12/26/2013

வானகமும் வையகமும் செழித்திடவே


வானகமும் வையகமும் செழித்திடவே
வாழ்வினிலே இன்ப நிலை கொழித்திடவே 
கானகத்தில் தொழுவமதில் இஜேசு பிறந்தான்
காற்றினிலும் ஒளிக்கீற்றினிலும் தவழ்ந்து திரிந்தான் !

பாசமலர்க் கிளைகளெல்லாம் பரந்து விரிய
பாவப் பட்ட உயிர்களெல்லாம் மகிழ்ந்து சிரிக்க
காசினியில் தேவ தூதன் கண்ணைத் திறந்தான்
காதல் மலர்கள் மலர்ந்திடவே  மண்ணைக் கவர்ந்தான் ...

இனிப் பேசும் வர்த்தை அத்தனையும் இஜேசு நாமமே எங்கள்
இல்லமெங்கும் ஒளிரும் தீபம் உண்மை பேசுமே ...........
ஆசையோடு அவனுருவைக் கண்டு மகிழ்ந்தவர்
ஆனந்தமாய் ஆடிப் பாடிக் கொண்டாடித் திரிந்தனர் ..

ஆடு மாடு சுற்றி வந்து அன்பைப் பொழியவும்
ஆயர் பாடிக் கண்ணனைப்போல் அகத்தில் நிறைந்தவன்
வேறுபாடு களைந்து உயர் பக்தி பொங்கிட
வேதனைகள் தீர்க்கும் சிவன் போல தோன்றினான் !!

மாயவலை கிழித்துலகில் மனிதம் வென்றிட
மாசு மறையற்ற ஜோதி உன்னைத் தொழுகிறோம்
நேசக் கரம் நீட்டி எங்கள் குறைகள் தீர்த்திடு
நேர்வழியைக் காட்டி மன நிறைவைக் கூட்டிடு ....



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/22/2013

மரணமும் தோற்றதே இவர்களிடத்தில் !




ஆடை நெய்யும் நெசவாளி
அங்கமெல்லாம் புண்ணாகிப் 
பாடையிலே போகும் போது 
பருத்தி மட்டும் சிரித்ததடா!

மானம் காக்கப் பிறந்தவனை 
மரம் போல் எண்ணி வாழ்ந்தவர்கள் 
வாடும் போது மனம் வாடாமல் 
வாட்டும் போது அழுதார் ஏன்!

கூடு விட்டுப் பறந்த பின்னால் 
கொந்தளிக்கும் மன நலத்தைக் 
காடுவரைச் சுமப்பவரா  
கருணையுள்ள மனிதரிங்கே!

வாழும் போது வாழ்த்துவதும் 
வறுமை நிலையைப் போக்குவதும்
தேடற்கரிய சுகம் என்று 
தெரிந்தால் மட்டுமே வாழ்வுண்டு!

இயேசு நாதர் போல் புத்தர் 
எங்கும் நிறைந்த காந்தி மகான் 
பாசம் மிகுந்த மனிதர்கள்  
பாதை எதுவோ அதைப் பாரீர்!

வாசம் நிறைந்த மல்லிகையாய் 
மலர்ந்தார் மக்களை வாழ வைத்தார்! 
தேசம் விட்டுப் போன பின்பும் நாம் 
தேடிக் கொண்டாடிடும் தெய்வங்கள்!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/20/2013

விலங்கினமாகிரான் மனிதன்



விலங்கினமாகிரான் மனிதன்
விம்மியே அழுகிறான் புனிதன்
பணம் தரும் துன்பம் இது போதும்
பராசக்தி உன்னருளே வேண்டும் ...

விலையுயர் வாழ்விதன் எல்லை
வித வித மான பெரும் தொல்லை
இருண்டிடும் உலகினில் தாயே
இன்னருள் புரிந்திடுவாயே .....

கொடி மலர்க் கம்பங்கள்  சிரிக்கக்
கொஞ்சிடும் சலங்கைகள் ஒலிக்க
இனியன பேசிட வரமருள் வாய்
இகபர சுகமெல்லாம் அருள்பவளே ...

செந்தாமரை மலரில் வீற்றிருக்கும்
செந்தூரப் பொட்டே புன் சிரிப்பே
எண்ணாமலே துயர் வந்து போக்கிடுவாய்
எம் சக்தி பரா சக்தித் தாயே அம்மா ....

