10/26/2013

அழகு நிலவு அசையும் பொழுதில்அழகு நிலவு
அசையும் பொழுதில்
இயமன் வந்தானே!
அதன் ஒளியைப் பறித்து
விழியை எரித்து
மரணம் தந்தானே!

துயரம் நிறைந்த
வனத்தில் இருந்து
பெற்ற மனங்கள் என்னாகும்?
இதை நினைத்து நினைத்து
வடித்த கவிதை
கண்ணீர்  தடுக்கும்  வித்தாகும்!

எமக்குள் இருக்கும்
தவிப்பை எழுத
எழுத்தும் கல்லாகும்!
வாகன விபத்தைத் தடுத்து
நிறுத்தும் வரைக்கும் மனித
மனங்கள்  புண்ணாகும்

அடித்த அடியில்
சிதைந்த உடலை
அடைத்தார் பெட்டியிலே
அதை எடுத்து வந்து
கொடுக்கும் பொழுதில்
உடைந்தார் உறவுகளே!

படித்த படிப்பை 
மறந்து போதையில் 
பறந்து செல்லாதே!
உயிர்களைப் பறித்த  பாவம்
உனக்கும் தொடரும் 
இந்த நினைப்பைக் கொல்லாதே!

கனக்கும் இதயம்
உனக்கும்  சொன்ன
தவிப்பு  புரிகிறதா? -மனிதா
மனித மனத்தைப் பார்த்து
உன் குணத்தை மாற்று
எம் மனமே வலிக்குதடா .....

                                       ( அழகு நிலவு )


கொடிய வாகன விபத்தில் மரணத்தைத் தழுவிய 
என் மனத்தை உறைய வைத்த அந்த அழகிய பிஞ்சு மலருக்கு 
இந்தப் பாடல் சமர்ப்பணம் .கண்ணீரால் அஞ்சலிகள்
பல தந்தாலும் தவமிருந்து பெற்ற மகளை இழந்தவர்களின் 
தவிப்பு அடங்காது .வாகன சாரதிகளே வலிக்கும் இதயங்களின் 
வேதனையை நினைத்துப் பார்க்க மறவாதீர்கள் ......இன்று இவள் 
நாளை ?...தொடரும் மனித வேட்டைக்கு முற்றுப் புள்ளி இடுவோம் .
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

13 comments:

 1. இன்றைய நிலைக்கு அவசியத்
  தேவையான கவிதை
  சொல்லிச் சென்ற விதம் அற்புதம்
  சந்த அழகில் மயங்கி மீண்டும் மீண்டும்
  படித்தேன் ,பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வணக்கம்

  கனக்கும் இதயம்
  உனக்கும் சொன்ன
  செய்தி புரிகிறதா? ....
  மனிதா மனித மனத்தைப் பார்த்து
  உன் குணத்தை மாற்று
  எம் மனமே வலிக்குதடா .....

  அருமை மனதை ஒரு கனம் திகைக்கவைத்துவிட்டது... வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-


  ReplyDelete
 3. தவிப்பை எழுத
  எழுத்தும் கல்லாகும்....//ஆம் வாகனவிபத்தை பற்றி எழுதினால்....

  ReplyDelete
 4. போதையின் பாதை கொடியது.

  ReplyDelete
 5. வாகன விபத்துகள் பற்றி அருமையாகச் சொன்னீர்கள்....

  நேற்று கண்ணெதிரே ஒரு சைக்கிள் பயணி விபத்துக்குள்ளாகி இறந்ததைப் பார்த்து மனம் பதறினேன்..... யார் பெற்ற பிள்ளையோ, யாரின் தகப்பனோ.....

  ReplyDelete
 6. வாகன விபத்து இன்று அருகிப் பெருகி வருகிறது.
  சாலைக் கவனம் வேண்டும்.
  அந்தப் பிஞ்சு மலருக்கு என் அஞ்சலிகள்.
  இரங்கட்பா நெஞ்சை உலுக்கியது...

  ReplyDelete
 7. மனம் கனக்கின்றது.. இளந்தளிரின் ஆன்மா சாந்தியடைவதாக... உறவினைப் பிரிந்து வாடும் நெஞ்சங்களின் துயர் தீர இறைவன் அருள்வானாக!..

  ReplyDelete
 8. கவிதையைப் படிக்கப் படிக்க நமக்கும் அந்தக்கடைசியில் காட்டியுள்ள மங்கையைப்போலவே கண்ணீர் தான் வருகிறது.

  அருமையானதோர் விழிப்புணர்வு தரும் நல்ல ஆக்கம். பாராட்டுக்கள்.

  கடைசி படத்தேர்வு கவிதைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

  ReplyDelete
 9. //படித்த படிப்பை
  மறந்து போதையில்
  பறந்து செல்லாதே......

  உயிர்களைப் பறித்த பாவம்
  உனக்கும் தொடரும்
  இந்த நினைப்பைக் கொல்லாதே....//

  கவிதாயினியின் சொல்லாடல் சொக்க வைக்கிறது ;))))) மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 10. மனம் தவிக்க வைக்கும் நிகழ்வு!

  அந்தப் பிஞ்சின் ஆன்ம சாந்திக்காக வேண்டுகிறேன்...

  கவியில் உரைத்து உதிரத்தை உறைய வைத்தீர் தோழி!

  ReplyDelete
 11. வலி தந்த வேகத்தில் உதித்த கவிதை சிறப்பு! இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்! போதையின் பாதையிலிருந்து மீள வேண்டும்! அருமையான படைப்பு! நன்றி!

  ReplyDelete
 12. கண்ணீர்க் கவிதை இதயத்தைத் தொட்டது

  ReplyDelete
 13. அவசர உலகில் அவசரமாய் எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது என்பது வேதனையே.. வேகம் குறைத்தாலே விபத்துக்கள் தடுக்கப்படும். இன்றைக்கு தேவையான விடயத்தை பகிர்ந்தமைக்கு நன்றீங்க அய்யா..

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........