நன்றியுரை ஏற்று நலம் வாழ வாழ்த்திடுவீர் !
மண்ணுக்கும் விண்ணுக்கும் தாவும் என்றன்
....... மனநிலையைச் சொல்லத்தான் வார்த்தை இல்லை !
கண்கண்ட தெய்வத்தால் நானும் இன்று
........களிப்புடனே பெற்றுவந்தேன் உயர்ந்த பட்டம் !
எண்ணம்போல் வாழ்த்துவீரே நாளும் வந்து
........என்வலையில் கருத்திட்டு மகிழ்வீர் என்றன்
நண்பர்களே! உறவுகளே ! பிரான்சு கம்பன்
.......நற்பணியை வணங்குகின்றேன் மறவேன் வாழ்வில் !
ஆசானுக்கு நன்றி !
மங்காத புகழ்சேர்த்த ஆசான் உன்றன்
........மனம்வாழ வாழ்த்துகின்றேன் வையம் தன்னில் !
பொங்குதமிழ் ஆர்வத்தை ஊட்டும் உன்போல்
.......பொன்போன்ற மனத்தவர்கள் வேண்டும் இங்கே !
தங்கட்டும் மங்களமும் தார்கள் யாவும் !
.......தரணியெல்லாம் உன்புகழைப் பாடும் வண்ணம் !
எங்களுக்கோர் நல்லாசான் நீவீர் இந்த
.......இசைக்கின்றேன் இதயத்தில் நன்றி !நன்றி !
நட்பு உறவுகளுக்கு நன்றி !
வல்லகம்பன் கழகத்தின் தலைவர் எங்கள்
.......வலையுலக நாயகனின் எண்ணம் போல
நல்லகவி நான்படைப்பேன் நாளும் இங்கே
.......நான்வணங்கும் தெய்வத்தின் அருளைப் பெற்று!
இல்லையொரு குறையுமென்று கற்றோர் போற்ற
.......இளையவளின் படைப்போங்கச் செய்வீர் தம்மின்
எல்லையிலா நற்கருத்திற் கீடும் உண்டோ !
......என்வலையைத் தொடர்கின்ற நட்பே !நன்றி !
மின் வலைக்கு நன்றி !
நன்றியுரை நானுரைக்கும் இந்த வேளை
........நான்மறவேன் எழுதுகின்ற எழுத்தைத் தாங்கும்
மின்வலைகும் நன்றியினைச் சொல்வேன் இங்கே
.......மீண்டுமிந்த வாய்ப்பளிப்பீர் மின்னல் தீவே !
உன்னைநம்பி உலகத்தோர் வாழு கின்றார்
.......உணர்வுகளைப் பகிர்ந்துவிட்டு உறங்கு கின்றார் !
என்றுமிதைக் காக்கின்றாய் எண்ணம் போல
.......ஏழ்பிறப்பும் தொடர்ந்திருப்பீர் உலகப் பந்தில் !
என்னை ஈன்ற பெற்றோருக்கு நன்றி !
என்னையிங்கு ஈன்றெடுத்த பெற்றோர் ஏற்பீர்
........இதமான நன்றியினை என்றும் காப்பீர் !
பொன்னைவிட பெரிதாக என்னைப் போற்றிப்
.......பொறுப்புடனே விருப்புடனே வளர்த்தீர் அந்த
நன்மைக்குப் பரிசளித்தேன் நானும் இங்கே
........நலம்வாழ வாழ்த்திடுவீர் என்றும் இந்த
இன்பத்தில் உறைந்திருக்க என்றன் நெஞ்சம்
........இறையாக நான்காணும் என்றன் வாழ்வே !
தொடரும் ............