9/07/2014

எதைக் கற்றுக் கொண்டாய் இயற்கையையும் மிஞ்சுவதற்கு !
கற்றுக் கொடுத்த பாடமெல்லாம்
கனவில் நினைவில் நிக்குதடா!
அற்றுப் போன  நீதிக்கே
அகிலம் தவியாய்த் தவிக்குதடா!

உற்றுப் பார்த்தால் உள்ளுக்குள்
உணர்வே மெல்லச் சாகுதடா!
பற்றுப் பாசம்  எல்லாமும்
பகட்டு வேஷம் தானோடா!

அண்ணன் தம்பி உறவுக்கும்
அர்த்தம் உண்டோ இந்நாளில்?
எண்ணும் போதே வலிக்குதடா
எங்கள்  இதயம் துடிக்குதடா!

மண்ணும் பெருமை குன்றிடவே
மனிதம் மறந்து வாழ்கின்றீர்!
விண்ணும் வியக்க உயர்ந்தவரே
விடிவை இங்கும் தடுக்கின்றீர்!

அள்ளிக் குண்டை விதைக்கின்றீர்!
அன்னை மடியைச் சிதைக்கின்றீர்!
பள்ளிப் பாடம் இதுவோடா?
பலதும் கற்ற மானிடனே!

முள்ளில் விழுந்த சேலையைப்போல்
முடிவும் விதியின் கைகளில்தான்!
துள்ளிக் குதித்தும் பயனுண்டோ
துயரம் மிகுந்த வாழ்வினிலே!

எல்லைக் கோட்டைத் தாண்டிவிட்டீர்!
எங்கும் அமைதியைச் சீண்டி விட்டீர்!
சண்டை இட்டே  சாவதற்காய்
சரித்திரம் மேலும் படைக்கின்றீர்!

புல்லும் இங்கே முளையாது
புழுக்களும் இங்கே வாழாது!
தொல்லை மிகுமே வாழ்நாளில்
துளையுண்ட பூமியின் சாபமிதே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12 comments:

 1. நீங்கள் சொல்வது அத்தனியும் உண்மையே. எங்கோ சென்று விட்டது பாசமும், உறவுகளும். மீட்டுக்க முடியுமா அதையெல்லாம் ?

  ReplyDelete
 2. ஆச்சர்யமான
  ஆக்ரோஷமான
  ஆவேசமான
  ஆக்கம்.

  அமைதி ! அமைதி !! அமைதி !!!

  ReplyDelete
 3. பற்றுப் பாசம் எல்லாமும்
  பகட்டு வேஷம் தானோடா !

  நாடகமே உலகம்..!

  ReplyDelete
 4. கற்றவர் செய்யார் கடைநிலைக் காரியம்!
  செற்றவ ரோடிவனைச் சேர்!

  ஆவேசமான வரிகள்! ஆத்திரம் ஞாயமானதே!
  வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
 5. அண்ணன் தம்பி உறவு அர்த்தமில்லாமல் போகும் காலம்தான் இது
  பகட்டு வேடம் வெற்றிபெறும் காலமிது
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 6. மிக அருமை தோழி..மனிதமும் அன்பும் அற்று வெறிகொண்டு அலைகிறது மனித இனம்..அழிந்து போன சாம்ராஜ்யங்களும் இவர்களுக்குப் பாடம் கற்பிக்கத் தோற்று விட்டன.. :(
  த.ம 4

  ReplyDelete
 7. சிறப்பான வரிகள்! கோபம் கொப்பளிக்கும் கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. இவர்களின் ஆணவத்திற்கு அடி விழும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது
  த ம 4

  ReplyDelete
 9. கற்றுக் கொடுத்த பாடமெல்லாம்
  கனவில் நினைவில் நிக்குதடா
  அற்றுப் போன நீதிக்கே
  அகிலம் தவியாய்த் தவிக்குதடா
  வினை விதைத்தவர்கள் வினை அறுப்பார்கள் நிச்சயமாய் தோழி!.
  ஆக்ரோஷம் ஒவ்வொரு வரியிலும் சீறிக்கொண்டு வெளி வந்திருக்கிறது ! வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
 10. புல்லும் இங்கே முளையாது
  புழுக்களும் இங்கே வாழாது !
  தொல்லை மிகுமே வாழ்நாளில்
  துளையுண்ட பூமியின் சாபமிதே

  சொல்லித் தீராத் தொல்லையிது!- எடுத்துச்
  சொல்லிட இதற்கு எல்லையெது!

  ReplyDelete
 11. அள்ளிக் குண்டை விதைக்கின்றீர்!..
  அன்னை மடியைச் சிதைக்கின்றீர் !..
  பள்ளிப் பாடம் இதுவோடா?
  பலதும் கற்ற மானிடனே !//

  நல்ல நெற்றியடி! சகோதரி! அப்படியே துளைத்தெடுக்கும் வரிகள்! அருமை! மனித மனம் வறண்டு பாலைவனம் ஆனதென்னவோஉண்மையே!

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........