3/31/2014

ஒரு நூறு கவிதை நூறு பாடல்



ஒரு நூறு கவிதை
நூறு பாடல்
தந்தெல்லாம் நீதானே?
எனை மாற்றியவளும்
ஏமாற்றி யவளும்
என்றும் இங்கே நீதானே?

இது முறையோ
சொல்லு தாயே?
உன்றன்  முடிவில்
என்றன்  வாழ்வோ?

                     (ஒரு நூறு கவிதை)

இரவில் வந்த
நிலவும் உன்றன்
இதயம் சொன்ன கதையும்
உதயம் ஆகும் பொழுதில் என்றன்
உயிரே வெந்து தணியும்!
எதை நான் மறப்பதோ?
உன்றன்  உறவைத் துறப்பதோ?

இதயம் தந்த
உறவே என்றன்
உணர்வை மறந்ததேன்!
பிரிவோம் என்று
அறியா நெஞ்சைப்
பிரிந்தே சென்றதேன்?

கனவில் நீயடி - என்றன்
நினைவில் நீயடி!
உறவே நீயடி! - என்றன்
உயிரே நீயடி!

சலனம் நெஞ்சில் சலனம்
என்னை மரணம் வெல்லுமோ?
இது வெறும் வார்த்தை அல்லடி
ஒரு வார்த்தை சொல்லு நீ?

உயிர் உருகும் போதும்
மௌனம் ஏனோ?
உண்மைக் காதலே........

                      (ஒரு நூறு கவிதை )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/30/2014

காற்றாய் என்னுள் வந்து போகிறாய்...


காற்றாய் என்னுள் வந்து போகிறாய்
காதல் கவிதைகள் தந்து போகிறாய்
நேற்றோடிந்த உறவு முடிந்ததா?
நெஞ்சே நெஞ்சைக் கேட்டுப் பாரடா!

கொட்டும் மழையில் நியிருக்கக்
குடைகள் வேண்டுமா நண்பனே?
ஒட்டுத் துணிக்கும் வழியத்து இருக்க
உயிரைக் கொடுக்க வந்த நண்பனே!

வறுமை போனது
வசதியும் வந்தது அதுவும் உன்னாலே
இன்று பொறுமை இழந்து -பொங்கி
எழுகிறேன் அதுவும் உன்னாலே

பழகித் திரிந்த காலம் உனக்கு
நினைவில் இல்லையா ?
இரு பக்கம் கொண்ட கடிதம் எழுத
வெக்கம் இல்லையா ?

உயிரைப் பிசையும் வார்த்தை ஜாலம்
உனக்குள் ஏதடா ?
உணர்வைக் கொன்று பகையை வளர்க்கும்
உயிர் நண்பா சொல்லடா ?

எருமைத் தலையன் பேச்சுக்கே தான்
தலையை ஆட்டுறாய்!
ஏனோ இந்த மாற்றம் தந்து
மனதை வாட்டுறாய்?

துயரக் கடலில் கப்பல் ஓட்டி
எங்கே செல்வேன் நான்?
துடுப்பாய் இருந்த நண்பன் இன்றித்
துலைந்தே போவேன் நான்!

மரணம் வந்து சேரும் முன்னால்
மனசை மாற்றடா ......
என் மனமே நீதானடா -அதை
 மறவேன் நான் தானடா .......

நண்பா நண்பா நண்பா நண்பா
எங்கள்  நட் பைப்  பாரடா!
அன்பாய்த் திரிந்த காலம் அழுதே
அதையேனும் கேளடா!

சொல்லும் வரைக்கும்
சொல்லிப் புட்டேன் சோகம் ஏனடா?
எனைக் கொஞ்சம் அள்ளும் வரைக்கும்
அள்ளிக் கொள்ள வா ஆசை நண்பனே ..........

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/27/2014

அக்கினி மேலே நடை நடந்து


அக்கினி மேலே நடை நடந்து
ஆதிசக்தி  அவள் வருகின்றாள்
பக்தியில் மெல்ல மணம் பரப்பி
பாளையத்தம்மா வருகின்றாள் ....!!
 
                                 ( அக்கினி மேலே)

புத்தியில் உறையும் தெய்வங்களைப் 
புவியினில் இங்கே நாம் கண்டோம்
சக்தியைக் கொடுக்கும் தாயிடத்தில்
சங்கடம் தீர்ந்திடும் வரம் பெற்றோம் ...

