8/07/2012

இப்படி இருந்தால் எப்படி!.....


மதி கெட்டு விதியை நம்பி
மனம் நொந்து உலகை மறந்து
இருளுக்கு  அடிமையாகி
இது என்ன வாழ்வு என்றால்

மனச் சோர்வு உடலைத் தாக்கும்
மழைத் துளியும் பாரமாகும்
உறவெல்லாம் தூக்கி ஏறிந்து
ஒரு மூலையில் முடங்கச் சொல்லும்!...

இதற்காகவா நாம் பிறந்தோம்
பின் எதற்க்காக நாம் பிறந்தோம்
கொஞ்சம் விரிவாகச் சிந்தித்தாலே
வாழ்க்கை வியப்பாக அமையும்
                                                          இவர்போல்!... 
உலகுக்கு நன்மை செய்து
உளதார வரும் அன்பை ஏற்று
பல ஜென்மம் போற்றும் வகையில்
பண்போடு வாழ்ந்தால் என்ன!!!.......

தரை மீது தூங்கும் போதும் இன்பம்
தானாக நெஞ்சில் பொங்கும்
நிலை இல்லா செல்வம் மறந்து
நிலையான அன்பை அடைந்தால்!...

திருக்கோவில் தெய்வம் நீயே
என்றும் பிறருக்காக வாழும்போது
உனக்கென்ன கவலை இங்கே
உன்னை நீயே கேட்டுப் பாரு!....
யாரை நம்பி நீ பிறந்தாய்!....
இங்கு யாரை நம்பி நீ வளர்ந்தாய்
நாம் வாழும் இந்த உலகத்திலே
எந்நாளும் வேண்டும் நல் இதயம் அன்பே!:....

உயிரின் தாகம் தீர்க்கத் தண்ணி உண்டு
உள்ளம் மகிழ இயற்க்கை உண்டு
எண்ணம் முழுதும் தெளிவானால்
இதமாய் வாழ நல் வழியும் உண்டு

சின்னச் சின்ன ஏக்கங்களால்
சிதைந்து போகும் நல் மனங்களுக்கு
இன்னும்  உலகில் புதுமை உண்டு
இதை ஏற்றுக்கொண்டால் மாற்றம் உண்டு!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/05/2012

நிலவுக்கு களங்கம் யார் சொன்னது!...


அரிய நற் குணங்கள் நிறைந்திருப்பினும் 
அழகிய சிந்தனை ஊற்றெடுப்பினும்
விதியதன் வலிமைதனை எங்கும் 
வென்றவர் உண்டோ கொங்கணவா!...

மதிதனை இழக்கா மானிடனும் 
சதி வலையதனில் வீழ்ந்த பின்னால் 
உதவிடும் கரங்களை அறியாமல் 
உயிரதை இழக்கும் நிலை வருமே!...

இதனால் தவறிய பூக்கள் தரைதனிலே 
அதன் தரம்தனை ஏதும் குன்றாமல் 
பலரது பாதம் நசிக்கிடவே பாவம் 
பகலவன் உயிரைப் பறிப்பதும் ஏன்!....

அரை குறை உண்மையில் தெளிவுண்டோ!..
அடுத்தவர் குண நலன் வகுப்பதற்கு!......
நிறை குடம் என்றே எமை  நினைப்போம் 
நீதி அறிந்த பின்னாலேதான் வருந்தி நிற்போம்

மனிதனின் இயல்பு இது ஒரு புறம் இருக்க 
மழுங்கிய மானம் என்றும் வளர்ந்திடுமோ!...
கரு முகில் வார்த்த கண்ணீரில் 
கலியுகம் மலருது பார் எந்நாளும் !!!......

ஒருவரை ஒருவர் குறை கூற 
உண்மையின் ஆழம் தெரிந்திடல் வேண்டும் 
நிலைமையை உணரா வர்ணனைகள் இதனால் 
நீதிக்குத்  தண்டணைதான் எந்நாளும்......

(கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் 
பொய் தீர விசாரிப்பதே மெய்!!!!................. )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/31/2012

பூமித் தாயே கலங்காதே

பூமித் தாயே கலங்காதே
பெரும் பூகம்பத்தை விரும்பாதே!
பல உயிர்கள்  உண்டு உன் மீது
பாவம் அவை நீ பண் பாடு!

