3/12/2015

முடங்கிக் கிடந்தாள் அது அந்தக் காலம் !




காலம் கடந்து பெண்ணிங்கே 
  காற்றில் மிதந்து செல்கின்றாள் !
ஏலம்  விடுவோர் பின்வாங்க  
    என்றும் புதுமை காட்டித்தான் !
கோல விழியாள்  தான்கொண்ட 
    கொள்கை எதுவும் மாறாமல் 
பாலம் அமைத்துச் செல்கின்றாள்  
    பார்ப்போர் உள்ளமும்  கொண்டாட!

பெண்ணை அடிமை என்றோரும் 
     பெருமை கொள்ளும் பொற்காலம்
மண்ணில் தவழக் காண்கின்றோம்
     மாற்றம் இதுவே  போதாதா?.. 
கண்ணை மதிக்கத் தான்வேண்டும் 
     காலம் கடந்த பின்னாலும் 
எண்ணக் கருத்தில் மாற்றத்தை 
     என்றும் விரும்பார்  மாறுகவே !

சட்டம் வகுத்தார் பெண்ணுக்குச் 
   சார்பாய் எதுவும் இல்லாமல் !
திட்டம் இதனைத் தான்வென்று 
    தீபோல் எழுந்து நிற்கின்றாள் 
பட்டப் படிப்பால் எப்போதும் 
     பாரை வியக்க வைக்கும்பெண் !
முட்டப் பகைமை கொள்ளாதீர் 
     மூடர் எனவும்  நில்லாதீர் !

ஆட்டம் இழக்கச் செய்திடுவாள்    
     ஆளும் திறமை தான்கொண்டு !
பாட்டன் அவர்தம் முப்பாட்டன் 
      பாரில் எவரும் காணாப்பெண் ! 
கூட்டம் நடத்தி மானத்தைக் 
     கூவி இனிமேல் விற்போர்க்கும்  
சாட்டை அடிதான் தப்பாது !
      சற்றே இதனைச் சிந்திப்பீர் !

நாட்ட முடனே பொய்யின்றி 
   நாளும் உழைக்கும் பெண்ணுக்குச்
சூட்டப் பெயர்கள் தேடாதீர்
    சூடு சுரணை அற்றோரே !
வாட்டும் துயர்கள் போக்காமல்
    வாழ்வில் கொடுமை செய்வோர்க்கும் 
வேட்டும்  ஒருநாள் வைப்பாள்பார்
   வெல்லும் பெண்மை இவ்வுலகை !..
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/06/2015

காக்கும் சக்தியே எமைக் காண ஓடிவா ...

                                                                           

பொன்னை அளித்தோம் ஏனிங்கே 
    பொல்லா தவரின் ஆசைக்குத்
தன்னைக் கொடுத்தும் தாழ்கின்றாள்
     தாய்மை நிறைந்த பெண்என்றும்! 
நன்மை எதையும் காணோமே
     நாளும் கொடுமை மேலோங்க
உன்னைத் துதித்தோம் பாரம்மா!
     ஊழை அகற்ற வா......அம்மா !

அல்லும் பகலும் துன்பத்தால்
     ஆன்மா துடிக்க லாமோசொல் ?!
கல்லும் கரையும் இந்நேரம்
      காக்க விரைந்து வா ,,தாயே !
நல்லோர் மனம்போல் வாழத்தான் 
     நன்மை அருளும் தெய்வம்நீ 
வல்ல துணையாய் எந்நாளும் 
      வந்திங் கினிமை அருள்வாயே !

கற்றார் எவரும் தம்போக்கில் 
   காலம் கடத்திச் செல்கின்றார் !
உற்றார் உறவினர் கூடத்தாம்  
   சுற்றம் மறந்து வாழ்கின்றார் !
நற்ற வமே..!நீ தானே...எந்  
     நாளும் பொழுதும் காப்பாயே !
அற்ப சுகத்தை உலகெண்ணி  
     அழிதல் அழகோ சொல்..தாயே !

அஞ்சிப் பிழைக்கும் வாழ்நாள்கள்  
     அன்பில் தவழ என்றென்றும்  
நெஞ்சில் துணிவைத் தந்திங்கே 
     நேர்மை வழியைக் காட்டம்மா ! 
பஞ்சம் மறையும் அப்போதே
     பாசம் மிகுந்த தாயுன்னால் 
கொஞ்சும் சலங்கை கூத்தாடும்  
      கோல விழிகள்  பூத்தாடும் !!!!

பெண்ணின் மனத்தைப் பொன்போல 
    போற்ற எவரும் செய்..தாயே !
கண்ணின் மணியே கற்பகமே 
     காவல் எமக்கு நீ..தானே !
எண்ணும் பொழுதே இன்பத்தை 
     என்றும் அருளும் அன்னைபோல் 
மண்ணில் எவரும் உண்டோ ..சொல்! 
      மாத வமே!..வா   எம்..தாயே ! 
      

      
 (படம் இணையத்தில் இருந்து
பெறப்பட்டது .நன்றி )                    

                                                                       
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/13/2015

வா தாயே !