நித்திய சுமங்கலி அவளருளால்
நீண்டதோர் துயரை நாம் மறந்தோம்
வற்றிய கடலும் வளம் பெறவே -கலை
வாணியின் அருளை நாம் பெற்றோம் ...

                                              (  அக்கினி மேலே)
இத்தனை தெய்வமும் எதற்காக
ஈடில்லாச் செல்வம் தரும் அதற்காக ..
நித்தமும் வரும் துயர் யார் தடுப்பார்
நீதியைக் காக்கும் தாய் தடுப்பாள்

கொற்றவன் அவையினில் குழந்தையென
குலமகள் வந்தாள் விடையளித்தாள்
கற்றவர் யாவரும் வியப்புறவே
காரிருள் அகற்றி அவள் மறைந்தாள் !

                                             (  அக்கினி மேலே)
முற்றிய வினையை அகற்றி நிற்கும்
மும் மூர்த்தியின் தேவியர் மனம் மகிழ்ந்தால்
பற்றிய பாவம் அகன்றிடுமே
பாதையில் நல்லொளி தவன்றிடுமே ....

சித்திரை மாத நன்நாளில்
சீர் கொடுக்க வரும் தேவியரை
நித்திரை முழித்தென்றும்  நாம் அழைப்போம்
நீண்டதோர் துயரைத் தான் மறப்போம் ...

                                                 (  அக்கினி மேலே)
பற்பல யோசியம் சொல்லுதம்மா
பரா சக்தியின் அருளை யாசியம்மா ...
அற்புத சக்தியாள்  அவள் வருவாள் நல்
ஆசியும் தந்திங்கு மனம் மகிழ்வாள் ...

                                                   
                                                 (  அக்கினி மேலே)


(படங்கள் :கூகிளில் பெற்றது .நன்றி )                                                   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/23/2014

ஆதி சிவ சங்கரனே அன்பி லுரு வானவனே



ஆதி    சிவ   சங்கரனே
    அன்பி  லுரு    வானவனே
நீதி  நிலையாமை தகுமோ -மன
    நின்மதி   தான் இங்கு வருமோ ?...
சோதியிலும்   பெருஞ் சோதியே
   சொக்க   வைக்கும் சுந்தரனே
வீதி வலம்   வர வேண்டுமையா -இடர்
   விட்டகல அருள் தாருமையா ..

கூவி     அழைக்கின்றோம் பெரும்
        கும்மி  அடிக்கின்றோம் ஏன்
ஆவி துடிக்  கையிலும் உன்றனை
     அன்பில் சிவகுக நாதன் நாதன் என்றே
தேவி பார்  பதியுடன் விழி
     தேடும்   முருகனும் விநாயகனும்
மேவி வர   வேண்டுமையா உடன்
      மெல்லத் துயர் தீர்த்தருள வாருமையா ..

சாவின்    விளிம்பினிலும்  மனம்
  சாந்தி     பெறும் வரைக்கும் 
கோவில்  குளம் தானே வாழ்க்கை இது
  கொள்கை மாறாத வேட்கை !
நாவில்    துளி விஷமும்
    நக்கித் துயர் தீர்க்கோம்
பாவில்   வந்தமரும் பரனே
   படரும் துயர் தீர்த்தருள வாருவாய் ..

வேங்கை  இனத்தவரைக் கொல்லும்
  வேட்கை  தணிக்கும் வரைத் - தென்
மாங்கை   உரைக்க மாட்டோம்
    மங்கை  ஒரு பாகமாய்
கங்கை      முடி   மேலமர்த்திச்
    சங்கை     முழங்கி வரும்  அரனே
அங்கையுள்  அனலைத் தாங்கி -எம்
    ஆருயிர்     காக்க வாரீர் ....

சிவசிவசிவ    என இங்கு ஓதிடுவோம்
    சிந்தையில்  உன் நாமம் காவிடுவோம்
நவயுக       நாயகன் நின் அருள் வேண்டி
    நாளெல்  லாமிங்கே காத்திருப்போம்
தவநிலை  கலைத்திங்கே வரவேண்டும்
    தமிழரைக்  காத்தருளும் வரம் வேண்டும்
கவசமும்  எமக்கிங்கே நீதானே
  காணக்      கண் கோடி பெறும் பெருமானே ...!!


(படங்கள் கூகிள் :நன்றி )


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/19/2014

எட்டி எட்டிப் பார்க்கையில்



எட்டி எட்டி பார்க்கையில்
உன்னால் தானடா
வட்ட நிலாப்  பொட்டு வைக்க
ஆசை இங்கு வந்ததே ....