கோரத் தாண்டவம் ஆடிடும்
கொடிய மனிதர் செயல் கண்டு
தீப்பிழம்பைக் கக்காதே
தீர்ந்து போகும் இவ்வுலகே!


ஆத்திரத்தில் அம்மா நீ
அசையும்போது இடர் வந்து
சேர்த்து வைத்த செல்வம் எல்லாம்
சிதைந்து போகுதே  கண் முன்னாலே!

நேற்றா இன்றா நீ பொறுத்தாய்!...
நித்தம் இடியைத் தாங்குபவள்
நீ வாட்டம் கொண்டால் வளம் ஏது!
வறண்ட நிலத்தில் உயிர் நிலைக்காது!

காற்றும் மனிதன் செயலாலே
கலைந்தே போகுது தழுவாமல்!
வேத்துக் கொட்டும் உடலுக்கு இனி
வெப்பம் தணிக்க மரம் ஏது !

பூத்துக் குலுங்கிய பூமியம்மா உன் மீது
பொலியும் கட்டிடம் இது கொடுமையம்மா!
உனைத் தேற்ற மனிதன் நினைக்கவில்லை
அவன் தவறை உணர்த்த வழியும் இல்லை!
அடைக்கலம் ஆனோம் உன் மடி மீது
அம்மா உன்போல் ஒரு தெய்வம் ஏது!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

காற்றாக நான் மாறவா!...

காற்றாக நான் மாறவா!...
கடல் அலையாக நான் மாறவா!... 
தண்ணீர் ஊற்றாக நான் மாறவா!.... 
தாமரைப் பூவாக நான் மாறவா !... 

தணியாத தாகம் என்னுள்ளே 
ஏனிந்த மோகம்!!!!.......... 
உனைப் பாடும் பாடல் அதைத்  
தினம் கேட்க்கும்போது!............

எரிகின்ற தீ மேல் 
மெல்ல விழுகின்ற நீர் போல் 
சுகம் பொங்குதே!!!........என் 
மனம் ஏங்குதே!!!.......

உன்னை நினைந்தாடவே 
தவிக்கின்றதே  உடல் துடிக்கின்றதே  
முன்னொரு போதும் இல்லாத பரவசம் 
என்னுள் உருவானதே அது எனை மீறுதே!!!....

உன்னிரு கரம் கொண்டு அணைக்க 
எனக்கொரு வரம் வேண்டுதே!!!...... 
உள்ளம் நதி போல் துள்ளிடத் துள்ளிட 
எண்ணம் முழுதும் கவிதை வெள்ளம்
பொங்குது பொங்குது பாரம்மா!!!..... 

இன்னல் தீர்க்கும் தாயே 
என்னுள் இருப்பவள் நீயே!!..... 
உன்னைத் தாங்கும் என் இதயம் 
இந்த உலகை மறக்க வேண்டும்!... 

எண்ணம் முழுதும் உனக்காக
உயிர் ஒளி தீபம் ஏற்ற வேண்டும்!..... 
அன்னை உந்தன் பாதம் அடியவள் 
தொழும் வரம் ஒன்றே போதும்!...

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/30/2012

தெய்வம் இருப்பது எங்கே.....

பணம் படைத்தவன் தேடுகின்றான்
நல்ல குணம் படைத்தவனை அது
தேடி ஓடுகின்றது !!!!.................
தன்நலன் மறந்து தாயானாள் உயர்
தாகம் தீர்க்கும் நீர் போலானாள்
அன்னை இவள்போல் வாழ்வதற்கு
எண்ணம் கொண்டால் போதும். இனி நீ யார்?.....
                                                                                                 
இளமை தனிலே முதுமை கேட்டாள்
இறைவனிடத்தில் மனத்தைக் கொடுத்தாள்
உலக நன்மை கருதியே என்றும்
ஓயாது நன்னெறி பாடல் இசைத்தாள்!.....


குறுகத் தந்த குறளதனால்
கோடி நன்மை இவ்வுலகம் பெறும்
அறிவுச் சுடராய் விளங்கிய மனிதர்
ஆற்றிய தொண்டுக்கோர் எல்லை இல்லை!....


