11/26/2014

கனவு சிதைந்ததா?... காற்றில் பறந்ததா? ....





கனவு சிதைந்ததா?...
காற்றில் பறந்ததா? ....
கணித மேதையே சொல்லடா -உன்றன்
கணக்குத் தப்பெனக் கொள்ளடா ...

விழியில் ஈரம் காய்ந்து போகுமா? -எங்கள்
விடுதலை தாகம் ஓய்ந்து போகுமா ?...
இடிந்து போனது போதுமடா ..
இருகரம் கூப்பினோம் வாருமடா...

 மரணத்தை நேசிக்கும் மாவீரர்  உள்ளத்தில்
மாபெரும் இலட்சியம் உள்ளதடா அந்த
இலட்சியம் வென்றிட  எமக்கும்  தான்
இங்கொரு இடை வெளி தேவையடா ...

பறவைக்கும் சொந்தமாய்க்  கூடுண்டு
அன்பைப் பகிர்ந்திட என்றுமே தாயுண்டு
எமக்கிங்கே உலகினில்  என்னவுண்டு ?...அட
எறிகணை தரும் வலி தான் உண்டு ....

எதிரியின் கனவுகள் சிதைந்திட வேண்டும்
எமதுயிர்க் கொடி மண்ணில் பறந்திட வேண்டும்
இலட்சிய வேங்கைகள் சிரித்திட வேண்டும்
ஈழத்தாய் மடியினில் தூங்கிட  வேண்டும்

அகதியின் வலி இது புரிகிறதா ?.....
உயிர் ஆகுதியாவது தெரிகிறதா?..

எடு எடு தொடு தொடு கணைகளை விடு விடு
என மனம்  இங்கு வலிக்குதடா ...
அந்த வலி தரும் ஓசையில் எதிரியின் ஆசைகள்
நிட்சயம் ஒரு நாள் வீழுமடா ....

பனி மலை உருகிடும் வேகம்
அதை விடப் பெரியது எம் தாகம்
விரைவினில் ஈழத்தை வெல்லும்
அந்த விடுதலை தாகத்தைக் கொல்லும்

                                                                (     கனவு சிதைந்ததா?...)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/10/2014

சாவு மலியும் தேசத்தில் இருந்து ஓர் அழுகுரல் ! கேட்கிறதா ?



உயிரைக் கொல்லும் நோய் பெருகி
உணர்வைத் தின்னப் பார்க்குதடா!
துயிலும் இல்லம் பலரையும் இங்கே
துரத்திப் பிடித்து மடக்குதடா !

வழமை நிலைமை மாறும் போதும்
வாழ்வில் அச்சம் மூளுதடா!
களவும் பொய்யும் சுயநலத்தால்
கட கட கடவென வளருதடா !

மலையைப் போல சுமை தாங்கி
மனதும் மரத்துப் போனதடா!
அலையும் புத்தி ஞாபகத்தை
அறவே இழந்து வாடுதடா!

இயற்கை அளித்த கொடையெங்கே!
இதயம் கேள்வி கேட்குதடா !
திரும்பிப் பார்த்தால் எம் வாழ்க்கை
திருட்டுப் போனது புரியுதடா!

பயிலும் கல்வி அறிவெல்லாம்
பகட்டாய் எண்ணத் தோன்றுதடா !
கணக்கில் புலியாய் இருந்தமனம் இன்று
கணணியை நம்பி வாழுதடா !

செயற்கை செய்த சாதனை எதுவோ அதைத்தான்
செத்தவர் பட்டியல் காட்டுதடா !
இயற்கையைப்  பேணும் நல்லெண்ணம் இனி
இருந்தால் மட்டுமே உலகம் உய்யுமடா !


இயற்கை என்பது இறைவன் கொடுத்த 
வரம் !
செயற்கை என்பது மனிதன் தேடிக் கொண்ட 
சாபம்! 
வரமா சாபமா வாழ்விற்குகந்தது ?...
சிந்திப்போம் !


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/04/2014

முன் நின்று காப்பவனே !



மனமென்னும் மாளிகையில் மரத்துக் கிடக்கும்
மனிதநேயம் இப்போதே விழிக்க வேண்டும் !
இனபேதம் மதபேதம் பார்த்தே நாளும்
இன்னலுறும் நிலையிங்கே மறைய  வேண்டும் !

தினந்தோறும் நற்கருமம் நிகழ வாழ்வில்
தீமைகளை இவ்வுலகம் எதிர்க்க  வேண்டும் !
வனவிலங்கு போல்வாழும் வாழ்வின் கொடுமை
வருங்கால சந்ததிக்கும் புரிய வேண்டும் !

வருவாயைக் காரணமாய் வாழ்வில் கொண்டு
வகுத்த நீதி  அத்தனையும் முடங்க வேண்டும் !
பெரும் சேதம் விளைவிக்கும் துர்புத்தி
பெருமான உனதருளால் ஒழிய வேண்டும் !

அரும்பாடு பட்டு உய்யும் எங்கள் வாழ்வு
அன்பாலே எந்நாளும் தழைக்க வேண்டும் !
விரும்பாத எச்செயலும்  தீண்டா வண்ணம்
விடையேறி வந்தெம்மைக் காக்க வேண்டும் !

பிடிவாத குணம் மண்ணில் மறைய வேண்டும்
பிறர் வாழ வாழ்த்தும் எண்ணம் நிறைய வேண்டும் !
அடியோடு வெறுப்புணர்வு அகல வேண்டும்
அழகான சிந்தனைகள் பெருக வேண்டும் !