வா வா என்றன் நெஞ்சுக் குள்ளே
வண்ணம் மின்னும் கண்ணுக்குள்ளே
தா தா இன்பம் தந்தால் போதுமே!
உயிரின் தாகம் தீருமே!

                                                 (எட்டி எட்டிப்...)

என்னுயிரை எடுத்து
உன்னுடலில் தொடுத்து
இன்னும் பல ஜென்மம்
வாழக் காத்திருப்பேன்

சந்தனமும் குங்குமமும்
சேர்த்து வைத்த நெத்தியிலே
சங்கமிக்க வேண்டும் நீயடா
உயிரோடு  பகை ஏனடா!

பூவின் உள்ளம்
மென்மை என்றால்
பேசும் வார்த்தைகள்
உண்மை என்றால்
கோவில் குளங்கள்
தேவை இல்லை மன்மதா ......

நீ சூடும் பூவில்
சொர்க்கம் உள்ளது
தேடும் வார்த்தையில்
மிச்சம் உள்ளது
நான் பாடும் பாடல் நீயடா
என் வாழ்வின் தேடல் தானடா...

ஆண்...

ஆசைக் கிளியே முத்தம் தந்தது
அதனால் நூறு சத்தம் வந்தது
இந்த ஒசைக்கினியது
உலகில் ஒன்றும் இல்லையே!

நீ ஓடும் நதியில்
என்னைக் கண்டாய்
சிறு ஓடம் போலிங்கு
உன்னைக் கண்டேன்
தேடும் சுகங்கள் ஒன்றாய்ச்  சேர்ந்ததே ......
என் தேவை எல்லாம் உன்னால்  தீர்ந்ததே ...

பாசம் உள்ள நெஞ்சுக்குள்ளே
வாசம் வீசுமே!
உயர் தோஷம் எல்லாம் ஓடிப்  போக
நேசம்  மிஞ்சுமே!
இது சத்தியம் சத்தியமே
இனி நித்தமும் சித்திரையே ...
என் அத்தையின் (இ)ரத்தினமே
நான் சொன்னதும் சத்தியமே ...                                                                                                 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/18/2014

அன்பே அன்பே என்றன் ஆருயிரே

அன்பே ...அன்பே ..என்றன் ஆருயிரே
அடைக்கலமான தென் ஓருயிரே ..
முன்பே முன்பே வருவாயா? -உயிர்
மூச்சினில் இன்பம் தருவாயா ?

செந்தேன் மழையில் நாம் குளிக்க
சேரும் இடத்தை அறிந்தவனே
உன் தேன் அமுத மொழி கேட்டு
உருகிய மனமிதை அறிவாயா?

                                        (  அன்பே ...அன்பே...) 

முள்ளோடு தான் கூடிப் பிறந்தேனே
முழு மூச்சாக உனக்காக வளர்ந்தேனே 
தள்ளாடும் வயதிற்குள் வருவாயா 
தளராமல் உனதன்பைத் தருவாயா ?....

வில்லேந்தும் வார்த்தைக்குள் அச்சப்பட்டு 
விழி மூடிக் காத்திருக்கும் முல்லை மொட்டு 
உன்னோடு தான் வாழும் வாழும் இங்கே
உலகத்தின் நியதிக்குள்  மாற்றம் எங்கே !

                                            (  அன்பே ...அன்பே...) 

விதி போட்ட கணக்கில் தான் விடை வெல்லுதே 
விழியோரம் உனதன்பு எனைக் கொல்லுதே... 
மதி கெட்டுப் போகாமல் வா வா அன்பே 
மலரோடு கூடிட இன்பம் தா தா அன்பே ...

செவ்வாடை காற்றோடு செர்ந்தாடுதே உனைச் 
சேராத மனமிங்கு தினம் வாடுதே ...........
பொன்னாடை நான் போர்த்தி மகிழும் வண்டே 
பொறுமைக்கும் இந்நாளில் எல்லை உண்டே ...

                                                (  அன்பே ...அன்பே...) 

உடல் தொட்டு மனம் தொட்டுப் போன அன்பே 
உருகாதோ உருகாதோ ...மனமுமிங்கே 
கரை தொட்டு விரைகின்ற அலையைப்  போல
காத்திருப்பேன் காத்திருப்பேன் வா வா அன்பே  ....

