5/06/2017

காத்திருந்த கனவுகள்!


தேவதை என் விழிதன்னில் பட்டாயடா
இன்பம் தந்தாயடா!
என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே!
எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே!
காணுகின்ற காட்சியெல்லாம் நீயானாய்
கருவிழியுள் வாழுகின்ற ஒளியானாய்!
தேடலில் இவள் வாழ்வு கழியுதே!
தேவகானம் ஒன்று மட்டும் தொடருதே!
நான் தேடும் சொர்க்கம் நீயடா!
நாணத்தை விட்டுவந்தேன் பாரடா!
குழலோசை காதில் கேட்காதோ!
குயிலென்றன் ஆசையைத் தீர்க்காதோ!
உன்னைக் கண்ட நாள்முதலாய்த் தூக்கம் போனதே
இவள் நெஞ்சில் ஏக்கம் வாழுதே!
காதலுக்குப் பச்சைக்கொடி காட்டாயோ!
கன்னி மன வீணையதை மீட்டாயோ!
காத்திருந்த என் கனவைப் பாரடா
பதில் ஒன்று கூறடா!
பூபாளம் இசைக்கின்ற நேரம்
இவள் நெஞ்சில் ஏனிந்தப் பாரம்!

நிலா முறத்திற்கு மிக்க நன்றி!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/27/2017

சிற்பங்கள் கண் திறந்தால்!







சிற்பங்கள் கண் திறந்தால்!
------------------------------------------------------------------------------

சிற்பங்கள் கண் திறந்தால் வாழ்த்துச் சொல்லும்!
சிங்காரத் தமிழின்மேல் காதல் கொள்ளும்! 
அற்பமாயை உலகினிலே யாவும்பொய்யே!
அருந்தமிழ் தந்தசுகம் ஒன்றே மெய்யாம்!

மண்தோன்றி கல்தோன்றும் முன்னாலே தோன்றினாள்! 
மாமனத்துள் ஆணிவேராய் ஊன்றினாள்! 
கண்டுக்கொள் கடலுக்குள் சாட்சிகள் தூங்குதே! 
காணத்தான் மனமிங்கே எந்நாளும் ஏங்குதே! 

முத்தமிழாள் முத்தமிட்டால் உயிர் சிலிர்க்கும்!
மூவுலகும் மனத்திரையில் கை குலுக்கும்!
சித்தமெல்லாம் சங்கீதக்காற்று வீசும்!
சிதம்பரத்தில் தெய்வத்திற்கும் பாதம் கூசும்!

இத்தரையில் எழுச்சிமிகு பரதக்கலையை 
எம்இறைவன் இறைவியவள் ஆடக்கண்டால் 
கொத்துக் கொத்தாய் மலர்வனங்கள் பூத்துக் குலுங்கும்!
கொடும் கோடையிலும் குளிர்காற்று கொஞ்சி மகிழும்!

செத்தாலும் என் சாம்பல் மணக்கும் தமிழாய் 
செந்தூர நதியலையில் சேரத்துடிக்கும்!
வெத்துக்கள் என்னுயிரைப் பழித்தால் வெடிக்கும் 
வெம்சின எரிமலைகள் அவர்கள்தம் கதையை முடிக்கும்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/23/2017

பூமி வறண்டிடிச்சே!



நாட்டுப்புறப் பாடல்கள்!
***************************************

பூமி வறண்டிடிச்சே
பூகம்பமும் கிளம்பிடிச்சே!
சாமி மனசுக்குள்ள
போட்ட சாபம் கேட்டதாரு!

நாத்து நட்ட குடி
நாளும் கண்ணீர் வாக்குதடி!
ஊத்து நிலம் கெட்டு
ஊரும் ஊமை ஆச்சுதடி!

குண்டு மழை பொழிஞ்சு
குடியைக் கெடுத்ததாரு!
விவசாயி குடும்பத்த
வீதியில விட்டதாரு!

அரசு மனசு வச்சா
அடி ஆத்தி மழை வருமா!
பொல்லாத சோகம் சொன்னா
போன ஜென்மம்தான் வருமா!

மாடு மட்டும் சந்தையில ஏலம் போகுது!
மானபங்க பட்ட உசிர் இங்கே ஏங்குது!
சோறு தண்ணி இல்லாம வாழ்க்கை ஏதடி!
சொந்தக் கத சோகக் கத இத
சொன்னால் கேளடி!

