2/03/2011

வருக!... வருக!.....

                                          
நீ வந்து குடியேறி
என் நினைவெங்கோ  போனதடி
இரவுக்கும் பகலுக்கும்
இடமாற்றம் தெரியலடி!
இதயத்தின் துடிப்பெல்லாம்
இரட்டிப்பாய் ஆனதடி!
தொண்டைக்குள் கெண்டை மீன்
துள்ளி விளையாட  
அண்டைய பகுதியெல்லாம்
அவதியுற்றுப்  போனதடி! 
                                          
வலை போட்டு  நான் பிடித்த
வார்த்தை மீன் நழுவுதடி! 
அகராதி தேடி மனம்
அவதியுற்றுப் போனதடி!
எப்படியோ கருவுற்றால்
இடை இடையே கருச் சிதையுதடி! 
வெள்ளைத்தாள்  நினைவில் வந்து
வெறுப்பூட்டிச் செல்லுதடி!
 விரயத்தை  மனதில் கொண்டால் 
படைப்பு வீணாகிப் போகும் என்று
நான் போட்ட கணக்கு இப்போ
நல்லாத்தான் வேலை செய்யுதடி! 
                                         
கவிதைக்கும்  சந்தம் வேண்டும் 
கருத்துக்கள்  நிறைய வேண்டும்
உருவத்தால் சிறுத்திருந்தாலும்
உட் பொருள் அதிகம்  வேண்டும்
அம்மாடி உன்னைப் படைக்க
அருந்தவம் இருக்க வேண்டும்!
ஆசை நான் வைத்து விட்டேன்
அவஸ்தையும்   பட்டுவிட்டேன்!
ஆனாலும் உன்னைத்தானே
 என் ஆருயிர் என்று சொல்வேன்!

                                          
அடி  கன்னித் தமிழே!
என் அன்னை மொழியே!
உன்னைக் காக்கும் தமிழர் நெஞ்சில்
எண்ணம்போல் உருவெடுப்பாய்! 
இதயத்தை  மகிழ வைப்பாய்! 
எங்கள்  தமிழ் மொழியின் பெருமை 
என்றென்றும் வளம்  குன்றாது பெருக
கவிதை மகளே! உன்  வரவுகள்  
என்றும்  பெருகட்டும்! 
வானம் உள்ளவரை தமிழ்
வாடைக் காற்று எங்கும் வீசட்டும்!
                                    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3 comments:

 1. உங்களுக்கு மென்மேலும்
  லாவவண்யமான
  கவிதை மகளின்
  வரவுகள் நிறைய
  வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள். உங்கள் கவி மகள் கணனிப் பதிப்போடு மட்டும் மட்டுப்பட்டுவிடாது அனைவரையும் சென்றடைய வேண்டுகிறேன்.

  ReplyDelete
 3. மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்த்துக்கள்
  பலிக்கட்டும்!.....உங்களைப் போன்றவர்களின்
  வரவுகளும் ஆசியும்தான் என் கவிதைகளையும்
  சிறப்புற வாழவைக்கும். தங்கள் இருவருக்கும்
  எனது மனமார்ந்த நன்றிகள்...............

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........