8/31/2015

காத்தருள வா தாயே !

                                                           
கருமாரி அம்மாநீ கண்திறந்து பார்த்தால்    
வரும்துயரும்  ஓடாதோ வாழ்வில் !-இருள்போம்!
உலகத்தின் சக்தியே  உன்னால்தான்  இங்கே
கலகமும் அற்றுப்போம் காண்!


முத்தொளிரும் நம்நாட்டின் முன்வினையத் தீர்த்திடத்தான்
இத்தரையில் யாருள்ளார்  இங்குச்சொல்? !-சித்தம்
கலங்குதடி தாயேயெம்   கண்ணீரைப் பார்த்தும்
உலகத்தின் துன்பத்தை ஓட்டு !

ஓங்காரி ஒய்யாரி உன்னால்தான் இன்றிங்கே
நீங்காத துன்பமெல்லாம்  நீங்குமடி !-பாங்காய்
அடியெடுத்து வா..தாயே ! அன்றாடம் ஏங்கி
மடியுதே எம்மின் மனம் !

நாடிழந்து வீடிழந்து நம்பிக்கை தானிழந்து
ஓடியே  இன்றிங்கே  ஓடானோம் !-கூடி
வருந்துகின்றோம் வாழ்வெல்லாம் வந்ததுன்பம் போதும்!
அருமருந்தே வந்திங்(கு) அருள் !

பொல்லாதார் ஆட்டிவிக்கும் பொம்மையென்றும் ஆனோமே !
இல்லார்க்கும் இவ்வுலகில் இன்பம்நீ!-வல்ல
துணையின்றி வாழ்வேது ?  தூயவளே போதும்
அணைபோட்டுக் காத்தே  அருள் !

தாயுன்றன் நல்லருளால்   தாயகத்தை வென்றிடலாம்
பேய்களுமே ஓடிவிடும் பேச்சிழந்து  !-நாய்போல்
அலைகின்ற  இந்நிலைபோம்!   அன்னியரின் ஆட்சி
கலைத்தெம்மைக் காத்தே அருள் !


                                                                     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/30/2015

ஈடு இணையற்ற நட்பேதான் வாடும் மனதிற்கும் வாழ்வு ! 
நட்போடு சேர்ந்திங்கு நாள்நகரும் போதுதான்
உட்பகையும் தன்னாலே ஓடிவிடும்  !-எட்டி
உதைத்தாலும் மன்னித்து உதவிடுக ! வாழ்வில்
இதைஏற்று வாழ்வீர் இனி !
                                                          
பட்டமரம் இன்பத்தைப் பாரினிலே கண்டதில்லை !
எட்டிநின்றால் வாழ்நாளும் எட்டிபோம் !நட்பும்
இருந்தால்தான் இன்பமிங்கே  !இல்லையெனில் என்றும்
மருந்தேதான் வாழ்வை மற!

கெட்டகுடி என்றெவரும் கேலிசெய்து போனாலும்
நட்பேதான்  வந்துதவும் நாட்டமுடன் !-சட்டம்
பலபேசி வாழ்நாளைப் பாழடிப்போர் முன்னால்
உலகத்தில் நட்பை உணர்த்து !

நட்புக்கு மிஞ்சியதோர் நல்லுறவு ஏதுமில்லை !
திட்டித்தான் தீர்த்தாலும் தேனென்பார் !-குட்டிக்
கதைபேசி வாழ்வெல்லாம் காத்துநிற்கும்  நட்பைச்
சிதைத்துப்பார்! உண்டோ சிறப்பு ?                                         

கண்ணாரக் காணாத கட்டுக்க தைக்கஞ்சி
எண்ணாத்தீர்  தப்பாக  எந்நாளும் !-மண்ணில்
பிணமாக நாம்வாழ்ந்தால்   பின்வம்சம் தோற்கும்!
இணைப்பீரே  நட்பை இனி !