வெள்ளையன வெளியேறச் சொன்ன தாரடி
விருந்துக்கு அழைக்கிறான் இங்கே பாரடி!
கூறு கெட்ட அரசியல மாத்துற தாரு
கொஞ்சம் கொஞ்சமா
நெஞ்சம் வேகுதே!
பஞ்சம் தீருமா!

தீயிலிட்ட கருவாடு என்ன பாரடி!
தீந்தமிழே நீ பதில இங்கே கூறடி!

மூலிகைய குழுசையா விக்குறானடி!
மூடருக்கு அவ ஆப்பு வைக்குறானடி!
என் தாத்தா பாட்டி சொத்து
அத அள்ளுறான்!
ஏமாந்த குத்தத்துக்கு குண்டத் தள்ளுறான்!

சொன்னா புரியுமா?
இந்த சோகம் தெளியுமா!

சாலையில ஓடுது நாலு சக்கரம்
இது சாஞ்சா புரியுமடி வந்த சிக்கனம்!
புகையோடு புகையாக மனுசன் போகிறான்
இது புரியாமல் தானடி இங்கே வேகுறான்!

கேட்டாக்கா நாகரீகம் ஏறிப் போச்சுதாம்!
கேழ்வரகு கஞ்சி தூசா ஆகிப் போச்சுதாம்!
உப்புக் கல்ல வைரமாப்  பாக்குறானடி
சிலத ஒப்புகொண்டா கண்ணீரும் இங்கே ஏதடி!
எல்லாளன் ஆட்சிக் காலம் நீதி வாழ்ந்ததாம்
அது  இல்லாத  அரசியல்தான் இங்கே வாழுது!

தீயிலிட்ட கருவாடு என்ன பாரடி
தீந்தமிழே நீ பதில இங்கே கூறடி!

----------------------------------------(பூமி வறண்டிடிச்சே )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/22/2017

கற்பனைக் கோட்டை!



எண்ணற்ற கோட்டை கட்டி 
என்ன பயன் கண்டோம் இங்கே! 
கண்ணிறைந்த இயற்கை ஒன்றே
காவலரணாகும் எங்கும்!

மண்மீது உயிர்கள் வாழ 
மறுபிறவி தானும் காண 
பூமி நலம் காக்க வேண்டும்!
சாமி என நோக்க வேண்டும்!

தண்ணீரும் காற்றும் இன்றி 
தரை வாழுமா! 
தனவான்கள் எண்ணம் போலே 
எம் இனம் வாழுமா!

உயிருக்கு உறங்க ஓர் இடம் வேண்டும் 
உயிரான மண்ணுமதைத் தாங்க வேண்டும்! 
கருவறை தன்னில் இங்கே 
கல்லொன்றைச் சுமந்ததாரு!
கருவறை போல நீயும் 
தாய் மண்ணை எண்ணிப் பாரு!

கடற்கரை மண்ணை அள்ளிக் 
கோட் டை கட்டலாம் 
கடலன்னை பொங்கி எழுந்தால் 
எங்கே ஓடலாம்!

கோட்டைக்குள் அடங்காது இந்த உலகம் 
கோமாளித் தனமான எங்கள் சொந்த உலகம்!
ஆடம்பரமாய் இருக்க இது போதும் 
அட ஆயுளைத்தான் கூட்டாது ஒரு போதும்!

இயற்கையை மிஞ்சுமா இந்த அழகு!
ஈரலிப்பா நீயிருக்க வந்து பழகு!
மூலிகைக் காற்றைத்தான் 
உயிர் மூச்சு விரும்பும்! 
முத்தமிழை முத்தமிடும் பேச்சு விரும்பும்!

காத்தாடி தந்த காற்று 
காலடியைத் தொட்டு நிற்கும் 
ஆத்தாடி வாடைக் காற்று 
அக்கம் பக்கம் எல்லாம் சுற்றும்!

சுற்றுகின்ற காற்றுக்குச் 
சூனியத்தை வைக்காதே!
கோட் டையிலே இருந்து கொண்டே 
மனக் கோட்டைகளைக் கட்டாதே! 