காந்தித் தாத்தா என்றாலே
கண்கள் வியந்து  நின்றாரே !..........
மாண்டும் இவர் புகழ் உலகமெல்லாம்
மங்க்காதிருப்பது எதனாலே ?......!!
                                   

நீண்டுகொண்டே போகும் இந்தத்
தேடல் என்பது தொடர் கதைபோல்
இனியும் வேண்டும் என்றே கேட்க்கும் கேள்வி
வீணே என்று நாம் உணர்வோம்!!!....... 
                                       

களவும் பொய்யும் நிறைந்த உலகில்
கடவுளைக் காண்பதும் பொய்தானே 
அதை உணரும் வகையில் உணர்ந்துகொண்டால் 
உள்ளது என்பதும் மெய்தானே ?.........!!


அறிவுச் சுடரை ஏற்றி வைத்து 
அன்பைத் தினமும் ஊட்டிவிட்டு 
மனிதநேயம் காத்து நிற்கும்  
மறைந்தும் மறையா  மா மனிதர்கள் எவரோ 


இவர்கள்தான் தெய்வம் என்று 
உணர்ந்தால் வாழ்வில் நன்மை உண்டு 
சினம் கொள்ளும் விவாதம் ஏனோ!...
உலகம் சீர்கெட்டுப் போன பின்னும்!!...

மனம் என்னும் கோவில் தன்னில்
மறைவாக உயர்ந்து நிற்கும் நற்
குணம் என்னும் பண்பே தெய்வம்
இது குறைந்தால் வாழ்வில் ஏது  இன்பம்!...


                                                    கடவுள் இருக்கிறாரா இல்லையா 
                                                    சொல்லு ?..சொல்லு?...சொல்லு???...
                                                     அட ச்சீ......இவங்க தொல்ல  
                                                     தாங்க முடியியல சாமி.....:):)                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/28/2012

தித்திக்கும் பாடல் நூறு .....





தித்திக்கும் பாடல் நூறு 
தீட்டாதோ என் கைகள் என்றும் 
எத்திக்கும் நிறைந்திருக்கும் 
என் தெய்வம் அருளால் இங்கு 

பக்திக்கோர் எல்லை இல்லை 
என் பாமாலை உன்னைச் சேர 
வித்தைக்கு அதிபதியே நீ 
வா வா வா ....எந்தன் முன்னே!....

முத்துக்கள் போல வார்த்தை 
முரண் அற்று முழுமை சேர 
என் சித்தத்துள் தெளிவு தந்து 
தேவியே நின் அருளைக் காட்டு!...

மொத்தத்தில் என்னில் உன்னை 
நான் முழுதாக உணரும் தன்மை 
சித்திக்க நல் வழிதான் என்ன!.....
உன் சீரான திருவடிக்கீழ் என்றும் 

சக்கரம்போல் சுத்துகின்றேன் 
என் சங்கடங்கள் தீர்த்தருள்வாய் 
செந்தமிழால் கவி பாடி இறைவன் 
அவன் சிந்தனையில் நிதம் வாழ 

எந்தன் உயிர் ஏங்குதடி !...........
இனி ஏழ் பிறப்பும் இது போதும் 
போதும் போதும் என்றே மனம் 
துதி பாடும் வகை அருள் தருவாய் தாயே!......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/27/2012

அவளின்றி அணுவும் அசையாது!..

ஆடி வெள்ளி தேடி வந்து
அம்மன் அருளது பொலியட்டும்!......
உலகில் வாடி வதங்கும் உயிர்களுக்கு
செல்வம் அதனை வாரி வாரி வழங்கட்டும்!...

கோடி நன்மை அருளும் சக்தி
நற் குலத்தை நோக்கி நகரட்டும்
அவளைத்  தேடிச் சென்று கேட்ட வரத்தை
ஆசை தீரும் வரைக்கும் வழங்கட்டும்!.......
                                         
பாடித் துதிக்கும் பக்தர் கூட்டம்
இன்று பரவசத்தில் மூழ்கட்டும்
அவர்கள் நாடி நரம்பு அத்தனையிலும்
அட்ட சக்தியும் வந்து அமரட்டும்!........