அன்னைத்  தமிழேநல் ஆரமுதே  எந்நாளும் 
உன்னைத் தொழுதேன்  உயிராக !-என்னைத் 
துயர்கள்தீண்  டாதினியும்  தூயவளே காப்பாய்!
அயர்வென்றும்  சாராவண் ணம்! 

அன்னைத் தமிழே ஆன்மாவே
   ஆசை பெருக நின்றேனே 
என்னைப் புவிமேல் தாங்காயோ 
     என்றும் உணர்வு குன்றாமல்!
கன்னல் மொழியைக் கற்றால்தான்
    காலம் இனிக்கும் எந்நாளும்!
இன்னல் இனியும் வேண்டாமே
     இன்பத் தமிழே வா.. தாயே !

வஞ்சிக் கொடியென் ஏக்கத்தை
    வந்து தணிக்க மாட்டாயோ !
கொஞ்சிக் குலாவும் பொற்காலம்
    கொண்டு  வரவும் மாட்டாயோ!
நெஞ்சில் இடரை  நான்தாங்கி
    நேற்று வரையும் வெந்தேனே !
பஞ்சில் நெருப்பைப் போல்பற்றி
    பாசம் விளைத்து வா..தாயே !

பாடும் பறவை நீயின்றி
    பாதை தவறிப் போகாதோ !
நாடும் செழிக்க வா...தாயே
    நல்ல பொருளைத் தா..தாயே!
வாடும் மனத்தின் வாட்டத்தை 
    வந்து தணிப்பாய் எப்போதும்  
தேடும் சுகமும் நீயன்றோ !
      தேடி எனைநீ வா தாயே !
                                                 
                                                                 
    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/23/2015

அன்னையின் நல்லாசி அனைவர்க்கும் கிட்டட்டும் !

                                           

மண்ணிலே பிறந்து விட்டோம் 
   மரங்களாய் வளர்ந்தும் விட்டோம் !
எண்ணிய தெதுவும் இங்கே 
   எளிதிலே கிடைப்ப தெங்கே !
கண்ணியம் இழந்த வாழ்வைக் 
   கனவிலும் நினையாப் பண்பு 
உண்மையில் உயர்வைத் தந்து 
   உருப்பட வழிகள் செய்யும் !

தன்னிலை மறந்து வாழும் 
    தரித்திர குணத்தை நீக்கி 
நன்னிலை அடைந்தால் மக்கள்  
    நலமுடன்  திகழ்வார் நாளும் !
அன்னையின் அருளைப் பெற்று 
    அழகுடன் திகழத் தானே 
நன்னெறி வளர்த்தார்  இங்கே 
    நழுவிடல்  முறையோ சொல்வீர் !

காத்திட வருவாள் அன்னை 
   கருணையின் உருவம் தாங்கி !
நேத்திகள் பலவும் செய்தோர் 
    நெகிழ்கிறார் அறிவீர் இன்றும் !
கூத்துகள் களைகட் டத்தான் 
    குவிகிறார் தினமும் பக்தர் !
பாத்திதை உணர்தல் நன்றே 
    பலவகைத் துயரும் நீங்க !  

                                                  


                                                              
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/22/2015

செந்தமிழ்ச் சோலை செழித்து வளர்கவே !

                                 

என்னுயிர்த் தமிழே தாயே !
    இணையிலா அழகே !தேனே !
பொன்னுயிர் பெற்று வாழ்ந்த 
    புலவராய் என்னை ஆக்கு !
பன்மணி பூண்ட பெண்ணே !
   பன்மலர்ச் சோலை நீயே !
மின்மணிப் பாக்கள் என்னுள் 
   விளைந்திட வேண்டு கின்றேன் !

செந்தமிழ்ச் சோலை பூத்துச் 
    செழிப்புடன் ஆடக் கண்டேன் !
நந்தமிழ் மேன்மை காத்து 
    நலமெலாம் புரியக் கண்டேன் !
தந்தன தாளம் போட்டுத் 
    தண்டமிழ் மணக்கக் கண்டேன் !
சந்தன மலர்கள் தூவித் 
   தாழ்ந்துநான் வணங்கு கின்றேன் !

சிறப்புற வந்த மாவைச் 
   சேனாதி ராசர் வாழ்க !
திறமுறப் பணிகள் ஆற்றும் 
   சி .சிரீ தரனார் வாழ்க !
மறமுற உணர்வை நல்கும் 
   மாசிலா வீரர் வாழ்க !
அறமொழி தமிழைக் கற்றே 
   அழகுடன் வாழ்வோர் வாழ்க !

                   
                                                                                                                                                                    வண்ணக் கனவு மெய்யாகி 
    வானில் பறக்கக் கண்டோமே !
எண்ணம் முழுதும் இன்பத்தை 
    ஏந்திக் களித்து நின்றோமே !
உண்ண உணவும் தந்தீரே !
    ஊக்கம் அளித்தும் வந்தீரே !
கண்ணாய் விளங்கும் செஞ்சோலை 
   காலம் முழுதும் வாழியவே !