இளகாத மனமெங்கும்  இளக வேண்டும்
இரக்க குணம் அனைவருள்ளும் சிறக்க வேண்டும் !
தளராத நம்பிக்கையைத் தந்தருள வா
தர்மத்தின் திருவுருவே தரணி தனிலே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/30/2014

உயிரிலே கலந்தவனே !



ஏங்கும் மனத்தினது  ஏக்கத்தைச்  சொல்லவா ?!
நீங்கும் எனதுயிர் நீயின்றி!- தூங்காதே
கண்ணா  கணப்பொழுதும் கண்ணீரில்  வாடுகின்றேன்!
உண்ணா துருகும் உயிர் !

கண்ணுக்குக் கண்ணான கண்ணன் மனத்தழகைப்
பெண்ணுக்குள் வைத்தேன்  பெருமையுற!- பண்ணுக்குள்
இட்ட இனிய தமிழ்ச்சொற்கள் எந்நாளும் 
கொட்டும் பனியைக் குவித்து !

கண்ணா விரைந்தென்றன்   கண்ணீரைப் பொய்யாக்கு !
உண்ணாமல் ஊன்வாடிப்   புண்ணாகும் !- எண்ணம்
இழைத்திட வாழ்வை   இடர்காவிச் செல்லும்
அழைத்த குரல்கேட்டு அசை!

கூரான ஆசைகளைக் கொட்டிக் கொடுப்பவனே !
தீராத வேதனையைத்  தீர்ப்பவனே !-வேராக
நானிருப்பேன்  உன்னோடு நாளுமிங்கே! நம்வாழ்வில் 
தேனினிக்க வேண்டும் திரண்டு !

விண்ணோக்கிச் சென்றாலும் விட்டகலேன் என்னவனே !
பெண்ணோக்கும் பேரழகா !பேரின்பக் -கண்ணாளா !
எண்ணங்கள் ஏற்கும் இளமையும் நீயாவாய்!
வண்ணங்கள் குன்றாமல் வா !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/27/2014

தமிழின்றி வாழ்வேது !


 

கன்னித் தமிழமுதை நான் மறந்தால்
என்னில் தரித்திடுமோ   உயிர்?...வன்னி 
மண்ணின் மணம் குன்றா மலரிவளை 
எண்ணில் அடக்குக   உகந்து !

பொன்னை பொருளை வேண்டேனே
பசி என்னைத் தேடி வருகையிலும் !
அன்னை மொழியே எனதுயிராம் !அது தழைக்க
 நன்மை செய்வேன் நாளும் !

கரகம் ஆடி வந்தாலும் என்தமிழ் 
விரகம் கொண்டு வீழாது!தரகர் 
தம்மைத் தாம் அறிவீர் !துயரைச் 
செம்மைப் படுத்துக  துணிந்து !

அம்மை அவளே அருந்தமிழ் வளர்த்தாள்  !
எம்மைப் புவிமேல் புகழேந்த !செம்மை யாவும்
தழைத்தோங்கும்! சீர்கொடுக்கும்!அதுவே  
காவும் மனத்தின் துணிவு ! 

தும்பைப் பூப்போல் மனத்தழகை எவரும் 
அம்பை விட்டுக் கொய்யாதீர் !
வம்பை அதுவே தான் வளர்க்கும்
இனி என்றும் மதுவே தோற்க மணந்து !

சொல்லில் பொருளில் நயம் தேற எந்நாளும்  
அல்லிப்  பூவே வந்தருள்வாய் !
கல்லில் முள்ளில் தவழ்கின்றோம் !கயல் விழியே !
இனியும் அள்ளிக் கொடுப்பாய் அறிவு !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/14/2014

இதையும் கொஞ்சம் சிந்திப்போமா !




ஊரோடு  உற்ற பகையால்  ஊனுடலை வதைத்தால்
வேரோடு  கெட்டொழியும்  வாழ்வு  !சேரும்
வேதனையை விட்டகன்று வாழும் வழியைப் பார்த்தாலே
சாதனைகள் தொடரும் சாவிலும் !

கண்கொத்திப் பாம்பாகக் காத்திருந்து பகை முடிக்கும்
துர்  புத்தி உய்யவிடாது  வாழ்நாள் முழுதும் !
எண்ணத்தைச் சரி செய்து ஏற்றமுற நினைப்பவர்களே
வண்ணம் குன்றாது வாழ்வர் வாழ்வினிக்க !

முறையற்ற வாழ்வை முழுமனதோடு வாழ்ந்து முடித்தவர்
கறையை அகற்றுவது கடினம் எக் காலத்திலும் !
குறை செராத வண்ணம் குணத்தைக் காத்தவரே
இறையாகக் கணிக்கப் படுவர் இறந்த பின்னும் !

குற்றமற்ற நெஞ்சங்களைக்  கொன்று குவிக்கும் மனத்தவரைச்
சுற்றம் என்றும் ஏற்காது !ஏற்ற பொழுதிலும்
ஊற்றெடுக்கும் உணர்வுகளால் உட் பகைதான் வளரும்
மாற்றமில்லை இதனில் மறந்தும் !

தோற்றத்துக்கு நல்லவராய்த் தோன்றி மறையும் வாழ்வைவிட 
மாற்றத்தை ஏற்று மனிதராய் வாழ்வதே வாழ்வாகும் !
ஏற்றத் தாழ்வு எவர் உள்ளத்தில் உதித்தாலும் அவை 
சீற்றத்தைத் தந்து சீரளிக்குமே அல்லால் வாழ்வளிக்காது !