பூக்கின்ற பூக்களெல்லாம் பூமிக்குத் தாமழகு !
வாக்களிப்போம் நட்பின்றி வாழ்வில்லை !-நோக்கும்
இடமெல்லாம் நட்பிருந்தால் ஈடேது !வாழ்க்கைத்
தடமெல்லாம் ஓங்கும் தழைத்து !
                                                                      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/25/2015

பதினான்கு மண்டிலம்

                                                           


                                           கண்கவரும் வெண்ணிலவோ!..
1
கண்கவரும் வெண்ணிலவோ! பெண்ணொளியோ! நுண்மதியோ!
தண்ணிழலோ!  வண்டமிழோ!  கண்டவுடன் !-மண்மணக்கும்
விண்மணக்கும்! பண்மணக்கும் ! பண்பினிக்கும் ! புண்துடைக்கும்!
தொண்டொளிரும்  ஒண்ணிறை யே !
2
வெண்ணிலவோ!  பெண்ணொளியோ! நுண்மதியோ! தண்ணிழலோ!  வண்டமிழோ!  கண்டவுடன் மண்மணக்கும்!-விண்மணக்கும்!
பண்மணக்கும் ! பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும்  ஒண்ணிறையே கண்கவ ரும்!   
3
பெண்ணொளியோ! நுண்மதியோ! தண்ணிழலோ!  வண்டமிழோ!  கண்டவுடன் மண்மணக்கும் விண்மணக்கும்!- பண்மணக்கும் !
பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும்  ஒண்ணிறையே
கண்கவரும்!  வெண்ணில வோ ! 
4
நுண்மதியோ! தண்ணிழலோ!  வண்டமிழோ!  கண்டவுடன்
மண்மணக்கும் விண்மணக்கும் பண்மணக்கும் !-பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும்  ஒண்ணிறையே கண்கவரும்!  வெண்ணிலவோ ! பெண்ணொளி யோ!
5
தண்ணிழலோ!  வண்டமிழோ!  கண்டவுடன் மண்மணக்கும்
விண்மணக்கும்! பண்மணக்கும்! பண்பினிக்கும் !- புண்துடைக்கும்! தொண்டொளிரும்  ஒண்ணிறையே! கண்கவரும்  வெண்ணிலவோ! !பெண்ணொளியோ! நுண்மதி யோ!
6
வண்டமிழோ!  கண்டவுடன் மண்மணக்கும் விண்மணக்கும்!
பண்மணக்கும்! பண்பினிக்கும் ! புண்துடைக்கும்!- தொண்டொளிரும் ஒண்ணிறையே! கண்கவரும்  வெண்ணிலவோ! பெண்ணொளியோ!
நுண்மதியோ! தண்ணிழ லோ! 
7
கண்டவுடன் மண்மணக்கும் விண்மணக்கும்! பண்மணக்கும்!
பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும்!- ஒண்ணிறையே! கண்கவரும்  வெண்ணிலவோ! பெண்ணொளியோ! நுண்மதியோ!
தண்ணிழலோ! வண்டமி ழோ!
8
மண்மணக்கும் விண்மணக்கும்! பண்மணக்கும்! பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும் ஒண்ணிறையே!- கண்கவரும் வெண்ணிலவோ! பெண்ணொளியோ! நுண்மதியோ! தண்ணிழலோ!
வண்டமிழோ! கண்டவு டன்! 
9
விண்மணக்கும்! பண்மணக்கும்! பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும் ஒண்ணிறையே! கண்கவரும்!- வெண்ணிலவோ! பெண்ணொளியோ! நுண்மதியோ! தண்ணிழலோ! வண்டமிழோ!
கண்டவுடன்! மண்மணக் கும்!
10
பண்மணக்கும்! பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும் ஒண்ணிறையே! கண்கவரும்! வெண்ணிலவோ!- பெண்ணொளியோ! நுண்மதியோ! தண்ணிழலோ! வண்டமிழோ! கண்டவுடன்!
மண்மணக்கும்! விண்மணக் கும்! 
11
பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும் ஒண்ணிறையே! கண்கவரும்! வெண்ணிலவோ! பெண்ணொளியோ!- நுண்மதியோ! தண்ணிழலோ! வண்டமிழோ! கண்டவுடன்! மண்மணக்கும்!
விண்மணக்கும்!  பண்மணக் கும் !
12
புண்துடைக்கும்! தொண்டொளிரும் ஒண்ணிறையே! கண்கவரும்! வெண்ணிலவோ! பெண்ணொளியோ! நுண்மதியோ!- தண்ணிழலோ! வண்டமிழோ! கண்டவுடன்! மண்மணக்கும்! விண்மணக்கும்!
பண்மணக்கும் ! பண்பினிக் கும் ! 
13
 தொண்டொளிரும் ஒண்ணிறையே! கண்கவரும்! வெண்ணிலவோ! பெண்ணொளியோ! நுண்மதியோ! தண்ணிழலோ!- வண்டமிழோ! கண்டவுடன்! மண்மணக்கும்! விண்மணக்கும்! பண்மணக்கும் !
பண்பினிக்கும் !  புண்துடைக் கும்!
14
ஒண்ணிறையே! கண்கவரும்! வெண்ணிலவோ! பெண்ணொளியோ! நுண்மதியோ! தண்ணிழலோ! வண்டமிழோ!- கண்டவுடன்!
மண்மணக்கும்! விண்மணக்கும்! பண்மணக்கும் ! பண்பினிக்கும் !
புண்துடைக்கும்! தொண்டொளி ரும்!

