1/11/2012

நீங்காத நினைவுகளோடு நானும்!...

கடல் கடந்து ஒரு பயணம் என் 
வலைத்தளம் என்னும் இந்தக்
கனவுலகை விட்டும் என்றும் 
கவி பாடும் இந்தக் குயிலுக்கும் 


உடன் பிறவாத உறவுகள்போல்
தினம்தோறும் உறவாடி என் 
வளர்ச்சிக்கு வித்திட்ட உங்களையும் 
அன்பு வாசகர்களையும் விட்டு 

சில மாதங்கள் பிரிய மனம் இன்றி 
ஓர் பிரியாவிடை உங்களில் 
ஒருத்தியான நான் இதோ அந்த
பிரியும் வேளை வந்துவிட்டது!.....


எங்கு சென்றாலும் மறவாது 
இதயத்தில் ஒரு புது ஊற்றாக 
ஓடோடி வந்தழைத்து என்னைக் 
கவி பாட வைத்த உங்கள் அன்பு  


நான் இல்லாது போனாலும் 
மீண்டும் திரும்பி இங்கு வந்தாலும் 
இந்நாளில் தொடர்வதுபோல் 
எந்நாளும் தொடர வேண்டியபடி 


சென்று வருகின்றேன் உறவுகளே 
நான் சென்று வருகின்றேன் தமிழ் 
இன்பக் காற்றாக உயிர் மூச்சாக 
என்றும் எங்கும் செழிப்புற வாழ்த்தியபடி!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/09/2012

இதுதான் வாழ்க்கை!........

காலப் பெரு வெளியில் 
கலைந்து போன தன் கனவைத் 
தேடி அலைந்த சிறு பறவை 
தீட்டிய புதிய கவிதை !...........


நாளை எது நடக்கும் ......
நாளும் கோளும் என்ன செய்யும் 
வாழும் போதே அறியாத இந்த 
வாழ்க்கை என்பது போர்க்களமே!....


ஏழை மனதில் மிகு ஆசைகளை 
ஏற்றுக் கொண்டால் துயர் பெருகும் 
பின் பாழாய்ப் போன உடல் தவிக்கும் 
பந்த பாசம் இழக்கும் நிலை வந்தால்...


காலம் சுருங்க வரம் கேட்கும் 
கண்ணில் கங்கை பொங்கி வழியும் 
தினம் காணும் உலகம் வெறிச்சோடி 
கானகம்போல காட்சி  தரும் .................


மானம் பெரிதென நினைக்கும் மனம் 
மனதில் அகப்போர் நிகழ்த்தி வரும் 
உடல் வீழும் போதே உண்மை வெளிக்கும் 
இந்த விதியை வென்றால் வாழ்க்கை இனிக்கும்!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/04/2012

எதுக்கு இந்தக் கொலைவெறி!.....

ஆடு போட்ட புழுக்கைகூட
அரு மருந்தெனக் கொள்ளும்போது 
ஆடு வெட்டிப் பொங்கல் வைக்கும் 
அவலம் இன்னும் தீரவில்லையே !....


இது ஆடு செய்த பாவமா !...........
அடுத்தவர் இட்ட சாபமா !........
நீதி கேட்டு உயிர்கள் எல்லாம் 
நெஞ்சை நிமிர்த்தி நின்றால் இங்கே 


பாவம் மனிதன் என்ன செய்வான் 
பழகிய தோஷம் விட்டுச் செல்ல 
ஊனைத் திண்டும் உடம்பை வளர்த்தான் 
உடனே புரியுமா பிற உயிர்படும் துன்பம்!...


நாடு தீக்கு இரையானாலும் 
நல்ல மக்கள் உயிர் போனாலும் சில 
கொள்ளையடிக்கும் கூட்டத்தினருக்கும் 
குறிக்கோள் என்பது ஒன்றுதான் இருக்கும்


இங்கு நேசக் கரத்தை நீட்டினாலும் 
நேர் வழியைக் காட்டினாலும் அவை 
தூசுக்கு இணை என்றேதானாகும் 
துரோகம் படிந்த இப் புவிதனிலே!....


காதல் செய்வீர் பிற உயிகளையும் 
கள்ளம் இல்லா நல் மனங்களையும் 
ஆதரித்துப் பார் இன்பம் பொங்கும் 
அதுதானே என்றும் வாழ்வில் தங்கும்...
  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/02/2012

சிந்தனைத் துளிகள்.


(1 ) பிறரைத் தூற்றி மகிழ்வுகாணாது உன்
      பிறவியைப் போற்றும் வகையறிந்து நடப்பாயானால் அதுவே  
      பிறருக்கும் உன் பிறவிக்கும் செய்யும் பெரும்பயனாகும்.

(2 ) உள்ளத்தின் உணர்வு ஒழுக்கம் குன்றியோர்
     ஓதும் அறிவுரை என்றும் கொடும் விஷத்திற்கு  சமனானது.

(3 ) குணங்கெட்ட மனிதன் கோடிரூபாய்  கொடுத்தாலும் அவை
      பிணத்துக்கு இட்டெடுத்த மாலைபோலானது.

(4 ) இறைவன் கொடுத்த வரமேயாயினும் மனிதன் தன்
       தகுதியை மறந்து நடப்பானாயின் வரும் துன்பமானது
       என்றும் மரணத்துக்குச் சமமானது.

(5 ) இடமறியாது பகிரும் துயரானது நிறைநீரில்
       கையிலிருந்த கயிற்றை நழுவவிட்டு 
       கருநாகத்தின் வாலைப் பிடித்த கதையாய் மாறும்.

(6 ) நல்லவர் ஆயினும்  ஊரார் பேச்சுக்குச் செவிசாய்த்து 
        தன்னைத்தானே  வருத்தும் குணமுடயவராயின்
        இவர்பால் வரும் நல்லன எல்லாம் கெடும்.

( 7 ) வருகின்ற துன்பம் எல்லாம் வரப்போகும் 
        பேரின்பத்துக்கு அறிகுறியென்று கருதும் நற்குணம் இருந்தால் 
        அதுவே வாழ்வின் வெற்றிக்குக் காரணமாக அமையும்.

(8 )  பிழைபொறுத்தருளும் நெஞ்சம் ஒன்றே புவியினில்
        நாம் பெறுதற்கரிய பெரும்பேறு ஆகும்.

(9 ) கொடுக்கும் நற் குணங்களைக் குறுக்கி தன்பால்
       எடுத்து வைக்கும் எப்பொருளும் தரும் சுகமானது
       பொருமிக் கிடக்கும் வயிற்றுக்குப்  பொரிசொறு  சேர்ப்பதுபோலாகும்.

(10 ) மனிதன் தன்நம்பிக்கையைத்  தரவல்ல மதங்கள் மீதும்  
         அதன் தத்துவங்கள் மீதும்  கொள்ளும் சந்தேகமானது 
         உடலைப் பிளந்து உயிரைப் பரிசீலிக்கும் செயலுக்கு இணையானது.



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.