(படம் கூகுளில் இருந்து பெறப்பட்டது !நன்றி !)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/11/2014

அன்பினால் தழைத் தோங்குக இன்பம் !



கண்ணே மணியே கற்கண்டே -என்றன் 
கவிதை இனிக்க வந்தவளே
உண்ணேன் உறங்கேன் நீயின்றி
உணரும் காலைப் பொழுதின்றி !
பெண்ணே அழகில்   ஓவியமே!
பொறுமை அணிந்த காவியமே!
மண்ணே போற்றும் மரகதமே!
மலரே  எழிலே வாராயோ !

கொஞ்சும் சலங்கை ஒலியாலே
கோதை உன்றன் நினைவாலே
விஞ்சும் கவிதை வடிப்பேனே
விரலால் தாகம் முடிப்பேனே
பஞ்சும் நெருப்பும் போலிங்கே
பற்றிக் கொள்ள வாராயோ !
தஞ்சம் உன்றன் நெஞ்சமென
தரையில் வந்த வெண்ணிலவே !

கண்ணா ! காதல் மணிவண்ணா!
கலக்கம் ஏனோ இந்நாளில்?
எண்ணா திருக்க வருவேனே
என்றும் இன்பம் தருவேனே
விண்ணும் மண்ணும் வியந்திடவே
விழியில் ஒளியாய் நிற்பவனே 
கண்ணும் கருத்தும் நீயல்லவோ
கவலை மறப்பாய் இக்கணமே !

தோகை மயிலுன் ஆட்டத்தைத் 
தொடர்ந்தும் பார்க்க வருவேனே !
சோகம் தீர்த்து அந்நாளில் உனைச் 
சொக்க வைப்பேன் என் கண்ணா 
பாகப் பிரிவினை எமக்குள்ளா?
பயத்தைப் போக்கு துயர் நீங்க 
காகம் வந்து சேதி சொல்லும் 
காதல் தேவதை வரும் முன்பே !





அன்னத்துக்கும் புறாவுக்கும் மட்டுமா தூது 
சொல்லத் தெரியும் !காக்கைகளாலும் 
முடியும் :))  


உண்ணும் போதும் சரி ஓர் உயிர் பிரிந்த போதும் சரி காகங்களின் ஒற்றுமையை விஞ்சும் சக்தி உலகில் எந்த சீவ ராசிகளுக்கும் கிடையாது என்பது தான் நான் அறிந்த உண்மை ! அது சரி எதுக்கு இப்போது அம்பாளடியாள் காகத்தைத் தலை மேல் தூக்கி வைத்து ஆடுகின்றார்கள் ? இன்னுமா புரியவில்லை!:) காகம் ஒற்றுமையின் சின்னமாகும்  ! இன்று சனீஸ்வர விரதத்தின் இறுதி நாள் சனீஸ்வரனின் வாகனமான காக்கைக்கு உணவு அளித்து மகிழ்வதன் மூலம் சாப விமோற்சனம் அடையலாம் என்கிறது சகுன சாஸ்திரங்கள் அதற்காக இன்று மட்டும் அல்ல என்றுமே முடிந்தால் (காகங்களுக்கு மட்டும் அல்ல ஏனைய சீவ ராசிகளுக்கும்  )உணவு அளியுங்கள்.அன்பினால் ஒற்றுமை தழைக்கும் ஒற்றுமை தழைத்தால் உலகமே இன்பமயமாகும் !

                                                              



அன்பு உறவுகள் அனைவருக்கும் சனீஸ்வர பகவானின் நல்லாசியினால் இடர்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பொங்கிட  இனிய நல் வாழ்த்துக்கள் !

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/10/2014

பெண் என்பவள் போற்றப்பட வேண்டியவள் !



பெண்ணின் உடலைப் படம்பிடித்து எப்போதும்
கண்ணுக்(கு)  இழிவாகக் காட்டாதீர் !- மண்ணின்
பெருமையும் குன்றிவிடும் பண்பாட்டை விற்றால்!
அருமை உணர்ந்து அகற்று !

கண்ணுக் கழகான காட்சிப் பொருளல்ல
பெண்ணை எவரும் படமாக்க !-விண்ணவரே
போற்றும் பதுமையைப்   போற்றாது எந்நாளும்
தூற்றுவது  எம்மவரின்  ஊழ் !


                                 



தேசத்தின் நன்மைக்குத் தீங்குவிளை விப்பவரை
நாசம்செய் நன்மனமே நாவினால் !-மோசமான
எண்ணங்ளை வேரோடு எரிப்பதே  எம்கடன் !
உண்ணவரும் போதும் உணர்!

பண்பாடு குன்றினால் பாரதமே சீரழியும்!
திண்டாட  வைப்பவரைத் திட்டித்தீர்!- கொண்டாட  
நாமும் வருவோமே நாளுமிந்தப்  பொன்நாளை !
காமுகரின் கண்பறிதுக் காட்டு !

                                                             

                                                          

கண்ணுக்கும் தெரியாத கயமை உணர்வுகளால்
கழுத்தறுக்க வந்தவரைக் கண்டபடி திட்டுங்கள் !
மண்ணுக்குள் புதைந்து மறு ஜென்மம் எடுக்காமல்
மரத்தும் போகட்டும் மனிதநேயம் அற்றவர்கள் !