கண்ணொன்று காட்சியது வேறாகுமா
கருணைக்குப் பெயர் பெற்ற தாயே அம்மா
பொன் விளையும் பூமியிதன் நலனைக் காக்கும்
பொக்கிசமாய் நீயமர்ந்தால்  போதுமம்மா ........

                                                                           



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/18/2013

ஆடும் மயிலே அகவும் மயிலே


ஆடும் மயிலே
அகவும் மயிலே
பாடும் குயில் நான்
அழைக்கின்றேன் .....

உன் தோகை விரித்தொரு
ஆட்டமாடிடத்
தோன்றும் அழகில்
நான் வியக்கின்றேன் ...

                             (ஆடும் மயிலே )
காடும் அழகுறும்
கவியும் அழகுறும்
சுகம் தேடும் விழிகளில்
மயிலிங்கே .......

வாடும் மனத்தின்
வாட்டம் தீர்த்திடும்
வண்ணத் தோகையின்
எழில் இங்கே ......!!
             
                                 (ஆடும் மயிலே )
குமரன் என்ற
அழகன் அமரக்
குறைகள் போக்கும்
மயிலே வா ............

மழையும் பொழியும்
கலையும் வளரும்
தமிழன் வணங்கும்
மயிலே வா .........

                                   (ஆடும் மயிலே )


                                 http://gmbat1649.blogspot.ch/2013/12/blog-post_17.html 

வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே !

இன்றைய பகிர்வானது "கவிதை எழுதலாமே"என்ற தலைப்பின் கீழ்
எங்கள் பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்கும் உரிய பாலசுப்பிரமணியம்
ஐயா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி எழுதப்பட்டுள்ளது .
தாங்களும் இந்த அழைப்பினைப் பின் தொடர்ந்து கவிதைகள் எழுதலாம்
தங்கள் கருத்தினையும் பகிர்ந்துகொள்ளலாம் .மிக்க நன்றி உறவுகளே .
ஐயா அவர்களின் இந்த முயற்சிக்கும் அழைப்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் ..........

                                                         
                                                                 வாழ்க தமிழ் ...
                                                     


                    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/16/2013

காரிருள் கண்களை மறைத்தாலும்





காரிருள் கண்களை மறைத்தாலும் நான்
கைதொழும் தெய்வம் நீ என் தாயி ....
பேரருள் பெற்றிட வரமருள்வாய்
பெருமையோ சிறுமையோ கொள்ளாமல்

நாரொடு மலர்போல் இணைந்தவளே
நறுமணம் வீசிடும் என் தாயி .....
வேரொடு பகைக்கும் நிலை வரினும்
வரம் வேண்டியே தொழுவேன் உனை நானே ....

மாறிடும் வையகம் ஒரு நாளில்
மலர் விழி திறந்திங்கு  நீ பார்த்தால்
தேறிடும் உயிர் வளம் உகமெலாம்
தேவியுன் புன்னகைப் பூ பூத்தால் ...

மேவிடும் துயர்களைக் களைபவளே
வெண் மேகமாய் ஊர் வலம் வருபவளே
என்  ஆவியே பொருளே அங்கமே நீ
ஆனந்தக் கூத்துகந் தாடிடுவாய் ........

                                                              அம்பாளடியாள்   





    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/14/2013

இதய வீணையை இதமாக மீட்டுகிறான் இஜேசு பிரான் !




நிலவு தேய்ந்து வளர்வது போல் சில
நினைவும் தேய்ந்து வளருதே!
இறைவன் இல்லை என்றவர் முன்
இரண்டு விழியும் நனையுதே!

உனதருமை பெருமையெல்லாம்
உணர்த்தும் நல்ல நேரமே!
உலக  மக்கள் நன்மைக்காக
உயிர் துறந்த தேவனே!

எளிமையான தோற்றத்தோடு
எங்கும் உலாவும் சக்தி நீ!
இருள் கடத்தி ஒளி பரப்பும்
இன்பமான சோதி நீ!

சிலுவையிலே தொங்கும் காட்சி
சிந்தை அதை வாட்டுதே!  நீ
மறுபடியும் பிறந்த செய்தி
மனதில் இதம் ஊட்டுதே!

இரக்கமுள்ள இஜேசுவின்
இன்முகத்தைக் காணவே
பரந்து விரிந்த சமூகத்தில்
பல சமையமும் நிக்குதே!

மன வினைகள் போக்கும் தேவன்
மலர்ப் பதத்தைத் தொட்டதும்
இருந்த துன்பம் பறந்து மீண்டும்
இளமை நெஞ்சில் பொங்குதே ....


