6/25/2014

சுவாசிக்கும் நேரத்திலும் இதைத் தான் மனம் யாசிக்கிறதுகாத்திருப்பின் அவசியங்கள்
கலைந்து போனது!
கால தேவன் கைகளிலே மனம்
உறைந்து போனது!

நேற்றுவரை உன் நினைப்பு
நெஞ்சில் இருந்தது!
இன்று முதல் என் நினைப்பும்
மறந்து போனது!

ஊற்றெடுத்த ஞானமிதால்
உயிர் பிழைத்தது!
உண்மை எது பொய் எதுவென
உணர்ந்து கொண்டது!

வாட்டும் துயர்
வழி தவறி எங்கோ போனது!
வந்த சொந்தம் பொய் அதனால்
வருத்தம் தணிந்தது!

கவிதை ஒன்றே
காதலுக்குப் பொருத்தம் என்றது!
கண்ணீர் சிந்தும் நிலை மறந்து
கனவு பெருத்தது!

நிலவு கூட எனக்கு இதனால்
சொந்தமானது!
நித்தம் மகிழ்வு வந்து வந்து
சித்தம் குளிர்ந்தது!

கவலை ஏது! கண்ணீர் ஏது!
கவிதை இருக்க
காலம் போகும் போகும்
இன்ப ஜாலம் துரத்த!.
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/23/2014

வன்னி மண்ணைத் தொட்டுத் தொட்டு...

 

வன்னி மண்ணைத் தொட்டுத் தொட்டு
வந்து போகுதே எண்ணம்
கன்னி மயில் ஆட்டம் ஆடி
கண்கள் ரெண்டிலும்!

உன்னிடத்தில் மோகம்
உள்ள அந்தத் தாகம்
சொல்லில் அடங்காது
சொன்னால்  புரியாது!

பூங்குருவிக் கூட்டம்
பாடும் அந்தப் பாட்டும்
தேனெடுக்கும் வண்டு
தேடி வரும் தோட்டம்!

ஆலமரம் புளியமரம்
அழகழகாய்ப் பூக்கும் மரம்
வேலவனின் ஆலயமும்
வேண்டி நிற்கும் பக்தர்களும்

கால பயம் வந்ததனால்
கண்ணை விட்டு மறைந்திடுமோ?
ஊரழகைத்  தேரழகை
உயிர் தரித்த மண்ணழகை

சொன்னால் புரியாது
சொல்லில் அடங்காது
இன்னலிது கேளு
எந்தன் உயிர்த் தீவே!

உன் மடியே சொக்கமடி
உணர்ந்தவர்க்குத் இன்பமடி
அள்ளி அணைக்காயோ?
அன்பை உதிர்க்காயோ?

என்றன்  உயிர்த் தீவே!
என்று அணைப்பாயோ!

                              ( வன்னி மண்ணைத் )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/13/2014

பாவச் செயலை இளைத்தவர் தமக்கொரு பரிசும் இது தானே


சத்தியத்தைப் புறக்கணிக்கும் மானிட வாழ்வு
சாக்கடையில் தான் மிதக்கும் மூடரே  கேளீர்!
வித்தைகளை யாம் படித்து வெற்றி கொள்ளலாம்
வென்ற வெற்றி தோல்விதனைத் தழுவிச் செல்லலாம் !

மட்டமான நினைப்புளால்  மரணம் கிட்டலாம்!
மாறு வேடம் போட்ட உண்மை மனத்தைக் கொல்லலாம்!
திட்டமிடும் சதிச் செயலால் சக்தி இழக்கலாம் உயர்
தீமைகளே வாழ்நாளை அலங்கரிக்கலாம்!

உத்தமரை வதைத்தவர்க்கு வாழ்வு சிறக்குமா!
ஒரு பொழுது எனினும் இங்கே அமைதி நிலைக்குமா!
கொத்த வரும் பாம்பிற்கும்  தீங்கு நினையாதார்
கொள்கைகளை உடைத்தெறிந்த சாபம் பொறுக்குமோ!

பத்துமாதம் சுமந்து அன்னை பெத்தெடுக்கிறாள்
பகலிரவாய்க் காத்தும்  எம்மை வளர்த்து விடுகிறாள்
எத்தனையோ கனவு சுமந்து ஏங்கித் தவிக்கிறாள்
எதிரிகளின் கண் படாமல் மறைத்தும் வைக்கிறாள்

பெத்தவளின் மனம் துடிக்கக் காவு கொள்வீரோ!
போதையினால் அறிவிழந்த மூடர் தாம் இங்கே
வெற்றியென நினைத்ததெல்லாம் வெற்றியுமல்ல
வேண்டி நிற்கும் ஆசைகளும் அழியுமே மெல்ல!

இன்றுணர மறுக்க வைக்கும் இளமையும் சாகும்!
அன்று துயர் கொன்று தமை ஆட்டியும் படைக்கும்!
என்றொருவர் அழிவை எண்ணிக்  குழி பறித்தீரோ
அன்று முதல் காத்திருப்பீர்  அக் குழி வரவேற்கும்!


