10/11/2014

அன்பினால் தழைத் தோங்குக இன்பம் !கண்ணே மணியே கற்கண்டே -என்றன் 
கவிதை இனிக்க வந்தவளே
உண்ணேன் உறங்கேன் நீயின்றி
உணரும் காலைப் பொழுதின்றி !
பெண்ணே அழகில்   ஓவியமே!
பொறுமை அணிந்த காவியமே!
மண்ணே போற்றும் மரகதமே!
மலரே  எழிலே வாராயோ !

கொஞ்சும் சலங்கை ஒலியாலே
கோதை உன்றன் நினைவாலே
விஞ்சும் கவிதை வடிப்பேனே
விரலால் தாகம் முடிப்பேனே
பஞ்சும் நெருப்பும் போலிங்கே
பற்றிக் கொள்ள வாராயோ !
தஞ்சம் உன்றன் நெஞ்சமென
தரையில் வந்த வெண்ணிலவே !

கண்ணா ! காதல் மணிவண்ணா!
கலக்கம் ஏனோ இந்நாளில்?
எண்ணா திருக்க வருவேனே
என்றும் இன்பம் தருவேனே
விண்ணும் மண்ணும் வியந்திடவே
விழியில் ஒளியாய் நிற்பவனே 
கண்ணும் கருத்தும் நீயல்லவோ
கவலை மறப்பாய் இக்கணமே !

தோகை மயிலுன் ஆட்டத்தைத் 
தொடர்ந்தும் பார்க்க வருவேனே !
சோகம் தீர்த்து அந்நாளில் உனைச் 
சொக்க வைப்பேன் என் கண்ணா 
பாகப் பிரிவினை எமக்குள்ளா?
பயத்தைப் போக்கு துயர் நீங்க 
காகம் வந்து சேதி சொல்லும் 
காதல் தேவதை வரும் முன்பே !

அன்னத்துக்கும் புறாவுக்கும் மட்டுமா தூது 
சொல்லத் தெரியும் !காக்கைகளாலும் 
முடியும் :))  


உண்ணும் போதும் சரி ஓர் உயிர் பிரிந்த போதும் சரி காகங்களின் ஒற்றுமையை விஞ்சும் சக்தி உலகில் எந்த சீவ ராசிகளுக்கும் கிடையாது என்பது தான் நான் அறிந்த உண்மை ! அது சரி எதுக்கு இப்போது அம்பாளடியாள் காகத்தைத் தலை மேல் தூக்கி வைத்து ஆடுகின்றார்கள் ? இன்னுமா புரியவில்லை!:) காகம் ஒற்றுமையின் சின்னமாகும்  ! இன்று சனீஸ்வர விரதத்தின் இறுதி நாள் சனீஸ்வரனின் வாகனமான காக்கைக்கு உணவு அளித்து மகிழ்வதன் மூலம் சாப விமோற்சனம் அடையலாம் என்கிறது சகுன சாஸ்திரங்கள் அதற்காக இன்று மட்டும் அல்ல என்றுமே முடிந்தால் (காகங்களுக்கு மட்டும் அல்ல ஏனைய சீவ ராசிகளுக்கும்  )உணவு அளியுங்கள்.அன்பினால் ஒற்றுமை தழைக்கும் ஒற்றுமை தழைத்தால் உலகமே இன்பமயமாகும் !

                                                              அன்பு உறவுகள் அனைவருக்கும் சனீஸ்வர பகவானின் நல்லாசியினால் இடர்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பொங்கிட  இனிய நல் வாழ்த்துக்கள் !

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8 comments:

 1. கரைந்தழைத்துண்ணும் காககூட்டம்..கதறவும் கூட்டம் கூடும் ஆம். அருமை சகோதரி.
  தம 1

  ReplyDelete
 2. காக்கா கற்றுத் தந்த பாடம் அருமை !
  த ம 2 (உங்களைக் காக்கா பிடிப்பதற்காக சத்தியமா நான் இந்த வோட்டைப் போடலே ))

  ReplyDelete
 3. அழ்கிய கவிதை! அதுவும் மிக உயர்ந்த தகவலுடன்! அன்பும் ஒற்றுமையும்தான் இந்த உலகைக் கட்டி ஆளும் சக்தி படைத்த ஒன்று!

  கவிதை அருமை சகோதரி! காகம் என்ன ஒரு நல்ல பறவை தெரியுமா. ஆனால் உலகத்தோர் அதை விரட்டி விடுவதுண்டு. சனி பிடித்துவ் விடும் என்று பயந்தோ?!!! ஏனோ தெரியவில்லை! நாங்கள் மிகவும் ரசிக்கும் பறவை!

  நல்ல அழகான கவிதை சகோதரி!

  ReplyDelete
 4. கவிதை அருமை ! தோழி காகம் கரைவதை கேட்டாலே சந்தோஷம் தான். விருந்தாளிகள் வரப் போகிறார்கள் என்று நல்லதோ கெட்டதோ ஓடி வந்து சொல்லிவிடும் . எல்லாவற்றையும் தான் mis பண்ணுகிறோமே அத்தோடு பல்லி சொல்வதையும் தான். மிக்க நன்றி வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 5. அருமையான கவி சகோதரியாரே

  ReplyDelete
 6. அழகான கருத்தை சொல்லும் கவிதை அருமை. பாடல் பகிர்வு, சனி பகவான் படம் எல்லாம் அருமை.
  உங்கள் இனிய நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 7. வணக்கம் சகோதரி.!

  காகத்திற்கு முதலில் அன்னமிட்டு பின் நாம் உண்ணபதென்பது மிகவும் சிறந்த ஒரு செயல்.! இன்றும், அதை அனைவரும் கடைபிடித்தால் நல்லது! காகம் விடு தூதாக தாங்கள் வடித்த கவிதை மிகச்சிறப்பு.! அருமையாக இருந்தது. பகிர்விற்குப் பாராட்டுடன் நன்றிகள்.!

  என் தளம் வந்து கருத்தும், வாழ்த்துக்களும் தந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.!

  நட்புடன்
  கமலாஹரிஹரன்.

  ReplyDelete
 8. http://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_25.html

  வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........