ஊழல் பெருச்சாளிகள் ஊரைச் சுரண்டுகையில்
கூழும் கஞ்சியும் எமக்கெதற்கு !
வாழும் போது வன் கொடுமைகளை எதிர்ப்பவரே
நாளும் இங்கு  போற்றப் படுவர் !

                                                   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/06/2014

81வது பிறந்த நாள் இன்று !



அன்பைப் பொழியும் மனத்தாலே 
அறிவை ஊட்டி வளர்த்த பிதா !
இன்பம் காண எந்நாளும் 
இனிய நல் வாழ்த்து உரைபீரே !

தந்தை என்றோர் தெய்வத்தைத் 
தரணியில் பெற்று நாம் மகிழ்ந்தோம் 
இன்றோ டெண் பத் தொன்றாமே !
இனிய நல் ஆண்டுகள் பெருகட்டும் ...

பொங்கும் தமிழின் ஆர்வலரை 
பொறுமை நிறைந்த பொக்கிசத்தை 
எங்கள் உயிரை உணர்வலையை 
என்றும் இறைவன் காக்கட்டும் !

விண்ணும் மதியும் வாழ்த்திடவே 
விரும்பும் சுகங்கள் கிட்டட்டும் 
கண்ணும் கருத்துமாய் வந்திங்கே 
கருணை வெள்ளம் காக்கட்டும் !

எண்ணும் பொழுதினில் துயர் நீங்கி 
எல்லா நலனும் தங்கட்டும்  
உண்ணும் உணவிலும் நல்லுணர்வை 
ஊட்டி வளர்த்த பிதா மகிழ !

வாழ்த்துச் சொல்ல வாருங்கள் 
வலுவாய் நிற்கும் உறவுகளே !
பூத்துக் குலுங்கும் மனப் பந்தல் 
பூப்போல் இங்கு சிரித்திடவே ....





                                    இவ்வளவு இனிப்பு வகையும் எங்களுக்கா ???!....
                                                                     
                 

                                                   இவை அனைத்தும் என் 
                      வலைத்தள சொந்தங்கள் அனைவருக்கும் தான் :)))))))

                                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/02/2014

சரஸ்வதி தாயே போற்றி போற்றி ..


அன்னை சரஸ்வதி தாயே போற்றி 
அறிவின் நுதலே  அழகே போற்றி 
பொன்னில் வடித்த சிலையே போற்றி 
பொறுமை காக்கும் கலையே போற்றி 

இன்னமுத மொழியே போற்றி 
இருளைப் போக்கும் ஒளியே போற்றி 
விண்ணவரும் தொழும் தேவி போற்றி 
வெண்டாமரை தாங்கும் மலரே போற்றி

பண்ணில் நிறைந்த பதமே போற்றி
பயிலும் நாவின் அசைவே போற்றி 
கண்ணின் மணியே கருத்தே போற்றி 
கருணைக் கடலே அமுதே போற்றி 

கற்றவரும் தொழும் தேவி போற்றி 
கல்லாதவர்கும் அருள் நீ போற்றி 
உற்ற துணை நீ உணர்வே போற்றி 
உயிராம் மெய்ஞாதின் வழி நீ போற்றி 

வற்றாத கல்விக் கடலே போற்றி 
வறுமையைப் போக்கும் வாழ்வே போற்றி 
சிற்றின்பம் தவிர்க்கும் சிறப்பே போற்றி 
பேரின்பம் அருளும்  பெருமையே போற்றி 

நற் தவம் ஏற்கும் நலனே போற்றி 
நவராத்திரியின் நாயகி  போற்றி 
அற்புத நிலையே அம்மையே போற்றி 
அரும் பெரும் பாக்களின் அழகே போற்றி 

புத்தகத்துள்ளுறை மாதே போற்றி 
பூவின் மணமே புலனே போற்றி 
சித்தம் மகிழும் நினைவே போற்றி 
சிந்தும் இன்னிசை மழையே போற்றி 

வித்தைகள் கற்றிட வந்தருள்வாய் போற்றி
விரும்பும் செல்வம் தந்தருள்வாய் போற்றி 
கற்றதை நாளும் காத்தருள்வாய் போற்றி 
கலைவாணித் தெய்வமே போற்றி போற்றி ......

                                                         





அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் அம்பாளடியாளின் சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள் ..........
                                                       






தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/25/2014

கம்பன் புகழைப் பாடு மனமே !


கம்பன் வடித்தநற் காவியம் கேட்டாலே
வம்பன் எனினும் வசப்படுவர்  !-செம்பொன்
நிகர்த்த கவிதைகள் நெஞ்சுள்  இனிக்க
விகர்ப்பம் தணியும் விரைந்து!

விஞ்சும் தமிழால் வியந்திடச் செய்தவர் !
நெஞ்சும் உரைக்கும் நினைவாளர்!- அஞ்சாதே
கம்பன் இருக்கக் கவலைகள் தாம்எதற்கு?!
செம்பட்டுப் போன்றே செழிப்பு!

அஞ்சும் மனத்தின் அவலம் குறைக்கவே
கொஞ்சும் தமிழைக் குவித்தவர்! -நெஞ்சும்
சுவைக்கும்  பொருளைச்  சுரந்தவர் கம்பர் !
அவைக்கும் அவரே அழகு !