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/11/2014

செல்வம் இருக்கும் இடத்தில் சிறந்த பண்பும் வேண்டும்நீர்க்குமிழி போல மனம் உடைந்து போகுதே!
நெஞ்சுரத்தை இழந்து தினம் தஞ்சம் கோருதே!
போர்க்கொடியை உயர்த்துவதால் வந்த தொல்லையே
பொறுமை என்ற வாசகத்தை எவரும் அறியவில்லையே !

மனம் முழுக்க வக்கிரத்தைப் புதைத்து வைத்தாரே!
மாறு வேடம் போட்டு நாளும் சேட்டை செய்தாரே!
குணம் அறிந்தும் ஒதுங்கிடத்தான் வழியுமில்லையே!
கொள்கையிலும் இழிவான கொள்கையுடையோரே!

ஏழை என்று இளக்காரம் கொள்ளவும் வேண்டாம்!
எளியோரைப் பழி வாங்கித் திரியவும் வேண்டாம்!
நாளை இந்த உலகினிலே எதுவும் நடக்கலாம்
நலிந்தோரின் வாழ்வு சிறக்கப் புதையல் கிடைக்கலாம்!

அற்பருக்கு வந்த வாழ்வு அகத்தைக் கிழிக்கலாம்!
அடுத்தவரின் சாபம் வந்து முகத்தை மறைக்கலாம்!
சொற்ப காலம் வாழும் வாழ்வில் சொந்தம் எதுவடா
சோதனையும் வேதனையும் கொடுக்கும் மானிடா!

நட்பு ஒன்றே உலகினிலே உயர்ந்த செல்வமாம் அதை
நாடி நின்றோர் கோடி நன்மை பெற்று வாழ்கவே!
உட்புறத்தைத் தூய்மையாக்கி உலகம் உய்யவே
உண்மை பேசி நன்மை யாவும் பெற்று வாழ்கவே!

(படம் :கூகிளில் பெற்றுக்கொண்டது .நன்றி !)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/09/2014

சொந்த பந்தம் அத்தனையும் உன்னை நம்புதேசொந்த பந்தம் அத்தனையும் உன்னை நம்புதே!
சொக்குப் பொடி போடும் இந்தக் கண்ணை நம்புதே!
என்றன்  உயிர் என்னிடத்தில் சண்டையிடுதே!
எங்கு சென்ற போதினிலும் முந்திக்கொள்ழுதே!

கண்ணழகைக் காட்டிக் காட்டி
காதல் வலை விரித்தாயே!
பெண்ணழகைப் பார்த்துப் பார்த்து
போதையிலே சிரித்தேனே!

காதல் இன்று என்ன ஆச்சு? -வெறும்
கானல் நீராய்ப் போயே போச்சு!
ஆசை அது என்ன ஆச்சு?
அத்தனையும் பொய்யாய் போச்சு!

ஊரை விட்டுப் போனாலும்
உன் நினைப்புப் போகலியே
பாறையில நீர் கசிய
பக்குவத்தை விதைத்தவளே!

ஆலமரமாய் இருந்தேனே
அன்பால் துரும்பானேனே!
யார் அழுதால் உனக்கு என்ன?
அழுதவரை மறந்து விடு!

குற்றமது பார்த்துப் பார்த்து என்னைக்
குப்பையிலே போட்டவளே
சத்தியமாய் உன் நினைப்பில்
சாகும் வரை  நானிருப்பேன் ....

                                                    (   சொந்த பந்தம்... )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/07/2014

உடல் அசையும் ஓசை இங்கேஉடல் அசையும் ஓசை இங்கே
உணர்வுகளின் பாசை எங்கே!
மலர்களிலும் நீ தான் அழகடி என்
மனம் கவர்ந்து செல்லும் பைங்கிளி..

கடலலையில் மோகம் கொண்டேன்  இங்கு
கரையென நான் நாளும் நின்றேன்
தொட விரும்பித் தொட்டுச் செல்லும் உனை நான்
தொந்தரவு செய்யேன் இனியும்

வர விரும்பி வருவாயோ புது
வசந்த காலம் தருவாயோ?
திருமண நாள் காத்திருக்குது இந்தத்
திங்களைத் தான் எதிர் பார்த்திருக்குது ...

பெண்

சொக்க வைக்கும் சுந்தரனே
சொன்ன சேய்தி அறிவேனே ...
அக்கம் பக்கம் பார்த்து இனியும்
அன்பை அள்ளித் தருவேனே ....

முத்து உடல் தொட்டணைக்க புது
மோகம் வந்ததா?
இந்தச் சித்திரத்தைக் கவர்ந்து செல்லத்
தாகம் வந்ததா ?

காத்திருக்கேன் காத்திருக்கேன் என்
கனவும்  நீ தானே ...
எதிர் பார்த்திருப்பேன் பார்த்திருப்பேன்
ஏக்கம் ஏன்  செந்தேனே?

ஆண்

பூவு ஒன்று பேசியதே !...
புன்னகையை வீசியதே ....
தேன் அழைக்குது தேன் அழைக்குது அன்பே வா
தென்றலென முன்றலென முன்பே வா .....