திருவோடுகூடத் தங்கம் ஆகும்
அன்னை இவளை நம்பி இருந்தால்
அறிவோடு பண்பும் நல் ஆசி தந்து
என்றும் எம்மைக் காத்தருள்வாள்!.....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/23/2012

அத்திப் பூ மணம் மணக்க

அத்திப் பூ மணம் மணக்க
என் அத்த மக உன் நினைப்பு
தித்திக்குது நெஞ்சுக்குள்ளே 
தேன் கொடுக்க நீ வருவாயா?

கத்தரித் தோட்டத்திலே  
கட்டி வைத்த பொம்மை போல 
நித்தம் உந்தன் நினைப்பில் நான் 
நிக்குறேனடி தன்னாலே!

பட்டு உடல் தொட்டணைக்க 
பரிசம் நான் போட்டிடவா?
கெட்டி மேளம் கொட்டிடவே 
தாலி அதைக்  கட்டிடவா?

மொட்டு விட்ட மலரே உன்றன்  
முக அழகைக் காட்டாதே!
எட்டி நிலா பார்த்தால் போதும் 
வெக்கத்தால் வாடுமெடி

தத்தித் தத்தி ஓடும் பெண்ணே 
தரையில் மானைக் கண்டாயா?
வெட்டி வெட்டி விளிக்கும் விழியால் 
வீரக் கதைகள் சொன்னாயா?

கட்டழகுப்  பெட்டகமே உன் 
கன்னம் இரண்டும் தேன் கிண்ணமெடி  
காட்டுக்குள்ளே நீ நடந்தால் 
கனிகள் கூட ங்குமடி 

உன் தோட்டக்காரன் நான்தானே 
ஒரு தூது சொல்லடி செந்தேனே 
காத்திருக்குது என் உசிரு  உன்னைக் 
கவர்ந்து செல்ல நான்  வருவேனே.....  

                                     (  அத்திப் பூ மணம் மணக்க....)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/17/2012

தன்னையே தந்த தலைவா......

 தன்னையே தந்த தலைவா
இன்று என்னை நீ மறந்ததேனோ?
நெஞ்சிலே பொங்கும் துன்பம்
அது கண்களில் கங்கை ஆகும்!
நெஞ்சிலே பொங்கும் துன்பம்
அது கண்களில் கங்கை ஆகும்

                                      (தன்னையே தந்த ....)

உன்னிரு விழியும் தேடி
என்னுடல்  வாடும் போது
தன்னிலை மறக்கலாமோ!
தென்றலே சொல் சொல் சொல்?
மஞ்சள்  குங்குமமும்
மண மாலை தோரணமும்
கண்டாலே போதும் போதும்
ஆனந்தக் கண்ணீரில் நெஞ்சம் மோதும்!

என்னுயிர் தாங்கும் உடல் நீ
உன்னை நான் இழக்கலாமோ!
பொன் பொருள் ஏதும் வேண்டாம்
உன் புன்னகை ஒன்றே போதும்
அன்று நீ சொன்ன வார்த்தை
நெஞ்சினில் நின்றாடுதே
இந்த வன்முறை ஏனோ
சொல் சொல் சொல்?

கண்ணீரை மையாக்கிக்
கவிதை நான் வரைந்தேனே
உன்னை இது   சேராதோ?
என் உள்ளமதைக் கூறாதா?
வாடுதே என் மனம் 
உன்னைத் தேடுதே அனு தினம்!
தூது சொல் மன்னவா
என்னுயிர் நீ அல்லவா...

                                                (தன்னையே தந்த ....)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/15/2012

நீயின்றி நல் வாழ்வேது!...




ஒற்றை ரூபாய் மடிப்பிலே
ஓராயிரம் ஆசைகள் நினைப்பிலே
பெற்ற தாயின் தவிப்பினை
பிறர்தான் அறிய முடியுமா!!!.....

சற்றும் சோர்வு கொள்ளாமல்
தன் சுகத்தை மட்டும் தேடாமல்
முற்று முழுதாய் எமக்காக
முதுகு கோண உழைத்தாளே!!!....

குப்பை மேட்டில் அவள் கனவு
குலைந்து போகத் தனிமையிலே
செற்ற உடலைத் தாங்கியபடி அவள்
சீவன் உலாவுது எதனாலே!!......

