மின்னலாய்த் திரிந்தவனே ஓர்
மெழுகுபோல் உருகியதென்ன ....!!!
விண்ணும் மண்ணும் அதிர உன்
உறவுகள் அழுத குரல் கேட்டாயோ ....
கண்ணை மூடித் தூங்குவதற்குக்
காலம் இதுவென யாருரைத்தார்!.....
வேலும் மயிலும் உடையவனோ ...
உனற்கு மிகவும் வேண்டியவனோ !.....
ஊரைத் தேடி உறவு சேர்த்தாய்
அந்த ஊரே உன்னைத் தேடி வந்த வேளை
நீ யாரைத் தேடிப் பறந்து சென்றாய் ......!!!
கல்யாண மாலை சூட்டிக்
காளை உன்னை அலங்கரித்து
ஊரெல்லாம் பாட்டிசைக்க
உறவெல்லாம் வாழ்த்துரைக்க
ஊர்வலம் நீ வருவாய் என்று
உள்ளத்தில்க் கனவு மலர
மணக்கோலம் துறந்து நீயும்
பிணக்கோலம் பூண்டதேனோ...!!!
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
சுற்றம் வாழ்த்த உனக்கொரு
துணையொன்று வரும் முன்னே
சுன்னம் இடித்து இங்கே சொர்க்கத்துக்கு
வழியனுப்ப என்ன அவசரமோ
இந்த சின்ன வயதினிலே.................!!!
முத்தான புன் சிரிப்பால் எங்கள்
முழு மனதையும் கவர்ந்தவனே
நித்தமும் உன் நினைப்பில் வாடுகின்றோம்
நீ மீண்டும் வரவேண்டும் என்று
ஆழ்கடலில் சங்கொலிபோல்
அடிமனதில் வேதனையுடன்
துடி துடிக்கக் காத்திருக்கும்
உன் உறவுகளின் வேதனை தீர
ஆண்டொன்று சென்றதென்று
அயர்ந்து நீயும் எழுந்து எம் முன்
மீண்டும் வந்து பிறந்துவிடு
எம் மீளாத் துயரைத் தீர்த்துவிடு.....
கடந்த ஓராண்டிற்கு முன் இருபத்தைந்து வயதில்
ஓர் சாலை விபத்தில் உயிர் நீத்த என் உடன்பிறவா
அருமைச் சகோதரன்(முருக பக்தன்) குமரேசன்
நிர்மலனிற்கு இந்த ஓராண்டு நினைவஞ்சலியினைச்
சமர்ப்பணம் செய்கின்றேன்..ஓம் சாந்தி சாந்தி சாந்தி ....