சிலையல்ல சீதைக்கும் நிகரானவள்
சிந்திக்கும் போதெல்லாம் நன்றானவள்
கலையாத கனவுக்குள் நின்றாடினேன்
காற்றோடு காற்றாகும் முன் வா வா அன்பே .......

                                                                 (முள்ளோடு தான்)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/11/2014

ஏலேலங் கிளியே ....அடி

                                           

ஏலேலங் கிளியே!-அடி
என் ஆசை மயிலே!
ஊர்வாழ வாழ்த்தி நிற்கும் தேவதையே!
உனக்காக ஏங்கும் மனம் சாகலியே!

பூவோடு காயும் பிஞ்சும்
புதுசாக எஞ்சும் போதும்
நான் பாடும் பாடல் மட்டும்  உனக்காக
நலம் வாழ வாழ்த்தி நிக்குது எதற்காக?

                                                      (ஏலேலங் கிளியே )

போராடும் பச்சைக் கிளி
பொல்லாங்கு சொல்லுதடி
யாரோடும் பேச மாட்டேன் நீயின்றி
என் காதல் நீயின்றி!

வானத்து நிலவே உன்னை
வைகரைகள் தேடுதிங்கே
கானத்தை இசைக்கும் வேந்தன்
கையாளும் வார்த்தைகள்  எங்கே?

                                                       (ஏலேலங் கிளியே )
                                                         
மறையாதே மறையாதே என்  பூங்கொடியே
மண்ணுக்கும் உன் வாசம் போதலியே!
நிறை நீரில் நின்றாடும் தாமரையே
நீயின்றிச் சூரியனும் தூங்கலியே!

பறை சாற்றும் உள்ளத்தின்  வேதனைகள்
பசுந் தேனே உன் நெஞ்சைத் தீண்டாதோ!
கறை பட்டுப் போன மனம் வாடுதடி
காகிதத்தில்  கப்பல் விட்டுத் தேடுதடி ...

உறை பனியும் காற்றுமிங்கே சுடுகுதடி
உள்ளூர உன் நினைப்பு வருடுதடி
சிறை மீட்டு வருவதற்கு நான் ராமானுமில்லை
சிங்கார தேவதையே மனம் நோகுதடி!

கலையாத ஓவியமாய் நானுமிங்கே
காத்திருப்பேன் காத்திருப்பேன் கண்மணியே
பிழையாவும் பொறுத்தருள்வாய் பொக்கிசமே
பிஞ்சு மனம் கெஞ்சுதடி  என்றன்  உயிரே!


                                                           (ஏலேலங் கிளியே )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/09/2014

அன்பே உன்றன் ஞாபகம்

                                     


அன்பே உன்றன் ஞாபகம்
அன்றும் இன்றும் நெஞ்சிலே 
முன்போல் இங்கு தொடருது தொடருது 
மூன்றாம் பிறையாய் வளருத்து வளருது 

கண்கள் எழுதிய காவியத்தைக் 
கானல் நீரது அழித்திடுமா?
திங்கள் முகத்தை நான் காண 
திசைகள் எட்டையும் தொழுதிடவா?

                                         (அன்பே உன்றன்)

கண்ணே மணியே கற்கண்டே 
காதல் கிளியே ஓவியமே 
சொன்னால் போதும் ஒரு வார்த்தை 
சோகம் தீர்க்கும் மறு வார்த்தை 

உச்சி முகர்ந்தவன் நானிங்கே!
உயிராய் நின்றவள் நீ எங்கே?
கட்டி அணைத்திட வா...அன்பே 
காதல் கீதம் தான் எங்கே?

                                           (அன்பே உன்றன்)

வந்தேன் வந்தேன் மன்னவா
தந்தேன் தந்தேன் என்னை நான் 
உன் தேன் இதழில் சிந்திடும் 
செந்தேன் மழையோ சொல்லு நான்? 

கட்டிக் கரும்பா? இவள் ஓவியமா ?
காதல் பேசும் பைங்கிளியா?
எட்டிப் போனால் தான் தகுமா? 
எந்தன் ஜீவன் நீயல்லவா?

                                          (அன்பே உன்றன் )

அடடா காதல் இதுவல்லவா!
அன்பே அன்பே எனைக் கிள்ள வா..
கனவா நினைவா நான் காண்பது!
காணும் இன்பம் எனைக் கொல்லுது ...

