ஏங்கும் மனத்தினது ஏக்கத்தைச் சொல்லவா ?!
நீங்கும் எனதுயிர் நீயின்றி!- தூங்காதே
கண்ணா கணப்பொழுதும் கண்ணீரில் வாடுகின்றேன்!
உண்ணா துருகும் உயிர் !
கண்ணுக்குக் கண்ணான கண்ணன் மனத்தழகைப்
பெண்ணுக்குள் வைத்தேன் பெருமையுற!- பண்ணுக்குள்
இட்ட இனிய தமிழ்ச்சொற்கள் எந்நாளும்
கொட்டும் பனியைக் குவித்து !
கண்ணா விரைந்தென்றன் கண்ணீரைப் பொய்யாக்கு !
உண்ணாமல் ஊன்வாடிப் புண்ணாகும் !- எண்ணம்
இழைத்திட வாழ்வை இடர்காவிச் செல்லும்
அழைத்த குரல்கேட்டு அசை!
கூரான ஆசைகளைக் கொட்டிக் கொடுப்பவனே !
தீராத வேதனையைத் தீர்ப்பவனே !-வேராக
நானிருப்பேன் உன்னோடு நாளுமிங்கே! நம்வாழ்வில்
தேனினிக்க வேண்டும் திரண்டு !
விண்ணோக்கிச் சென்றாலும் விட்டகலேன் என்னவனே !
பெண்ணோக்கும் பேரழகா !பேரின்பக் -கண்ணாளா !
எண்ணங்கள் ஏற்கும் இளமையும் நீயாவாய்!
வண்ணங்கள் குன்றாமல் வா !