பள்ளிச் சிறுவர் தாம்பெற்ற 
    பாட மதிப்பெண் கண்டங்கே 
அள்ளிக் கொடுத்து லட்சத்தை 
    ஆக்கம் செழிக்கச் செய்தீரே !
துள்ளிக் குதித்தும் வந்திங்கே 
     தொண்டு சிறக்கப் பாடுகின்றோம்
நள்ளி ரவிலே தோன்றுகின்ற 
    நடசத் திரம்போல் வாழியவே !

எங்கள் தலைவன் அந்நாளில் 
   எம்முள் விதைத்த நற்பணியைச் 
சங்கத் தமிழின் மீதாணை 
   சாற்றித் தொடர்ந்தீர் இந்நாளில் !
வங்கக் கடலும் வாழ்த்தத்தான் 
    வந்தங் குதிக்கும் பொற்காலம் !
மங்கா தொளிர எந்நாளும் 
    அன்பில் திளைத்து வாழியவே !

காலம் முழுதும் செஞ்சோலை 
    காக்க விரைந்து வந்தோரே !
ஆலம் விழுதாய் வேரூன்றி 
     ஆற்றும் பணியால் ஓங்குகவே !
சீலம் நிறைந்த நம்நாட்டைச் 
   சீராய் வளர்த்தல் நம்கடனே !
மாலன் திருத்தாள் எழில்எண்ணி 
   மகிழ்ந்து நன்றி உரைக்கின்றேன் !     

                                                                          
                                                             நன்றி வணக்கம்...
                                                                                                                                                                              
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/16/2015

செந்தமிழ்ச் சோலை செழித்து மலர்கவே

               
                          

எந்தமிழ் ஈழத்தார் ஏந்தி வளர்க்கின்ற 
செந்தமிழ்ச் சோலை செழிப்புறுக !-சிந்தையிலே 
மண்ணின் மணம்கமழ்க !மார்பில் மறங்கமழ்க !
தொண்டில் சுடர்க தொடர்ந்து !

ஈழம் என்றால் வீரமென 
    இந்த உலகம் உணர்ந்ததுவே !
வேழம் போன்றே அஞ்சாத 
   வேங்கை நம்மின் அடையாளம் !
ஆழம் அகலம் நன்காய்ந்தே 
   அமைப்போம் பாலம் இனி ..நம்முன் 
ஊழும் என்ன எதிர்கின்ற 
   உலகும் என்ன ?..இணைந்திடுவோம் !

சங்கே கொண்டு முழங்கிடுவோம் 
  தலைவன் நெறியை உரைத்திடுவோம் !
எங்கே இருந்த பொழுதினிலும் 
   இன்பத் தமிழை வளர்த்திடுவோம் !
அங்கே நம்மின் சொந்தங்கள் 
   அடைந்த துயரைத் துடைத்திடுவோம் !
இங்கே இயங்கும் செந்தமிழின் 
    சோலை செழிக்க உழைத்திடுவோம் !

தேனின் இனிய செந்தமிழைத்  
  திசைகள் எட்டும் தாங்கட்டும்!
வானின் விளிம்பைத் தொட்டுவரும் 
   வன்மை நெஞ்சுள் ஓங்கட்டும் !
ஊனில் உயிரில் இனப்பற்றே 
    ஊறி நன்றே  தேங்கட்டும் ! 
கானின் மணமாய் நம்வாழ்வு 
    கமழ இணைந்து செயற்படுவோம் !

நம்மால் இயன்ற உதவிகளை 
    நாட்டுக்கு அளித்தல் முதற்கடமை !
செம்பால் நிகர்த்த செந்தமிழின் 
    செம்மை காத்தல் நம்முடமை !
அம்பாய் விரைந்து பணியாற்றும் 
     ஆற்றல் தரித்தால் வரும்பெருமை !
அம்பாள் அடியாள் அனைவரையும் 
     அன்பால் வணங்கி வாழ்த்துகிறேன் !

                                

                                              வாழ்க தமிழ் !வளர்க தம் பணி !
                                                                             
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/10/2015

குருவின் ஆசியுடன் பெருகட்டும் இனியநற் பாக்கள்..



முத்தான சந்தங்கள் முன்னின் றொலிக்கவே
வித்தையைக் கற்று வியப்புறலாம்! - நித்தமும்
பாமாலை சூடுகிறார் பாரதி தாசனார்!
பூமாலை போன்றே புனைந்து! 

எண்ணச் சிறகில் எனைத்தாங்கி
   எங்கோ அழைத்துப்  போகின்றார்! 
வண்ண  வண்ணக்  கனவுடனே  
    வானில் பறக்கச் செய்கின்றார்! 
உண்ண உறங்கப்  பொழுதில்லை!   
    ஊக்கம் மிகவே உழைக்கின்றோம் !
விண்ணைத் தொட்டுக் குதித்தாட 
    விளைத்தார் புலமை என்குருவே! 