பாட்டால்  உயிர்கொடுத்த பாவலர் !கம்பரே 
வாட்டம் தணிக்கவல்ல வாழ்வுமாவார்!- கேட்டாலே
போதும் அரும்பாக்கள்  ஓதும் பொழுதினிலே!
காதும் குளிரும் கமழ்ந்து !

கவிச்சக் கரவர்த்தி கம்பனைப் போற்ற  
புவிமேல் புலரும் புதுமை!- தவிக்காதே
காக்கும் கடவுளும் கம்பரே!இன்பமாய்
வாக்கும் மணக்கும் மலர்ந்து !



அலைந்து திரிந்தே  அமுதெனக் கொண்டேன்!
சிலைபோல் மிளிரும் சிறந்து ! கலைமகள்
அந்தாதி கம்பர் அளித்த செல்வம் ! போற்றுக!
நந்தவனம் ஆகும் நினைவு!

நாமகள்  அன்பினை நாளுமே பெற்றகம்பர் 
வாழ்வினைக் கண்டிட  ஆசையோ !-பாவினைப்
பாடும் மனமேநீ   பாடுக அந்தாதி
கூடிடும் இன்பம் குவிந்து !

கலைவாணி நற்கருணை கண்களிலே தங்கும்!
தலையையும் காக்கும் தழைத்து!- மலையின்ப 
அந்தாதி பாடினால் அன்னைக் கதுபோதும்!
சந்தன வாசத் தமிழ் !

ஆய கலைகள் அறுபத்து  நான்கினையும்
தூயமனம் தந்தருளத் தூபமிட்டார் !- தேயவழி  
தேடும் நிலவுமிங்குத் தேயாது கம்பர்முன்!
பீடும் பிணையும் பெருத்து !

கற்கும் கலைகளைக் கண்டெனத் தந்தருளும் 
பொற்பதம் கண்டு புகழ்ந்தவர் !- அற்புதமாய்
அந்தாதி ஒன்றை அகம்குளிர கம்பபிரான்!
வந்தோதி ஓங்குமே வாழ்வு !


                                                                   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/23/2014

சகல சௌபாக்கியங்களும் அருள்பவளே !


நாடும் மக்களும் நலன் பெறவே சுகம்
தேடும் விழிகளைக் காத்தருள்வாய்
பீடும் பெருக்கிப் புவி மேலே எந்நாளும்
கூடும் மகிழக் குடி புகுவாய் !

வாடும் உலகின் வாட்டம் தீர்பவளே!
காடும் சிறக்கக் கைகொடுப்பாய் விழி
மூடும் போதும் உன்னாமம்
சூடும் மனத்தில் சுடர்ந்திடுவாய் !

பாடும் குயிகளும்  பாடி மகிழ்ந்தட
பாட்டாய் என்றும் நீ வருவாய்
ஓடும் நதிகளும் உன்பேர் சொல்லிட
ஓங்கும் நல்வளம் தந்தருள்வாய் .!

ஆடும் அசையும் உயிர்களெல்லாம்
ஆடிப் பாடி மகிழ்ந்திடவே எந்நாளும்
போடும் தாளம் தப்பாமல்- புவிமேல்
புலரும் புன்மையைப் புடைத்தெறிவாய் !

ஈடு இணைகள் அற்றவளே 
இனிக்கும் தேனாய் நிற்பவளே 
மேடு பள்ளம் அறிந்திங்கே 
மேன்மையுறவும் செய்திடுவாய் !

கேடு வந்து விளையாமல் 
கேட்கும் வரத்தைத் தந்தருள்வாய் 
வீடும் சிறக்க வந்தவளே! 
வீசுக  தென்றலாய் எம்முள்ளே ..

                                                   
                                           
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/21/2014

சோகம் தவிர்த்து வா சொக்க வைக்கும் கவிக்குயிலே !



வானம் வசப்பட வேண்டுமெனில் எந்நாளும்
கானம் இசைத்திடு காவியமே !- ஊனமது
பார்ப்பவர் கண்ணுக்கே! பாராதே நல்மனமே!
வார்த்துக் கொடுப்பாய்  வளம் !

சினத்தால்  அழியாத சிந்தையும் உண்டோ!
மனத்தை அடக்கு(க )  மகிழ்ந்து !-இனத்தின் 
பெருமையும் ஏற்ற புகழும்  தழைக்க
வருவதை  ஏற்கும்  விருப்பு

ஒதுங்கும் மனத்தை உணர்ந்தே தவித்தேன்!
பதுங்கிடல்  நன்றல்ல பெண்ணே !-பிதுங்கும்
விழிநீர்  தவிர்த்து வருவாய் விரைவாய்!
பழியாவும்  போக்கும்  பயன்!

கடமை உணர்ந்த கவிக்குயிலே!  இன்றே 
மடமை தவிர்ப்பாய் மகிழ்ந்து !-உடமை 
எமக்குத் தமிழாகும் இன்னுயிரே வாவா !
சுமப்போம் மகிழ்வாய்ச் சுடர்ந்து !

இன்பத் தமிழால் இனித்திடலாம் வான்நிலவே !
துன்பம் தரித்துத் துவளாமல்!- அன்பை
உணர்த்தும் கவிதை புனைந்தாலே போதும்!
கணத்தில் மறையும் கசப்பு!

கற்றோர் புகழக் கவிதந்து எந்நாளும் 
பெற்றோர் மகிழப் பெருமையுறு !-உற்றதுணை
நற்றவத்தால் வந்ததிந்த ஞானம் எனப்போற்று!
வற்றாது தங்கும்  வளம் !