கண் சிமிட்டும் நேரமெல்லாம் இனிக்
காதல் அரங்கேறும்!
கைவளையல் ஓசையோடு
மோதல் அரங்கேறும்!

பெண்

போதும் போதும் போதும் மச்சானே
பெண்ணிவளை வெக்கம் கவ்வ வைக்காதே!
உச்ச நாணம் உயிரைக் கொல்லுதே!
உன் பெயரை உரக்கச் சொல்லுதே!

ஆண்

அச்சம் ஏனடி?
அமைதி கொள்ளடி
மொட்டு விட்ட மலரே நீ புது
மோகம்   கொள்ளடி

பத்து விரல் தொட்டணைத்துப்
பாடம் சொல்லவா?
பாவை உன்றன்  விழி கசிய
பார்வை சிந்தவா?

பெண்
பரிகாசமா?
இது நியாயமா?
என் தேகம் தொடலாமா?

ஆண்

சந்தேகம் வரலாமா?

                             (  உடல் அசையும் ) 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/05/2014

வண்ண வண்ணக் கனவுகளால் என் எண்ணம் நீளுதே


வண்ண வண்ணக் கனவுகளால்
என் எண்ணம் நீளுதே!- அதில்
வந்து வந்து உன் நினைவு என்னை வாட்டுதே!
அன்னமென நடை நடந்து போகும் பைங்கிளி
ஆசை ஆசை என்றும் உன்மேல் தானடி

மொட்டு விட்ட மலரே நீ
மோக வலை வீசாதே
கட்டி வைத்த கரும்பே என்னைக்
கட்டெறும்பு ஆக்காதே !

புத்தனுக்கும் ஆசை வரும்
போதி மரம் தூசாய் மாறும்
கட்டழகு ரதியே எனைக்
கட்டிக் கொள்ள வா தனியே

முத்த மழை பொழியத்தான் காத்திருக்கிறேன்
மூன்று கால வேளையிலும் எதிர் பார்த்திருக்கிறேன்
உத்தரவு தந்தாலே போதுமடி பெண்ணே
மன ஊஞ்சலிலே உன்னை வைத்து
ஆடுமடி கண்ணே!

(பெண் )

ஆசை ஆசை ஆசை ஆசையைப் பாரு
ஆதரவாய் சாயும் முன்பே மீசையைப் பாரு
காதல் வலை வீசியது நானா நீயா?
களத்து மேட்டில் சண்டை வேண்டாம் போ போ மாமா ...

தாலி வரம் ஒண்ணு தந்தா போதாதா?
தங்கமென கொஞ்சும் நிலை மாறாதா?
ஆடவனின் ஆசையெல்லாம் எத்தனை காலம்?
அந்தி சாயும் நேரமாச்சு போ போ மாமா...

(ஆண் )

மன இருப்பைச் சொல்லி விட்டேன்
மானே மானே
நான் மறுபடியும்  வருவேனே
தேனே தேனே ....

தவமிருந்து உன் நினைப்பை
நான் மாற்றுவேன்
தங்கமென வெள்ளியெனத்தான் கொஞ்சுவேன்
அறுவடைக்கு நேரமாச்சு
போ போ பெண்ணே
ஆசை தீர உனை அணைக்க
வருவேன் கண்ணே ...

என்னாசை என்னோடு தீராதடி
எவர் வந்து தடுத்தாலும் மாறாதடி
உன்னோடு நான் சேரும் காலம் வரும்
ஓடோடிப் போ போ போ என் பைங்கிளி .....

                                            ( வண்ண வண்ணக் கனவுகளால்..)                                                                           
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/01/2014

ஆணவம் மிகுதலும் அழிவுக்கோர் அடையாளம் தான்

முட்டி மோதி அலை கிழித்து
மூர்க்கமாய்ப்  பறக்கும்  பறவை எமை
எட்டிப் பிடித்து வெற்றி கொள்ளவே
ஏங்கித் தவிப்பீரோ குள்ள நரிகளே !!

நரிகளின்  வேஷம் நிலைக்காது
நாளும் நினைப்பது நடக்காது இவை
புரியும் காலம் வரும் போது
பூப்போல் எம் மனமும் இருக்காது !

அழிவைத் தேடி அநீதியை மூட்டு
ஆணவத் தேரினை எந்நாளுமே ஒட்டு
ஒழியும் காலம் வரும் போது
உணரத் துடிப்பீர் மூடர்களே !

ஏழைக் குடிசையை எரிப்பவர் தமக்கு
என்றோ ஒரு  நாள் அழிவு பிறக்கும்
நாளை என்பதே நிட்சயமற்ற
நரகலோக வாழ்வுதனிலே

உண்மை பேசி உயர்வு பெற்றவர்
உலகம் போற்ற வாழ்ந்திடுவர்
வெண்மையான மனத்தை வதைத்தவர்
விரயமாகி  போய் விடுவர்!!

நல்லோர் விடும் சாபம் ஒன்றையே
எந்நாளும் வாங்கும் அரக்கர்களே
பொல்லா வினையால் புழுவாய்த் துடிப்பீர்
பொறுமை இழந்து ஆடாதீர்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.