9/18/2014

விநாயகர் வெண்பா



பொங்கும் கடலாய்ப் புலமை பொலிந்திட
எங்கும் நிறைந்த இறையவனே - தங்கிடச்செய் 
மங்கல வாழ்வினை! வாவா முதல்வனே!
பொங்கல் சுவையைப் பொழிந்து!

எண்ணும் பொழுதினில்  ஏற்றம் மிகுந்திட 
கண்ணாய் வருவாய்  கணபதியே! - விண்ணும் 
அசைந்திட மண்ணும் அசைந்திட நன்றே 
இசைவுடன் காப்பாய் இனித்து!

அறுகம்புல் மாலை அணிந்திட  என்னுள் 
நறுந்தமிழ் ஈன்றவனே ! நாளும் - பெறுகின்றேன்  
உன்னால் உயா்வாழ்வும்!   ஓங்கு தமிழ்வாழ்வும்!
என்னால் எதுவும் இலை!

கந்தன் மனங்குளிரக் காட்சியைத் தந்தவனே! 
சிந்தை மணக்கின்ற சிற்பரனே! - விந்தையாய் 
ஆனை முகத்தவனே! ஐந்து கரத்தவனே! 
ஞானம் புகட்டுவாய் நன்கு! 


                                                                    

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

15 comments:

  1. ஆனை முகத்தவனே! ஐந்து கரத்தவனே!
    ஞானம் புகட்டுவாய் நன்கு!..

    விநாயகர் வெண்பா அருமை!.. மகிழ்ச்சி..
    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் !

      Delete
  2. வணக்கம் சகோதரி!

    கண்ணாய்க் கருத்திற் கணபதியைத் தான்கொண்டு
    பண்ணாக வெண்பா படித்தனை! - என்றும்
    இருப்பான் துணையென எம்பெருமான்! நன்றே
    தருவான் அருளாம் தயை!

    அழகான அருமையான வெண்பா தந்தீர்கள்!
    விநாயகர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி !

      பெண்ணாய்ப் பிறந்து பெருமையுற வாழ்பவளே !
      எண்ணா திருக்க இயலுமோ !-வண்ணமாய்
      எக்கண்ணும் ஏற்கும் இறைவனே தான்துணை!
      இக்கணமும் தந்தாய் இனிப்பு!

      மிக்க நன்றி அன்புச் சகோதரியே வருகைக்கும்
      இனிய நல் வாழ்த்திற்கும் !

      Delete
  3. வணக்கம்
    அம்மா.

    பூத கனங்களின் தலைவனைப் பற்றி
    துதிபாடிய வரிகள் கண்டு
    என் சிந்தை குளிர்ந்தது.

    கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !

      மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் !

      Delete
  4. விநாயகர் வெண்பா மிக அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. விநாயகர் நிச்சயம் ஞானம் புகட்டுவார்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  6. Only with Vinayaka's Grace and Bountiful Blessings,
    Such Immaculate Poetic Ecstacy is possible.

    All the Best.

    subbu thatha.

    ReplyDelete
  7. வேழமுகத்தோனுக்கு
    சூட்டிய பாமாலை
    இன்னிசை பாடுகிறது நெஞ்சில்...
    மிகவும் அருமை சகோதரி...

    ReplyDelete
  8. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  9. வெண்பா வடித்து விநாயகனை போற்றுகிறாய்
    எண்ணம் விளையும் இனி !

    அருமையான வெண்பாக்கள் வாழ்த்துக்கள் சகோ
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  10. விநாயகர் வெண்பாவைப் படித்தேன். மனம் நிறைவாக இருந்தது. நன்றி.

    ReplyDelete
  11. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. பொங்கும் கடலாய்ப் புலமை பொலிந்திட
    எங்கும் நிறைந்த இறையவனே - தங்கிடச்செய்
    மங்கல வாழ்வினை! வாவா முதல்வனே!//

    ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை! வெண்பாக்களால் மால தொடுத்து இட்டு விட்டீர்களே ஆனை முகத்தவனுக்கு! அருமை!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........