அள்ளித் தருவார் அரும்பாக்கள் 
    ஆழம் மிகுந்த கருத்தோடு!  
துள்ளித் துள்ளி மனம்பாடும் 
    தூய தமிழின் சுவைசூடும்! 
பள்ளிச் சிறுவர் எனநாங்கள்  
   பாக்கள் பயின்று வருகின்றோம் !
தள்ளி இருந்த யாப்பமுதைத்
     தந்து மகிழ்ந்தார் என்குருவே! 

கண்கள் காணும் காட்சிகளைக்
   கவிதை யாக்கும் கவியரசர் ! 
புண்கள் போக்கும் வகைதனிலே 
   பூக்கும் பாக்கள் புத்தமுதே! 
விண்ணின் வந்து  விழுந்திடினும் 
    வீரம் பொங்கக்  கவிபுனைவார் !
மண்ணைப் போற்றும்  மறவரென 
    மானம் காக்கும் என்குருவே! 

ஏங்கித் தவிக்கும் மனநிலையை 
   என்றும் அகற்றும் தமிழ்தருவார்! 
வீங்கிப் பெருத்து விழிபிதிங்கி
    வெம்பும் நிலையை மாற்றிடுவார்! 
மூங்கில் இசைபோல் என்னுடைய 
     மூளை குள்ளே புகுந்திடுவார்! 
தேங்கிக் கிடக்கும் உணர்வுகளைத்   
     தேனாய் மாற்றும் என்குருவே! 

பாடும் பணியே பணியெனநான் 
   பாடப் பெருகும் புதுச்சுகமே 
தேடும் எவையும் அழிந்திடலாம் 
    தேயா திருக்கும் மொழிப்பற்றே! 
வாடும் மனத்தின் வருத்தத்தை 
    வடித்தே  நீக்கும் வண்டமிழே! 
கூடும் இழந்த பறவையெனைக்   
     குளிரச் செய்யும் என்குருவே!

எண்ணக் கருத்தைச் செவிமடுத்தே 
   ஏற்றம் பெறுவீர்! மின்னுகின்ற 
வண்ணக் கவிதை வடித்திடவே  
    வருவீர்  இனிய உறவுகளே!
கண்ணைக் கவரும் வலைத்தளத்தில் 
    காலம் முழுதும் பயின்றிடலாம்!
நண்ணும் நலங்கள் தந்திடவே     
    நன்றே உழைக்கும் என்குருவே!

                                                                            
http://bharathidasanfrance.blogspot.ch/ என்றன் குருவின்  வலைத்தளம் கண்டு நாளும் வளம் பெறுவீர் !வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/06/2015

அரசுகளின் கவனத்திற்கு

                                         

அழிவதை நினைவில் தேக்கி 
   அலைந்திடும் உலகின் போக்கை
விழிகளில் உணரு கின்றோம் 
   விடைதனைத் தருவார் யாரோ?
மொழிந்ததை ஆய்ந்து நன்றே 
   முன்வரும் துயரை நீக்கு!   
தொழிலுறும் துாய்மை யாலே  
    தொடர்வினை அகலும் இங்கே !

பயிர்வளம் கருக நாளும்  
   படர்துயா் வந்தே சேரும்!
உயிர்வளம் தழைப்ப தெங்கே?
   உடனிதை  உணர்தல் நன்றே!
மயிரிழை போன்றே வாழ்வு!  
    மனமுதை உணா்தல் வேண்டும்! 
துயில்கிறார்  கவலை யின்றி
    துயரிதைத் தடுக்க வாரீர்!

கயவரை அடக்க எண்ணி 
  கழிச்செயல் புாிதல் ஏனோ? 
உயரிய நெறியை விட்டே
  உயிர்களைப் பறித்தல் ஏனோ? 
தயவுடன் அறியத் தந்தோம் 
   தருமத்தைக் காவல் செய்வீா்!
முயற்சியே இன்றி நாட்டை 
    முடக்குதல் கொடுமை அன்றோ?

குடிமனை எரியக் கண்டு 
    குமுறுது மனமும் இன்று !
மடிபவர் மனிதர் என்று 
   மனங்களும் உணர்தல் நன்று!
விடிவினை எதிர்கொள் ளத்தான் 
   விரைந்தொரு முடிவைத் தேடி 
அடிமையெம் அகத்தின் ஓசை 
    அயர்விலா தொலிக்கு திங்கே !

டைமைகள் இழந்த மக்கள் 
   உாிமையைப் பெறவே வேண்டும்!  
கடமையை உணர்ந்தே நாடு  
   கடன்தனைப் புாிதல் வேண்டும்!
மடமைகள் அறிவை மாய்க்க 
    மனிதனை மனிதன் மேய்ப்பான் 
இடரெலாம் நீங்கும் வண்ணம் 
     இனிதுறும் வழிகள் செய்வீர்! 
                                                                      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/31/2014

புத்தாண்டே வருக வருக !


                   


புத்தாண்டே  புன்னகை பூத்தாட வந்துதிப்பாய் 
சத்தான ஆண்டாய்த்  தழைத்திடுவாய்  !-வித்தைகள் 
கற்றோரும் மற்றோரும் கண்டுள்ளம் பூரிக்க
நற்பயனைத் நாளுமே   நல்கு !