நிலவும் வானும் ஒண்ணானது 
நினைப்பும் இங்கே ஒண்ணானது ...
உலவும் தென்றற் காற்றே நில்லு 
உலகை மறந்தோம் அங்கே சொல்லு ...
                                           
                                             (அன்பே உன்றன் )
                                                 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/08/2014

மகளீர் தின நல் வாழ்த்துக்கள் (2014-அம்பாளடியாள் )




பெண்ணைப் போற்றும் இந்நாளே 
பெருமை மிக்க நன்நாளே 
கண்ணை இங்கே மறப்பாரோ 
காரிருளை ஏற்பாரோ சொல் 
மண்ணை மக்களை நினைப்பவர்கள் 
மறவார் இந்தத் திரு நாளை 
விண்ணை நோக்கி நிலவைத் தான் 
விரும்பிப் பார்பார் மகளீராய் !!

அன்னை  இல்லா  வீடேது 
அக்கா தங்கை அனைவருமே 
தன்னைத்       தந்து உழைப்பவர்கள் 
தர்மம் காக்கும் நல்லவர்கள் !
பொன்னைத்       தந்தும்      போதாது 
பொறுமை மிக்க பெண்களுக்கு
உன்னைத் தந்து உயிர் காப்பாய் 
ஊழல் மிகுந்த நாட்டினிலே...

விண்ணைத் தொட்ட பெண்ணுண்டு 
விடியல் சமைத்த பெண்ணுண்டு 
மண்ணைக் காத்த பெண்ணுண்டு !
மக்கள் நலமாய் வாழ்ந்திடவே 
எண்ணெய்     போல      விளக்கெரிய
எங்கும் நிறைந்த பராசக்தியை 
கண்ணைப் போல காத்திடுவோம்   
காலம் முழுவதும் எமக்காக ! 

சேலை கட்டு பெண்ணே உன் 
சிறப்பு என்றும் உயர்ந்து நிற்கும் 
மாலை சூடும் மணவாளன் 
மனமும் அங்கே மகிழ்ந்திருக்கும் 
பாலைப் போல     கள்ளும்   தான் 
பரந்து கிடக்கும் உலகினிலே
நூலைக் குறைத்த ஆடைகளினால்  
நுழைவான் ஏனோ யுத்தங்கள் ?! 

பெண்கள்     நாட்டின்     கண்களென 
போற்றிப் பாடும்  காலம் போய்
புண்கள்       தோன்ற    வேண்டாமே 
புலரும் பொழுதுகள் ரணமாக 
கண்கள் கண்களாய் இருப்பதற்கே   
கவர்ச்சி காட்ட வேண்டாமே!! 
எண்கள் தகர்த்த தொல்லைகளை 
ஏற்றுத் துடிக்கும் மகளீரே !

அன்னை தெரேசா போலுள்ளோர் 
அன்பில் முதிர்ந்த தெய்வங்கள் !  
உன்னை அவர் போல் நினைத்தாலே 
உள்ளம் தெளியும் தன்னாலே 
தன்னைத் தந்தும் பிறர் நலனைத் 
தக்க வைக்கும் மகளீரே 
என்னை உன்னைக் காக்க வல்ல 
எளிமை நிறைந்த சக்தியாவர் !!!!

மங்கையர் அனைவருக்கும் என் 
மனம் கனிந்த மகளீர் தின 
நல் வாழ்த்துக்கள் !

அம்பாளடியாள் 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/07/2014

கண்ணுக்குள் ஒளியான தேவதையே



கண்ணுக்குள் ஒளியான தேவதையே 
காரிருளைப் போக்கி ஒளி தாருமடி 
மண்ணுக்குள் போகும் உடல் வாடாமல் 
மனம் இரங்கி உனதருளைத் தாருமடி 
எண்ணுக்குள் அடங்காத துயரனைத்தும் 
என் தாயே உனதருளால் பயந்தோடும் 
பெண்ணுக்குள் நிறைந்த நற் பண்பெல்லாம் 
பெருக்கெடுக்கும் மருவத்தூர் அம்மாவே 

பாடாத பாட்டெல்லாம் நான் பாட 
பாட்டுடை நாயகியாய் நீ வேண்டும் 
தேடாத இன்ப சுகம் தேடி வர 
தேவி உன்றன் அருளாட்சி தங்க வேண்டும் 
நாடாத மனமெல்லாம் நாடும் வரை 
நான் பாடி மகிழ வேண்டும் உனதன்பைக் 
கோடாடி கோடி மக்கள் உணர்ந்திடவே 
கொட்டும் மழைச் சத்ததிற்குள் கெட்டிமேளமாய் !!

