கற்றவரும் மற்றவரும் வீற்றி ருக்கும்
....கலைமாலைப் பொழுதினிலே வாழ்த்துப் பாடி
நற்பெயரை நான்சூட்ட வந்தே னம்மா!
.....நறுந்தமிழே! நானிலமும் போற்றும் வண்ணம்
உற்றதுணை யாயிருக்க வேண்டும்! என்றன்
......உயிர்மூச்சுப் பேச்செல்லாம் நீயே ஆனாய்!
நற்றவமே! நறுமணமே! தேனின் ஊற்றே!
......நற்றமிழே! வந்தமர்வாய் என்றன் நாவில்!
குற்றமறக் கற்றகல்வி ஞானம் கொண்டு
......குடிமக்கள் உயர்வுக்காய் ஆற்றும் தொண்டு
நற்பயனை நாளுமிங்கே அளிக்கக் கண்டு
......நம்மவர்கள் கொண்டாடும் விழாவில் இன்றும்
கற்பனைக்கும் எட்டாத மகிழ்வு பொங்கும்
......கலைவாணி நல்லாட்சி எங்கும் தங்கும்!
சொற்பனத்தில் மிதப்போரே இந்தச் சோலை
.....சொக்கவைத்து மகிழ்வூட்டும் இன்று மாலை!
வந்தனங்கள் கோடிமுறை சொல்லிச் சொல்லி
.....வணங்குகின்றேன் அம்பாளின் அடியாள் நானும்!
சந்தனமாய் மணக்கட்டும் சான்றோர் உள்ளம்!
......சங்கீத இராகங்கள் பூபா ளத்தால்
செந்தமிழர் போற்றுகின்ற கிராமப் பண்பைச்
......சுமந்துவரும் நல்லரங்கம் இன்றும் எம்மின்
சிந்தையிலே தேன்தடவிச் செல்லும்! அந்தச்
.......செழிப்பூட்டும் இன்பத்தில் களிப்பீர் நன்றே!
மண்ணிலொரு மலர்விரிந்து மணத்தை வீசும்
....மக்கள்தன் சாயலென உலகம் போற்றும்
தண்ணிலவு மனங்கொள்ளும் தாய்சேய் சொந்தம்!
....தருமவழி செல்வதனைத் தரணி சாற்றும்!
புண்ணியத்தில் வாழ்வுதனைப் புகுத்தி ஈழப்
....புங்குடுதீ வுதித்திட்ட புகழ்சேர் சான்றோர்
கண்ணியத்தைக் கற்றொழுகிக் காலம் யாவும்
....காட்டுமொரு பரிவுதனை உலகம் போற்றும்!
அஞ்சாத படைவீரன் ஆண்ட பூமி!
... அதுதானே எம்மவர்க்கு என்றும் சாமி!
துஞ்சாமல் தலைவனது கொள்கை பேணித்
.... .துணையாக நின்றவர்கள் சீரைப் போற்றி!
நெஞ்சத்தில் நாட்டுணர்வை ஏந்திக் காத்து
......நிறைமனத்தை அடைந்திட்டோம்! இன்றும் அந்தச்
செஞ்சொற்றுக் கடனெண்ணி மகிழ்வார் சோம
......சுந்தரனார் திருநாவுக் கரசர் வாழ்க!