12/29/2014

என்னவென்றுரைப்பேன் இதை!எண்ணம் இனிக்க இதயத்துள் நின்றவளே !
வண்ண மலரே! அருகே..வா!-கண்ணனிவன்
வாடுகையில் வஞ்சியே வாரா திருப்பாயோ? !
பாடும் குயிலே பகர்!

அன்னைத் தமிழை அமுதாய்ப் பொழிந்தவளே !
உன்னை மறந்தோ உறங்கிடுவேன் !-பொன்னையும்
வேண்டேன்!  பொருளையும் வேண்டேன்எந் நாளுமெனை 
ஆண்டிடுக அன்பை அளித்து !

வண்டமிழ் காற்றாக வான்பரப்பில் வந்தாட 
தொண்டுகள் நீ...புரிவாய் தோழமையே !-அண்டங்கள்
அக்கக்காய்ப் போனாலும் அன்பே...நீ போகாதே!
துக்கத்தை  ஏற்பேன் தொடர்ந்து !

கன்னித் தமிழமுதைக் கண்டவர் கைதொழுவர் !
உன்னை அடைந்தேன் உயிராக !-தன்னையே
தான்வதைக்கும் துன்பமேன் ?..தாமரையே சொல்லிங்கு ? !
வான்மதியாய்த்  தேயுதே வாழ்வு!

சுண்ணாம்பில்  இட்டாலும்  தூய தமிழ்வேண்டும் !
கண்ணாக நான்மதிக்கும் கட்டழகே !-விண்ணாளும்
நன்மதியும் விட்டகல நான்கண்டேன் உன்னாலே!
என்னவென்று ரைப்பேன் இதை! 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12 comments:

 1. என்னவென் பேனோ எழிற்றழிழை ஏத்தும்பா
  கன்னலென் பேனோ கருத்தினிக்கச் - சொன்னலத்தில்
  அம்பா ளடியாளின் ஆற்றலில் அன்னைதமிழ்
  உம்பா லுணர்ந்தாள் உயிர்!!!

  அருமையான வெண்பாப் படையல் தமிழுக்களித்தீர்கள் கவிஞரே!!!

  த ம 1

  ReplyDelete
 2. அன்னைத் தமிழை அமுதாய்ப் பொழிந்தவளே !
  உன்னை மறந்தோ உறங்கிடுவேன் !-பொன்னையும்
  வேண்டேன்! பொருளையும் வேண்டேன்எந் நாளுமெனை
  ஆண்டிடுக அன்பை அளித்து !//
  அனு தினமும் அன்பை அளித்துக் கொண்டு தானே இருக்கிறார். தமிழ் அன்னை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. நல்ல தமிழ்ப் பாமாலை!..
  அழகு.. அருமை!..
  வாழ்க நலம்!..

  ReplyDelete
 4. உங்கள் தமிழுக்கும்(பேத்இயை உங்கள் என்று சொல்வதா?!) அமுது என்று பேர்!

  ReplyDelete
 5. வணக்கம் அன்புத் தோழி!

  எண்ணம் முழுதும் இனிய தமிழென!
  வண்ணம் மிளிர வரைந்தனை வெண்பாக்கள்!
  கிண்ணம் நிறையவே கிட்டிய தேன்கனி!
  உண்ணப் படைத்தாய் உவந்து!

  தித்திக்கும் தேனினிய சீர்கள் சேர்த்துத் தந்த
  சிறப்பான வெண்பாக்கள்! மிக அருமை!

  வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
 6. அருமை
  அருமை சகோதரியாரே

  ReplyDelete
 7. என்னவென்று சொல்வதம்மா ,வஞ்சியவள் வண்டமிழை :)
  த ம 6

  ReplyDelete
 8. வெண்பாக்களால் அலங்கரித்துவிட்டீர்கள்! அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. அருமையான பாமாலை....

  ReplyDelete
 10. வணக்கம் அன்பு உறவுகளே !
  அனைவரினது வருகைக்கும் அன்பான இனிய நற் கருத்துகளிற்கும்
  என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் .இந்தப் பாசமும் நேசமும்
  உள்ளவரை எண்ணிய தெல்லால் எளிதில் கிட்டும் ! என் வலைத்தள
  சொந்தங்களின் வாழ்வும் மனம் போல் இனிக்க நல் வாழ்த்துக்கள் .
  வாழ்க வளமுடன் .

  ReplyDelete

 11. வணக்கம்!

  எண்ணம் இனிக்க எழுதிய வெண்பாக்கள்
  வண்ணம் பலபல வார்த்தனவே! - உண்ணும்
  விருந்தாய்ச் சுவையை விளைத்தனவே! என்றும்
  அரும்பாய் மணக்கும் அவை!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........