---------------(எண்ணற்ற கோட்டை கட்டி )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/17/2017

நிலாக்கால இரவுகள்



மரபுக் கவிதை எண்சீர் விருத்தம் 
---------------------------------------------------

அகராதி முதற்கொண்டு தேடிப் பார்த்தேன் 
......அடியாத்தி சொல்லத்தான் வார்த்தை இல்லை!
 பகவானின் கற்பனைக்கோர் எல்லை உண்டோ!
......பார்போற்றும் பேரழகை மண்ணில் கண்டேன்!
ஜெகன்மாதா பெற்றெடுத்த பிள்ளைச் செல்வம் 
......ஜெகத்தினையே சுற்றிவரும் காட்சி போலும் 
சுகமான சிந்தனைகள் இங்கே தோன்றும்!
......சுழல்கின்ற நிலாக்காலம் நெஞ்சுள் வாழும்!

இனிதான காலமென எண்ணும்   காலம் 
......இரவெல்லாம் நிலவோடு வாழும்  காலம்!
தனிமைக்குள் நுழைந்தின்பம் காணச் சொல்லும் 
.......தள்ளாடும் வயதினிலும் ஆசை  கொல்லும்!
கனியொத்த சுவைநல்கும் எண்ணம்  தோன்றும் 
.......கண்ணதாசன் நினைவலைகள் நெஞ்சுள் நீளும்!
பனிபோல துயரெல்லாம் மாய மாகும்!
.......படர்ந்திருக்கும் பேரழகில் பார்வை சொக்கும்!


வெண்ணிலவு சுற்றிவரும் வீதி எங்கும் 
......விளையாடித் திரிந்தோமே அந்தக் காலம்!
எண்ணற்ற நினைவுகளைச் சொல்லச் சொல்ல 
......ஏக்கம்தான் விழைகிறது  ஏழை நெஞ்சில்!
கண்காணாத் தேசத்தில் இன்றெம் மக்கள் 
......காணுகின்ற காட்சியெல்லாம் வேறொன் றாகும்!
மண்மீது இத்துயரை மாய்ப தாரோ!
......மறுபடியும் நிலவினைநாம் ரசிக்க  வேண்டும்!

(கவிக்களம் -11 கவிதைப்பூங்கா போட்டிக்கான கவிதை) 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/15/2017

காதல் கலாட்டா கவிதைப் போட்டி!





ஆண்
-----------------------------------

மாலைப்பொழுதில் மயக்கும் பெண் நிலவடி 
அவள் சேலை கட்டி வந்த சிலையடி!
குயிலின் குரலோசை தானடி! 
பூக்களில் அவள்தான் அழகோ அழகடி!

பெண் 
----------------------------------------------------
எரிமலை நானடா குமுறக் குமுற 
வரும் துயர் பாரடா.....
உன்னோடு என்ன வழக்கு! தன்னாலே தீரும் கணக்கு! 
கண்ணுக்குள் நோயிருக்கு உன் நெஞ்சுக்குள் பேயிருக்கு!

ஆண்
-------------------------

பேயென்று சொல்லதடி! நெஞ்சைக் கொல்லாதடி! 
என் உயிராய் வாழும் தேவதை நீயடி 
திட்டும் போதும் வலிக்கும் பாரடி 
தேன்முத்தம் தந்து என்னை அள்ளடி! உணர்வே நில்லடி!

பெண் 
-------------------
சண்டாளனே! என்னை ஏதேதோ செய்கிறாய்! 
உன்னோடுதான் வாழ்க்கை என்கிறாய்! 
உயிரோடு விளையாடுறாய்! நீயாரடா? பதிலொன்று கூறடா?
புரியாத புதிரிங்கே நீயடா! என் உயிரும் தானடா!


ஆண்!
---------------------- 
சும்மாதான் சொன்னேன் நானடி அவள் நீ இல்லடி!
கொம்புத்தேனுக்கு ஆசையென்னடி!
கொலுவிருக்கும் பூங்கொடி! எண்ணிப் பாரடி 
நான் ராஜாதி ராஜனடி பல ரோஜாக்கள் தேடுமடி!

பெண்
-----------------
நீ ஒன்றும் அழகு இல்லையடா 
கற்பனையால் வந்ததிந்தத் தொல்லையடா! 
பூவெல்லாம் ஒன்றுதானடா 
நீ தேன் தேடும் வண்டுதானடா! என்முன்னே நில்லாதடா!

ஆண் 
------------------------------

கிளி மூக்கில் கோவம் வந்ததா அது 
அழியாத கோலம் ஆனதா! 
உளிகொண்டு சிதைத்தாலும் நீதானடி 
உயிருக்குள் உயிர் வாழும் என் பைங்கிளி 

பெண்!
------------------------
இனியென்ன சொன்னாலும் நம்பேனடா 
எல்லாமே என் வாழ்வில் பொய்தானடா!
வலி மேவுதே! அதில் காதல் பலியானதே! 
விளையாட்டும் உன்னால்தான் வினையானதே 
என் நெஞ்சம் தனியாய் வாடுதே!