வேரோடு  மடிந்து வீழ்ந்தோம் 
   வேதனை தினமும் பட்டோம் ! 
போராடும் மறவர் எங்கள்
    போர்க்காலம் முடிந்து போக 
சீரோடு செழிப்பும் சேர்த்து  
    சீராட்ட மலர்ந்த ஆண்டே 
தேரோட வழிகள் செய்வாய் 
    தேசத்தின் நலனைக் காத்தே  !

பொல்லாத விதியை மாற்றிப்   

   பொன்னான  மதியை ஊட்டி
இல்லாத நலனைக் கூட்டி  
    ஈழத்தில் விடிவைக் காட்டி  
நல்லோரும்  பதவி ஏற்க 
   நாடெங்கும்  மகிழ்ச்சி பொங்க  
அல்லலை அறுக்க வந்த 
    ஆண்டாக மலர்க நன்றே  !

காலத்தை வகுத்த தேவன் 

  கண்ணீரில் குளிக்க வைத்தான் !
ஓலத்தை நிறுத்தி நீயும் 
   ஓய்வாக இருக்க வைப்பாய் !
ஞாலத்தில் அமைதி தங்க  
   ஞாயிறாய் வளர்ந்து நின்று 
சீலத்தை மதிக்கும் மக்கள் 
    சீர்பெற்றும்  மகிழச் செய்வாய் !

புத்தாண்டு பிறக்கும் போது 

   பூமிக்கே மகிழ்வு கிட்ட 
சித்தத்தால் மலர்கள் தூவும் 
  சிங்காரத் தமிழைக் காண்பீர் !
எத்திக்கும் அமைதி கமழ 
    எல்லோரும் சமமாய் வாழ 
வித்தைகள் புரியும் ஆண்டே 
   வில்லேந்தும் பகையை ஒட்டு !

வாவென்று நெஞ்சம் பாடி 

   வண்ணமலர் தூவி ஆடும் 
போவென்று துன்பம் தன்னை 
   போக்கியே ஆள  வேண்டும்! 
நாவார எளிய  மக்கள் 
   நாள்தோறும் நினைத்துப் பாடும் 
தேவாரம் எனநீ நின்றால்  
    தேவர்க்கும் மகிழ்வு தானே !



வணக்கம் !


அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !பிறக்கப் போகும் ஆண்டு எல்லோருக்கும் எல்லா நலனும் வளமும் நல்கிட இறையருள் கிட்டட்டும் .

                                                                          



                                                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/29/2014

புதியதோர் உலகம் செய்வோம் !...

                           
                                    

கடந்த 27.12.2014 பாரிஸ் கம்பன் கழக கவியரங்க நிகழ்வில் இடம்பெற்ற 
"புதியதோர் உலகம் செய்வோம்" என்ற தலைப்பிற்கு அமைய எங்கள் கவிஞர் ஐயா கி .பாரதிதாசனார் அவர்களின் அழைப்பை ஏற்று நான் எழுதிய விருத்தப் பாமாலை இது .இதனை அன்றைய தினம் அரங்கில் என் சார்பில் பாடி மகிழ்வித்த கவிஞருக்கும் எங்கள் கவிஞர் ஐயா கி ,பாரதிதாசனார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் ...

                                          
                                                                         

நெஞ்சை அழுத்தும் உணர்வுகளை 
     நேரில் சொல்லத் துணிவுமில்லை! 
அஞ்சிப்  பிழைக்கும் அகதிகள்போல் 
     அல்லல் லுற்றோர் எவருமில்லை !
தஞ்சம் எனநாம் வருகையிலே 
     தானாய் எதுவும் புரிவதில்லை ! 
கெஞ்சும் நிலையில் வருந்துயரால் 
     கேள்விக் குறிகள் குவிந்தனவே !

சொந்த மண்ணில் சுதந்திரமாய்ச்  
   சோர்வு இன்றி மனம்போலப்  
பந்த  பாசப்  பயிர்வழத்து  
   பாரில் வாழும்  வழிவகுப்போம்
எந்தப் போரும் முடிவுற்றே 
  ஏற்றம் தந்தால் அதுபோதும் !
வெந்து போகும் மனநிலையை 
  வேரோ டெங்கும்  அழித்திடுவோம் ! 

குண்டு மழையைப் பொழிகின்றார் !
   குற்றம் இழைத்தும் மடிகின்றார் !
கண்டு களித்த பயனென்ன?..
    காற்றும் எமக்குப் பகையாக !
தொண்டு புரியும் மனம்வேண்டும் 
    தோல்வி இனியும் தழுவாமல் 
கொண்டு வருவோம் புதுச்சட்டம் 
   கொல்லும் துயரைத் தடுத்திடுவோம் ! 

எங்கும் எதிலும் மறுமலர்ச்சி 
   ஏணிப் படியாய் விளங்கட்டும் 
மங்கும் உலகின்  வளர்ச்சிக்காய்  
  மனங்கள் சேர்ந்தே உழைக்கட்டும் !
பொங்கும் கடலும் புவியாவும் 
  பொங்கா திருக்க வழிசெய்வோம் !
சங்கும் முழங்க பறைதட்ட 
  சான்றோர் புகழை எடுத்துரைப்போம் !