(படம்: கூகுளில் பெற்றுக்கொண்டது .நன்றி !)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/18/2014

விநாயகர் வெண்பா



பொங்கும் கடலாய்ப் புலமை பொலிந்திட
எங்கும் நிறைந்த இறையவனே - தங்கிடச்செய் 
மங்கல வாழ்வினை! வாவா முதல்வனே!
பொங்கல் சுவையைப் பொழிந்து!

எண்ணும் பொழுதினில்  ஏற்றம் மிகுந்திட 
கண்ணாய் வருவாய்  கணபதியே! - விண்ணும் 
அசைந்திட மண்ணும் அசைந்திட நன்றே 
இசைவுடன் காப்பாய் இனித்து!

அறுகம்புல் மாலை அணிந்திட  என்னுள் 
நறுந்தமிழ் ஈன்றவனே ! நாளும் - பெறுகின்றேன்  
உன்னால் உயா்வாழ்வும்!   ஓங்கு தமிழ்வாழ்வும்!
என்னால் எதுவும் இலை!

கந்தன் மனங்குளிரக் காட்சியைத் தந்தவனே! 
சிந்தை மணக்கின்ற சிற்பரனே! - விந்தையாய் 
ஆனை முகத்தவனே! ஐந்து கரத்தவனே! 
ஞானம் புகட்டுவாய் நன்கு! 


                                                                    

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/17/2014

எதைத் தேடி என்ன கண்டோம் !


பாழாய்ப் போன கனவுகள் வந்து
பாடாய் படுத்தும் அந்நாளில்
தேளாய் கொட்டும் நினைவுகள் தவிர்ப்பீர் !
தென்னாடுடைய சிவனை நினைந்து !

உண்ணும் போதும் உறங்கும் போதும்
உணர்வுகள் சிறந்தே விளங்கட்டும்!
மண்ணும் மதிக்க வாழ்வோர் தமக்கு
மனதினில் சங்கடம் மறையட்டும் !

எண்ணம் இனிதாய் இருக்கும் போதும்
எதையோ எண்ணி வருந்தாதே !
கண்ணை ஈர்க்கும் மாயையை என்றும்
கடவுள் போலக் கருதாதே !

விண்ணும் மயங்க மண்ணும் மயங்க
வித்தைகள் யாவரும் கற்றிடலாம்
உன்னுள் இருக்கும் உணர்வை வதைத்து
உயரப் பறக்க நினைக்காதே !

பொன்னைப் போல பொருளைப் போல
பொருந்திய மேனியைக் காத்திடுவீர் !
எண்ணம் சிறந்து விளங்கிட நாளும்
இனியன பேசி மகிழ்ந்திடுவீர் !

வாழும் போது வாழா மனிதன்
வாழ்வில் கண்ட பயன் யாது!
ஊழும் துரத்த உணர்வுகள் துரத்த
ஓடும் காலம் திரும்பாது !

மாழும் வரைக்கும் மாடாய் உழைத்து
மண்ணில் சரிய நினைக்காதே  !
சூழும் இன்பச் சுடரைத் தவிர்த்து
சுமைகள் சுமந்து செல்லாதே !

வேகும் கட்டை !வெந்த பின்னால்
விரும்பும் வாழ்வு கிட்டாது !
சோகம் தவிர்த்து வாழும் வரைக்கும்
சொந்தம் எதுவும் நிலைக்காது !

காலம் வெல்லும் வெல்லும் என்றே
கண்ணை மூடித் திரியாமல்
வாழும் போதே வாழ்வை ரசித்து 
வாழக் கற்றுக் கொள்வோமே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/15/2014

பொன்விழா வாழ்த்து !

                                                                             
                                     


கவிஞர் கி. பாரதிதாசனார்

பொன்விழா வாழ்த்து!



பொன்விழாக் காணுபுகழ்ப் பாரதி தாசனே!

தன்னுயிர்போல் கொண்டாய் தனித்தமிழை! - இன்புற்று

வாழ்கவே பல்லாண்டு! வண்டமிழாய் எந்நாளும்

சூழ்கவே இன்பம் சுரந்து!



பார்புகழ வாழ்கின்ற பாரதி தாசனே!

சீர்பெறுவாய் அன்னை செழுந்தமிழால்! - நேர்நிகர்

இல்லாதான் என்றே உலகம் இயம்பிடவே

எல்லாப் பெருமையும் எய்து!



களிக்கின்ற கம்பன் கழகத்தைக் காத்தே

ஒளிர்கின்ற பாவலனே! ஓங்கிச்  - செழிக்கின்ற

இல்லறம் காண்க! இனியதமிழ்ச் சீரேந்தி

நல்லறம் காண்க நயந்து!



அல்லும் பகலும் அயரா துழைத்திங்கு

வெல்லும் கவியே! வியன்தமிழே! - வல்லகவி

பாரதி தாசனே! பல்லாண்டு வாழ்கவே!

பூரண விண்மதியாய்ப் பூத்து!



வல்லகவி கம்பன் மலரடியை நன்கேத்தி

நல்லகவி பேசுகின்ற நாவலனே! - தொல்லைகளைப்

போக்கும் புலமைமிகு பாரதி தாசனே!

பூக்கும் தமிழுன் பொழில்!

                                                                           



                                                                     கவிஞர் அம்பாளடியாள். சுவிற்சர்லாந்து.

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/14/2014

இது அம்பளடியாளுக்குக் கிடைத்த விருது !