 இலக்கணக் குறிப்பு


பதினான்கு மண்டிலம் என்பது  முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினான்குச் சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா! மேலும் அறிய இங்கே செல்லவும் http://bharathidasanfrance.blogspot.ch/2015/08/normal-0-21-false-false-false.html

                                                                       
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/20/2015

பதினான்கு மண்டிலம் !

                                         
                                                 என்னுயிரே! பொன்மனமே!

(1)
என்னுயிரே! பொன்மனமே! இன்னருள்செய் இன்றெனக்கு
உன்னருளால் நன்மைபல நின்றொளிரும்!-என்னகத்தின்
இன்னலும்போம்  அன்னையுன்றன்  புன்முறுவல் ஒன்றதனால்
இன்பமயம்  மின்னிடும்   இன்று !

(2)
பொன்மனமே !இன்னருள்செய் இன்றெனக்(கு) உன்னருளால்
நன்மைபல நின்றொளிரும் என்னகத்தின்  !-இன்னலும்போம்
அன்னையுன்றன்  புன்முறுவல் ஒன்றதனால்  இன்பமயம்
மின்னிடும்இன்(று) என்னுயி ரே!

(3)
இன்னருள்செய் இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல
நின்றொளிரும் என்னகத்தின்  இன்னலும்போம்  !-அன்னையுன்றன்
புன்முறுவல் ஒன்றதனால்  இன்பமயம்  மின்னிடும்இன்(று)
என்னுயிரே! பொன்மன மே!

(4)
இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல நின்றொளிரும்!
என்னகத்தின்  இன்னலும்போம்!  அன்னையுன்றன்  !-புன்முறுவல்
ஒன்றதனால்  இன்பமயம்  மின்னிடும்இன்(று) ! என்னுயிரே !
பொன்மனமே  இன்னருள் செய் !

(5)
உன்னருளால் நன்மைபல நின்றொளிரும் என்னகத்தின்
இன்னலும்போம்!  அன்னையுன்றன்  புன்முறுவல் !-ஒன்றதனால்
இன்பமயம்  மின்னிடும்இன்(று)! என்னுயிரே பொன்மனமே !
இன்னருள்செய் இன்றெனக் கு !

(6)
நன்மைபல நின்றொளிரும் என்னகத்தின்  இன்னலும்போம் !
அன்னையுன்றன்  புன்முறுவல் ஒன்றதனால்  !-இன்பமயம்
மின்னிடும்இன்(று) !என்னுயிரே! பொன்மனமே !இன்னருள்செய்
இன்றெனக்கு உன்னரு ளால் !

(7)
நின்றொளிரும் என்னகத்தின் இன்னலும்போம்!  அன்னையுன்றன்
புன்முறுவல் ஒன்றதனால்  இன்பமயம்  !- மின்னிடும்இன்(று)!
என்னுயிரே பொன்மனமே இன்னருள்செய் இன்றெனக்கு
உன்னருளால் நன்மை பல !

(8)
என்னகத்தின் இன்னலும்போம்!  அன்னையுன்றன்  புன்முறுவல்
ஒன்றதனால்  இன்பமயம்  மின்னிடும்இன்(று) !-என்னுயிரே !
பொன்மனமே !இன்னருள்செய் இன்றெனக்கு உன்னருளால்
நன்மைபல நின்றொளி ரும் !

(9)
இன்னலும்போம் !  அன்னையுன்றன்  புன்முறுவல் ஒன்றதனால்
இன்பமயம்  மின்னிடும்இன்(று)  என்னுயிரே !-பொன்மனமே !
இன்னருள்செய் இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல
நின்றொளிரும் என்னகத் தில் !

(10)
அன்னையுன்றன்  புன்முறுவல் ஒன்றதனால்  இன்பமயம்
மின்னிடும்இன்(று)! என்னுயிரே !பொன்மனமே !-இன்னருள்செய்
இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல நின்றொளிரும் !
என்னகத்தின்  இன்னலும் போம்  !