உற்றார் உறவினர் யாவருமே
உயிராய் பழகி வந்தாலும்
பெற்ற தாய்க்கு இணையாக
பூமியில் எமக்கு யாருண்டோ

நித்தம்  வரும் நினைப்பிதனால்
தன் நின்மதியை இழப்பவள்  தாய்
அவள் கற்றுத் தரும்  நன்னெறியைக்
காக்க மறந்தால் நல் வாழ்வுண்டோ!....

பல்கிப் பெருகும் கலாச்சாரம் எமை
பாதை தவற அழைத்தாலும்
கல்லில் பொறித்த எழுத்தாகக்
காலம் முழுதும் வாழ்வோம் நாம்

உன்னைத் தொழுதால் போதும் அம்மா
உலகில் யாவும் இனிதாகும் இங்கு
கண்ணைத் திறந்து பேசும் தெய்வம்
உன் காலடி பட்ட மண்ணும் கவி பாடும்!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/10/2012

மனமே மயங்காதிரு!...

அன்னம் தண்ணி ஏதுமின்றி
அவதியுறும்  யீவன்கள் பல இருக்க 
இன்னும் இன்னும் வேண்டும் என்று
எதை எதையோ தேடி அலைகின்றோமே!..

என்ன புண்ணியம் செய்தோம் இங்கே
இத்தனை சுகங்கள் பெறுவதற்கு என 
எண்ணும் உணர்வு பெற்றால் போதும்
இதயத்தில் சுமைகள் குறைவதற்கு 


மனக் கண்ணில் தோன்றும் வாழ்க்கை என்பது 
எம் மனம் போல் என்றும் அமையாது இதைச்
சொன்னால் கேட்க்க மறுக்கும் குணத்தால்
வாழ்வில் சோதனைகள் குறையாது!...

கல்லில் முள்ளில் நடந்து வரினும்
கௌரவங்கள் குறையாது  பிறர் 
தொல்லைப் படுத்தும் அளவு கடனைப் பெற்றால் 
துன்பம்  என்றுமே தொடராகும்!!...


வெள்ளை மனமும் பிள்ளை குணமும் 
எல்லை இல்லா ஆனந்தம் தரும்!.. 
இது இல்லை என்றால்  போதும் உன்னிடம் 
இருப்பதெல்லாம் பொய்யாகும்


என்னை உன்னை உயர்த்திக் காட்ட 
என்ன வேண்டுமோ "நிஜ" வாழ்வினிலே 
அதை என்றும் தேடிக் கற்றால் போதும்
இந்த உலகம் உன்னைப் போற்றிடுமே!...
  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/29/2012

உனக்கொரு தாஜ்மகால்


உனக்கொரு தாஜ்மகால்
உள்ளத்தில இருக்குது
அதை உள்ளபடி காட்டிட
என் உள்ளம் இங்கே தவிக்குது!...

நீயொருத்தி இல்லை என்றால்
நெஞ்சமதைத் தாங்குமோ
நீ நடக்கும் பாதை தாண்டி
நான் நடக்கல் ஆகுமோ!.....

                                      (உனக்கொரு)

வான் பரப்பில் நிலவுபோல்
வந்துபோகும் தேவதை அடி
நீ கொடுக்கும் ஒளியில்தான்
நான் மின்னுகின்ற தாரகை

ஏழ் பிறப்பும் நீ வேண்டும்
என்னுடனே வந்துவிடு
வாழ்விருக்கும் நாள்வரைக்கும்
உன்னொளியில் வாழவிடு...

எனக்கெனப் பிறந்தவளே
என் எண்ணங்களில் தவழ்பவளே
உனக்கென வாழும் என்னை
உன் மனதில் தைத்து விடு ..
                                         
பெண் :

மனதினில் துயர் எதற்கு?..
என் மன்னவனே வந்துவிடு
இருவிழி காண்பதென்றும்
தனித் தனியாவதுண்டா ?.....

என் கனவினில் நினைவினில் உன்னை
எந்தன் காலமெல்லாம் சுமப்பேனே
உன் மடிதனில் தவழ்ந்திடவே
எனக்கொரு ஆணையிடு!

ஆண் :

அடி பெண்ணே இது
நீதானா நீதானா நீதானா!
உன் இரு விழி சொல்லும் வார்த்தை
அது நிஜம்தானா?
நிஜம்தானா`?   நிஜம்தானா?
உன்னால் இன்பம்
வந்தது வந்தது வந்ததிங்கே
உள்ளத்தில் ஆனந்தம்
பொங்குது பொங்குது
பொங்குதிங்கே...