ஆஹா ...என்ன ஓர் அருமையான விருது !இது எனக்கே எனக்கா !இன்றைய நாள் என் வாழ் நாளில்  மறக்க முடியாத நாளாக அமைவதற்கு இந்த விருதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது இதை  இட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் நான் மட்டும் எப்படி இந்த மகிழ்வினைத் தனித்து அனுபவிப்பது ?இந்த விருதினைப் பெறுவதற்கு மூல காரணமே என் வலைத்தள சொந்தங்கள் தாங்கள்  தானே ! எந்தப் பாடலை எழுதினாலும் எந்தக் கவிதையை  எழுதினாலும் அதற்கு உயிரோட்டமுள்ள நற் கருத்துக்களை இட்டுக் கௌரவித்து மேலும் ஊக்கமளிப்பவர்கள் தாங்கள் தானே ! ஆதலால் முதற்கண் என் வலைத்தள சொந்தங்களுக்கும் குறிப்பாக இந்த விருதினை எனக்கு வழங்கிக் கௌரவித்த திரு .துரை செல்வராஜூ  ஐயாவிற்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் .சிறப்பான ஆன்மீகப் பகிர்வினை அள்ளி அள்ளி வழங்கும் ஐயா அவர்கள் இந்த விருதினைப் பெறுவதற்கு முன்னர் ஒரு சில நிபந்தகளையும் அறிவித்திருந்தார் !

                                 அதாவது இவ் விருதினைப் பெற்றுக் கொண்டவர்கள் முதலில் இவ் விருதினை வழங்கிக் கௌரவித்தவரின் தளத்திற்கு இணைப்புக் கொடுக்க வேண்டும் .http://thanjavur14.blogspot.ch/2014/09/blog-post84-blog-award.html மிக்க நன்றி ஐயா! தாங்களும் மென் மேலும் இது போன்ற விருதுகளைப் பெற வேண்டும் என்றே வாழ்த்துகின்றேன்.

அடுத்து பெற்றுக்கொண்ட விருதினைத் தளத்தில் போட்டுக் கொள்ள வேண்டும் .முதல் வேலையே அது தானே விடுவோமா :))) போட்டும் விட்டேன்! கூடவே என்னைப் பற்றி ஏழு விஷயங்களைச்  சொல்ல வேண்டும் .சொன்னால் போச்சு! இதோ அந்த ஏழு விஷயங்கள் ......


  1. முழுநேர இல்லத்தரசி :)
  2. கலையார்வம் அதிகம் ஆதலால் எதையும் விட்டு வைப்பதில்லை சிலை செய்வது ,சித்திரம் வரைவது கவிதை எழுதுவது ,பாடல்கள் எழுதுவது  பட்டியல் இப்படியே நீண்டுகொண்டே போகும் :)எல்லாம் ஒரு முயற்சி தான் :)
  3. இசை என்றால் உயிர்!( ஐயா இளையராஜாவை நேரில் காண வேண்டும் என்பது என் கடசி  ஆசை !)
  4. கூடவே இன்னொரு கடசி ஆசையும் உண்டு அது பாடல்மேல் உள்ள காதலால் வந்த ஆசை ஜானகியம்மாவை நேரில் கண்டு தொழ வேண்டும்! 
  5. ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளது (சிறு வயது முதல் ஆதலால் இந்தியாவில் உள்ள மொத்தக் கோவில்களுக்கும் சென்று வர வேண்டும் !)
  6. இயற்கையை அதிகம் நேசிப்பவள் .
     7  .எதையாவது ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம்  மிகுந்தவள் .                                                                    
இனி நான் செய்ய வேண்டியது இந்த விருதினை நிபந்தனைகளுக்கு உட்பட்டு இன்னும் ஐந்து பேருக்கு வழங்க வேண்டும்  . அந்த வகையில் நானும் ஓர் ஐந்து பேரை இங்கே தேர்வு செய்துள்ளேன் .இவர்களைப் பற்றி அதிகம் நான் எதுவும்  சொல்லத் தேவையில்லைக்   காரணம் இவர்களின் படைப்பாற்றல் அனைவரும் அறிந்ததே .
  • கவிஞர். கி  .பாரதிதாசன் ஐயா 
  • புலவர் இராமனுசம் ஐயா 
  • அன்புச் சகோதரி ராஜி 
  • தோழி அருணா 
  • சகோதரர் ஊமைக்கனவுகள் (இவரது உண்மையான பெயர் தெரியாததனால் புனைப் பெயரைப் பகிர்ந்துள்ளேன்  மன்னிக்கவும் )
வாழ்த்துக்கள் அன்பு நெஞ்சங்களே ! வளமான ஆக்கங்கள் வான் போல பரவட்டும் ....       

அட கவிதை எழுதத் தெரியும் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால்  சிலை எப்படிச் செய்வாக :)) 


                                                இப்படித்தான் இதோ பாருங்கள் ..
   

                                                                           நன்றி ....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/12/2014

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க !!...


அன்பைப் பொழிவோம் எந்நாளும்
அதுவே வாழ்வின் பயனாகும் !
இன்பம் துன்பம் எல்லாமும்
இறைவன் விட்ட வழியாகும் !

அன்னல் காந்தி மகானைப்போல்
அகிலம் போற்ற வாழ்ந்திடுவோம்!
இன்னல் வந்த போதினிலும்
இயல்பாய் என்றும் இருந்திடுவோம் !