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/12/2013

ரஜனிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

                                                               
                                                                         


சூப்பர் ஸ்ரார் ரஜனிக்காந்த்  அவகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! திறமைகளைக் கண்டு பாராட்டுவதிலும் வாழ்த்துவதிலும் ஒரு தனி சுகம் இருக்கின்றது .என்னைப் பொறுத்தவரையில் ரஜினி ஒரு சிறந்த நடிகன் அவரது நடிபினில் வெளிவந்த படங்கள் பழைய புதிய படங்கள் எதுவாகினும் மிகவும் ரசித்து ரசித்துப் பார்க்கும் ரசிகை நான் .அவரது நடை உடை பாவனைகள் என்றுமே தனித்துவமானது .அவர்  நடித்து வெளிவந்த படங்களில் உள்ள பாடல்கள் அனைத்தும்  மனதில் நீங்காத இடத்தில் நிலைகொண்டிருக்கும் .சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்க்கும் இவரது நடிப்பிற்குப் பின்னால் நான் அதிகம் ரசிப்பது இவரது கடுமையான உழைப்பைத் தான் .காலத்தை நேரத்தை மதிப்பவர்களால் மட்டுமே சிகரத்தை எட்ட முடியும் .பண்பு நிறைந்த இந்த நடிகரின் பேச்சும் நடிப்பும் இறைவன் அவருக்குக் கொடுத்த வரம் என்றே சொல்லலாம் !.....

                                                                 

தென்றலைப் போலொரு பார்வையாலே
தென்மாங்கு பாடிடச் செய்பவனே உயர் 
வண்டினம் ரெண்டது கண்ணுக்குள்ளே 
வற்றாத நடிப்பு உன் நடிப்பே !!............. 

அன்றல்ல இன்றல்ல நேற்றுவரை 
அகத்தினில் குடிகொண்ட நாயகனை
என்றுமே காத்திட வேண்டுமிங்கே 
எம் சக்தி பராசக்தி  துணையாய் நின்று ...

கன்று போல் மனத்தில் இளமை பொங்க 
கற்றவர் மற்றவர் வாழ்த்துரைக்க 
வென்றிடு சுகத்தை எந்நாளுமே 
வெம் சினம் தவிர்த்த நாயகனே ....

நன்றது நாட்டிற்கும் சேவை செய்து 
நற் பெரும் பேறுகள் பெற்று விடு 
உன் குடி தழைக்கும் அது போதுமே 
உயரிய பண்புள்ள நாயகனே ...........

மண்ணது போற்ற மலையெனவே 
மருவிடும் துயர்கள் சிதைந்திடுமே
இன்னலைத் துடைத்து மென்மேலும் 
இதயத்தில் குடிகொள்வாய் இனியவனே ..

பன்னெடுங் காலம் மண்மீது 
படம் பல நடித்து நீ வாழியவே ..........
வெண் திரை ஏற்ற உயர் நட்சத்திரம் உன்னிடம் 
வெற்றிக் கனிகள் வந்து கொட்டட்டுமே ....








தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/11/2013

மகா கவி பாரதி நீ வாழிய வாழிய வாழியவே ...


அடிமை விலங்குகள் தெறிக்கட்டும்
அகதி வாழ்விது  முடியட்டும்
கொடிய விலங்குகள் திருந்தட்டும்
கொட்டு முரசு நீ கொட்டு பாரதியே .....

விடிய விடிய சுதந்திரத்தை
விழித்திருந்து பெற்றவனே
மடியும் யுகத்தைப் பார்த்தாயா ?...!!
மறுபடியும் நீ வர வேண்டும் ...

நெடிய பார்வைக் கணை வீசி
நெருப்பை வெல்லும் பாவலனே
பொதிகை மலையில் அமர்ந்தவனைப் போல்
பொங்கி எழுந்து நீ வர வேண்டும் ........

அசுர குலத்தின் அழிவுக்கோர்
அடிக்கல் நாட்டித் தர வேண்டும்
இடியும் மின்னல் மழையோடும்
இருண்ட கண்டம் விடியட்டும் ...

துணிச்சல் மிகுந்த பாவலனே
தும்பைப் பூ நிற மனத்தவனே
இனிக்கும் ஒரு நாள் இந்நாளாம்
இனியவன் நீ பிறந்த பொன்னாளாம் ....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/08/2013

பத்தரை மாதத்துத் தங்கமே உன்னை நான்




பத்தரை மாதத்துத் தங்கமே உன்னை நான்
பத்திரமாக வைத்தேனே ........
சித்திரை வந்ததும் நித்திரை ஏனடி
சிந்தையில் வந்தொரு பாட்டுப் படி ...