                                      (உனக்கொரு.....)  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/27/2012

இருகரம் அணைத்து

இருகரம் அணைத்து இறைவனின் முன்னே
இதயத்தைத் தந்த என் உறவே -அன்று
முதன் முறை பேசிய வார்த்தையைக்கூட
முழுமையாய் மறந்ததென்ன!

நான் உனக்கெனப் பிறந்தவளோ?
உந்தன் உயிரினில் கலந்தவளோ?
இதை அடிக்கடி நினைக்கிற மனதினில்
துயரை நீதான் அறிவாயோ!

                                        ( இருகரம் அணைத்து)

வெள்ளிப் பனிமலை உருகுது என்றன்
மனமது தவிக்குது உன்றன்  இரு விழி
காண ஒரு வழி இல்லையோ?
வள்ளிக் குறத்தியின் அன்புத் தலைவனே
உந்தன் இதயத்தில் இன்று நானில்லையோ!

சின்னஞ் சிறு குயில் உள்ளம் முழுவதும்
உன்றன்  நினைவது வந்து துயர் தரவே
தன்னந் தனிமையில் நீ சொன்ன கதைகளை
எண்ணி எண்ணி நெஞ்சம் துடிக்கிறதே!.....

                              
கல்லில் முள்ளில் அன்று நடந்து வந்தேன் 
இரு கண்கள் இரண்டும் சிவந்து நின்றேன் 
அல்லும் பகலும் என்னை அணைத்த கரம் 
இன்னும் தழுவ வரவில்லையே அது 
ஏன்?......ஏன்?..ஏன்?

பெண்:

என்னை என்ன செய்ய நினைத்தாயோ?
என்றன்   உயிர்த் தலைவா நான் 
வெண்ணிலவு போல்தான் இங்கு 
உன் நினைவால் தேய்கின்றேன்!

அன்னை அவள் துணையும் இல்லை 
ஓர் அன்பு செய்ய யாரும் இல்லை 
உன்னைத் தினம் தேடுகின்றேன் 
ஒரு உமைபோல பாடுகின்றேன் 
வா வா வா என் அன்பே வா...........
                                           
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/25/2012

இது நடக்கிற கதையா!...........



துலைந்தது சனியன் என்றே நாமும்
தூக்கியே எறிந்துவிட்டாலும்
குடைந்துதான் பார்க்கும்
ஒருமுறையேனும் மனக் கதவைக்
கொலை வெறி கொண்ட ஆசை!!......

நிரந்தரமாய் விட்டகன்றால்
நீ மிதப்பாய் தெப்பம் போலே
அகன்ற சனி தொடர்ந்து வந்தால் 
அதுபோல துன்பம் இல்லை.......

பிறந்தவுடன் தொற்றிய தோசம்
இது பிரியாமல் உடன் இருக்க
வருந்தும் உடல் காலம் முழுதும்
எது சொன்னாலும் கேட்காது என்றும்

தனக்கடிமை ஆக்கி எம்மைத் தினம் 
நினைத்தபடி ஆட்டிவிக்கும்
ஆசை ஒன்றே பேரெதிரியடா 
இதை அழித்துவிட்டால் பின்
வாழ்வில் ஏது துன்பம்!!!.............



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/13/2012

உன்போல் ஏது ஒரு சொந்தம்!...


               
உன்னை என்ன சொல்லி நான் பாராட்ட 
என் உள்ளமதில் வைத்துத் தாலாட்டத் 
தோழி எந்தன் தோள்களிலே சாய வா...
விழி நீரிறைத்து நீர்க்குடமாய் நான் மாறவா....

ஒரு அன்னை இல்லை என்றேதான் 
தினம் ஆர்பரித்து நின்றேன் நான் 
இன்று உன்னைக் கண்ட பின்னாலேதான் 
என் உள்ளம் பொங்குதே தன்னாலே..........!!!!


கோழை என்னும் நிலை மாறுதடி உன்னாலே 
ஒரு கோடு போட்டுக் காட்டினாயே கண் முன்னாலே
 ஏழை எந்தன் நெஞ்சுக்குள்ளே ஓர் ஆனந்தம் 
இந்த இன்ப சுகம் என்றும் தங்க நீ வேண்டும்

வா வா அன்பே என் வாசல் தேடி -நீ 
வரும் காலம் எல்லாம் பொன்னாகும் 
நீதிக்கு நீயே என்றும் காவலடி நீரில் பூக்கா 
செந்தாமரையும் நீதாநெடி என் தோழி!..

