங்கரித்த தைப் பொங்கலது
இன்று எங்கள் வாழ்வினிலே
இல்லையடி தை மகளே!
குத்து விளக்குகள் சரிந்த பின்னால்
குல விளக்குகள் துலங்குவது எப்படி?
பொத்தி வைத்த துயரனைத்தையும்
பொங்கலாகப் பொங்கட்டுமா இங்கே?
அத்தி பூத்தது போல்
ஆனந்தம் சில நொடி தான்
பொத்தி வெடித்து உடலைப்
பிளந்த காட்சி நாம் மறப்பதெப்படி?
கொத்தி விறகாக்கி
வண்டில் கலப்பை எல்லாம்
எரித்த பின்னால்
கத்தி முனையில் நின்று கொண்டே நாம்
களிப்புடனே பொங்கல் பொங்குவது எப்படி?
அந்தக் கடந்த காலம் திரும்பி வருமா ?
நாம் பட்ட துன்பம் மறைந்திடுமா?
உடைந்த பானைகளும் கேட்கிறதே
உழவர்கள் படும் துயரைத் தீர்ப்பதாரு?
வருந்துகின்றோம் தை மகளே உன்னை
வணங்கக் கூட கைகளின்றி
உலகில் மக்கள் பசியைப் போக்கும்
உழவர்கள் எமக்கேன் இந்த நிலமை!
கன்று பசி கிடக்க
காய்ந்த மாடுகள் கண்ணீர் வடிக்க
பட்டி பெருகுவதெங்கே?
பால் பானைகள் தான்
பொங்குவதெங்கே ?
பச்சை அரிசி அதைப் பார்த்தே
பல காலங்கள் ஆகிப் போச்சே!
உத்தரத்தில் செருகி வைத்த கத்திகள்
ஒவ்வொன்றாக எரிஞ்சு போச்சே!
இனிச் சூடு மித்தித்த கால்கள் இங்கே
சுறணையற்றுக் கிடக்கும் போது
ஏரைப் பிடிப்பதாரு ?
எம் நிலத்தை உழுவதாரு ?
ஏனம்மா இப்படி ?
வற்றாத பொங்கலது
வழிந்தோடுது கண்களிலே இனிச்
செத்தாலும் மறக்க மாட்டோம் நாம்
சேமித்த துக்கம் அப்படி!
எமக்குப் பொற் காலம்
என்று வருமோ?
போ மகளே
மென்று துயர் கொன்று உடல் அதை
வென்று வரும் இவ் வேதனை
என்று தணியுமோ
நீ அன்று வருவாய்
இன்று எமக்கில்லைத்
தைப் பொங்கல்
சென்று வா தை மகளே!
மீண்டும் ஒரு நன் நாளுடன்.
குறிப்பு :சென்ற ஆண்டு தைப் பொங்கல் திரு நாளை ஒட்டி
கவிதை அரங்கு நிகழ்வுக்காக நான் எழுதிய கவிதை இதனைக்
கண்டு ரசித்த அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
உரித்தாகட்டும் !.....