                                                             


கவிஞர் .அம்பாளடியாள் 
சாந்தரூபி 
சுவிஸ்
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/08/2017

வெற்றி!




வெற்றிபெற்ற களிப்பொன்றே வாழ்வில்  போதும்
.....வேறுவேலை இங்கிருந்தால் பார்த்துச் செல்வீர்!
பெற்றவெற்றி ஒன்றினையே எண்ணி எண்ணிப்
.....பெருமைகொள்ளல் வளர்ச்சிக்குத் தடையாய் நிற்கும்!
கற்றவர்கள் எப்போதும் களிப்பில் மூழ்கிக்
.....கண்டபடி கதைபேசித் திரிய மாட்டார்!
அற்புதங்கள் நிகழ்த்துவதே அவர்தம் நோக்கம்
....அதனால்தான் இன்றுலகால் அறியப் பட்டார்!

மற்றவரை மதிக்கின்ற பண்பு ஒன்றே
....மானுடர்க்கு மகத்தான பண்பே ஆகும்!
பெற்றாலும் அப்பேறு நிலைக்க வேண்டிப்
....பெருமுயற்சி எடுத்தென்றும் உழைக்க வேண்டும்!
தற்பெருமை தலைசிறந்த கலைஞர்க் கிங்கே
....தகாதென்ற உண்மையினை உணர்தல் வேண்டும்!
அற்பமாயை உலகினிலே சிக்கிக் கொண்டே
.....அடுத்தவரைப் பகையாளி என்றெண் ணாதீர்!

ஏட்டிக்குப் போட்டியாக வளரும் ஆற்றல்
....எவர்த்தடுத்தும் நிற்காதென் றெண்ணிக் கொள்வீர்!
நாட்டிற்குள் திறமையினால் உச்சம் பெற்ற
.....நல்லவரை வாழ்த்துவதே நற்பண் பாகும்!
வீட்டிற்குள் எப்படியும் வாழ்தல் உண்டு
.....வியாபாரத் தளத்தினிலே உண்மை வேண்டும்!
போட்டியிலே சிலசமயம் தோல்வி வந்தால்
.....போராடி வெற்றிகொள்வீர் அதுவே தர்மம்!

அண்டங்கள் கடந்திங்கு நிற்கும் மாந்தன்
....ஆற்றலினை எவருமிங்கு அறிதல் நன்று!
மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவே நின்று
.....மகத்தான சாதனையைப் படைப்பார் வென்று!
எண்ணியிதை நாம்பார்க்கத் தவறும் போதே
......எண்ணத்தில் விரிசல்கள் வந்து சேரும்!
புண்பட்டுப் புரையோடி நிற்கச் செய்யும்
.......புரிந்துணர்வே அற்றசெயல் இதனால் ஓங்கும்!

நான்பெரிதே என்றெண்ணும் எண்ணம் கொண்டால்
.....நல்லதெது கெட்டதெது   தெரியா திங்கே!
கூன்விழுந்த மனதினிலே தோன்றும் கோபம்
.....குற்றமற்ற எவரையுமே கொல்லத் தூண்டும்!
நோன்பிருந்து பெற்றபிள்ளை இவ்வா றென்றால்
....நொந்துபோகும் தாயுள்ளம் என்ன ஆகும்!
ஏன்பிறந்தோம் என்றெண்ணி வருந்த வைக்கும்
....இழிச்செயலை எவருமிங்குத் துறத்தல் நன்று!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/07/2017

இதுவே எமக்கான பாதை!

 

அப்பனுக்குப் பிரணவத்தின் பொருளு ரைத்த
.....ஆறுமுக சாமியையே எண்ணிப் பாரீர்!
இப்புவியில் நாமெல்லாம் ஞானி யன்றோ!
......எடுத்தெறிந்து பேசுவதற் கொன்றும் இல்லை!
தப்பாட்டம் ஆடுகின்றோம் இதுவே எம்மின்
......தலைக்கனம்தான் என்றவரும் புரிதல் நன்று!
நற்கருத்தைச் சொல்வதற்கு நாயைக் கூட
.....நாமிங்கே அனுமதித்தால் நன்மை உண்டு!