வீதி தோறும் விழிப்புணர்வை 
  வெல்லும் வண்ணம் விளைத்திடுவோம் ! 
நீதி எங்கும் நிலைத்திடவே 
   நேர்மை யோடும் உழைத்திடுவோம் 
சாதி பேதம் தவிர்ப்பதற்காய் 
    சாவைக் கூடத் தழுவிடுவோம் !
சேதி சொன்ன மறுகணமே 
    சேவை ஆற்றத் துணிந்திடுவோம் !

முற்றும் முழுதாய் நலம்விரும்பி 
   மூளும் எங்கள் பணியிதனால் 
பெற்றுத் தருவோம் சுதந்திரத்தைப்   
   பெருமை பொங்கும் உலகமைத்து !
சுற்றம் மகிழ கடனாற்றிச்  
   சுடரும் உறவை ஏற்றிடுவோம் !
கற்ற தமிழை உலகெங்கும் 
   கமழச் செய்து மகிழ்ந்திடுவோம் !

                                                                           

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

என்னவென்றுரைப்பேன் இதை!



எண்ணம் இனிக்க இதயத்துள் நின்றவளே !
வண்ண மலரே! அருகே..வா!-கண்ணனிவன்
வாடுகையில் வஞ்சியே வாரா திருப்பாயோ? !
பாடும் குயிலே பகர்!

அன்னைத் தமிழை அமுதாய்ப் பொழிந்தவளே !
உன்னை மறந்தோ உறங்கிடுவேன் !-பொன்னையும்
வேண்டேன்!  பொருளையும் வேண்டேன்எந் நாளுமெனை 
ஆண்டிடுக அன்பை அளித்து !

வண்டமிழ் காற்றாக வான்பரப்பில் வந்தாட 
தொண்டுகள் நீ...புரிவாய் தோழமையே !-அண்டங்கள்
அக்கக்காய்ப் போனாலும் அன்பே...நீ போகாதே!
துக்கத்தை  ஏற்பேன் தொடர்ந்து !

கன்னித் தமிழமுதைக் கண்டவர் கைதொழுவர் !
உன்னை அடைந்தேன் உயிராக !-தன்னையே
தான்வதைக்கும் துன்பமேன் ?..தாமரையே சொல்லிங்கு ? !
வான்மதியாய்த்  தேயுதே வாழ்வு!

சுண்ணாம்பில்  இட்டாலும்  தூய தமிழ்வேண்டும் !
கண்ணாக நான்மதிக்கும் கட்டழகே !-விண்ணாளும்
நன்மதியும் விட்டகல நான்கண்டேன் உன்னாலே!
என்னவென்று ரைப்பேன் இதை! 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/17/2014

முருகா முத்தமிழ்க் குமரா !


மண்ணும் வியக்க நின்றவனே  
மதுரத்  தமிழின் நாயகனே !
எண்ணும் பொழுதினில் வந்திங்கே
ஏற்றம் தந்து அருளாயோ !

கண்ணும் உன்றன் கழல்தேடிக்
காத்துக் கிடக்குது காவலனே!
விண்ணும் அதிர வந்தேதான்
விரும்பும் வரத்தைத் தந்தருள்வாய் 

பண்ணில் நிறைந்த படரொளியே
பாடும்  குயிலெனைப் பாடவைப்பாய்
கண்ணில் உன்றன் நினைவேந்திக் 
கவிதை மழைநீ பொழிய வைப்பாய் 

நண்ணும் துயரை நறுக்கியொரு
நாட்டம் அருள்வாய் நாளுமிங்கே
கண்ணும் கருத்தும் ஆனவனே
கருணைக் கடலே தேனமுதே !

செக்கச் சிவந்த மேனிதனில்
சேர்த்து முடிப்பேன் சந்தனத்தை
சொக்க  வைக்கும் சுந்தரனே
சோலை வனத்தின் நாயகனே!

பக்கம் வந்தால் போதுமிங்கே
பாமழை பொழியும் தன்னாலே
மிக்க நலன் தரும் பார்வையினால்
மீட்டுக யாழென என் மனதை ....


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/07/2014

நினைவுகள்

                            


நினைவுகள் நெருங்கி வந்து 
        நெஞ்சினை மெல்லத்  தூண்டும் !
தனைமறந் ததனால் உள்ளம் 
       தவிப்பினை விரைந்தே ஏகும்  !
முனைகிறேன் இருந்தும் என்னுள் 
       முடங்கிய நினைவைச் சொல்ல
தினையள வெனினும் இன்பம் 
       திரண்டிட வாழ்த்து வீரே ! 

கலைகளை சுவைக்கும் கண்கள் 
       கவலையில் உறைந்த நேரம் 
சிலைகளை வடித்துப் பெற்ற 
       சிறப்பினை நினைக்கும் போது 
மலையென மகிழ்ச்சி என்னுள் 
       மறுபடி வளரக் கண்டேன் !
அலைகடல் கடந்தும் இன்றே 
      அவைதரும்  உயர்வே உச்சம் !