பள்ளிக் காலம் தொட்டு வந்த இந்தப் பாசம் 
ஒரு எல்லை இன்றி என்னாளுமே வீசும் 
கல்லில் முள்ளில் சென்றால் போதும் என் பாதம் 
உன் கண்களிலே இரத்த வெள்ளம் தோன்றும்...!!!

இந்த அன்பிற்கு இணை ஏதும் இல்லை என் தோழி 
உந்தன் ஐந்து விரல் பட்டால் போதும் இந்நாளில். 
அஞ்சும் நெஞ்சில் வந்த பஞ்சம் நீங்கும்  
உந்தன் கொஞ்சும் மொழி நெஞ்சில் நின்றாடும்!.....  

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/30/2012

திசை எட்டும் கை கூப்ப.....

திசை எட்டும் கை கூப்பத் 
தென்றலே நீ வாராயோ!....
அசையட்டும் பூமியிலே 
ஆனந்தமாய் உயிர்களெல்லாம்!...

தொகை பத்தும் தினம் ஓதத் 
தோகை மயிலாள் நடம் ஆட 
இறைவா உன் கருணையதால் 
நல் இதயங்களும் மகிழாதோ!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/11/2012

நீங்காத நினைவுகளோடு நானும்!...

கடல் கடந்து ஒரு பயணம் என் 
வலைத்தளம் என்னும் இந்தக்
கனவுலகை விட்டும் என்றும் 
கவி பாடும் இந்தக் குயிலுக்கும் 


உடன் பிறவாத உறவுகள்போல்
தினம்தோறும் உறவாடி என் 
வளர்ச்சிக்கு வித்திட்ட உங்களையும் 
அன்பு வாசகர்களையும் விட்டு 

சில மாதங்கள் பிரிய மனம் இன்றி 
ஓர் பிரியாவிடை உங்களில் 
ஒருத்தியான நான் இதோ அந்த
பிரியும் வேளை வந்துவிட்டது!.....


எங்கு சென்றாலும் மறவாது 
இதயத்தில் ஒரு புது ஊற்றாக 
ஓடோடி வந்தழைத்து என்னைக் 
கவி பாட வைத்த உங்கள் அன்பு  


நான் இல்லாது போனாலும் 
மீண்டும் திரும்பி இங்கு வந்தாலும் 
இந்நாளில் தொடர்வதுபோல் 
எந்நாளும் தொடர வேண்டியபடி 


சென்று வருகின்றேன் உறவுகளே 
நான் சென்று வருகின்றேன் தமிழ் 
இன்பக் காற்றாக உயிர் மூச்சாக 
என்றும் எங்கும் செழிப்புற வாழ்த்தியபடி!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/09/2012

இதுதான் வாழ்க்கை!........

காலப் பெரு வெளியில் 
கலைந்து போன தன் கனவைத் 
தேடி அலைந்த சிறு பறவை 
தீட்டிய புதிய கவிதை !...........


நாளை எது நடக்கும் ......
நாளும் கோளும் என்ன செய்யும் 
வாழும் போதே அறியாத இந்த 
வாழ்க்கை என்பது போர்க்களமே!....


ஏழை மனதில் மிகு ஆசைகளை 
ஏற்றுக் கொண்டால் துயர் பெருகும் 
பின் பாழாய்ப் போன உடல் தவிக்கும் 
பந்த பாசம் இழக்கும் நிலை வந்தால்...


காலம் சுருங்க வரம் கேட்கும் 
கண்ணில் கங்கை பொங்கி வழியும் 
தினம் காணும் உலகம் வெறிச்சோடி 
கானகம்போல காட்சி  தரும் .................


மானம் பெரிதென நினைக்கும் மனம் 
மனதில் அகப்போர் நிகழ்த்தி வரும் 
உடல் வீழும் போதே உண்மை வெளிக்கும் 
இந்த விதியை வென்றால் வாழ்க்கை இனிக்கும்!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/04/2012

எதுக்கு இந்தக் கொலைவெறி!.....

