4/11/2014

அன்னை பூமியே எம் ஆருயிரே



பட்டுப் போன மேனியும்
பழுதடைந்த கண்களும்
வட்டமிட்டு நெஞ்சுக்குள்
வலி உணர்த்திச் செல்லுதே!

கட்டித் தங்கம் உன் மடியில்
கவலை தீர நாம் உறங்கும்
எட்டிப் போன காலங்களை
எளிதில் மறக்க முடியாதே !

ஈழத் தாயே உனக்காக
ஈசன் திருவடி தொழுகின்றோம்!
பாழாய்ப் போன உனதழகைப்
பழுது பார்க்கச் சொல்கின்றோம்!

வீர மறவர் வாழ்வனைத்தும்
வீழ்ச்சி கண்டு போனாலும்
ஈரம் என்றும் காயாது எம்மை
ஈன்றெடுத்த தாய் நாடே!

கோரப் பல்லும் சடை முடியும்
கொல்லும் மாமிச வெறியர்களைக்
காலம் வெல்லும் வெல்லும் வரைக்
காத்திருப்போம் உனக்காக!

நீரும் நெருப்பும் சாட்சி சொல்ல
நீதி தேவதை அவளருளாலே
பாரம் குறையும் குறையும் அந்நாள்
பறந்து வருவோம் உன் மடி தேடி ...

ஏழைக் கவிஞரும் பாவலரும்
என் தாய் அழகைத் தான் ரசிப்பார்!
பாழும் மனத்தில் எந்நாளும்
பாசம் ஒன்றைத் தான் நினைப்பர்!

வாழ வைக்கும் காலம் வரும்
வாடி நிற்கும் என் தாயே!
ஆழப் பதிந்த உணர்வுகளால்
அழுத்திச் சொல்வோம் இதைத் தானே!                                             
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10 comments:

  1. நம்பிக்கை வரிகள்.

    கூகிளில் பெற்றாலும் படம் அசத்தல்.

    ReplyDelete
  2. விரைவில் நல்ல காலம் பிறக்கட்டும்! உங்கள் ஆசை நிறைவேறட்டும்!

    ReplyDelete

  3. வணக்கம்!

    ஈழத்தை எண்ணி இசைத்தகவி உன்னெஞ்ச
    ஆழத்தைக் காட்டும் அளந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  4. பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே என்ற பாரதியின் வாக்கை மெய்ப்படுத்தும் கவிதை!

    ReplyDelete
  5. கண்டிப்பாக வாழ வைக்கும் காலம் வரும்...

    ReplyDelete
  6. பட்டுப் போன மேனியும்
    பழுதடைந்த கண்களும்
    வட்டமிட்டு நெஞ்சுக்குள்
    வலி உணர்த்திச் செல்லுதே...அழகு தமிழில் மிளிர்ந்த கவிதை
    அருமை ! இருந்தும் இதயம் தான் கனக்கிறது.

    ReplyDelete
  7. தாய் மண்ணே வணக்கம்...... நல்ல காலம் வரும்.... வரவேண்டும்.

    ReplyDelete
  8. வாழ வைக்கும் காலம் வரும்
    வாடி நிற்கும் என் தாயே
    ஆழப் பதிந்த உணர்வுகளால்
    அழுத்திச் சொல்வோம் இதைத் தானே .. = நமது நம்பிக்கை, பிரார்த்தனைகள் இது தான். வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. "வீர மறவர் வாழ்வனைத்தும்
    வீழ்ச்சி கண்டு போனாலும்
    ஈரம் என்றும் காயாது எமை
    ஈன்றெடுத்த தாய் நாடே..." என்ற
    உள்ளத்து வெளியீட்டை
    நானும் வரவேற்கிறேன்!

    ReplyDelete
  10. எல்லாருக்கும் நல்ல காலம் வரும்!..
    நம்பிக்கையும், பிரார்த்தனையும்
    நம்மை வாழ வைக்கும்!..

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........