இனியன எதுவோ வாழ்வில் 
     இவைகளை நினைத்துப் பார்ப்போம் 
தனிமையை அதுதான் போக்கும் 
      தகுதியை  எமக்குள் தேக்கும் !
கனிவுடன் பழகும் நட்பே 
       கரும்பென இனிக்கும் வாழ்வில் !
சனிதரும்  துயர்கள்  வேண்டாம் 
      சகலரும் இணைவோம் வாரீர் !

பகைவரை நினைத்து நாளும் 
     பகையினை வளர்த்தால் துன்பம் 
வகையிலா வருத்தம் தந்து 
     வருந்திட முடக்கும் அன்றோ !
நகைப்பவர் நகைத்தால் என்ன !?
      நமதுயிர் நமக்கே சொந்தம் !
தொகைகளை மறந்து வாழ்வில் 
     தொடருக சிறந்த நட்பை !

நினைவது சிறந்து நின்றால் 
      நினைப்பவை பெறுமே வெற்றி !
அனைவரும் மகிழ்ச்சி காண 
      அகமது சிறக்க வேண்டும் !
மனைகளில் தொடரும் யுத்தம் 
      மலையென வளர்தல் நன்றோ !
வினையிதைத் தடுத்தே நாளும் 
     வியப்புற உயர்வோம் வாரீர் !

உறுதியை மனதில் ஏற்க
     உயர்தர உணர்வு வேண்டும் !
குறுகிய நினைப்பால் உள்ளக் 
     குமுறலே எதிலும் தோன்றும் !
இறுதியும் முதலும் என்றே  
    எடுத்திடும் முடிவும் மாறும் !
பொறுமையை உணர்த்தும் சக்தி 
    பொதுவினில் நினைப்பாம் கேளீர் !

நெஞ்சக் கூட்டில் நினைவுகளாய் 
      நித்தம் பொங்கும் சிலதுயரை 
வஞ்சம் செய்து அடக்கையிலே 
      வாழ்வே மாயம் எனவலிக்கும் !
பஞ்சம் வந்தும் மடிந்திடவே 
      பாவி மக்கள் வரைந்ததிட்டம்
மிஞ்சும் எங்கள் உறவுகளை 
      மீளா திங்கே பறிக்கிறதே ! 

கொல்லும் இந்த நினைவுகளால் 
    கோதை நெஞ்சம் முடிவுறுதே !
வெல்லும் என்ற பலகனவும் 
    வெட்டிச் சாய்த்து மடிகையிலே
புல்லும் கண்ணீர்த் துளிவிடுதே 
    பூவும் பிஞ்சும் உயிர்த்திடத்தான் !
சொல்லும் போதும் வலிக்கிறதே 
    சோகம் பொங்கும் நினைவுகளை !

பெண்ணைப் போற்றும் புலத்தினிலே  
    பேய்கள் தந்த பெருந்துயரம் 
கண்ணை விட்டும் மறைந்திடுமா ?!
   கண்டேன் இன்னும் கலங்குகிறேன் 
அண்ணன் தம்பி தலையிழந்தே  
    அங்கும் இங்கும் கிடக்கையிலே 
எண்ணம் உற்ற வலியதனை 
    எங்கே சென்று எடுத்துரைப்பேன் !

                                   


                             தாயே !
தேசம் முழுதும் மலர்ச்சோலை 
    தேடி மலரும் நிலைவேண்டும்!
பாசக் கரத்தை இணைத்திங்கே 
   பாலும் பழமும் தரவேண்டும் 
கோசம் எதற்கு அதுவேண்டாம் 
   கோடி நலங்கள் பெறவேண்டும் 
நேசம் நிறைந்த தமிழ்த்தாயின்  
   ஏக்கம் தணித்து அருள்செய்வாய் !

தேன் சிந்தும் பாமாலைகளைத் தினமும் தொடுக்கும் எங்கள் கவிஞர் ஐயா கி .பாரதிதாசனார் என்னிடம் கொடுத்த "நினைவுகள்" என்ற தலைப்பிற்கேற்ப இவ் விருத்தப் பாமாலையைத் தொடுத்துள்ளேன்.பாரதிதாசன் ஐயாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் . அன்பு நெஞ்சங்களே தங்களின் ஆதரவிற்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி .





  

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/26/2014

கனவு சிதைந்ததா?... காற்றில் பறந்ததா? ....





கனவு சிதைந்ததா?...
காற்றில் பறந்ததா? ....
கணித மேதையே சொல்லடா -உன்றன்
கணக்குத் தப்பெனக் கொள்ளடா ...

விழியில் ஈரம் காய்ந்து போகுமா? -எங்கள்
விடுதலை தாகம் ஓய்ந்து போகுமா ?...
இடிந்து போனது போதுமடா ..
இருகரம் கூப்பினோம் வாருமடா...

 மரணத்தை நேசிக்கும் மாவீரர்  உள்ளத்தில்
மாபெரும் இலட்சியம் உள்ளதடா அந்த
இலட்சியம் வென்றிட  எமக்கும்  தான்
இங்கொரு இடை வெளி தேவையடா ...