(11)
புன்முறுவல் ஒன்றதனால்  இன்பமயம்  மின்னிடும்இன்(று)
என்னுயிரே! பொன்மனமே! இன்னருள்செய்!- இன்றெனக்கு
உன்னருளால் நன்மைபல நின்றொளிரும்! என்னகத்தின்
இன்னலும்போம்  அன்னையுன் றன்  !

(12)
ஒன்றதனால் இன்பமயம்  மின்னிடும்இன்(று) என்னுயிரே !
பொன்மனமே இன்னருள்செய் இன்றெனக்கு!-உன்னருளால்
நன்மைபல நின்றொளிரும் என்னகத்தின் இன்னலும்போம்
அன்னையுன்றன்  புன்முறு வல் !

(13)
இன்பமயம்  மின்னிடும்இன்(று) என்னுயிரே பொன்மனமே
இன்னருள்செய் இன்றெனக்கு உன்னருளால்!- நன்மைபல
நின்றொளிரும் என்னகத்தின் இன்னலும்போம் அன்னையுன்றன்
புன்முறுவல் ஒன்றைத னால் !

(14)
மின்னிடும்இன்(று)  என்னுயிரே பொன்மனமே இன்னருள்செய்
இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல !-நின்றொளிரும்!
என்னகத்தின்  இன்னலும்போம் அன்னையுன்றன்  !புன்முறுவல்
ஒன்றைதனால் இன்பம யம் !


இலக்கணக் குறிப்பு

பதினான்கு மண்டிலம் என்பது  முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினான்குச் சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா!
http://bharathidasanfrance.blogspot.ch/2015/08/normal-0-21-false-false-false.html

                                                                    

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/17/2015

வெண்பாக் கொத்து !

                                                               
                                                   
                                                   அன்னைநீ எனக்கு !


வெண்பாக் கொத்து !


குறள் வெண்பா 

அன்னைநீ  தெய்வம்  ! அருந்தமிழே! அன்புருவே!
இன்னருள்செய் நாளும் எனக்கு !

நேரிசைச்  சிந்தியல் வெண்பா 

அன்னைநீ பொன்மொழியாம்! அற்புதமாம் இவ்வுலகில்!
உன்னோடு சேர்ந்திருந்தால் உள்ளத்தில்  !-இன்பம்தான்
என்றுமில்லைத் துன்பம்  எனக்கு !


இன்னிசைச்   சிந்தியல் வெண்பா 

அன்னைநீ யேதான்என் ஆதியும் அந்தமும் !
என்னுயிராய் நிற்பவளே என்றுமெனை ஆதரிப்பாய் !
இன்றதுவே போதும் எனக்கு !


நேரிசை வெண்பா 

அன்னைநீ தான்என்றன்  ஆற்றலும் மூச்சாவாய் !
இன்னிசையாய் நின்றொளிரும்  இன்தேனே  !-உன்னருளால்
பொன்னழகு பெற்றிடலாம்  போதுமிந்த வையகத்தில்
என்னயினி  இன்னும் எனக்கு !


இன்னிசை வெண்பா 

அன்னைநீ காவியமாய் அன்புநிறை ஓவியமாய்
என்னுள்ளே தானிருப்பாய் எப்போதும் !உன்னழகைப்
பொன்னழகைக்  கண்ணெனவே போற்றுகின்ற பாட்டருள்வாய்
என்னுயிரே நாளும் எனக்கு!

பஃறொடை வெண்பா

அன்னைநீ முத்தல்லோ! அன்பேந்தி   முன்பிறந்த
பொன்மொழியைப் போற்றியிங்குப்  பாடிடவா ?-என்னாவி
உன்னோடு சங்கமிக்க ஊன்மறக்கும்! தேன்கசக்கும்!
என்னுயிர்க்கு நீதானே இன்பமிங்கே! -கன்னல்பூஞ்
சோலையுனைக் கண்டாலே சொக்கிநிற்கும் என்னுள்ளம்
காலையிளங் கீற்றாய்க்  களிப்பெய்தும்  !-ஆலையிட்ட
செங்கரும்பாய் ஆனேனே  செந்தமிழே நீவேண்டும்!
பொங்குதமிழ்ப்  பாட்டெழுதிப் போகத்தான் -மங்கையிவள்
காத்திருந்தாள்! பூத்திருந்தாள்! காலமெல்லாம் இங்குன்னைப்
பார்த்திருந்தாள்! பாப்புனைய பாருலகில் -கோர்த்துமலர்
தந்திடுவாய் என்றனுயிர்த்  தாகத்தை நான்தணிக்க
இந்நாளாம் பொன்நாள் எனக்கு !

