மலர்கள் மலரும் எம்நாடே!
பெண்ணின் பெருமை புகழையுமே
போற்றிப் பாடும் எம்நாடே!
விண்ணில் இருந்து தேவருமே
வாழ்த்தி வணங்கும் எம்நாடே
கண்ணின் மணியே கற்கண்டே-உன்னைக்
காணத் தவிக்குது மனம் இன்றே!
உறவுகள் கூடி மகிழ்ந்திடவும்
உன்னத வாழ்வு வாழ்ந்திடவும்
திறவுகோல் ஒன்று கிட்டாதோ!
தென்றலைத் தாங்கும் எம்நாடே !
பிறமொழி பேசும் அயல்நாட்டில்
பெருமைகள் குன்றிட வாழ்கின்றோம்
திறமைகள் இருந்தும் பாரம்மா
திவ்விய ஒளியே கேளம்மா!
நிலைமைகள் இங்கு வேறாகும்-இதனால்
நித்தமும் துன்பங்கள் ஆறாகும்!
தலைமுறை காத்திட வழியின்றித்
தவிப்பவர் உள்ளமும் நீறாகும்!
அலைகடல் அலையே தான் வாழ்க்கை
ஆசைகள் எமக்கே மாறாகும்
கலைநயம் மிக்க எம்நாடே இங்கு
காண்பவை யாவும் சேறாகும் !!
பனைமரக் காடும் தென்னைகளும்
பாசமாய் வளர்ந்த பிள்ளைகளும்
நினைவினில் வந்து வாட்டுதடி
நெஞ்சுரம் கொண்ட எம்நாடே
வினைகளை அறுத்து எறியாயோ!
வேங்கைகள் எம்மின் அடையாளம்!
மனைகளில் இன்பம் பொங்கிடவே
மாபெரும் மகத்துவம் நிறைநாடே !