பறவைக்கும் சொந்தமாய்க்  கூடுண்டு
அன்பைப் பகிர்ந்திட என்றுமே தாயுண்டு
எமக்கிங்கே உலகினில்  என்னவுண்டு ?...அட
எறிகணை தரும் வலி தான் உண்டு ....

எதிரியின் கனவுகள் சிதைந்திட வேண்டும்
எமதுயிர்க் கொடி மண்ணில் பறந்திட வேண்டும்
இலட்சிய வேங்கைகள் சிரித்திட வேண்டும்
ஈழத்தாய் மடியினில் தூங்கிட  வேண்டும்

அகதியின் வலி இது புரிகிறதா ?.....
உயிர் ஆகுதியாவது தெரிகிறதா?..

எடு எடு தொடு தொடு கணைகளை விடு விடு
என மனம்  இங்கு வலிக்குதடா ...
அந்த வலி தரும் ஓசையில் எதிரியின் ஆசைகள்
நிட்சயம் ஒரு நாள் வீழுமடா ....

பனி மலை உருகிடும் வேகம்
அதை விடப் பெரியது எம் தாகம்
விரைவினில் ஈழத்தை வெல்லும்
அந்த விடுதலை தாகத்தைக் கொல்லும்

                                                                (     கனவு சிதைந்ததா?...)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/10/2014

சாவு மலியும் தேசத்தில் இருந்து ஓர் அழுகுரல் ! கேட்கிறதா ?



உயிரைக் கொல்லும் நோய் பெருகி
உணர்வைத் தின்னப் பார்க்குதடா!
துயிலும் இல்லம் பலரையும் இங்கே
துரத்திப் பிடித்து மடக்குதடா !

வழமை நிலைமை மாறும் போதும்
வாழ்வில் அச்சம் மூளுதடா!
களவும் பொய்யும் சுயநலத்தால்
கட கட கடவென வளருதடா !

மலையைப் போல சுமை தாங்கி
மனதும் மரத்துப் போனதடா!
அலையும் புத்தி ஞாபகத்தை
அறவே இழந்து வாடுதடா!

இயற்கை அளித்த கொடையெங்கே!
இதயம் கேள்வி கேட்குதடா !
திரும்பிப் பார்த்தால் எம் வாழ்க்கை
திருட்டுப் போனது புரியுதடா!

பயிலும் கல்வி அறிவெல்லாம்
பகட்டாய் எண்ணத் தோன்றுதடா !
கணக்கில் புலியாய் இருந்தமனம் இன்று
கணணியை நம்பி வாழுதடா !

செயற்கை செய்த சாதனை எதுவோ அதைத்தான்
செத்தவர் பட்டியல் காட்டுதடா !
இயற்கையைப்  பேணும் நல்லெண்ணம் இனி
இருந்தால் மட்டுமே உலகம் உய்யுமடா !


இயற்கை என்பது இறைவன் கொடுத்த 
வரம் !
செயற்கை என்பது மனிதன் தேடிக் கொண்ட 
சாபம்! 
வரமா சாபமா வாழ்விற்குகந்தது ?...
சிந்திப்போம் !


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/04/2014

முன் நின்று காப்பவனே !



மனமென்னும் மாளிகையில் மரத்துக் கிடக்கும்
மனிதநேயம் இப்போதே விழிக்க வேண்டும் !
இனபேதம் மதபேதம் பார்த்தே நாளும்
இன்னலுறும் நிலையிங்கே மறைய  வேண்டும் !

தினந்தோறும் நற்கருமம் நிகழ வாழ்வில்
தீமைகளை இவ்வுலகம் எதிர்க்க  வேண்டும் !
வனவிலங்கு போல்வாழும் வாழ்வின் கொடுமை
வருங்கால சந்ததிக்கும் புரிய வேண்டும் !

வருவாயைக் காரணமாய் வாழ்வில் கொண்டு
வகுத்த நீதி  அத்தனையும் முடங்க வேண்டும் !
பெரும் சேதம் விளைவிக்கும் துர்புத்தி
பெருமான உனதருளால் ஒழிய வேண்டும் !

அரும்பாடு பட்டு உய்யும் எங்கள் வாழ்வு
அன்பாலே எந்நாளும் தழைக்க வேண்டும் !
விரும்பாத எச்செயலும்  தீண்டா வண்ணம்
விடையேறி வந்தெம்மைக் காக்க வேண்டும் !

பிடிவாத குணம் மண்ணில் மறைய வேண்டும்
பிறர் வாழ வாழ்த்தும் எண்ணம் நிறைய வேண்டும் !
அடியோடு வெறுப்புணர்வு அகல வேண்டும்
அழகான சிந்தனைகள் பெருக வேண்டும் !

இளகாத மனமெங்கும்  இளக வேண்டும்
இரக்க குணம் அனைவருள்ளும் சிறக்க வேண்டும் !
தளராத நம்பிக்கையைத் தந்தருள வா
தர்மத்தின் திருவுருவே தரணி தனிலே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.