வட்ட வட்டக்    குடை பிடித்து    உன்னருகே 
வந்தமரும் மக்களுக்குச் சொந்தம் நீயென 
திட்ட வட்ட மாக ஒரு     எண்ணம்    வேண்டுமே 
தீவினையைப் போக்கி வரும் சக்தி உன்னிடம் 
பட்ட கடன் நான் மறவேன்  எந்நாளுமே 
பாதை மாறிப் போகும் அந்த நன்நாளிலும் 
தொட்ட தெல்லாம் துலங்கிடவே அருள் செய்பவள் 
தொடர்ந்திருக்க வேண்டும் எந்தன் யுகங்கள் யாவிலும்

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/06/2014

தங்கத் தமிழே வா எழிலே




கட்டித் தங்கம் கண்ணுக்குள் 
காதல் செய்ய வந்தாளே! 
எட்டிச் சென்று நினைவலையை 
எங்கோ இழுத்துச் சென்றாளே!
புட்டிப் பாலை நான் அருந்த 
புகழ்ந்து பேசும் தாயைப் போல்   
கட்டிக் கொண்டே தோள் மீது 
காதல் மழையைப் பொழியாளோ!

கொஞ்சும் மழலைப் பேச்சழகி 
கொடுத்து வைத்த பேரழகி! 
நெஞ்சும் இனிக்க வந்தாளே 
நெருங்கிப் பழக மறந்தாளே! 
விஞ்சும் மனத்தின் ஆசைகளை 
விட்டுத் தள்ள முடியாது!
பஞ்சும் நெருப்பும் போலிங்கே 
பற்றிக்கொள்ள வர வேண்டும்! 

பாடித் திரியும் பறவைகளே  
பாசம் இதனைப் பார்த்தீரா?
வாடிக் கிடக்கும் மனநிலையை 
வருடிச்  சொல்ல மாட்டீரா?
தேடிப் பிடித்து அவளிடத்தில் 
தென்றல் போல எந்நாளும்
கூடிக் களிக்க  என்னோடு
கூட்டுச் சேர்த்து வைப்பீரா ?

காதல் தீயில் நான் வாட
கால மெல்லாம் கரைந்தோட
மோதல் மட்டும் நிலைத்திருந்தால்
மோகனப் புன்னகை தான் வருமா ?
சாதல் நன்று இதை விடவும்
சங்கத் தமிழே! ஆருயிரே!
ஓதல் வேண்டும் உன் நாமம் 
ஒளிந் திருக்க வேண்டாமே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/01/2014

கருணையில் சிறந்த தாயாக



கொடியநோய் உடலை வாட்ட 
கொடும்பாவிகள் மனதை வாட்ட 
மடியவே இறையைத் தேடும் 
மக்களைக் காப்பார் யாரோ ?..
விடியலும் வீணாய்ப் போச்சு
விம்மியே  அழுதும் ஆச்சு 
படியவே மறுக்கும் துயரைப் 
பறித்திட சக்தி தாரும் ?..

நடை பிணம் ஊர்வலமாய் 
நடப்பதேன் ஐநா நோக்கி 
விடை இதை அறிவாயம்மா 
விழிகளில் ஏந்தும் தீயால் 
கடைந்திடு நீதி வெல்ல 
கருணையின் மத்தை இன்றே 
படை பலம் தோற்கவேண்டும்
பணிந்திடும் மக்கள் முன்னால் 

அநீதியைத் தோற் கடிப்பாய் 
அன்பையே காத்து நிற்பாய் 
நீதியின் நிழலே போற்றி 
நின்மதி தருவாய் போற்றி 
ஆதி சிவ சங்கரியே 
அம்பெனப் பாய்வாய் போற்றி 
கோதியே உயிரைக் குடிக்கும் 
கொடும்பாவிகள் மனத்தை வெல்ல!!

வேள்விகள் பலதும் செய்தோம் 
வேண்டியே உனைநாம் தொழுதோம் 
கேள்விகள் எழு முன் வருவாய் 
கேதார கௌரி நீயும் 
ஊழ்வினை அகற்றி எங்கள் 
உயிர்களைக் காக்கும் சக்தி
ஆழ்கடல் முத்தாய் அமுதாய்
அன்பெனும் ஒளியைத் தாங்கி .

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.