கிட்டாத வாய்ப்பதனால் எம்மை இன்று
.....கீழோர்  என்றவரும்  நினைக்கக்  கூடும்!
எட்டாத தூரத்தில் இல்லை யென்று
......எவர்முயற்சி செய்தாலும் வெற்றி உண்டு!
பட்டதெல்லாம் போதுமென்ற எண்ணம் மட்டும்
.....பகுத்தறிவுக் காகாத செயலாய்க் கொள்வீர்!
கெட்டகுடியும்   மேலோங்க வாய்ப்பும்  உண்டு!
.....கேள்விஞானம் இங்கிருந்தால் அதுவே போதும்!

இன்றெவரும் பிறக்கையிலே கற்றுக் கொண்டே
....இப்புவிக்கு வரவில்லை எண்ணிக் கொள்வீர்!
முன்ஜென்ம பாவமென்று முயற்சி இன்றி
......முடங்கிவிட்டால் மூலையில்தான் கிடைக்க வேண்டும்!
பின்நாளில் நாம்விட்ட பிழையை  எண்ணிப்
.......பிதற்றுவதால் ஆவதிங்கே ஒன்றும் இல்லை!
நன்மையொன்று  கிட்டவேண்டும் என்றால் நாளும்
......நாம்தேடி அடையவேண்டும் அதுதான் வாழ்க்கை!

பிள்ளையொன்று பால்குடிக்க முதலில் கற்கும்
.....பின்னாளில் பால்நிலவில் காலை வைக்கும்!
எள்ளளவும் முயற்சியின்றிக் கிடந்தி ருந்தால்
.....எட்டியடி வைப்பதற்கே பாதம் கூசும்!
துள்ளியெழு விரைந்திங்கு வெற்றி கிட்டும்!
......துணையாக உன்னைநீ அழைத்துச் சென்றால்!
பள்ளியிலே கற்றவர்தான் மேதை அன்று
......பயின்றுவந்த அனுபவத்தைப் பாட மாக்கு!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

என்னுயிரே! பொன்மொழியே!



உப்பில்லாப் பண்டமென ஒதுக்கி வைக்கும்
....ஊராரின் கண்களுக்கு விருந்து வைக்க
இக்கணமே நீவருவாய் என்றன் நாவில்
....இன்றமிழின் ஆட்சியோங்கத் தடைகள் நீங்கும்!
எப்பொழும் உன்னையன்றி என்றன் கண்கள்
....ஏறெடுத்துப் பார்த்ததில்லை எதையும் இங்கே!
தப்பான பாடலுக்கோர் பரிசு தந்தால்
.....தமிழ்மீதே ஆணையதை வாங்க மாட்டேன்!

நக்கீரன் பரம்பரையில் உதித்த என்றன்
......நரம்பறுந்து போனாலும் உறங்க மாட்டேன்!
திக்குமுக்காய் ஆடவைக்கும் கேள்விக் கெல்லாம்
......திமிராகப் பதிலளிக்கும் திறனைத் தந்து
பக்கத்தில் நீயிருந்து காக்கும் போது
......பைந்தமிழே எனக்கிங்குப் பயமும் ஏது?
முக்காடு போடவைப்பேன் மீண்டும் அந்த
.....மூடர்கள்  முத்தமிழைப் பழிக்க வந்தால்!

கத்திக்கு என்னிடத்தில்  வேலை இல்லை
....கண்ணீரைத் துடைகின்ற செயலே போதும்!
புத்திக்கு வேலைதந்து மூர்க்கத் தோடு
....புல்லுருவிக் கூட்டத்தைப் பூண்டோ டொழிப்பேன்!
எத்திக்கும் இன்தமிழைப்  பரப்பிச் செல்லும்
....என்பேச்சை  நானும்தான் கேட்க மாட்டேன்!
முத்தமிழே   உயிரென்று இடித்துச் சொல்லி
......முன்னேறத் தடைவந்தால் மூச்சை யாவேன்!

என்நாட்டை இழந்தவழி  எண்ணிப் பார்த்தால்
......எதிரிமுகத்தில் எழுதுகோலும் துப்பித் தீர்க்கும்!
பொன்னான நேரத்தைச் செலவு செய்து
.....போகின்றோம் எதற்காக? உணர்வை மீட்க!
இன்றெம்மின் வாழ்வுற்ற அடையா ளத்தை
.....இழப்பதற்கா இத்தனைநாள் பாடு பட்டோம்!
கன்றுக்குப்   பசுமீது உள்ள காதல்
......கழுத்தறுத்துப் போட்டாலும் கண்ணுள் வாழும்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.