ஆடு போட்ட புழுக்கைகூட
அரு மருந்தெனக் கொள்ளும்போது 
ஆடு வெட்டிப் பொங்கல் வைக்கும் 
அவலம் இன்னும் தீரவில்லையே !....


இது ஆடு செய்த பாவமா !...........
அடுத்தவர் இட்ட சாபமா !........
நீதி கேட்டு உயிர்கள் எல்லாம் 
நெஞ்சை நிமிர்த்தி நின்றால் இங்கே 


பாவம் மனிதன் என்ன செய்வான் 
பழகிய தோஷம் விட்டுச் செல்ல 
ஊனைத் திண்டும் உடம்பை வளர்த்தான் 
உடனே புரியுமா பிற உயிர்படும் துன்பம்!...


நாடு தீக்கு இரையானாலும் 
நல்ல மக்கள் உயிர் போனாலும் சில 
கொள்ளையடிக்கும் கூட்டத்தினருக்கும் 
குறிக்கோள் என்பது ஒன்றுதான் இருக்கும்


இங்கு நேசக் கரத்தை நீட்டினாலும் 
நேர் வழியைக் காட்டினாலும் அவை 
தூசுக்கு இணை என்றேதானாகும் 
துரோகம் படிந்த இப் புவிதனிலே!....


காதல் செய்வீர் பிற உயிகளையும் 
கள்ளம் இல்லா நல் மனங்களையும் 
ஆதரித்துப் பார் இன்பம் பொங்கும் 
அதுதானே என்றும் வாழ்வில் தங்கும்...
  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/02/2012

சிந்தனைத் துளிகள்.


(1 ) பிறரைத் தூற்றி மகிழ்வுகாணாது உன்
      பிறவியைப் போற்றும் வகையறிந்து நடப்பாயானால் அதுவே  
      பிறருக்கும் உன் பிறவிக்கும் செய்யும் பெரும்பயனாகும்.

(2 ) உள்ளத்தின் உணர்வு ஒழுக்கம் குன்றியோர்
     ஓதும் அறிவுரை என்றும் கொடும் விஷத்திற்கு  சமனானது.

(3 ) குணங்கெட்ட மனிதன் கோடிரூபாய்  கொடுத்தாலும் அவை
      பிணத்துக்கு இட்டெடுத்த மாலைபோலானது.

(4 ) இறைவன் கொடுத்த வரமேயாயினும் மனிதன் தன்
       தகுதியை மறந்து நடப்பானாயின் வரும் துன்பமானது
       என்றும் மரணத்துக்குச் சமமானது.

(5 ) இடமறியாது பகிரும் துயரானது நிறைநீரில்
       கையிலிருந்த கயிற்றை நழுவவிட்டு 
       கருநாகத்தின் வாலைப் பிடித்த கதையாய் மாறும்.

(6 ) நல்லவர் ஆயினும்  ஊரார் பேச்சுக்குச் செவிசாய்த்து 
        தன்னைத்தானே  வருத்தும் குணமுடயவராயின்
        இவர்பால் வரும் நல்லன எல்லாம் கெடும்.

( 7 ) வருகின்ற துன்பம் எல்லாம் வரப்போகும் 
        பேரின்பத்துக்கு அறிகுறியென்று கருதும் நற்குணம் இருந்தால் 
        அதுவே வாழ்வின் வெற்றிக்குக் காரணமாக அமையும்.

(8 )  பிழைபொறுத்தருளும் நெஞ்சம் ஒன்றே புவியினில்
        நாம் பெறுதற்கரிய பெரும்பேறு ஆகும்.

(9 ) கொடுக்கும் நற் குணங்களைக் குறுக்கி தன்பால்
       எடுத்து வைக்கும் எப்பொருளும் தரும் சுகமானது
       பொருமிக் கிடக்கும் வயிற்றுக்குப்  பொரிசொறு  சேர்ப்பதுபோலாகும்.

(10 ) மனிதன் தன்நம்பிக்கையைத்  தரவல்ல மதங்கள் மீதும்  
         அதன் தத்துவங்கள் மீதும்  கொள்ளும் சந்தேகமானது 
         உடலைப் பிளந்து உயிரைப் பரிசீலிக்கும் செயலுக்கு இணையானது.



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.