                                                             (  பத்தரை மாதத்துத்)

குற்றமாம் தமிழைக் கொன்றிடும் உலகில்
குற்றுயிரோடு நாம் கிடந்தால் எம்மைப்
பெற்றவள் தவிப்பாள் பெருந் துயர் கொள்வாள்
பெற்றெடுத்த தாய்மொழிக்கு ஈடேது ?......

கட்டிய சேலையும் வேட்டியும் மாறினும்
கண்ணியம் வேண்டும் எங்களுக்கு அதை
அந்நிய மொழியில் கண்டதும் உண்டோ சொல்
அருந் தவப் புதல்வர்கள் சொன்னது போல் ?..

                                                               (  பத்தரை மாதத்துத்)

கற்றவர் விரும்பும் கனி எங்கள் மொழியைக்
கற்றிட கற்றிட இன்பம் பொங்கும்
மற்றவர் போகும் பாதைகள் எதற்கு
மற்றுமோர் துயரைப் பெற்றிடவா ?....

பெற்றது போதும் பெருந்  துயர் வாட்டும்
பெண்மையைப் போற்றும் எம் நாட்டினிலே
அன்னியர் ஆட்சியும் அது தந்த வீழ்ச்சியும்
அழியவில்லையே  மன ஏட்டினிலே .....

                                                                  (  பத்தரை மாதத்துத்)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/04/2013

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா நம்புங்க .....


அழகென்ன அழகென்று
அகம் வியந்து நிற்கிறது!
இயற்கை அதன் அழகு கண்டே
இதயம் பறி போகிறது!

மனப் பாறை குளிர்ந்திடத்தான்
மழையும் இங்கே பொழிகிறது!
மனிதன் இனப்போரை நடத்துவதால்
மனதில்  இன்பம் குறைகிறது!

அகத் தூய்மை இல்லாதார்
அறிவாரோ இத் துயரை!
அன்று தொட்டு இன்று வரை
அதே கேள்வி எழுகிறது!

குண்டு மழை பொழிந்துலகைக்
குப்பை மேடாய் ஆக்கி வைக்கும்
பண்பிழந்த மனிதர்கட்கு நல்ல
படிப்பினையை யார் தருவார்!


எங்கும் உயிர்கள் போகிறது!
எதிலும் குறைகள்  நேர்கிறது!
அரசியலில் இதுவெல்லாம்
அவசியமாய்ப் படுகிறது!

அந்த நாடு இந்த நாடு
எந்த நாடு என்ற போதினிலும்
சொந்த நாட்டைக் காப்பதற்கே
சூழ்ச்சி செய்வார் உலகினிலே!

ஒட்டுமொத்த நாட்டினிலும்
இன ஒழிப்பை எதிர்த்து வந்தால்
கட்டித் தங்கம் இவர்களைத்தான்
கடவுள் என்றும் நாமுரைப்போம்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/01/2013

மானே தேனே மயிலே என்று மறு படி அழைக்கேனே...


மானே தேனே மயிலே என்று
மறு படி அழைக்கேனே உன்னைக்
காணும் பொழுதில் கண்களில் கூட
அந்த நினைவதை நிறுத்தேனே!

போடி போடி பெண்ணே உன்
பாசம் எல்லாம் பொய்யே!
தீயில் வாடுது மனமே உன் விழி
தீண்டியதனால் வந்த ரணமே!

                                              ( மானே தேனே...)

நேசம் வைத்தது யாரோ!- என்
நெஞ்சைச் சுட்டது யாரோ!
மானம் போனது எதனாலே உன்
மதியை மயக்கிடும்  கண் அதனாலே ..

நான் ராமன் அல்ல ராவணன் என்று
சில ராட்சியம் சொல்கிறது -அதை
ராவும் பகலும் நினைக்கிற பொழுதில்
மனம் பூச்சியம் ஆகிறது!

                                                 
உறவோ பிரிவோ
உனை நான் வாழ்த்திட
ஒரு போதும் மறவேனே...
மனம் சருகாய்ப் போகும்
போன பின்னாலும்
தந்த சத்தியம் தவறேனே!

குயிலின் பாசை புரிகிறதா?- மனக்
குமுறல் எதுவெனத்  தெரிகிறதா?
உறவைக் காக்க மறந்தாலும் நல்
உணர்வைக் காத்துத் தந்து விடு .............

                                                            ( மானே தேனே....)  

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.