தன்னைத் தந்து உழைப்பவரின்
தன்மானத்தை மதித்திடுவோம்!
எண்ணக் கருத்தை எவர் சொல்லினும்
ஏற்றுக்கொண்டு சரி செய்வோம் !

பஞ்சம் வந்த போதினிலும்
பகிர்ந்து உண்ணப் பழகிடுவோம்!
தஞ்சம் என்று வருவோர்க்கெல்லாம்
தளராதிங்கே உதவிடுவோம் !

வள்ளல் குணத்தை வளர்த்திடுவோம்
வாழ்வில் இன்பம் கண்டிடுவோம்!
தெள்ளத் தெளிவாய் பொருள் விளங்கத்
திறமை கொண்டு வாதிடுவோம் !

உள்ளம் மகிழ்வாய் இருந்திடவே
உழைப்பை நாளும்  நம்பிடுவோம்!
அள்ள அள்ளக் குறையாத
அறிவை என்றும் வளர்த்திடுவோம் !

தானம் தர்மம் செய்திடுவோம்!
தரத்தை நாளும் உயத்திடுவோம்
கானம் இசைத்து மகிழ்ந்திடுவோம்!
கனவில் கூட அமைதி கொள்வோம் !     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/07/2014

எதைக் கற்றுக் கொண்டாய் இயற்கையையும் மிஞ்சுவதற்கு !




கற்றுக் கொடுத்த பாடமெல்லாம்
கனவில் நினைவில் நிக்குதடா!
அற்றுப் போன  நீதிக்கே
அகிலம் தவியாய்த் தவிக்குதடா!

உற்றுப் பார்த்தால் உள்ளுக்குள்
உணர்வே மெல்லச் சாகுதடா!
பற்றுப் பாசம்  எல்லாமும்
பகட்டு வேஷம் தானோடா!

அண்ணன் தம்பி உறவுக்கும்
அர்த்தம் உண்டோ இந்நாளில்?
எண்ணும் போதே வலிக்குதடா
எங்கள்  இதயம் துடிக்குதடா!

மண்ணும் பெருமை குன்றிடவே
மனிதம் மறந்து வாழ்கின்றீர்!
விண்ணும் வியக்க உயர்ந்தவரே
விடிவை இங்கும் தடுக்கின்றீர்!

அள்ளிக் குண்டை விதைக்கின்றீர்!
அன்னை மடியைச் சிதைக்கின்றீர்!
பள்ளிப் பாடம் இதுவோடா?
பலதும் கற்ற மானிடனே!

முள்ளில் விழுந்த சேலையைப்போல்
முடிவும் விதியின் கைகளில்தான்!
துள்ளிக் குதித்தும் பயனுண்டோ
துயரம் மிகுந்த வாழ்வினிலே!

எல்லைக் கோட்டைத் தாண்டிவிட்டீர்!
எங்கும் அமைதியைச் சீண்டி விட்டீர்!
சண்டை இட்டே  சாவதற்காய்
சரித்திரம் மேலும் படைக்கின்றீர்!

புல்லும் இங்கே முளையாது
புழுக்களும் இங்கே வாழாது!
தொல்லை மிகுமே வாழ்நாளில்
துளையுண்ட பூமியின் சாபமிதே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/30/2014

கவிதைப் போட்டி -2014 (2வது பட இணைப்புக்கான கவிதை )


                                                             (  பட இணைப்பு -2)

                                                    தீயே.. தீயே.. தீர்ந்துவிடாதே!      

தீயே ..தீயே.. தீர்ந்துவிடாதே! சில
தியாகம் இன்னும் இருக்கிறதே!
உடல் எரியும் உள்ளம் எரியாது
உணர்வுகளைக் கொல்ல முடியாது!

மனிதனை மனிதன் மறக்கிற பொழுதினில்
மரணமும் இனிக்குமடா! -ஒரு
புனிதனை உயர்வாய் நினைக்கிற பொழுதுதான்
பூக்களும் சிரிக்குமடா!

எரிமலை எங்களைத் தாக்கிடும் பொழுதினில்
எதிரிக்கு மகிழ்ச்சியடா!
நாம்  உன் எதிரியு மில்லை
நண்பனு மில்லை ஏனிந்த சூழ்ச்சியடா?

கொடுமைகள் கண்டு கொதிப்பவன் அவனே
கோடியில் ஒருத்தனடா!
எம்  கோபமும் தாபமும் நியாயமே இங்கு
ஏன் இந்த வருத்தமடா?

சிலைகளை உடைத்து எறிகிற பொழுதிலும்
சிந்தையில் வலிக்குமடா! நீ எங்கள்
சீவனை வதைத்துப் போகிற பொழுதிலா
சிரிப்பொலி கேட்குமடா!

விடுதலை தாகம் எம துயிர் தேகம்
வீணரே அறிவீரோ! எங்கள்
விரல்களை வெட்டி எறிவதால் மட்டுமே
வெற்றியைக் காண்பீரோ?

                                                             (  தீயே ..தீயே. தீர்ந்து விடாதே !)

                                                 
  
தீபாவளித் திருநாளை முன்னிட்டு சகோதரர்  ரூபன் ,யாழ்பாவாணன் 
ஐயா இணைந்து   நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் 
போட்டி 2014 க்குரிய கவிதை இது .பங்குபெறும் அனைவருக்கும் என் 
                                               இனிய நல் வாழ்த்துக்கள்                                                   
                             http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html                   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.