                                                                 


இலக்கண விளக்கம் :

வெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.

அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.


மேல் உள்ள வெண்பாக்கள் 'அன்னைநீ ', என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன. 'எனக்கு' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன.

இவ்வகையான வெண்பாக் கொத்தினைத் தாங்களும்  முறைப்படி பவில்வதற்கு இங்கே சொடுக்கவும் (இது எங்கள் ஆசான் கி .பாரதிதாசன் ஐயாவின் வலைப்பூ )http://bharathidasanfrance.blogspot.ch/2015/08/blog-post_4.html

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/09/2015

மும்மண்டில வெண்பா !

                                                 
நான் ஏன் வந்தேன் !

மண்ணில்நான் ஏன்வந்தேன் கண்ணேநீ  பார்என்றேன்
வண்டமிழாள் தேன்தந்தாள் எண்ணமெல்லாம் !-வண்ணமய
மீன்நீந்தக்   கண்டிடுவாய் வான்மயங்கும் பண்ணொளியில்
தேன்சுவையுள் பெண்ணழகு மான் !

ஏன்வந்தேன்   கண்ணேநீ  பார்என்றேன் வண்டமிழாள்
தேன்தந்தாள் எண்ணமெல்லாம் வண்ணமய !-மீன்நீந்தக் 
கண்டிடுவாய் வான்மயங்கும் பண்ணொளியில் தேன்சுவையுள்
பெண்ணழகு மான்மண்ணில் நான் !

கண்ணேநீ பார்என்றேன் வண்டமிழாள் தேன்தந்தாள்
எண்ணமெல்லாம் வண்ணமய மீன்நீந்தக்  !-கண்டிடுவாய்
வான்மயங்கும் பண்ணொளியில் தேன்சுவையுள் பெண்ணழகு
மான்மண்ணில் நான்!ஏன்வந் தேன் !இலக்கண விளக்கம்

மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம்     சீர்களை 
முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்!

இந்த வெண்பாவினை முறைப்படி கற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும் !

http://bharathidasanfrance.blogspot.ch/2015/08/blog-post.html
                                                     

                                           

                                                    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/02/2015

வெளிநாட்டு மோகம் இது யார் விட்ட சாபம் !

                                           
                                                   


தூதுபோ பைங்கிளியே  தூயதமிழ் கற்பதனால்
ஏதுதுயர் நம்நாட்டில்  இங்குச்சொல் !-போதும்
பிறமொழியால்  கண்டபயன் ! பீடுடன்  வாழ
அறநெறியே காக்கும்  அரண் !

                                               

அன்னிய நாட்டில் அடைக்கலம் பூண்டபின்
நன்மையே சேருமென்று நாடாதே !இன்னல்
வருமெந்த நாளும்  வளமார் தமிழா !
உருகாமல்  வாழ்வை உணர் !

தஞ்சாவூர்ப்  பொம்மை! தலையாட்டத் தானோசொல்
விஞ்ஞானம் கற்றாய்? விடிவில்லை !- விஞ்சும்
துயர்மட்டும் மேல்நாட்டில்! தூங்கிக் கழித்தால்
உயர்வேது வாழ்வை உணர் !

செம்மொழியால் வந்துற்ற சீர்என்ன எண்ணிப்பார் !
அம்மணமாய் நிற்கத்தான்  ஆணவத்தால் !-தம்மை
மறந்திங்குச் செல்கின்றீர்  மாண்டாலே போதும் !
பறந்தும்போம் வாழ்வின் பயன்!

மேல்நாட்டு மக்களுடன் மேதினியில் வாழ்ந்திடலாம் !
ஆல்போல் உறவுகளும் அங்கெதற்கு?!- தோல்வி 
வருகின்ற போதெல்லாம் வெம்பியழு  வாழ்வில்
தருமநெறி  காக்கும் தலை !

சொன்னாலும் கேளாமல் சொந்தங்கள் பாராமல் 
தன்மானம் குன்றத்தான் தாவுகின்றாய் !-நன்மை 
ஒருபோதும் கிட்டாது! ஓய்வின்றித் துன்பம் 
பெருகத்தான் செய்தாய்  பிழை!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.